திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப் பள்ளியிலிருந்து பெந்தரே பட்டயம் பெற்றார். 1945 இன் ஒரு பகுதி சாந்திநிகேதனில் தங்கி ஓவியம் படைப்பதாக அமைந்தது. அப்போது ஓவியர்கள் நந்தலால்போஸ், பினோத் பிஹாரி முகர்ஜி, ஜாமினிராய் சிற்பி, ராம்கிங்கர் பெய்ஜி போன்றவருடன் அவருக்கு நெருக்கமான அறிமுகம் கிட்டியது. 1947 இல் அவர் மும்பைக்குத் திரும்பினார்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தோர் பள்ளியில் பின்பற்றப்பட்ட மேற்கத்திய தத்ரூப நிலக்காட்சி போல இருந்த ஓவியங்களைத்தான் அவரும் தீட்டினார். Portrait எனப்படும் முகத்தை ஓவியமாக்கலும் அப்போது அதிக அளவில் நிகழ்ந்தது. பல இடங்களுக்கும் பயணிக்கும் ஆர்வம்கொண்ட பெந்தரே தனது வாழ்நாள் முழுவதும் பயணித்து, சோர்வில்லாது நிலக்காட்சிகளை ஓவியமாக்கினார். அவற்றில் அவ்வப்போது உத்தி மாற்றம் உண்டாயிற்று.

N.S.பெந்தரே
1948 இல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தலைநகரான நியூயார்க்கில் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார். திரும்ப இந்தியாவுக்கு வரும்போது ஐரோப்பிய நாடுகளில் பயணித்து உலக ஓவியச் சிந்தனை பற்றின ஞானத்தை மேம்படுத்திக் கொண்டார். மும்பை PAG ஓவியர் குழு அவரது வரவைக் கொண்டாடியது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா ஓவியக் கல்லூரிக்கு 1950 இல் அவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1959 இல் தாளாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1966 வரை பணிசெய்த அவர் அதே ஆண்டில் பணியிலிருந்து விலகினார். அந்தக் கால கட்டத்தில் அவரது படைப்புகளில் பெரும் எழுச்சியும் புதுமையும் தோன்றின. மேலை நாட்டுப் படைப்பு வழியில் இந்திய சிந்தனை இணைந்ததும் அப்போதுதான்.
மும்பையிலிருந்து பரோடாவுக்கு அவர் கொண்டு சென்ற நவீனக் கலைச் சிந்தனை அங்குப் புதிய கலை எழுச்சியைத் தோற்றுவித்தது. 1956 இல் அவரால் தொடங்கப்பட்ட பரோடா ஓவியர் குழு (Broda Group of Artists) அமைப்பு மளமளவென்று வளரத் தொடங்கியது. மும்பை, அஹமதாபாத், நகரங்களில் தமது மாணவர்களுடன் அவர் பல ஓவியக்காட்சிகளை நிகழ்த்தினார். ‘பரோடா ஓவியப்பாணி’ என்று அது அழைக்கப்பட்டது.
பெற்ற விருதுகள்-பாராட்டுகள்
1955 இல் அவருக்கு அனைத்திந்திய லலித கலா ஓவியக் காட்சியில் தேசிய விருது கிடைத்தது.
1969 இல் இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.
1974 இல் கலா ரத்ன எனப்படும் fellowship விருது அவரது வாழ்நாள் சாதனைக்காக டெல்லி லலித் கலா அகாதமியால் வழங்கப்பட்டது
1984 இல் அபன் ககன் (Aban Gagan) விருது விஸ்வபாரதி (கொல்கத்த) பல்கலைக் கழகத்தால் அளிக்கப் பட்டது.
1986-87 இல் மத்தியப் பிரதேசத்தின் விருதான காளிதாஸ் சம்மான் அவருக்கு வழங்கப்பட்டது.
0

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். ‘இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்’, ’20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்’ உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.