இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் மாற்றங்கள் கொண்ட ஓவிய மொழியை உருவாக்கியவர்களில் முதல் வரிசையில் வைக்கப்படுபவர்.
திரு K.C.S. பணிக்கர் மே, 31 -1911 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஒரு தொழிற் குடும்பத்தில் பிறந்தார். எட்டுப் பேரைக்கொண்ட பெரிய குடும்பம் அது. அவரது தந்தை ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர். பணிக்கரின் தாயார்தான் அவரது கலைசார்ந்த பாதைக்குத் தடை சொல்லாதவர். தனது இன்டெர்மீடியட் படிப்பை சென்னை கிருஸ்துவ கல்லூரியில் முடித்தார். அப்போது அது ஜார்ஜ் டவுன் பகுதியில் (சென்னை) இயங்கி வந்தது. தனது 17 ஆவது வயதில் தந்தையை இழந்த பணிக்கர் படிப்பைத் தொடராமல் தபால் / தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் காலை தனது அலுவலகத்துக்கு டிராமில் ஓவியப் பள்ளியைக் கடந்துதான் சென்று வந்தார். அப்போது அவர் அங்கு ஒரு மனிதர் மிகவும் ஈடுபாட்டுடன் சிற்பம் / ஓவியம் என்று சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டார். வாழ்க்கையில் பலருக்குத் தங்கள் உள் மனத்தின் அழைப்புகள் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. பணிக்கர் தனது வேலையை விட்டுவிட்டு ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்ந்தார். மாத வருவாய் ரூ.150 / 200/- என்பது அந்த நாட்களில் சொகுசு வாழ்க்கைக்கு ஈடானது. பள்ளியின் முதல்வர் (principal) டி.பி.ராய் சௌத்தரியே அவரை வேலையை விடவேண்டாம் என்று சொன்னபோதும் அவர் தனது நிலைப்பாட்டில் திடமாக இருந்தார். 1936 இல் தொடங்கிய அவரது ஓவியக் கல்வி மூன்றாண்டுகளில் நிறைவு பெற்றது.

1941 இல் அவருக்குப் பள்ளியிலேயே ஓர் ஆசிரியர் வேலையை ஏற்படுத்திக் கொடுத்தார் சௌத்தரி. (அப்போது பள்ளியின் ஒரே ஆசிரியர் / முதல்வர் எல்லாம் சௌத்தரிதான்) வங்கத்திலிருந்து பலர் சென்னை பள்ளியில் மாணாக்கராகச் சேர்ந்து படித்தனர். ப்ரதோஷ்தாஸ் குப்தா (பின் நாளில் நவீன ஓவிய தேசியக் கலைக் கூடத்தின் பொறுப்பாளராக இருந்தார்) பரிதோஷ் சென் (Founder Member of Calcutta Progressive Group), கோபால் கோஷ், சுஷில் முகர்ஜி போன்ற கலைஞர்கள் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.
பணிக்கர் ஆங்கிலேய ஓவியர்கள், John Sell Cotman (16 May 1782 – 24 July 1842 Sir Frank William Brangwyn (12 May 1867 – 11 June 1956) ஆகியோரின் பாதிப்புக்கு உள்ளாகி ஓவியங்களைப் படைத்தார். 1944/53 களுக்கு இடையில் அவர் படைத்த நீர்வண்ண ஓவியங்கள் மிகவும் பிரசித்தமானவை. அவை பெரும்பாலும் கேரள மாநிலத்தில் உள்ள மலபாரில் அவர் சிறுவனாக வாழ்ந்த கிராமப் பகுதியின் இயற்கை எழிலைச் சார்ந்ததாக இருந்தன. இந்தியாவின் பெரு நகரங்களில் அவரது தனிநபர் ஓவியக் காட்சிகள் நிகழ்ந்தன. விருதுகளும் கிடைத்தன. அடிக்கடி கொல்கத்தா சென்று வந்த அவருக்கு ஓவியர் ஜாமினி ராயுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அது பின்னாளில் இறுகிய நட்பாக மலர்ந்தது. பணிக்கர் ஜாமினி ராயை சந்திப்பதைக் கொல்கத்தாவில் ஓவியர்கள் பலர் விரும்பவில்லை. என்றாலும் அந்தச் சந்திப்பால் ஜாமினி ராய் படைப்பு வழி இவரிடம் ஒரு மாறுதலை உண்டாக்கியது. ஜாமினிராய் மேலைத் தத்ரூபப் பாணியிலிருந்து விலகி, கிராமிய ஓவிய வழியிலிருந்து ஒரு புதிய பாணியை உருவாக்கிக் கொண்டவர். சமகால இந்தியக் கலைஞர்கள் (குறிப்பாக வங்காளியர்) அதை ஏற்காத போதும் ஆங்கிலேயர் விரும்பி அவரது ஓவியங்களை வாங்கினார்கள்.
1957 ஆம் ஆண்டு பணிக்கர் சென்னை ஓவியப் பள்ளியின் முதல்வராகப் பதவி ஏற்றார். impressionism பாணி ஓவியங்களில் உருவங்களை (குறிப்பாக கேரள சுவரோவியப் பாணியில்) அவர் ஓவியமாக்கியபோது அவை வலிந்து திணிக்கப்பட்டதாகவே அமைந்தன. பின் நாட்களில் அதில் தெளிவும் இயல்பும் கிடைத்தது. அவரது படைப்புகள் கோடு சார்ந்ததாக அமைந்தன. 1950 களில் தொழுநோயாளியைக் குணப்படுத்தும் ஏசுபிரான், புத்தரும், ஏசுவும் காந்தியும் இடம்பெற்ற ஓம் சாந்தி சாந்தி சாந்தி (blessed are the peace makers) பெரும் தலையையும் குறுகிய உடலும் கூடிய மனித உருவங்கள் கொண்ட ‘பெரிய, மரப்பலகையில் (hard board) ஓவியமான புத்தரின் வாழ்க்கைச் சக்கரம், (அஜந்தா ஓவியத்தாக்கம்) காகிதப்பரப்பில் தீட்டப்பட்ட குதிரையில் பயணிக்கும் காளி, தோட்டம்’ (garden series,) வரிசை இதன் தொடர்ச்சியாகப் படைத்த ‘words and symbols’ (சொற்களும் குறியீடுகளும்) ஓவியங்கள் என்பதாக இவற்றை வரிசைப் படுத்தலாம்.
அவரது ஓவியங்களில் கோடுகள் முதன்மையானதாகவும் இரு பரிணாமம் கொண்டதாகவும் விரிவடைந்தன. (இப்போது இதுதான் சென்னை ஓவியப் பாணி (Madras School) என்று அடையாளம் காட்டப் படுகிறது.) 1950 களில் அவர் ஏசுநாதர் சார்ந்த கோட்டோவியங்களை (அடர்நீல எண்ணெய் வண்ணம்) பல படைத்தார். 1963 இல் அவருடைய ‘the fruit seller’ என்னும் ஓவியத்தில்தான் முதல் முறையாக எழுத்துருக்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. எழுத்துகள், வரி வடிவங்கள், கணிதக் குறிகள் என்று தன்னைச் சுற்றிலும் எங்கும் காணக் கிடைத்த அவை அவருள் ஒரு புதிய கருப்பொருளைக் காட்டிக் கொடுத்தன. ஒரு புத்தகத்தின் பக்கம் ஏன் ஓர் ஓவியமாக ஆகக்கூடாது என்ற வினா அவருள் எழுந்தது.. மாணவன் ஒருவனுடைய கணிதப் புத்தகத்தைக் காண நேரிட்ட பின்தான் அது அவரது கித்தானில் இடம் பிடித்தது.
என்றாலும் அதைத் தாண்டி நாகரி வரிவடிவத்துடன் மலையாள எழுத்துக்களும் ஓவியங்களில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் அவை தமது மொழி அடையாளத்தை இழந்து லயமும் நெளிவும் கொண்ட புதிய வடிவங்களாக உருவெடுத்தன. எழுத்துபோலத் தோன்றிய அவற்றைப் படித்துப் பொருள் காணமுடிய வில்லை. இவற்றுடன் புராதன இந்திய கோயில் சார்ந்த குறியீடுகளை (icons) வெகு நேர்த்தியாக எளிமைப்படுத்திக் குறைந்த கோடுகளில் வடிவமைத்து மந்தமான பின்புலம் கொண்ட கித்தானில் ஓவியமாகப் படைத்தார் பணிக்கர். ஆனால் இவ்வகைப் படைப்புக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகின. சிலர் அவற்றைக் கரும்பலகை எழுத்துக்கள் (blackboard writings) என்று நக்கலாக வர்ணித்தனர். தனது மாணாக்கர்களுடன் தமது படைப்புக்களையும் அவர் தலைநகரில் காட்சிப்படுத்தினார். ‘சிறந்த ஆசிரியர் உருவாகிய சிறந்த மாணாக்கர்களின் படைப்புகள்; ஆனால் ஆசிரியர் ஏன் அவர்களைப்போலச் சிறந்த படைப்புக்களைத் தரக்கூடாது?’ என்று விமர்சகர்கள் எழுதினார்கள்.
1954 இல் லலித் கலா அகாதமி-டெல்லி ஒன்பது ஓவிய / சிற்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டின் தலைசிறந்த கலைஞர்கள் என்று அறிவித்தது. பணிக்கரும் அவர்களில் ஒருவர்.
1967 அவருக்கு லலித் கலா அகாதமி-டெல்லி அந்த ஆண்டு அனைத்திந்திய கலைக்காட்சியில் ஓவியத்துக்கு விருது கொடுத்தது.
1976 இல் லலித் கலா அகாதமி-டெல்லி அவருக்கு கலாரத்னா விருது கொடுத்துச் சிறப்பித்தது.
Ford Foundation நிறுவனம் அவருக்குப் பொருளாதாரக் காப்பாளராக இருக்க முன் வந்தது. அது அவரது புகழ் உச்சத்தில் இருந்த சமயம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அதுபோலவே இந்திய அரசால் அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் ஓவியப் பள்ளியில் படித்த காலத்தில் அங்கு ஓவியம் கற்கச் சில பெண்களும் சேர்ந்திருந்தனர். அவர்களில் ரமா பாய் என்னும் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுமித்ரா என்னும் பெண்ணும் நந்தகோபால் என்னும் மகனும் பிறந்தனர். (நந்தகோபால் புகழ்பெற்ற சிற்பியாக உருவானார். 2017 இல் காலமானார்)
மலையாள இதழ்களில் கோட்டுச்சித்திரம் இடம்பெறுவது பணிக்கரிடமிருந்துதான் தொடங்கியது. ‘ஜெயகேரளம்’ ‘மாத்ருபூமி’ போன்றவற்றில் தொடர் புதினங்கள், சிறுகதைகள் அவரது கோட்டோவியங்களைத் தாங்கி வெளிவரத் தொடங்கின.
Art trend என்னும் கலை இதழ் ஒன்றும் ஆங்கிலத்தில் பணிக்கரது மேற் பார்வையிலும் வழிநடத்துதலிலும் வெளிவரத் தொடங்கியது. தனது மகள் சுமித்ரா, மகன் நந்த கோபால் இருவரின் பெயர்களையும் இணைத்து ‘சுநந்தா’ என்னும் புனைப்பெயரில் தலையங்கம் மற்றும் பல கட்டுரைகளையும் அதில் எழுதினார்.
1966 ஆம் ஆண்டு அவரது கனவு நனவானது. ஆம் அதுதான் ‘சோழ மண்டல ஓவிய கிராமம்’ என்னும் அமைப்பு தோன்றிய வருடம். சென்னையிலிருந்து மாமல்லபுரம் (கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலை) செல்லும் வழியில் ஈஞ்சம்பாக்கம் என்னும் கிராமத்தில் நிறுவப்பட்டது.
1967 ஆம் ஆண்டில் அவர் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது முதல் ஓவிய கிராமத்திலேயே வசிக்கத் தொடங்கினார். புற்றுநோயால் பீடிக்கப் பட்டிருந்த இறுதி நாட்களில் தனது படைப்புகள் (58 ஓவியங்கள் 4 வெண்கலச் சிற்பங்கள்) அனைத்தையும் தமிழ் மாநிலத்துக்குக் கொடையாக கொடுக்க முடிவெடுத்தார். அரசுக்கு அது பற்றின கடிதமும் அனுப்பினார். அவை, தான் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டில்தான் காட்சிப் படுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் தமிழ்நாடு அரசு அதில் அக்கறை காட்டவில்லை. பதில் எதுவும் வராததால் எந்த மாநிலம் முதலில் அணுகுகிறதோ அதற்குக் கொடுப்பதாக பொது அறிவிப்பாக ஒரு விளம்பரம் கொடுத்தார். கேரள மாநில அரசு முந்திக்கொண்டது. திருவனந்தபுரத்தில் ஒரு காட்சிக்கூடம் அமைத்து அதில் அவை காட்சிப் படுத்தப்பட்டன. இது ரவி வர்மாவின் ஓவியக் கூடத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. ஆனால் இது 1977 இல் அவரது மரணத்துக்குப் பின்பே சாத்தியமாயிற்று. (அந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் புற்றுநோய் காரணமாக இறந்து போனார்.) S. தனபால் R. கிருஷ்ணாராவ் போன்றோர் அவருக்குப் பின்னர் ஓவியம் பயின்றவர்களில் சிலர்.
அவரது ஓவியப் பயணம் தெளிவான மூன்று பகுதிகளைக்கொண்டது. தொடக்கக் கால ஓவியங்கள் நீர்வண்ணம் கொண்டு உருவான நிலக் காட்சிகள்தான் சிறுவனாக மலபாரில் பொன்னணி கிராமத்தில் வசித்தபோது கண்ட நிலக் காட்சிகளை நெஞ்சில் சுமந்தவாறுதான் அவர் தமிழ்நாட்டில் வசித்தார். அவை தரூபப்பாணி ஓவியங்கள். மிக நேர்த்தியான வண்ணத் தொகுப்புகள் கொண்டவை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஈர்ப்புடையவை.
அவரது இரண்டாவது படைப்புப்பகுதியில் (1940 கள்) ஓவியங்கள் எண்ணெய் வண்ணம் கொண்டு Expressionism பாணியில் தீட்டப்பட்டன. அவற்றில் விளிம்பு வாழ்க்கை உழைப்பாளி மக்கள் இடம்பெறத் தொடங்கினர். அவர்களது வறுமையும் துயரும் நுணுக்கமாக ஓவியமாயின. விவிலியத்திலிருந்து Christ and Lasuras, Christ healing the Leper, Peter’s Denial என்று தலைப்பிட்ட ஓவியங்களில் ஏறத்தாழ வண்ணங்களே இடம் பெறவில்லை. ஒற்றைப் பழுப்புநிற வண்ணம்தான் இடம் பெற்றது. பெரும் கூட்டமாக மக்கள் அவற்றில் இடம்பெற்ற போதும் குழப்பமில்லாத படி தொகுக்கப்பட்டனர். அவரது மானுட உடற்கூறு முதிர்ச்சி அதில் வெளிப்படுகிறது. 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் தெருவோர மக்களிடம் நிலவிய வறுமையையும் எதிர்காலம் பற்றின அவர்களது அச்சத்தையும் பிரதிபலிக்கும் இரண்டு ஓவியங்களிலும் வண்ணங்கள் இடம்பெறவில்லை. Blessed are the Peacemakers என்னும் பெரிய ஓவியத்தில் அவர் ஏசுபிரான், புத்தர் காந்தியடிகள் மூவரையும் இணைத்துப் பெரும் திரளான மக்கள் கூட்டத்துடன் ஓவியமாக்கினார். அதுபற்றி ராஜாஜி ‘Your big picture is a great piece. I wish you would clothe the private parts of the nude figures with some rags. I am referring to the two or three figures below Gandhiji. It would then be more satisfactory and not lose its lesson. The whole piece could be called ‘Om Shanti, Shanti, Shanti’ or ‘Blessed are the Peacemakers,’ as you called it.’ என்று கடிதம் எழுதியதாக அவரது மகன் நந்தகோபால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அந்த ஓவியம் இப்போது சென்னை ஆளுனர் மாளிகையில் வரவேற்பு அறையில் உள்ளது.
அஜந்தா ஓவியப் பாணியைப் பின்பற்றி உருவான பெரும் கதையைச் சொல்லும் புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் ‘லும்பினி’ அவரை படைத்தலில் அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது. அதன் தொடர்ச்சியாக அமைந்தவை தொடர் ‘தோட்ட’ ஓவியங்கள்.
அவரது படைப்பின் மூன்றாம் பகுதியில் அவர் ஒரு புதிய தளத்தில் உலாவத் தொடங்கினார். ஓவியத்தில் எழுத்துக்கள் குறியீடாக இடம் பெறத் தொடங்கின. அது மொஹஞ்சதாரோ எழுத்துக்களிலிருந்து பெற்ற எழுச்சிதான். உருவங்கள், வடிவங்கள் வண்ணத் தொகுப்புகள் ஆகியவை கேரளத்தில் புழங்கிவரும் தாந்திரிக மந்திர வடிவங்களின் நீட்சி .’சொற்களும் குறியீடுகளும்’ (Words and Symbols) என்னும் கருப்பொருள் அவருள் தோன்றியது.
‘பழ வியாபாரி’ (Fruit Seller) என்னும் ஓவியத்தில்தான் இந்த எழுத்துக்களை இணைக்கும் பரிசோதனை தொடங்கியது. அங்கிருந்து அது கையெழுத்துப் பிரதி, கிராமியக் கலைவடிவங்கள் என்று விரிவடைந்தது. கேரளத்தின் சுவடி வடிவ ஆருட நூலில் காணப்பட்ட வடிவங்களும் கையெழுத்து வரிகளும் அவருள் பெரும் படைப்பெழுச்சியைத் தோற்றுவித்தன. உறைந்து அசைவற்று இருந்த அந்த வரிகளில் பொதிந்திருந்த படைப்புக் கருப்பொருள் அவருக்குத் தென்பட்டது. எழுத்து ஓவியமாகும் விந்தையை அங்குக் கண்டார். அவை குறியீடுகள் அரூப வடிவங்கள் அல்ல. மொழி அங்குக் காணாமற் போயிருந்தது.
மொஹஞ்சதாரோ எருது, சூரியன், துலாக்கோல், மீன்கள், பாம்புகள் சூலம், கோல வடிவங்கள் போன்றவையெல்லாம் அவரது ஓவியங்களில் குறியீடாக இடம்பெற்றன. ஆனால் பணிக்கர் மரபு வழியில் படைப்பதைப் பின்பற்றவில்லை. அவற்றைப் படியெடுக்கவுமில்லை. மாறாக,. ஓவியத்தில் அவற்றை மிக நேர்த்தியுடன் இணைத்து ஒரு புதிய தளத்துக்கு உயர்த்தினார். காண்போருக்கு அவை ஒரு புதிய அனுபவத்தை உண்டாக்கின.
1970 களில் அவர் தனது படைப்பு, வாழ்க்கை இரண்டிலும் இறுதிக் கட்டத்தில் நுழைந்தார். இப்போது பெரும் கித்தான் பரப்புகளில் வெற்றிடம் அதிகரிக்கத் தொடங்கியது. ஓரிரு வண்ணம் மட்டுமே கொண்டதாக உருவானது. வடிவங்கள் குறியீட்டு வகையில் மெல்லிய கோடுகளால் சிறுசிறு தொகுப்புகளில் கித்தானில் கட்டமைக்கப்பட்டன. 1976 இல் அவர் படைத்த ‘The Dog’ என்னும் சற்று மர்மம் கூடிய ஓவியம் இந்தக் குறியீட்டு வகையிலிருந்து சற்று விலகியது. காண்போருக்கு ஒரு மனக்கலக்கத்தைக் கொடுத்தது. அது உண்டாக்கிய பாதிப்பு மனதை விட்டு அகல மறுத்தது. தனது பின்புறம் தெரிய நிற்கும் கருநிற நாய் வளைந்து முகம் திருப்பி அனல் கக்கும் விழிகளால் காண்போரை நோக்குகிறது. அதன் முகத்தில் எங்கோ மனித முகத்தின் சாயல் நிழலாடுகிறது. அதன் கீழே ஒரு மேட்டில் அமர்ந்தவாறு சிறகை விரிக்கும் காக்கை மரணத்தையும் நாய் காலனையும் குறியீடாகக் கொண்டுள்ளதாக விமர்சகர்கள் எழுதினார்கள்.
பணிக்கர் மாணாக்கர்களுடன் தனது நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் பெரு விருப்பமும் அக்கறையும் காட்டினார். அவர்களுடன் வளாகத்தின் ஏதேனும் ஒரு மரத்தடியிலோ, அல்லது திறந்த வெளியிலோ எந்தப் பகுதியிலும் நின்றவாறே அது தொடங்கிவிடும். இரண்டு அல்லது மூன்று மாணாக்கருடன் ஆரம்பிக்கும் அது விரைவிலேயே கூடுதல் எண்ணிக்கையை எட்டிவிடும். சிலபொழுதுகளில் ஆசிரியர்களும் வந்து சேர்ந்து கொள்வதுண்டு. அங்குக் கலை பற்றின உரையாடல் மட்டுமல்லாமல் வானத்தின்கீழ் உள்ள எதைப் பற்றியதாகவும் அது அமையும். மாணவர்களின் எதிர் வினையை அவர் கருத்தோடு கவனிப்பார். அவரது துணைவியார் பள்ளியின் அனைத்து விழாக்களிலும் ஓவியக் காட்சிகளிலும் மகள், மகன் இருவருடனும் தவறாது பங்கேற்பார். மாணவர்களுடன் பேசி அவர்களது படைப்புகள் பற்றித் தமது கருத்துகளையும் கூறுவார்.
பணிக்கர் தனது பேச்சுத்திறன், ஆங்கில மொழி ஆளுமை, நிர்வாகத் திறமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் காரணமாக மாணவரிடையே படைப்பாற்றலை உரமிட்டு வளர்த்தார். ஆனால், அவர் பேரில் இன்றளவும் சொல்லப்படும் குற்றச்சாட்டு அவர் மலையாளிகளுக்கு இவ்வகை விஷயங்களில் முன்னுரிமை கொடுத்தார் என்பதுதான். அந்த நாட்களில் கேரளத்தில் ஓவியர் ரவிவர்மாவின் பெயரில் இயங்கிய ஓவியப்பள்ளி அவர் பாணிக்குத்தான் முன்னுரிமை தந்தது. திருவனந்தபுரம் ஓவியப்பள்ளி மேலைநாட்டு மரபு சிந்தனை சார்ந்த வழியையே பின்பற்றியது. காலடியிலும் குருவாயூரிலும் சுவரோவியம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் இயங்கின. வேறு ஓவியப்பள்ளி அங்கு இருக்கவில்லை. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் மாணவர் இங்கு வந்து படித்தனர். வட மாநிலங்களிலிருந்தும் கூட மாணவர் வந்து ஓவியம் கற்றனர். மொழி காரணமாக மேலே சொன்ன விஷயம் சாத்தியமாகி இருக்கலாம். இன்று புகழுடன் விளங்கும் பல கேரள ஓவிய, சிற்பிகள் பள்ளி விடுதியிலேயே தங்கிப் படித்தனர். அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலையும் இருந்தது. விடுதி வசதி பின்னர் எக்காரணத்தாலோ நிறுத்தப்பட்டு விட்டது. அறுபதுகளில் ‘லலித கலா அகாதமி’யின் தமிழ்நாடு காரியாலயம் வேப்பேரியில் இயங்கிய போதும் இவர்களே அங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
பணிக்கர் ஒரு சகாப்தமாகக் கொள்ளத்தக்கவர்.