சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா முறையாக ஓவியம் பயிலாத ஒரு பெரும் படைப்பாளி!
சாரு சித்ர பட்டாச்சார்யா இந்துமதி தேவி தம்பதியருக்குப் புதல்வராகச் சிட்டப் பிரசாத் மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானா மாநிலத்தில் 1915 இல் பிறந்தார். சிட்டகாங் (துறைமுகப்பட்டணம். இப்போது பங்களாதேஷில் உள்ளது.) முனிசிபல் பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்தார். தொடர்ந்து சிட்டகாங் அரசுக் கல்லூரியில் உயர்கல்வி கற்றுப் பட்டதாரியானார். ஓவியத்தின் மீது பெரும் ஈர்ப்பு இருந்தபோதும் முறையாக ஓவியம் கற்கவில்லை. கல்லூரி நாட்களிலேயே விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1934-39 ஆண்டுகளில் விடுதலை இயக்கத்துக்கான விளம்பர ஓவியங்களைக் கோட்டுச்சித்திரங்கள் படைத்ததன் மூலம் அவர் ஓர் ஓவியராகவே பேசப்படத் தொடங்கினார்.
1937-38 இல் அவருக்கு பொதுவுடைமை இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கில அரசு வங்காளத்தில் மேற்கொண்ட நில அழிப்புக் கொள்கைக்கு (Scorched Earth Policy) எதிரான கிளர்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட்டார். 1940 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (CPM-India) முறையாக உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டார். கட்சித் தலைமை அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்று யோசித்து அவரை முதலில் கொல்கத்தாவுக்கும் பின்னர் கட்சியின் தலைமைச் செயலகமான மும்பைக்கும் அழைத்து வந்தது. 1940-48 களுக்கு இடையில் அவர் முழுநேரப் பணியாளராகக் கட்சியின் வெளியீடுகளுக்கும், கட்சியின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச்செல்வதற்குமான கோட்டு ஓவியங்களையும் விளம்பர ஓவியங்களையும் ஏராளமாக வரைந்தார். 1940 இல் வங்கத்தில் தோன்றிய பஞ்சத்தின் கொடுமைகளை அங்குச் சென்று கருப்பு வெள்ளை ஓவியங்களாக ஆவணப்படுத்தக் கட்சி அவரை வங்கத்துக்கு அனுப்பியது. அவ்வோவியங்கள் ‘ஜனயுத்தா’ என்னும் வங்கமொழி கட்சிப் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தன. மக்களிடையே பெரும் அதிர்வையும் துயரையும் அவை தோற்றுவித்தன. அவர் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பசியில் வாடும் மக்களுடனேயே வசித்து இந்த ஓவியங்களை வரைந்தார்.
கட்சித் தலைமையுடன் அவருக்கு உண்டான கருத்து முரண்பாட்டால் 1949 இல் சிட்டப் பிரசாத் கட்சியை விட்டு விலகினார். அப்போது புதிதாகத் தொடங்கிய அனைத்துலக அமைதி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அது தொடர்பான ஓவியங்களைத் தீட்டினார். இவையெல்லாம் அவருக்கு உலகளாவியப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. அவரது ரசிகர் எண்ணிக்கையும் கூடியது. எளிய மக்களின் வாழ்க்கையில் அவர்களது மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல் போன்ற கருப்பொருள் கொண்ட ஓவியங்களையும் வரையத் தவறவில்லை. பெரும்பாலும் கருப்பு மசிக் கோடுகளிலும் லினோ கட் முறையில் அச்செடுத்தும் அவரது படைப்புகள் உருவாகின. ஓவிய மேதை திரு நந்தலால்போஸ்தான் அவரது மானசீக குருவாக விளங்கினார்.
சிட்டப் பிரசாத்தின் நாட்டம் பொம்மலாட்டத்தின் பக்கமும் திரும்பியது. தனது ஸெக் நாட்டு நண்பர் (F.Salaba) சலாபாவிடம் அதைக் கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து ஒரு பொம்மலாட்ட அரங்கையும் பரிசாகப் பெற்றார். இந்தியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்படும் பொம்மலாட்டங்கள் பற்றின விவரங்களையும் தெரிந்துகொண்டு அதன் கலவையாக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளைப் பரிசோதனையாகக் கிராம மக்களிடையே நிகழ்த்தினார். ‘கேலாகார்’ என்று அதற்குப் பெயரிட்டார். அதற்கான பொம்மைகளைத் தானே மரக்கட்டை, கொட்டாங்கச்சி, கயிறு, பருத்தி போன்ற பொருள்களைக் கொண்டு உருவாக்கினார். என்னும் செய்தியை அவருடன் நெருங்கிப் பழகிய திரு பிரபா சென் கூறுகிறார். அவரை ஒரு சிறந்த கதைசொல்லி என்று மக்கள் போற்றினர்.
எழுபதுகளின் தொடக்கத்தில் சிறார்களுக்காக அவர் ராமாயணம், பாரதம் இரண்டையும் செய்யுள் வடிவில் வங்கமொழியில் தானே எழுதினார். அவற்றுக்கு உரிய ஓவியங்களையும் தீட்டி, நூலாகவும் வெளியிட்டார். அவரது கட்டுரைகள் ஜெர்மன், டேனிஷ், செக் மொழிகளில் நூலாகியுள்ளன. அவரது வங்கத்துப் பஞ்சகால ஓவியங்களுடன் கூடிய ‘பசித்த வங்கம்’ (Hungry Bengal) என்னும் நூல் அச்சிடப்பட்டது அதை வெளியிட ஆங்கில அரசு தடைவிதித்தது மட்டுமல்லாமல் மொத்த நூல்களையும் தீயிட்டு அழித்து விட்டது. அப்படியும் சில பிரதிகள் தப்பிப் பிழைத்தன. இன்றும் உள்ளன.
அவரது வாழ்நாளில் அவருக்குத் தனிநபர் ஓவியக்காட்சி என்பதே இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால், மேலை நாடுகளில் பல அவரது படைப்புகளைக் காட்சிப்படுத்திப் பாராட்டின. இதழ்களில் விமர்சனங்களும் பிரசுரமாயின. திருமணம் இல்லாமலே வாழ்ந்த அவர் 1978 இல் நோய்வாய்ப்பட்டபோது சகோதரியின் பராமரிப்பில் இருந்தார் 19-11-1978 இல் அவரது ஆவி பிரிந்தது. அவரது படைப்புகளில் பெரும் பகுதி சகோதரியிடம்தான் பாதுகாப்பாக இருந்தது. இப்போது எப்படியோ.
டெல்லி லலித கலா அகாதெமி அவருக்கு ஓர் ஓவியர் கையேடு வெளியிட்டது. மற்றபடி எந்தவிதமான விருதும் இந்திய அரசால் அவருக்குத் தரப்படவில்லை என்பது சோகமானதுதான்.
குறிப்பு
லினோகட் என்னும் உத்தி அச்சுப்பதிப்புக்கானது. மரப்பலகை செதுக்கல் போன்றது. முதலில் தாளில் படத்தை வரைந்துகொண்டு பின் அதை இடவலமாகத்திருப்பி லினோலியம் பரப்பில் படியெடுக்கவேண்டும். தேவையற்றப் பரப்பைக் கத்தி கொண்டு செதுக்கி நீக்கவேண்டும். பரப்பில் மசியைத்தடவித் தாளில் ஒட்டியெடுக்கவேண்டும்.
0