Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

S.H. Raza என்று அறியப்படும் ஸையத் ஹைதர் ரஜா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்புர் மாவட்டத்தில் பபாரியா என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வனத்துறை துணை அதிகாரியாகப் பணி செய்தார். சிறுவயதிலேயே ரஜா வரைவதில் ஆர்வம்கொண்டிருந்தார். தந்தையின் பணிமாற்றம் காரணமாக தமோ (மத்தியப் பிரதேசம்) வுக்குக் குடும்பம் இடம்பெயர்ந்தது. அரசு உயர்நிலைப்பள்ளியில் தனது கல்வியை முடித்தபின்னர் நாகபுரி ஓவியப்பள்ளியிலும் (1939-43) மும்பை ஜே.ஜே. ஓவியப்பள்ளியிலும் (1943-47) ஓவியம் கற்றார். 1950-53களில் பிரான்ஸ் அரசு உயர் கற்றலுக்காக அவரைத் தேர்ந்தெடுத்து உதவித்தொகை (Scholarship) வழங்கியது. அங்கு அவர் Ecole Superieure des Beaux-Arts பள்ளியில் உயர் கல்வி பயின்றார். அது முடிந்தபின் அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். பின்னர் பாரிஸிலேயே தங்கி முழுநேரச் சுதந்திர ஓவியராக ஓவியம் படைக்கத் தொடங்கினார்.

S.H. ரஜா
S.H. ரஜா

ஜே.ஜே ஓவியப்பள்ளியில் படித்தபோதே 1946இல் அவரது முதல் ஒருநபர் ஓவியக் காட்சி மும்பை ஓவிய சங்கக் காட்சிக்கூடத்தில் இடம் பெற்றது. 1947இல் அவரது தாயார் காலமானார். 1947இல் ஸூஸா ஹுசைன் போன்ற ஓவிய நண்பர்களுடன் Bombay Progressive Artists’ Group (PAG) என்னும் ஓவியர் குழு தோன்றியது. 40களில் அவரது படைப்பில் நீர்வண்ண நிலக்காட்சிகள் Expressionism அரூபம் இரண்டின் கூட்டுக் கலவையாக இடம் பெற்றன. பின்னர் அது உள்மனம் சார்ந்த நிலக்காட்சியாக விரிவடைந்தது. PAG குழு தனது முதல் குழுக்காட்சியை 1948இல் மும்பையில் வைத்தது. ரஜாவின் தந்தை அந்த ஆண்டில் காலமானார். அவரது சகோதரர் சகோதரிகள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர்.

1970இல் அவருள் தோன்றிய படைப்பு சார்ந்த குழப்பம் உச்சநிலையை எட்டியது. தனது படைப்பு வழியையும் கற்பனையையும் புதிய கோணத்தில் எடுத்துச்செல்ல மனம் விழைந்தது. அஜந்தா எல்லோரா அதை அடுத்து குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் காசி போன்ற நகரங்களுக்குச் சென்ற அவருக்கு இந்துமதக் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை நுணுக்கமாக அறியும் ஆவல் தோன்றியது. அதன் பயனாகத் தோன்றியதுதான் ‘பிந்து’ எனப்படும் புள்ளி அவரது படைப்பில் மையம் கொண்டது.

‘புள்ளி’ என்பதை அவர் தாந்திரிக வழிபாட்டு யந்தர வடிவிலிருந்து தெரிவு செய்துகொண்டார். இதை ஓர் ஓவியரின் மறுபிறவி என்றும் கூறலாம் என விமர்சகர் கூட்டம் அதை மதிப்பீடு செய்தது பள்ளியில் படித்த நாட்களில் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த அவரை அவரது ஆசிரியர் புள்ளியைத் தொடர்ந்து உற்று நோக்கிக் கவனத்தை வளர்த்துக்கொள்ளச் செய்ததை ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

‘புள்ளி’ என்பது மனவலிமையின் உறைவிடம் என்று அவர் புரிந்து கொண்டார். அவரது படைப்புகளில் புள்ளியுடன் பின்னர் பிணைந்த சமபக்க முக்கோண வடிவமும் இடம்பெறத் தொடங்கியது. ஆண் பெண் இணையும்போது வெளிப்படும் பெருந்தீ (பிரகிர்த்தி – புருஷ) என்னும் தாந்திரிகக் கோட்பாட்டை உள் வாங்கிக் கொண்ட, ஒளிரும் வண்ணத் தொகுப்புடன்… அளவிலும் பெரும் பரப்புக் கொண்ட படைப்புகள் 1980 முதல் தீட்டப்பட்டன. அதன்பின் அவரது படைப்புகளில் நிலக்காட்சி ஓவியங்கள் முற்றிலுமாக அகன்றுபோயின. புள்ளி என்பதை அவர் சக்தி, ஒலி, காலம், பெருவெளி என்பதாக விரிவுபடுத்தினார். 2000 யிரத்துக்குப் பின்னர் அவரது படைப்புகளில் ‘குண்டலினி’ தத்துவமும் இடம்பெறத் தொடங்கியது.

S.H. ரஜா ஓவியங்கள்

1959இல் அவர் Janine Mongillet என்னும் ஓவியரை மணந்து கொண்டார். அவரது மனைவி புற்றுநோய் பீடிக்கப்பட்டு 2002இல் காலமானார். இது ரஜாவை மனத்தளவில் பெரிதும் தாக்கியது. 2010இல் அவர் இந்தியா திரும்ப முடிவுசெய்து டெல்லியை வசிக்கத் தேர்ந்தெடுத்தார். 23-7-2016 அன்று ஒரு தனியார் மருத்துவ மனையில் அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரது வயது 94.

ஸையத் ஹைதர் ரஜாவுக்குக் கிட்டிய விருதுகள்:

1956- Prix de la Critique – பாரிஸ்

1981- பத்மஸ்ரீ -இந்திய அரசு

1981 – கலா ரத்னா – லலித் கலா அகாதெமி, டெல்லி

1992-93 – காளிதாஸ் சம்மான் – மத்தியப் பிரதேச மாநிலம்

2007- பத்மபூஷண் – இந்திய அரசு

2013- பத்மவிபூஷண் – இந்திய அரசு

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *