ஓவியர் சபாவாலா மும்பை நகரில் ஒரு வளமான பார்சி குடும்பத்தில் 23-8-1922இல் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள Cathedral and John Cannon பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை Elphinstone கல்லூரியிலும் முடித்த அவர் ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் 1944இல் கற்றலை நிறைவு செய்து பட்டயம் பெற்றார். அதைத் தொடர்ந்து, Heatherly School of Fine Arts-London, 1945-47 Academie Andre Lhote Paris 1948-51 Academie Julian 1953-54 Academie de la Grande Chaumiere 1957 என்று ஓவியம் கற்றல் நீண்டது.

சபாவாலா ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் 31 தனிநபர் காட்சிகளை வைத்தார். 150க்கும் மேற்பட்ட குழு அமைப்புக் காட்சிகளில் அவரது படைப்புகள் இடம் பெற்றன.
அவரது படைப்புகளில் க்யூபிஸ இம்ப்ரனிஷத் தாக்கம் மிகுந்து காணப்படும். அதே நேரத்தில் இந்திய வண்ணத் தொகுப்பும் நிலக்காட்சிகளும் இருக்கும். இயற்கையின் பேரழகை அவர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பயணித்து உள்வாங்கிக் கொண்டார். அலங்காரமான பின்புலன் கூடியவிதமாக அலைந்து திரியும் துறவிகளை ஓவியமாக்கினார். அவரது நிலக்காட்சிகளில் ஒரு கனவுத் தோற்றம் கூடியிருக்கும்.
அவரது படைப்புகளின் எண்ணிக்கை குறைவானதுதான். ஆண்டிற்கு 5 அல்லது 6 ஓவியங்கள்தான் உருவாயின. க்யூபிஸத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று அவர் எப்போதும் பேசப்படுவார். 2-9-2011இல் இவ்வுலகிலிருந்து மறைந்தார்.
பெற்ற விருதுகள்
1977 – பத்மஸ்ரீ விருது
1994 – லலித கலா அகாதெமி-டெல்லி ஆண்டு ஓவியக்காட்சியில் ஓவியத்துக்கு பரிசு
2007 – லலித கலா அகாதெமி – டெல்லி கலாரத்னா விருது