இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரியும் முன்னர் இருந்த ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜீலம் நதி மாவட்டத்தில் ஜீலம் நகரில் 25-12-1925இல் சதிஷ் குஜ்ரால் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது காஷ்மீர் பகுதியில் ஒரு பாதுகாப்பற்ற தொங்கு பாலத்திலிருந்து பிடி தவறி விழுந்ததால் அவருக்குக் கேட்கும் திறன் இல்லாமல் போனது. அது 62 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் அறுவை சிகிச்சை மூலம் 1998இல் சரியாயிற்று.
அவரது இந்தக் குறைபாட்டால் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டது. பள்ளிகள் அவரை மாணவராகச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டன. அவரிடம் இருந்த வரையும் திறமையைக் கண்டு அவரது உறவினர் அவரை 1939இல் லாஹூரில் உள்ள (இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது.) ‘மாயோ ஓவியப்பள்ளி’யில் (Mayo School of Arts) சேர்த்து விட்டனர். 1934இல் மும்பை ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் ஓவியம் கற்பதைத் தொடர்ந்தார். ஆனால் உடல்நலம் இன்மையால் பாதியிலேயே பள்ளியை விட்டு விலக நேர்ந்தது.
1952இல் மெக்ஸிகோ நாட்டில் உள்ள Palacio de Bellas Artes என்னும் ஓவியப் பள்ளியில் உதவித்தொகை மூலம் ஓவியம் கற்கும் வாய்ப்பு கிட்டியது. Diego Rivera, David Alfaro Siqueiros போன்ற சிறந்த ஆசிரியர்களால் அவரது கற்கும் திறன் மேம்பட்டது. முழுமையான இந்த பாரத தேசம் இந்தியா – பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிந்தபோது இருநாடுகளிலும் தோன்றிய மதக் கலவரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டதும் அகதிகளாகப் பெரும் அவதிக்குள்ளாக்கப்பட்டுச் சீரழிந்ததும் அவருக்குள் ஒரு மாபெரும் அதிர்வையும் ஆழ்ந்த வடுவையும் என்றைக்குமாக உண்டாக்கியது. அவரது படைப்புகளில் இதன் தாக்கம் அழுத்தமாகத் தொடர்ந்து வெளிப்பட்ட வண்ணம் இருந்தது.
அவர் தனது படைப்பு வழியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருந்தார். இது ஒருவகையில் அவருள் தோன்றிய சலிப்பின் காரணமாக உண்டானதுதான். ஆனால் ஓவியம்தான் அவரது முதல் விருப்பமாகவே எப்போதும் இருந்தது. அதில் பல புதிய உத்திகளை உட்புகுத்தினார். சுவர் ஓவியங்களையும் அவர் பெரும் ஈடுபாட்டுடன் தீட்டினார்.
சதிஷ் குஜ்ரால் ஒரு தேர்ந்த சிற்பியாகவும் விளங்கினார். நவீன அமைப்புக்கொண்ட கட்டடங்களை எழுப்புவதிலும் அவரது படைப்பாளுமை வெளிப்பட்டது. புதுடெல்லியில் உள்ள பெல்ஜியம் எம்பஸி கட்டடம் அவரது படைப்புதான். அது அனைத்துலகக் கட்டடக் குழு அமைப்பால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கட்டடம் எனப் புகழப் பட்டது.
ஜனதா தள் கட்சியின் ஆட்சியில் 1997 முதல் 1998 வரை இந்தியாவின் 12ஆவது பிரதமராகப் பதவி வகித்த ஐ.கே. குஜ்ரால் (Indira Kumaar Gujral) இவரது மூத்த சகோதரர்.
26-3-2020இல் 94ஆம் வயதில் காலமானார்.
விருதுகளும் பாராட்டுகளும்
1999இல் இந்திய அரசு அவருக்குப் பத்ம விபூஷன் விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.
லலித கலா அகாதமி 1956, 1957 இரு ஆண்டுகள் கலைக் காட்சிகளில் ஓவியத்துக்காகவும் 1972இல் சிற்பத்துக்காகவும் என்று மூன்று முறை விருது (Cash Award) வழங்கியது. அத்துடன் இந்தியாவின் ஒன்பது சிறந்த ஓவியருள் ஒருவராகவும் தேர்வுசெய்தது.
12க்கும் மேற்பட்ட குறும்படங்கள் அவரைப் பற்றியும் அவரது படைப்பு பற்றியும் வந்துள்ளன. 2012 பிப்ரவரி 15 அன்று ‘A Brush With Life’ என்னும் தலைப்புகொண்ட அவரது சுயசரித நூலிலிருந்து அதே தலைப்பில் உருவான குறும்படம் மிகவும் பாராட்டிப் பேசப்பட்டது. சுயசரிதம் அல்லாமல் தனது படைப்பு சார்ந்த மூன்று நூல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
0