கோவாவில் மார்கோ நகரில் 21-1-1926இல் பிறந்த லக்ஷ்மண் தனது மாமனின் புகைப்படக்கூடத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்கு வண்ணம் தீட்டும் வேலையைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட்டார். 1940களில் கோவாவிற்கு விடுதலை வேண்டி போர்த்துகீசிய அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் (Goa Liberation Movement) சிறுவன் லக்ஷ்மண் முழுமூச்சாகக் கலந்துகொண்டார் காவல் நிலையத்தின் முன்பு சத்தியாகிரகப் போராட்டமும் தொடங்கினார். அதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்குக் காவல் நிலையத்தில் தடியடியும் கிட்டியது. அவரது பெற்றோர் அவரை இந்தப் போராட்டத்திலிருந்து அகற்றும் விதமாக, மும்பை ஜே.ஜே ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர் (1943-47). அப்போது அவருக்கு வயது 17தான்.

இறுதி ஆண்டின் ஓவியக்காட்சியில் அவருக்கு மாயோ தங்கப்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. ஓவியம் பயில்வதை நிறைவு செய்த அவருக்கு, அந்தப் பள்ளியிலேயே ஓவியம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணி நியமனமும் கிட்டியது. அந்தப் பணி பத்து ஆண்டுகள் நீடித்தது. 1948இல் தொடங்கப்பட்ட PAG ஓவியர் குழுவின் செயற்பாடுகளில் அவரும் இணைந்தார். ஆனால் ஓர் உறுப்பினராக அல்ல. ஒரு சமயம் ஓவியர் F.N. ஸூஸா தீட்டிய பெண்ணின் நிர்வாண ஓவியத்தை ஓவியக்காட்சியிலிருந்து அகற்றுமாறு அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதன்மந்திரியாக இருந்த மொரார்ஜிதேசாய் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. லக்ஷ்மண், ஸூஸாவின் நெருக்கமான நண்பராக இருந்தார். அதன் காரணமாக அவரைப் பள்ளி நிர்வாகம் பள்ளிப் பதவியில் கீழ்நிலைக்கு மாற்றியது (Demotion). அந்தச் செயலை எதிர்த்து லக்ஷ்மண் பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால் நிர்வாகம் அவரை அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. அதற்கு அவர் ஒப்புக் கொள்ளாததால் பணியிலிருந்தே நீக்கப்பட்டார்.
அப்போது பாரிஸ் நகரில் வசித்து வந்த லக்ஷ்மணனின் நண்பர் S.H. ரஜாவுக்கு, பள்ளியில் நிகழ்ந்தவற்றை விவரித்து ஒரு கடிதம் எழுதி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். ரஜா அவரைப் பாரிசுக்குத் தருவித்துக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டார். பாரிஸ் சென்ற லக்ஷ்மண் ‘E’cole des Beaux- Arts’ ஓவியக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். குறிப்பாக, சுவர் ஓவியம், உலோகத் தகட்டில் செதுக்கும் etching எனப்படும் படைப்பு வகை இரண்டையும் ஆர்வத்துடன் கற்றார். அடுத்த பத்து ஆண்டுகள் பாரிஸிலேயே தங்கி ஓவியம் படைத்தார். பத்து தனிநபர் ஓவியக் காட்சிகளையும் பாரிஸில் வைத்தார். இந்தியா திரும்பிய அவரை 1977 இல் கோவா மாநில நுண்கலைப்பள்ளி அதன் முதல்வராகப் பணி நியமனம் செய்தது (அப்போது அவருக்கு வயது 51). 1987 வரை முதல்வராக இருந்த அவர்தான் பனாஜி பகுதியில் புதிய கல்லூரி வளாகம் அமையக் காரணமாக விளங்கினார்.
1947-50களுக்கு இடையில் அவரது படைப்புகளில் இந்தியச் சிற்றோவியப் பாணியுடன் கோவாவின் எளிய மக்களின் வாழ்க்கை கருப்பொருளாக அமைந்தது. அவரது படைப்பில் எகிப்து சிற்பத்தாக்கமும் காணப்படும். ஹிந்துஸ்தானி இசையில் பெரும் நாட்டம் கொண்டிருந்த லக்ஷ்மணுக்கு குழலும் சிதாரும் இசைக்கும் வல்லமையும் இருந்தது. பீம்சென் ஜோஷி, குமார் கந்தர்வா, கிஷோரி அமோன்கர் போன்ற பெரும் இசை விற்பன்னர்களின் இசையைக் கேட்டு ரசித்தவாறே ஓவியம் படைப்பது என்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
1965இல் ஹிந்துஸ்தானி ராகங்களை அவற்றின் ஒலிப் பயணத்துக்குத் தக்கவாறு கோடுகளையும் வண்ணத்தையும் கொண்டு ஓவியமாக்கினார். பின்னர், ‘இசையின் பாங்கு’ (Musical Moods) என்று தலைப்பிட்டு அவற்றைக் காட்சிப்படுத்தினார். தமது வாழ்நாளில் உலகெங்கும் 110க்குமேல் தனிநபர் ஓவியக்காட்சிகளை நிகழ்த்திய புகழுடையவர்.
2022இல் அவர் உயிர் பிரிந்தது.
பெற்ற விருதுகள்:
லலித் கலா அகாதெமி, டெல்லி ஆண்டுதோறும் நிகழ்த்தும் அனைத்திந்திய ஓவிய சிற்பக் காட்சியில் 1961, 1963, 1972 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை விருது.
1985இல் பத்மஸ்ரீ விருது, கோவா அரசின் மாநில விருது.
1995இல் நேரு விருது.
கோவாவின் மிக உயர்ந்த விருதான ‘கோமன்ட் விபூஷண் (Gomant Vibushan) விருது.
பத்ம பூஷண் விருது.
0