சிம்லாவில் ஜூன் 21, 1928இல் பிறந்த சுவாமிநாதன் டில்லியில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் மருத்துவப் படிப்பிற்கான அடித்தளக் கல்வியை மேற்கொண்டார். ஆனால் அதை முடிக்காமலேயே வீட்டை விட்டு கொல்கத்தாவுக்கு ஓடிவிட்டார். ஏதேதோ வேலைகளைச் செய்ததன் மூலமாக அன்றாட உணவைத் தேடிக்கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லி திரும்பிய அவர் காங்கிரஸ் சோஷியலிஸ்ட் பார்ட்டியில் உறுப்பினரானார். ஒரு ஹிந்தி சிறுகதை இதழில் உதவி ஆசிரியராகவும் பணிசெய்தார். பின்னர் ‘உழைப்பாளியின் குரல்’ (மஸ்தூர் ஆவாஸ்) என்னும் வார இதழுக்கு ஆசிரியரானார். அதன் முதல் இதழை காந்தியிடம் சென்று காட்டி இதழ் பற்றின அவரது கருத்தைக் கேட்டார். ‘இது உண்மையிலேயே உழைக்கும் வர்க்கத்துக்கானதா?’ என்று வினவிய அவரிடம் ஆம் என்று உற்சாகமாகக் கூறினார். ‘என்றால் இதழில் எழுத்துக்களைப் பெரிதாக மாற்று’ என்று காந்தி கூறினார்.
மார்க்ஸ் சிந்தனையில் எழுச்சிபெற்ற சுவாமிநாதன் 1948இல் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். 1959இல் பவானி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். Peoples Publishing House நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர் ஓவியர்கள் ஸைலோஸ் முகர்ஜியா, பி.ஸி சென்யால் இருவரும் ஆசிரியராக இருந்த டில்லி பாலிடெக்னிக் மாலை நேரப் பள்ளியின் ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். பகலில் இதழ்ப்பணி, மாலையில் ஓவிய வகுப்பு இரண்டையும் அவரால் சமாளிக்க இயலவில்லை. ஓவியம் பயில மாலை வகுப்புக்குப் போவது நின்றுபோனது. ஆனால் ஓவியம் தீட்டுவது இரவில் தொடர்ந்தது.
1957இல் அவருக்கு போலந்து நாட்டில் உள்ள வார்சா நுண்கலைப்பள்ளியில் சேர்ந்து ஓவியம் கற்கும் வாய்ப்பு உதவித் தொகையுடன் கிட்டியது. அச்சுக்கலையில் பட்டம் பெற்று மூன்றாண்டு பயிற்சியை நிறைவு செய்தபின் இந்தியா வந்த அவர் திரும்பவும் பத்திரிகையில் பணி மேற்கொண்டார். ஆனால் விரைவிலேயே அதிலிருந்து விலகி முழுநேர ஓவியராக மாறினார். 1960இல் பி.கே. ரஸ்டான், என். தீஷித் என்னும் இரு ஓவியர்களுடன் கூட்டாக ஓவியக்காட்சி ஒன்றை நிகழ்த்தினார். தனது தைல ஓவியம் பதிப்பு ஓவியம் இரண்டையும் அதில் காட்சிப்படுத்தினார். ஓவியர் எம்.எஃப் ஹுசைன் காட்சியைத் திறந்துவைத்து மூவரையும் வெகுவாகப் பாராட்டினார். 1963இல் அவர் group 1890 என்னும் ஓவியர் குழுவை குஜராத் மாநிலத்தில் உள்ள பவநகரில் தொடங்கினார். அதன் முதலும் கடைசியுமான ஓவியக்காட்சி 1963இல் ஜவஹர்லால் நேருவால் தொடங்கிவைக்கப்பட்டது. Contra 66 என்னும் பெயரில் அவர் ஓர் ஆங்கிலக் கலை இதழைத் தொடங்கினார். அதில் அவர் மற்ற ஓவியர்களின் படைப்புகளைப்பற்றி வெளியிட்ட விமர்சனங்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. ‘ஓர் ஓவியனான உனக்கு மற்றவரின் படைப்பு பற்றி விமர்சிக்க உரிமை இல்லை’ என்னும் எதிர்வினை, புகழ்பெற்ற ஓவியர்களால் முன்வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதழும் நிறுத்தப்பட்டது.
பில், கோண்ட் பழங்குடி இனத்தவருடன் கலந்து வாழ்ந்து அவர்களிடையே இருந்த படைப்புத் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியதை அவரது சமூகப் பணியாக ஓவிய உலகம் புகழ்கிறது. 1981இல் கோண்ட் இனத்து இளைஞர் ஜங்கார் சிங் ஸ்யாம் தனது இல்லத்துச் சுவர்களில் தீட்டியிருந்த ஓவியங்களைக் கண்ணுற்று அவனைப் பெருநகருக்குக் கூட்டிச்சென்று அவனுடைய படைப்புகளைக் காட்சிப்படுத்தினார். அதன் மூலமாக அவனுக்குப் பன்னாட்டு அறிமுகமும் பெரும் புகழும் கிட்டியது.
1982இல் போபால் நகரில் ‘ரூபாங்கர் பாரத் பவன்’ என்னும் பெயரில் பன்முகக் கலைக்கூடம் அமைப்பதற்கும் அதில் பழங்குடி மக்களின் படைப்புகளுக்கான தனிப் பகுதியும் அவரது முயற்சியால் உருவாயிற்று. அதன் தாளாளராக 1990 வரை பொறுப்பேற்றிருந்தார். தனது வாழ்நாள் முழுவதும் பழங்குடி இனத்து மக்களின் கலை வளர்ச்சிக்கும், அதற்கு உரிய அங்கீகாரத்துக்கும் தொடர்ந்து செயற்பட்டு வந்தார்.
அவரது ஓவியப்படைப்புகளில் மானுட இனம் இராது. ஒரு தனித்த குன்று, அதன் உச்சியில் ஒட்டிக்கொண்டு அல்லது சிறிது மேலே மிதந்தபடி காணப்படும் கோள வடிவப் பாறை. அதை ஒட்டிப் பறக்கும் குருவியின் தோற்றத்தில் ஒரு சிறு பறவை. மஞ்சள், அல்லது ஆழ்ந்த சிவப்பு நிறம் கொண்டிருக்கும் பின்புலம். தூரிகைத் தடம் தெரியாதபடி அழுத்தமாகப் பூசப்பட்டிருக்கும். அசைவற்றதும் உயிரற்றதுமான உறைந்த குன்று, பறக்கத் துடித்து அலையும் பறவை என இருவிதமான தன்மையை ஒருங்கிணைத்துள்ள அவ்வோவியங்கள் மிகக்குறைந்த வண்ணத்தொகுப்பு கொண்டவை. குன்றின் அமைப்பு அழுத்தமான மேடுபள்ளங்களின் தொகுப்பாக இருக்கும். ஓர் ஒற்றை மரமும் சில சமயங்களில் ஓவியத்தில் இடம்பெறும். காண்போரை இழுத்து நிறுத்தித் தொடர்ந்து பார்க்க வைக்கும். அந்தப் பின்புலத்துப் பறவை தன்னுடன் அவர்களைப் பயணிக்கச் சொல்லும்.
அவருக்கு ‘The Significance of Traditional Numen to Contemporary Art’ என்னும் ஆராய்ச்சி நூலுக்காக 1968இல் ஜவஹர்லால் நேரு Fellowship விருது அளிக்கப்பட்டது. ஒரு சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ஓவியர் சுவாமிநாதன் 1994இல் தமது 66 ஆவது வயதில் காலமானார்.
0