குஜராத் மாநிலத்தில் (சௌராஷ்டிரத்தில்) பவநகரில் 1-8-1928இல் பிறந்த ரஸிக் ராவல் (Rasik Durgashanker Raval) பள்ளிப் படிப்பை முடித்தபின் மும்பை ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் தனது முதுநிலைப் பட்டப் படிப்பை நிறைவுசெய்தார். சுவர் ஓவியங்கள் பற்றி விரிவாகக் கற்பதற்குக் கல்லூரி அவருக்கு உதவித்தொகை அளித்தது. மேற்கத்தியத் தத்ரூபப் படைப்பில் மிகவும் திறமைசாலியாக விளங்கிய அவர் அதிலிருந்து விலகி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.
அவர் ஓவியர் மட்டுமல்ல, ஓவிய ஆசிரியர், கலை விமர்சகர், இதழியலாளர் மற்றும் கலைக்கட்டுரைகள் எழுதியவரும்கூட. ஹாஜி மொஹம்மது அலராக்கியா ‘Hajji Mohammad Alarakhiya’ என்பவரால் 1915இல் தொடங்கப்பட்ட ‘விஷமி சதி’ என்னும் குஜராத்தி மொழி கலை இலக்கிய இதழில் ஓவியராகச் சேர்ந்தார். இந்த இதழ் 1921இல் ஹாஜியின் மரணத்தால் நின்று போனது அதில் பெற்ற அனுபவத்தால் தானே ‘குமார்’ என்னும் கலை இலக்கிய இதழைத் தொடங்கினார். மும்மாத இதழான அது இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 1919லிருந்து அகமதாபாத்தில் வசிக்கத் தொடங்கிய அவர் அங்கு ஓவியப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். சிறுவர் நூல்கள் பலவற்றுக்கு ஓவியங்களைத் தீட்டினார். அவை அவருக்குப் பெரும் புகழைக் கொணர்ந்தன. ‘சந்தாபொலி’ என்னும் குஜராத்தி மொழி சிறுவர் இதழில் அவரது ஓவியங்கள் தொடர்ந்து இடம் பெற்றன. தன்வரலாறு நூல், (Gujarat Ma Kala Na Pagran) 2010இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. காகா சாஹேப் கலேல்கர் அவரை ‘கலாகுரு’ என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
அவரது படைப்புகளில் சௌராஷ்டிர நிலத்தின் உயிர் இழையோடியது. அவற்றில் நவீனத்துவம் இருந்தது. ஆனால் அது மேற்கின் நிழல் கூடியதல்ல. இந்திய மரபு வழியும் அதில் இருக்கவில்லை. ஓவியங்களின் பின்புலம் எப்போதும் வெளிறிய நிறம் கொண்ட வெற்றுப் பரப்பாகவே விடப்பட்டது. அவரது ஓவிய உருவங்கள் எப்போதும் எளிய வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்டதுதான். அவ்வுருவங்கள் இழுத்து நீட்டப்பட்டவை; மெலிதானவை. அவர்கள் அணிந்த உடை ஒரு வெள்ளைத் துணிமட்டுமே. வண்ணங்களும் மிகக் குறைவானவையே. கருப்பு, கபிலம் வெளிறிய மஞ்சள், வெள்ளை என்று அவை அடங்கிவிடும். தூரிகைச் சுவடு தெரியாதவிதமாக வண்ணங்கள் இடம் பெற்றன. தனித்த உடையற்ற பெண் உருவமும் அடிக்கடி ஓவியமாயிற்று. அவரது படைப்புகள் நீர் வண்ண வகையைச் சேர்ந்தவை என்பது என் ஊகம் அந்த விவரம் கிடைக்கவில்லை.
அவரது முதல் தனிநபர் காட்சி 1954இல் நடந்தது.
ஜே.ஜே.ஓவியக் கல்லூரி 1916இல் மாயோ தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. குஜராத் இலக்கிய அமைப்பு அவரது கலைக்கட்டுரைத் தொகுப்புக்கு மிக உயர்ந்த பரிசான ‘ரஞ்சித்ராம் சுவர்ண சந்த்ரக் (Ranjitram Suvarna Chandrak 1930)’ அளித்தது. பத்மஸ்ரீ விருதை 1965இல் இந்திய அரசு அவருக்கு வழங்கியது. லலித கலா அகாதமி 1970இல் கலாரத்ன (the Fellow) என்னும் அந்தஸ்தை வழங்கியது. 1980ல் டெல்லியில் காலமானார்.
0