Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ

இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ

அக்பர் பதாம்சீ ஓவியம்

அக்பர் பதாம்சீ பிறந்த நகரம் மும்பை. 12-4-1928ல் பிறந்தார். அவரது தந்தை மும்பையில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வந்தார். நகரில் அவருக்குச் சொந்தமாகப் பத்து வியாபாரக் கட்டடங்கள் இருந்தன. அவரது எட்டுக் குழந்தைகளில் ஒருவர் அக்பர் பதாம்சீ. அவரின் சகோதரர்களுள் ஒருவரான அலீக் பதாம்சீ பின்னாளில் நாடக நடிகரானார். அவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கூட.

பதாம்சீ குடும்பம் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் அரசவைப் பாடகர்களாக விளங்கிய சரண்யா சமூகத்தைச் சேர்ந்த கோஜா முஸ்லிம் பிரிவைச்சேர்ந்தது. அக்பரின் தாத்தா பவநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் தலைவராக இருந்தார். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது தனது சேமிப்பு தானியம் முழுவதையும் மக்களுக்கு அளித்து விட்டார். அந்தப் பெரும் செயலைப் பாராட்டும் விதமாக மக்கள் அவரை பதாம்சீ (பத்மஸ்ரீ என்பதன் மரூ) என்று குறிப்பிடத் தொடங்கினர். இதனால், சரண்யா என்னும் குலப்பெயர் மறைந்து பதாம்சீ என்னும் பெயர் நிலையாக ஒட்டிக் கொண்டது.

அக்பர் பதாம்சீ
அக்பர் பதாம்சீ

பதாம்சீ குடும்பத்தினர் செல்வந்தராக இருந்தபோதும் கல்வி அறிவு இல்லாமல்தான் இருந்தார்கள். பின்னர் அக்பரும் அவரது சகோதரர்களும் பள்ளியில் சேர்ந்து முறையாக ஆங்கிலம் கற்றனர். ஆனால் சகோதரிகளுக்கு அந்தச் சலுகை தரப்படவில்லை. அக்பர், புனித சேவியர் பள்ளியில் படித்தார். கிட்டிய நேரங்களில் அவர் Illustrated Weekly of India இதழ்களில் இருந்து படம் எதையேனும் பார்த்து மிகுந்த ஈடுபாட்டுடன் வரைவார். அது அவரது தந்தையின் வரவு-செலவு பேரேட்டில் நிகழும். அவரது வரையும் ஆர்வத்தை முதலில் அவரது பள்ளியின் ஓவிய ஆசிரியர் ஸ்ரீசத் தான் கவனித்தார். அக்பரது நீர்வண்ண ஓவியம் Study என்னும் இயற்கையை நேரிடையாகப் பார்த்து வரையும் முறையில் இருந்தது. இந்த அவரது ஓவியத் திறமையைக் கண்டு ஜே.ஜே. ஓவியப்பள்ளி அவரை மூன்றாம் ஆண்டில் சேர்த்துக் கொண்டது. அக்பர் படித்த காலத்தில்தான் PAG ஓவியர் குழு தொடங்கப்பட்டது. அக்பரும் அதில் ஓர் அங்கத்தினரானார். 1950 இல் ரஜாவுக்கு பிரான்ஸ் நாட்டில் உயர்கல்வி கற்க உதவித் தொகை கிட்டியது. அவர் அக்பரையும் தன்னுடன் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்தார். 1951 இல் பாரிஸ் சென்ற அக்பரை ஓவியர் கிருஷ்ணா ரெட்டி Stanley Hayter க்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அக்பரின் கற்றல் அவரது Atelier என்னும் ஓவியக் கட்டடத்தில் தொடங்கியது. 1952 இல் அந்தக் குழுவின் ஓவியக் கண்காட்சி பாரிஸில் நடந்தது. ஓவியர்கள் தங்களது பெயரை ஓவியத்தில் பதிக்காமலேயே காட்சிப் படுத்தினர். அக்பரின் ஓவியமும் அதில் இடம் பெற்றது, அதற்குப் பரிசும் கிடைத்தது. பிரெஞ்சு மொழி இதழான Journal d’Arte ஓவியக்காட்சி பற்றின விமர்சனத்தில் அக்பரின் ஓவியத்தைப் பாராட்டி எழுதியது.

அக்பர் பதாம்சீ ஓவியங்கள்

1954 இல் அவர் Solange Gounelle என்னும் பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியை மணந்தார். 1968 இல் மும்பைக்குத் திரும்பி வந்ததும் அவரது ஒரு நபர் ஓவியக் காட்சி மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டது. போபாலில் உள்ள பாரத் பவன் அருங் காட்சியகத்தை மேம்படுத்தவும் புதிய கலைப்பொருள்களைச் சேர்க்கவும் அமைக்கப் பட்ட குழுவில் அக்பரும் இடம்பெற்றார். கருப்பு வெள்ளைப் புகைப்படம் எடுப்பதிலும் அவர் கைதேர்ந்தவராக விளங்கினார். Computer Graphics ஓவியங்கள் தீட்டுவதையும் ஆர்வத்துடன் செய்தார். அவர் சிற்பி, உலோகச் செதுக்கல் படைப்பாளி, திரைப்படம் எடுத்தவர், லிதோக்ராபர் என்னும் பன்முகத் திறமைசாலியாக விளங்கினார். Raza, Souza, Hussain போன்ற ஓவியர்களுடன் அக்பர் மேலை கலைச் சிந்தனையை இந்தியாவில் விதைத்தவர் என்று கலை வல்லுனரால் குறிப்பிடப் படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக அக்பரும் அவரது இரண்டாவது மனைவி பானுமதியும் கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் வசித்து வந்தனர். அவரது மரணம் மூப்பின் காரணமாக 05-01-2020 அன்று நிகழ்ந்தது. அடக்கம் செய்யப்பட்டதும் யோக மையத்திலேயேதான்.

விருதுகளும் சிறப்பும்

1962 -லலித் கலா அகாதெமி – டெல்லி கலா ரத்ன விருது.

1965 – Rockfeller Foundation Fellowship award.

1997 – காளிதாஸ் சம்மான் விருது.

2009 – பத்மஸ்ரீ விருது.

2010 – பத்மபூஷண் விருது.

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *