வடக்கு குஜராத் மாநிலத்தில் பாத்புரா (Badpura) என்னும் சிற்றூரில் 25, செப்டம்பர், 1931இல் சாந்தி தவே பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவரான அவரது குடும்பம் எளிய கிராமப்புற வாழ்க்கையைக் கொண்டதுதான். 1951இல் அவர் தனது பொதுக்கல்வி பள்ளிப் படிப்பை பரோடாவில் உள்ள மஹாராஜா திரு சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் முடித்தார். அதன் தொடர்ச்சியாக அங்கேயே நுண்கலைப் பிரிவில் ஓவியத்தில் இளநிலை முதுநிலைப் பட்டதாரிப் படிப்பையும் நிறைவுசெய்தார்.
சாந்தி தவே தனது கலை வாழ்க்கையை அகமதாபாத்தில் விளம்பரப் பலகைகள் எழுதியும், ஓவியங்கள் தீட்டியும் தொடங்கினார். மெல்ல அவரது ஓவியத் திறமை பற்றின செய்தி பரவத் தொடங்கியது. சுவர் ஓவியங்கள் படைக்க நிறுவனங்களால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். JFK வான் ஊர்தியின் முக்கிய பயணிகள் தங்கும் வளாகம், Air India வான் ஊர்தியின் Sydney, Frankfurt, New York நகரங்களின் அலுவலகங்களில் சுவர் ஓவியங்களை அவர் படைத்தார். 05-2-1964 New York Times இதழில் ‘Little Gujarat’ என்னும் தலைப்புடன் அவரது சுவர் ஓவியம் அட்டையில் இடம் பெற்றது.
அவரது படைப்புகள் கலவை உத்தியில் அரூப வகைப் பிரிவைச் சேர்ந்தவை. அவரது ஓவியங்களில் கற்சிற்பங்கள், மரப்பலகைச் செதுக்கல்கள், நெசவுத்துணி துண்டு போன்றவையும் ‘ஓம்’, ‘ஸ்ரீ’ போன்ற தேவநாகரி வரிவடிவங்களும் தாந்திரிக யந்திர வடிவங்களும் இடம்பெற்றன. தனது முதல் தனிநபர் காட்சியை அவர் 1957இல் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் அவரது ஓவியக் காட்சிகள் இடம் பெற்றன. (முன்னாள்) சாஹித்ய கலா பரிஷத் செயற்குழு உறுப்பினர், லலித கலா அகாதெமி டெல்லியின் செயற்குழு உறுப்பினர் பதவிகளை வகித்தார்.
விருதுகள் பாராட்டுகள்
1956, 57, 58 மூன்று ஆண்டுகளிலும் லலித் கலா அக்காதெமி ஆண்டு கலைக்காட்சியில் ஓவியத்துக்கு விருதும் பணமுடிப்பும் (அவர் ஓவியம் கற்றபோதே கிட்டியவை).
1959 – கொல்கத்தா நுண்கலை அகாதெமி ஓவியக்காட்சியில் ஆளுனரின் தங்கப்பதக்கம்.
1965 – டோகியோ பினாலே (Biennale) கலைக்காட்சியில் விருது.
1975 – நான்காவது சமகால ட்ரினாலே (Triennale) உலக ஓவியக் காட்சியில் விருது (டெல்லியில் நிகழ்ந்தது).
1985 – இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது.
2004 – லலித் கலா அகாதெமி – டெல்லி வழங்கிய ‘கலா ரத்னா’ விருது.
0