ஸ்ரீ லால் ஜோஷி ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் மாவட்டத்தில் கங்ரோலி (ராஜ்சமந்த் என்றும் அழைக்கப்படுவது) என்னும் ஊரில் 15-3-1931ல் பிறந்தார். இவர் பழங்குடி மக்கள் தீட்டும் ‘பட’ (ப2ட3 என்று உச்சரிக்கவேண்டும்) என்னும் ஓவியம் படைக்கும் சிப்பா சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஊர் வல்லபாச்சார்யாரால் தோற்றுவிக்கப்பட்ட புஷ்டி மார்க்கம் எனப்படும் வைணவப் பிரிவின் மூன்றாவது பீடம்.
ஜோஷி தனது பதின்ம வயதிலேயே ஓவியத்தில் நாட்டம் கொண்டார். பிச்வாய் பாணி ஓவியம் தீட்டுவதில் புகழ் பெற்றுத் திகழ்ந்த, அந்தப் பரம்பரையில் வந்த கலாகுரு உஸ்தாத் காசிராம்ஜி ஜங்கிட் வசித்த இல்லத்துக்குச் செல்வதை ஆவலுடன் மேற்கொண்டார். பிச்வாய் பாணி ஓவியங்களை தீட்டிப் பழகினார். ஜோஷியிடம் ஓவியம் படைப்பதில் இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்டு கலாகுரு, ஜோஷியை சாந்தினிகேதனுக்கு ஓவியம் கற்க அனுப்பச்செய்தார்.
இந்திய மரபுவழி ஓவியச் சிந்தனை என்பது மேலைநாட்டு நவீனச் சிந்தனையால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த சமயம் அது. ஆனால் வங்காளத்தில் அவனேந்திரநாத் டாகூர் முன்னெடுத்த புதிய இந்திய சிந்தனை வழி, ஒரு மறுமலர்ச்சியாக இருந்த நேரமும் கூட. அவனேந்திரநாத் டாகூர், நந்தலால் போஸ் போன்ற கலை மேதைகளின் நேரடிப் பார்வையில் ஜோஷியின் கற்றல் தொடங்கியது. அவரது ராஜஸ்தான் பின்புலம் இதனால் செழிப்புற்றது. ஒருமுறை அவர் ஒரு மரத்தை ஓவியமாக்கினார். நந்தலால் போஸ் அதைப் பார்த்துவிட்டு ‘இது எந்த மரம்? என்று வினவினார் ‘என் கற்பனையில் கண்டு ஓவியமாக்கினேன்’ என்ற ஜோஷியிடம் ‘அது சரியல்ல, இயற்கைக்குப் போ. அங்குள்ள மரத்தை ஓவியமாக்கு’ என்றார். இதை நினைவு கூறும் ஜோஷி அந்தச் சொற்கள் தனது மனதில் ஒரு மந்திரம்போல் படிந்ததாகக் குறிப்பிடுகிறார். தமது வாழ்நாள் முழுவதும் அவர் இயற்கையின் வனப்பை நோக்கிச் செல்வதை நிறுத்தவேயில்லை. 1942 இல் டூன் கலைப்பள்ளியில் (டேராடூன் உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகர்) சிற்பம் பயின்றார்.
வங்கத்துக் கலைச் சிந்தனையை ராஜஸ்தான் பாணியுடன் இணைத்து அவர் படைத்த ஓவியங்கள் வெளிநாட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. ஆர்வத்துடன் வாங்கப் பட்டன. நவீன வாழ்க்கைச் சூழல், துயரம், வன்முறை, வெறுப்பு போன்ற உணர்வுகள் அவரது படைப்புகளில் இடம்பெறவில்லை. அழகியலுக்கே முதலிடம் கொடுத்தார். வண்ணங்களும் ராஜஸ்தான் நிலத்தையே பிரதிபலித்தன. அதுபோலவே ஓவியங்களின் கட்டமைப்பும் ராஜஸ்தான் வழியில்தான் காணப்படுகிறது. நீர் வண்ணம், கழுவும் உத்தி, டெம்பரா உத்தி போன்றவைதான் அவருக்கு மேவியிருந்தது.
சிற்றோவியங்கள் சுவர் ஓவியங்கள் இரண்டும் அவரால் அவற்றுக்குரிய வேறுபாட்டுடன் தீட்டப்பட்டன. அவர் வெளியில் செல்லும் போதெல்லாம் தாள் தொகுப்புடனேயே செல்வதையும் காண்பதில் தேவையானவற்றை வரைந்து கொள்வதையும் தவறாமல் பின்பற்றினார். அவை பின்னர் அவர் ஓவியம் படைக்கும்போது சரி பார்த்துக்கொள்ள உதவின. பெரும்பாலும் அவரது ஓவியங்கள் தாளில்தான் தீட்டப்பட்டன. 18, 19 ஆம் நூற்றாண்டின் நிலாசந்த், மனாகு, ஸாஹிப்தின் போன்ற ராஜஸ்தான் ஓவியர்களை அவரது படைப்புகள் நினைவுபடுத்துவதாகக் கலை விமர்சகர்கள் கூறுவர்.
ஜோஷி ஓவியம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். அவை அச்சு இதழ்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. வானொலியிலும் அவர் ஓவியம் பற்றி அவ்வப்போது பேசினார்.
சிப்பா சமூகத்தில் அதுவரை குடும்பத்தை விட்டு அதன் படைக்கும் வழி வெளியாரிடம் சென்று விடக்கூடாது என்று இல்லத்துப் பெண்களுக்குக் கூட கற்றுத் தரப்படவில்லை. அதே சமயம் திருமணத்தின் மூலம் இல்லத்துக்கு வரும் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. 1980 இல் அவர் ‘ஜோஷி கலா குஞ்’ என்னும் ஓவியப் பள்ளியைத் தொடங்கினார். அதன்மூலமாக ஒரு சமூகத்தினரிடம் மட்டுமே இருந்த ஓவியப் பாணியை அனைவருக்குமானதாக ஆக்கினார். தற்சமயம் அது ‘பட சித்ரசாலா’ என்னும் பெயரில் பில்வாரா நகரில் செயல்படுகிறது. அவரது இரு மகன்களும் (கல்யாண் ஜோஷி, கோபால் ஜோஷி) புகழ்பெற்ற பட பாணி ஓவியர்கள்தான். ஜோஷி 2-3-2018ல் காலமானார்.
விருதுகள் – பாராட்டுகள்
1979இல் பில் பழங்குடி மக்கள் வாழ்க்கை பற்றின அவரது ஆராய்ச்சிக்கு இந்திய அரசு கலைப்பிரிவு விருது கொடுத்தது.
1974இல் ராஜஸ்தான் லலித் கலா அகாதெமி அவருக்கு (கலைச்செம்மல்) fellow விருது கொடுத்தது.
1986இல் ராஜஸ்தான் ‘வித்யாபீட’ நிறுவனம் ‘கலாநிதி’ பட்டம் கொடுத்துச் சிறப்புச் செய்தது.
2006இல் பத்மஸ்ரீ விருதும்
2007இல் கைவினைக் கலைஞருக்கான ‘சில்ப் குரு’ விருதும் மத்திய அரசால் கொடுக்கப்பட்டன
2007இல் ‘சங்கீத் ஸ்யமலா’ விருது கொல்கத்தா அமைப்பால் கொடுக்கப்பட்டது.
87 ஆண்டுகள் வாழ்ந்திருந்த அவர் எல்லோருக்கும் ‘பாபா’ வாகவே விளங்கினார். போற்றப்பட்டார்.
குறிப்பு: பிச்வாய் ஓவியங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நகரத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாத்திரிகத் தலம் நாத் துவாரா (கடவுளின் இல்லத்தின் நுழைவாயில் என்பது அதன் பொருள்). 17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னன் ஔரங்கசீப் தனது ராஜ்ஜியத்தில் உருவ வழிபாட்டைத் தடைசெய்து, பல ஹிந்து ஆலயங்களை அழித்தான். மதுரா நகரத்து ஹிந்து பக்தர்கள் இந்த இடரிலிருந்து தப்பிக்க முக்கியச் சிலைகளை அங்கிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஸ்ரீநாத்ஜி உருவச்சிலை இவ்வாறாக மேவாரை அடைந்தது. இப்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சிலையை எடுத்துச் சென்ற தேர் நின்றுவிட, அதையே ஒரு சுப சகுனமாகக் கருதி அங்கேயே ஆலயத்தை அமைத்தார்கள். இதனால் அந்தக் கிராமம் ‘நாத் துவாரா’ என்று பெயர் பெற்றது.
வைணவ பக்தி மார்க்கத்தில் ஒரு பிரிவான வல்லப சம்பிரதாயத்தை (புஷ்டி மார்க்கம்) வல்லபாச்சாரியார் தொடங்கிவைத்தார். அவருடைய ஏற்பாட்டின்படி, கிருஷ்ணரின் திரு உருவங்கள் 24 விதங்களில் கைத்தறித் துணிகளில் ஓவியமாக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு பண்டிகையுடனோ, ஆலயத்தின் விசேஷ நாட்களுடனோ இணைக்கப்பட்டன. ஆலயத்தின் மூல விக்கிரகத்துக்குப் பின்னால் அது அலங்காரமாகத் தொங்கவிடப் பட்டது. ஒவ்வொரு ஓவியமும் கிருஷ்ணனின் குறிப்பிட்ட அடையாளங்களுடன் படைக்கப் பட்டது. அதில் உருவங்கள் அசைவற்று உறைந்த வடிவங்களில் உள்ளன.
0