Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

பூபேன் ககர் ஓவியங்கள்

மும்பை நகரின் புறநகர்ப் பகுதியான கெச்வாடியில் 10-3-1934ல் தமது பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் பூபேன் ககர். அவரது தந்தை பரமானந்த் ஒரு பொறியியலாளர். பூபேனுக்கு நான்கு வயதாக இருந்தபோது குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரது தந்தை காலமானார். குடும்பப் பொறுப்பு தாயின் தலையில் விழுந்தது. தன் மகன்களில் பூபேன்தான் வளர்ந்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவான் என்று அவர் நம்பினார்.

பூபேனின் முன்னோர்கள், போர்த்துகீசிய காலனியின் ஆட்சியில் அவர்கள் வசம் இருந்த டையு (Diu) பகுதியில் கைவினைக் கலைஞர்களாகத் தொழில் செய்து வந்தவராவர். அவர்களது குடும்பத்தில் பூபேன்தான் கல்லூரிப்படிப்பை முடித்த ஒரே ஆண்மகன். மும்பை பல்கலைக் கழகத்தில் அவர் பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம் இரண்டையும் சிறப்புப் பாடங்களாகக் கற்று இளநிலைப்பட்டம் பெற்றார். தாயின் வற்புறுத்துதலால் அவர் படிப்பைத் தொடர்ந்து வர்த்தகப் படிப்பிலும் (Commerce) இளநிலைப்பட்டம் பெற்றார். இதனால் பட்டயக் கணக்காளராக (Chartered Accountant) பரோடாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.

பூபேன் ககர்
பூபேன் ககர்

ஓவியம் தீட்டுவதில் இளம் வயது முதலே ஆர்வம் கொண்ட பூபேன் கிட்டும் ஓய்வு நேரத்திலெல்லாம் ஓவியங்களைப் படைத்தார். முறையாக ஓவியம் பயிலாதபோதும் அவரது படைப்புத் திறமையின் மெருகு கூடியபடி இருந்தது. 1958இல் பூபேன் கவிஞரும் ஓவியருமான குலாம் மொஹமத் ஷெய்க் என்பவரைச் சந்தித்தார். பூபேனின் படைப்புகளைப் பார்த்து அவர் மிகவும் புகழ்ந்தார். அவரது தூண்டுதலால் பூபேன் பரோடாவில் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் அப்போது புதிதாகத் தொடங்கியிருந்த நுண்கலைப்பிரிவில் ஓவிய ஆசிரியராகப் பணியேற்றார்.

சராசரி இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னை, கடைவீதிகளில் காணப்படும் எளியோருக்கான விற்பனைக் கடைகள் ஆகியவை கதை கூறுவது போல அவரது தொடக்ககாலப் படைப்புகளில் இடம்பெற்றன. எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் கலைப் பண்பை வெளிக் கொணரும் விதமாக அவை அமைந்தன. கலை விமர்சகர்களால் இங்கிலாந்து POP (Popular art Movement) ஓவியர் Howard Hodgkin இன் படைப்புகளுடன் பூபேனின் ஓவியங்கள் ஒப்பிடப்பட்டன. பூபேனுக்கு பாப் சிந்தனை ஏற்புடையதாக இருந்தபோதும் அது இந்தியச் சிந்தனையோடு இணையாது என்பதை உணர்ந்துகொண்டார்.

பூபேன் ககர் தமது வாழ்க்கையில் ஒருபால் உறவைப் பின்பற்றியவராக இருந்தார். இந்தியாவில் அப்போது இது சமூக ஒழுக்கக்கேடானதாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. அவர் இவ்வுறவை கருப் பொருளாகக்கொண்ட ஓவியங்களைப்படைத்தார். அவை அவரையே பிரதிபலிப்பது போன்ற விதத்தில் இருந்தன. பூபேன் ஒருபால் ஈர்ப்பு வாழ்க்கை, எதிர்கொண்ட இடர்கள் அனைத்தையும் இந்தியப் பின்புலத்தில் ஓவியமாக்கினார். காளிகாட் ஓவியப்பணியும் இந்துமதமும் அவரது படைப்புகளில் கலந்திருந்தன. 1990 களில் அவரது படைப்புகள் நீர்வண்ணத்தில் இடம்பெறத் தொடங்கின. அவற்றில் உணர்வு வெளிப்பாடு செயல் முறை இரண்டிலும் அனுபவ முதிர்ச்சி காணப்பட்டது. 1982இல் தனது தாய் காலமானபின் அதுவரை ரகசியமாகப் பின்பற்றிவந்த ஒருபால் உறவை ஓவியமாக வெளி உலகுக்கு அறிவித்தார்.

பூபேன் ககர் ஓவியங்கள்

1975இல் பூபேனைச் சந்தித்த ஆங்கிலேய ஓவியர் Howard Hodgkin (இவரும் ஒருபால் ஈர்ப்பாளர்) அடிக்கடி பூபேனுடன் தங்குபவராக இருந்தார். 1979இல் பூபேன் இங்கிலாந்து சென்றபோது அங்கு கண்ட ஓர் இனச் சேர்க்கையாளர்களின் தமது உரிமையை வலியுறுத்தி நிகழ்த்திய பெரும் கூட்டம் அவருக்குத் தன் வாழ்க்கை பற்றின குழப்பத்தை நீக்கியது.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) எழுதிய ‘The Moor’s Last Laugh’ என்னும் புதினத்தில் பூபேன் ‘The Accountant’ என்னும் பாத்திரமாக இடம்பெற்றார். அதையொட்டி பூபேன் பின்னர் ஒரு சமயம் ருஷ்டியின் முகத்தை ஓவியமாக்கி அதற்கு ‘The Moor’ என்று தலைப்பிட்டார். அது இப்போது லண்டன் National Portrait Gallery யில் உள்ளது.

அவரது ஓவியங்களில் ‘யயாதி’ ‘you can’t please all’ இரண்டும், கலை பெரும் சலசலப்பை ரசிகர்களிடத்தில் தோற்றுவித்தன. 8-8-2003இல் பூபேன்ககர் காலமானார்.

விருதுகள்-பாராட்டுகள்

1984 – பத்மஸ்ரீ விருது

1986 – Asian Council’s Star Foundation Fellowship

2000 – Prince Claus Award at royal Palace of Amsterdam

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *