Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

அ. ராமச்சந்திரன் ஓவியங்கள்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திங்கலில் 1935இல் பிறந்த ராமச்சந்திரன் தமது 15 ஆவது வயதிலிருந்து பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் வசிக்கத் தொடங்கினார். அவர் கேரளா பல்கலைக் கழகத்தில் மலையாள மொழியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தாவிலிருந்து ராமாநந்த சாட்டர்ஜி நடத்தி வந்த ‘Modern Review’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் வங்காள ஓவியர், சிற்பி ஆகியோரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. சிற்பி ராம் கிங்கர் பைஜ் படைத்த சந்தால் குடும்பம் சிற்பம் ராமச்சந்திரனுக்குள் ஒரு பெரும் அதிர்வை உண்டாக்கியது.

அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

சிற்பி ராம் கிங்கர் பைஜ்ஜை ஆசானாகக் கொண்டு சிற்பம் கற்க சாந்தினிகேதனுக்கு ரயில் ஏறினார் (1957) ராமச்சந்திரன். அங்கு நந்தலால் போஸிடம் ஓவியமும் கற்றார். அத்துடன் ஓவிய வரலாறு பற்றியும் விரிவான பாடம் கேட்டார். 1961-64இல் கேரளச் சுவரோவியம் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1960 களிலிருந்து அவர் டெல்லியில் வசிக்கத் தொடங்கினார். தனது சொந்த நிலமான கேரளத்துக்கு அவ்வப்போது சென்று மீண்டார். 1965இல் அவர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பிரிவில் ஓவியம் கற்பிக்கப் பணி நியமனம் செய்யப்பட்டார். பின்னர் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1992இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு டெல்லியிலேயே வசிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவரது படைப்புகளில் நகர்ப்புறக் காட்சிகள் மிகுதியாக இடம் பெற்றன. அவை expressionism பாணியில் உருவாயின. அளவில் பெரிதான ஓவியங்கள் அவை. ஆனால், 1980களில் அவரது படைப்புகளில் ராஜஸ்தான் மாநிலத்துப் பழங்குடியினத்தினரின் ஓவியப்பாணி இடம்பெறத்தொடங்கியது. கேரளத்துச் சுவர் ஓவிய வண்ணங்களும் இடம் பெற்றன. படைப்புகளுக்கான கருப்பொருள் இந்திய புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இந்திராகாந்தி படுகொலையும் அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நிகழ்த்தப்பட்ட சீக்கிய இனப் படுகொலைகளையும் நேரில் கண்கூடாகக் கண்டது அவருக்குள் அரசியலின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது. அதுமுதல் மானுடத் துயர், அரசியல் சார்ந்த படைப்புகளை அறவே நிறுத்திவிட்டார். அவருக்கு ஒரு கண்ணின் பார்வை ஏறத்தாழ இல்லாமலே போய் விட்டது. அதுவும் அவரது மன உளைச்சலுக்குப் பெரிதும் காரணமாயிற்று.

அ. ராமச்சந்திரன் ஓவியங்கள்

நவீன நாடக இயக்குனர், நடிகர் இப்ராஹிம் அல்காஸியின் வேண்டுகோளை ஏற்று அவர் மஹாபாரதக் கதையில் வரும் யயாதி அரசனின் வாழ்க்கையை ஓவியமாகத் தீட்டினார். அதை நிறைவுசெய்ய அவருக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன (1984-86).

மனித வாழ்க்கையில் மூன்று நிலைகளான இளமை, நடுவயது, முதுமை என்று பிரித்துக் கொண்டு (உஷஸ், காலை, மத்யான நண்பகல் சந்தியா அந்திப் பொழுது) ஒவ்வொன்றுக்கும் நான்கு ஓவியங்கள் என்று மொத்தம் 12 தொடர் ஓவியங்களைத் தீட்டினார். அவை அளவில் மிகப்பெரியவை. ஒவ்வொன்றும் 5 அடி உயரமும் 8 அடி நீளமும் கொண்டது. யயாதி ஓவியங்களில் கேரளச் சுவர் ஓவியப்பாணி அஜந்தா ஓவியப்பாணி இரண்டும் வெளிப்படையாக எடுத்தாளப்பட்டன. சில காட்சிகளின் அமைப்பே அவற்றிலிருக்கும் விதமாகவே இடம் பெற்றன. ஒளிரும் வண்ணத் தொகுப்பு கொண்ட அவ்வோவியங்கள் காண்போரின் கண்களைக் கூசச் செய்வதாக விமர்சிக்கப்பட்டது.

அவர் ஒரு திறமைமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தார். கேரளத்துச் சுவர் ஓவியங்களை ஆராய்ச்சி செய்த அவர் அதை ஒரு நூலாக்கினார் ‘Abode of Gods, Mural Tradition of Kerala’ என்னும் தலைப்பு கொண்ட ஆங்கில நூல் அது. தனது கோட்டோவியங்களுடன் சிறுவருக்கான கதைகளையும் அவர் எழுதினார். அவை இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியாயின. 1978, 80 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு Noma Concours விருது கிட்டியது (இது, சிறுவருக்கான உலக நூல்களுக்குக் கொடுக்கும் ஜப்பான் நாட்டு விருது) அவற்றில் இடம் பெற்ற ஓவியங்கள் ஜப்பானில் மியாசாகி (Miyazaki) சிறுவர் நூலக அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விருதுகள்

2002இல் லலித கலா அகாதமி டெல்லி ‘கலா ரத்னா’ விருது.

2005இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருது.

0

பகிர:
nv-author-image

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *