அனில் கரஞ்ஜை 27.06.1940இல் இப்போது பங்களா தேஷ் என்னும் நாடாக உள்ள கிழக்கு வங்காளத்தில் ரங்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1947இல் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் உருவான போது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாகியது. அப்போது அங்குத் தோன்றிய மதக்கலவரத்தால் அனிலின் பெற்றோர் மேற்குவங்கத்துக்கு அகதிகளாக வந்து காசி நகரில் வசிக்கத்தொடங்கினர். ஏழுவயதுச் சிறுவனான அனில் வழிநெடுகிலும் நிகழ்ந்த மதவெறிக் கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட கொலை, கொள்ளை, அழிப்புக்களைக் காணநேர்ந்தது. அதனால் அந்தச் சிறுவனின் உள்ளத்தில் உண்டான காயம் வாழ்நாள் முழுவதும் ஆறாமலேயே இருந்தது.
சிறுவனான அனில் களிமண்ணில் பொம்மைகள் செய்வதிலும் ஓவியம் தீட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினான். ஆனால் முறைப்படி ஓவியம் கற்கக் குடும்பத்தில் பொருள் வசதி இருக்கவில்லை. நேபாளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வங்க பாணி ஓவியர் கர்னமன் சிங் (Karnaman Sing) காசியிலேயே நடத்திவந்த, ‘பாரதீய கலாகேந்திரா’ என்னும் கலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு 1956இல் முழுநேர மாணவனாகச் சேர்ந்தார். 1960 வரை அங்கு ஓவியம் பயின்றார்.. கர்னமன் சிங் அவருக்குப் பயிலும்போதே மற்ற மாணவருக்குக் கற்பிக்கவும் வாய்ப்பளித்தார் அதே காலகட்டத்தில் இப்போது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் எனப்படும் பாரத் கலா பவனில் சிற்றோவியம் தீட்டுவதையும் கற்றார். அத்துடன் களிமண் சிற்பம் படைத்தல் , உலோக வார்ப்பு இரண்டிலும் பயிற்சி பெற்றார். காசிநகருக்கு அருகில் உள்ள சுனார் என்னும் ஊரில் ஒரு குறுகிய காலம் ஓவியமும் சிற்பமும் கற்பிக்கும் பணியில் இருந்தார். அது அவர் மாத வருமானம் பெற்ற ஒரே பணியும் கூட. விரைவிலேயே காசிக்கே திரும்பி வந்தார்.
1960களில் வங்கமொழி எழுத்தாளர், கவிஞர்களிடையே ஒரு பிரிவினர் படைப்புச் சிந்தனைப் புரட்சி இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது நடைமுறையில் இலக்கியமாக ஏற்கப்பட்டிருந்த சிந்தனைக்கு எதிரானதும் கலகம் விளைவிப்பதுமான எழுத்துகளை அவர்கள் படைக்கத் தொடங்கினர். ‘பசித்த தலைமுறை இயக்கம்’ (The Hungry Generation) எனப் பெயர்கொண்ட அது எழுத்துலகில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. அனில் தனது சில ஓவிய நண்பர்களுடன் அதன் கலை அமைப்பாகக் காசி நகரில் ‘ஒருங்கிணைந்த படைப்பாளிகள்’ (United Artists) என்று பெயரிட்டுத் தொடங்கினார். தங்களது படைப்புக் கூடத்துக்கு ‘பிசாசின் பட்டறை’ ( Devils’ Workshop) என்று பெயரிட்டார். காசி நகரில் தொடங்கப்பட்ட முதல் ஓவியர் காட்சிக்கூடமும் அதுதான். ஒரு தேநீர்க் கடையில்தான் அது இருந்தது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், நவீனச் சிந்தனையாளர்கள் பலரும் அங்குக் கூடி விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டனர். ‘பசித்த தலைமுறை’ இயக்கம் வெளியிட்ட பலநூல்களுக்கு அனில் ஓவியங்களை வரைந்து கொடுத்தார். விளம்பரங்களை உருவாக்கினார்.
1969இல் அனில் தலைநகரான டில்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்குத் தனது படைப்புகளை ஒருநபர் காட்சியாக வைத்தார். குழு ஓவியக்காட்சிகளிலும் கலந்து கொண்டார். டில்லி ‘சில்பி சக்ரா’ அமைப்பு அமைத்த The Little Magazine ஓவியக் காட்சியில் அவரது படைப்பு இடம்பெற்றது.
1970களில் அவரது செயல் நுணுக்கம் கூடிய, கனவுலகம் சார்ந்த பல சமயங்களில் அச்சுறுத்தல் கூடிய சினம்கொண்ட, கருப்பொருள் கொண்ட படைப்புகள் பார்வையாளரிடையே பெரும் சலசலப்பைத் தோற்றுவித்தது. அவற்றில் அருவ மானிடத் தோற்றங்கள் நிலக்காட்சிகளில் இடம்பெற்றன. அவற்றில் இருந்த மரங்கள், பாறைகள் போன்றவை தமது வலிமையை வெளிப்படுத்தத் தக்க சமயத்தை எதிர்நோக்கியவாறு உறைந்திருந்தன. உருக்குலைந்த கட்டடங்கள், சிலைகள் போன்றவற்றுடன் அருவமான மானுடத் தோற்றம் இணைக்கப்பட்டிருந்தது. நிலக்காட்சிகளில் பூடகமான மௌன ஒலிகளின் எதிரொலி காண்போரின் செவிகளில் நச்சுப்புழுபோல நுழைந்தது.
அவரது படைப்புக்கு 1972இல் லலிதகலா அகாதெமி – டில்லி ஆண்டு ஓவியக் காட்சியில் பரிசு கிடைத்தது. அந்த ஆண்டிலேயே ‘கலா ரத்னா’ விருதும் பெற்றார். ஆனால் அவை அவரிடம் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. அவர் தொடர்ந்து சர்ச்சைகளுடன் கூடிய படைப்புகளையே காட்சிப்படுத்தினார். படைப்புலகில் அவர் மற்றவரிடமிருந்து விலகியே வாழ்ந்தார். ஓவியங்களை வாங்கி உலகச் சந்தையில் ஏலம் விடும் பன்னாட்டு அமைப்புகள் அவரைக் கவனிக்கவில்லை. அவரைப் பற்றின குறும்படம் (The Nature of Art) ஒன்றில் தனது படைப்புகளை, ‘எனது ஓவியங்கள் கனவுலக நிலக் காட்சிகள் (Magical Realism) சார்ந்தவை’ என்று குறிப்பிடுகிறார். அனில் ஒரு தேர்ந்த முக ஓவியம் படைப்பவரும் கூட. அதில் கிட்டிய பணம்தான் அவரது பசியைப் போக்கிற்று. மேலைநாட்டு ஓவியர்களைப் போலவே அவரும் தனது முகத்தைப் பலமுறை ஓவியமாகத் தீட்டியுள்ளார். அவரது படைப்பு முதிர்ச்சிக்கு அவை சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இந்திய இசை அவரைப் பெரிதும் ஈர்த்தது. தனது ஓவியங்களை அவர் ராகங்களின் ஒலி வேறுபாடுகளுடன் ஒப்பிடுகிறார். ‘இற்றை நாளில் ஓர் ஓவியனின் இடம் நமது சமுதாயம் உண்டாக்கிய காயங்களைக் குணப்படுத்துவது தான்’ என்று தன்னை ஒரு தேர்ந்த மருத்துவருடனும் ஒப்பிட்டுக்கொள்கிறார். அவரது கடைசி ஒருநபர் காட்சி 2000இல் வைக்கப்பட்டது.
16-3-2001இல் அவர் காலமானார். அவர் காலமாவதற்கு முந்தைய ஆண்டுதான் டேராடூன், டில்லி என்று இரு இடங்களிலும் தனது வசிப்பிடத்தை முடிவுசெய்தார். டேராடூனில் ஒரு கிராமத்தில் எளிய குடில் ஒன்றை அமைத்துக் கொண்டார். அவரது மனைவி ஜூலியட் ரெனால்ட் (Juliet Reynolds) ஐரிஷ் நாட்டு கலை விமர்சகர். குறைபாடுகொண்ட குழந்தையைத் தத்தெடுத்து நீமா என்று பெயர் சூட்டி வளர்த்தனர். டில்லி சாலைகளில் உணவின்றித் திரிந்த நோயால் அல்லப்பட்ட சில நாய்களையும் பேணிக்காத்தனர். அனிலின் மரணம் ஒரு புரட்சிக் கலைஞனை இவ்வுலகிலிருந்து அகற்றிவிட்டது என்று பொதுவுடமைச் சிந்தனாவாதிகளைத் துயர்கொள்ளச்செய்தது.
0