Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

பால்டிக் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ருஷ்ய அரசின் ஆட்சிக்குட்பட்ட எஸ்தோனியா (Estonia), லாட்வியா (Latvia,) லிதுவானியா (Lithuania) ஆகிய மூன்று நாடுகளின் தொகுப்பான பால்டிக் என்று குறிப்பிடப் படும் நிலப்பகுதியில் சட்டப் பொதுக் குறிப்பாளராகப் (Notory Public ) பணி புரிந்த ஜெர்மானியக் குடிமகன் ருஷ்யக் குடிமகள் தம்பதியருக்கு நிகோலஸ் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் 09-10-1874 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 19 ஆவது வயதில் ஒரே சமயத்தில் புனித பீட்டர்ஸ் பல்கலைக்கழகம், அரசு நுண்கலைக் கல்லூரி இரண்டிலும் (1893) கல்வி கற்ற அவர், 1897 இல் ஓவியர் பட்டத்தையும் அதற்கு அடுத்த ஆண்டு வழக்குரைஞர் பட்டத்தையும் முறையாக முடித்தார்.

ஓவியர், எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், பிரம்மஞான சங்கச் சிந்தனையாளர், தத்துவஞானி பொதுவாழ்க்கைச் செயற்பாட்டாளர் என்று பல தளங்களில் நிகோலஸ் இயங்கினார். ஆவியுலக ஆராய்ச்சிக்கான ருஷ்ய சங்கம் (Russian Spiritual Society) என்னும் அமைப்பினால் ஈர்க்கப்பட்டார். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்க் காலங்களில் ருஷ்யாவில் பழமையான கட்டடங்களையும் கலைப் படைப்புகளையும் நினைவுச் சின்னங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கும் இயக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

நிகோலஸ் ரோரிச்
நிகோலஸ் ரோரிச்

நிகோலஸ் மன ஆற்றலால் பிறரை ஆழ்துயில் நிலைக்குத் தூண்டும் பயிற்சி (Hypnotism), ஆவிகளை மனிதரின் ஊடாகத் தொடர்பு கொள்ளும் முறை இரண்டிலும் மிகுந்த நாட்டமுடையவராக இருந்தார். அமைதிக்கான நோபல் விருதுக்குப் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டார். 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் தனது மனைவி ஹெலனாவின் தூண்டுதலால் கீழை மதங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டார். அத்துடன் கிருஸ்துவத்துக்கு மாற்றாகச் சிந்திக்கும் பிரம்ம ஞான சங்க அமைப்பு (Theosophy) அவரை வெகுவாக ஈர்த்தது. (பிரம்மஞான சங்கம் என்னும் ஆன்மீக அமைப்பு (The Theosophical Society) 1875 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ருஷ்யக் குடிமகளான ஹெலனா பெட்ரொவ்னா ப்லவட்ஸ்கி (Helena Petrovna Blavatsky), ஐக்கிய அமெரிக்கக் குடிமகனான ஹென்ரி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott) எனும் இருவரால் சில நண்பர்களின் பங்களிப்பாலும் முயற்சியாலும் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டது.)

இதன் தொடர்ச்சியாக, நிகோலஸும் அவரது மனைவியும் ராமகிருஷ்ண பரம ஹம்சர், அவரது சீடர் விவேகானந்தர் இருவருடைய மதச் சிந்தனைகளையும் ஆன்மீக உணர்வுகளையும் பகவத்கீதையையும், ரவீந்திரநாத் டாகூரின் கவிதைகளையும் ஆர்வத்துடன் படித்தனர். ஆவியுலகம் பற்றின ஆராய்ச்சியிலும் அதனுள் புதையுண்டிருந்த மர்மத்திலும் உண்டான பற்று அதிகரித்தது. பௌத்தம், வேதாந்தம், பிரம்மஞானம் இவற்றின் தாக்கம் அவரது ஓவியங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது. அவரது கவிதை, சிறுகதை போன்ற எழுத்துகளிலும் அது வெளிப்பட்டது. ருஷ்யப் புரட்சிக்கு முன்பும் பின்பும் அவை படைக்கப்பட்டன. ‘Flowers of Morya cycle’ என்னும் அவரது கவிதை நூல் 1907 இல் தொடங்கி 1921 இல் எழுதி முடிக்கப்பட்டது.

நிகோலஸின் வாழ்க்கை ஏராளமான ஆராய்ச்சிகளையும், அவை சார்ந்த பயன்களையும் உள்ளடக்கியது. அரசியல் ரீதியாக அவர் தொடக்கத்தில் போல்ஷ்விக் (Bolshevik) இயக்கத்துக்கு எதிராகத்தான் செயல்பட்டார். பொது மேடைகளிலும் உரையாற்றினார். பத்திரிகைகளிலும் தொடர்ந்து அதை எதிர்த்துக் கட்டுரைகளை எழுதினார். ஆனால் பொதுவுடைமைச் சிந்தனைக்கு எதிரான அவரது நிலைப்பாடு அவர் அமெரிக்காவில் இருந்தபோது மாற்றம் கொண்டது. இமயமலையில் உலவும் தூய துறவிகளின் ஆவிகள், தனது மனைவியின் மூலமாக (இடையிற் செயற்படுபவர்) ருஷ்யாவிற்குச் சிறந்த மேன்மையான எதிர்காலம், பொதுவுடைமைச் சிந்தனையால் கிட்டும் என்று தமக்குக் கூறியதாகவும் அதனால்தான் அந்த நிலையின் மாற்றம் உண்டானதாகவும் நிகோலஸ் கூறினார்.

1923 இல் மகன்கள் Svetoslav Roerich, யூரி எனப்பட்ட George de Roerich மற்றும் மனைவி ஹெலனாவுடன் இங்கிலாந்திலிருந்து நிகோலஸ் பெரும் பயணம் ஒன்றை மேற்கொண்டார். தொடக்கமாக அவர் இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் நகரில் ஓர் இல்லத்தில் தங்கினார். சீன அரசின் பிடியிலிருந்து தப்பி திபெத்திலிருந்து இந்தியாவுக்கு அகதியாகப் புலம்பெயர்ந்த 13 ஆம் தலாய் லாமா (வஜ்ரயானம் என்னும் பௌத்தப் பிரிவின் தலைமை பிக்கு) தங்கிய இல்லம்தான் அது. அப்போது தனது பெரும்பகுதி நேரத்தை இமயமலைக் காட்சிகளை ஓவியமாக்குவதில் செலவழித்தார். ஜவஹர்லால் நேரு, அவரது பதின்ம வயது மகள் இந்திரா பிரியதர்ஷினி, திபேத் புத்தப் பிரிவின் லாமாக்கள் என்று அழைக்கப்பட்ட முக்கிய பிக்குகள் போன்றோர் அவரைக் காண வந்தனர். மோரு துறவி மடத்துப் பிக்குகள் அவரை 5 ஆவது தலாய் லாமாவின் மறு பிறவி என்று கொண்டாடினர். அதற்குச் சான்றாக அவரது வலது கன்னத்தில் காணப்பட்ட மருவை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஓர் ஓவியராக நிகோலஸ் ரோரிச் ருஷ்யாவின் பண்டைய ஓவியக் கலை வழி, கட்டடக்கலை, இரண்டையும் உயிர்ப்பித்தவராகப் புகழப்பட்டார். அவர் ருஷ்யாவில் இரண்டு நீண்ட பயணங்களை மேற் கொண்டு கோட்டைகள், பாதிரி மடங்கள், தேவாலயங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்கள் பற்றின ஆராய்ச்சிகள் செய்து அவற்றுக்கான கோட்டு ஓவியங்களைத் தீட்டி ‘Architechtural Studies (1904-1905)’ என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். அதன் காரணமாக ருஷ்யாவின் கலைப்படிமத்தின் பிரதிநிதியாகச் சிறப்பிக்கப் பட்டார்.

நிகோலஸ் ருஷ்யா உக்ரைன் தேவாலயங்களில் சுவர் ஓவியங்களைத் தீட்டினார். ஓவியங்கள், சுவர் ஓவியம், பாலே நடன அரங்கத் திரைத்தொங்கல்கள் என்று அவர் படைத்தது 7000 படைப்புகளையும் தாண்டும். அவரது படைப்பு என்பது வரலாறு, கட்டடக்கலை இரண்டிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஓவியம் படைப்பதில் வரலாற்றுக் கருப் பொருளைத் தொடக்கமாக எடுத்துக்கொண்டார். ருஷ்ய நாட்டில் பண்டைக் காலத்தில் பின்பற்றப்பட்ட பல கடவுளர் வழிபாடு மூதாதையரின் வீரத்தைக் கொண்டாடும் காவியம் போன்றவை அவற்றில் சில. காலத்தால் காணாமல் போய்விட்ட அவற்றின் அதிர்வுகள் அப்படைப்புகளில் வெளிப்பட்டன.

1907 இல் பாலே நடன அரங்கத்தை வடிவமைக்க நிகோலஸுக்கு அழைப்பு வந்தது. அரங்க வடிவம், நடனத்துக்கான உடை, மேடையில் தொங்கும் திரைகள் போன்றவற்றுக்கான கோட்டோவியங்களை வரைந்தார். பாலே நடன அரங்க அமைப்பு, நடன நாடகத்துக்குக்கான உடை இரண்டுக்கும் மிகச்சிறந்த வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார்.

முதல் உலகப்போருக்கு முன்பு அவர் தீட்டிய ‘The Last Angel’ ‘Sword of Valor’ ‘Cry of the Serpent’ போன்ற ஓவியங்கள் போரினால் வரவிருக்கும் அழிவினைச் சுட்டிக்காட்டும் ஓர் எச்சரிக்கையாக இருந்தன. இந்தியா அவருக்கு ஆசியாவின் பண்டையக் கலை, பண்பாடு போன்றவற்றைப் பற்றின பல ஐயங்களுக்கு விடையளித்தது. ஓர் ஓவியராகவும் அவரை ஈர்த்தது. மனதைக் கிறங்கவைக்கும் இமயமலையின் தோற்றமும், பேராற்றலின் உறைவிடமாகவும் அங்கிருந்து வெளிப்படும் கற்பனைக்கெட்டாத வனப்பிலும் நிகோலஸ் மனதைப் பறிகொடுத்தார். அக்காட்சியைத் தொடரோவியங்களாகத் தீட்டினார். ஆன்மீகமாகவும் அது அவருக்குப் பெரும் அக விழிப்பைக் கொடுத்தது. ‘Master of the Mountaine’ என்னும் பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமானதுதான். அவரது படைப்பை விஞ்சி இன்னொரு ஓவியர் படைத்துவிட முடியாது என்று நிகோலஸ் ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் படைத்த ஓவியங்களில் Buddha the Winner, Sergius the Builder, Moses the Leder போன்ற ஆன்மீகப் போதகர்கள் (Teachers of Knowledge) இடம் பெற்றனர். அவர்களது வாழ்க்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட காட்சிகள் ஓவியமாகின. 1923-28 களுக்கு இடையில் அவர் குழுவுடன் மேற்கொண்ட மங்கோலியா, இந்தியா, திபெத், சீனா ஆகிய மைய ஆசிய நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிப்பயணம் அவற்றின் பண்டைய கலைச் சிந்தனையை உள்ளடக்கிய ஓவியங்களைப் படைக்க உதவியது.

இரண்டாம் உலகப்போரின்போது அவர் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்றதால் கிட்டிய தொகையை ருஷ்யாவின் சிவப்பு போர்ப்படைக்கு (Red Army) கொடுத்து உதவினார். அவற்றில் der Nevsky, Yaroslav the wise, Boris and Gleb, Partisans, Victory போன்ற ஓவியங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்தன. ருஷ்ய மக்கள் மனதில் எதிர்கால நம்பிக்கையைத் தோற்றுவித்தன. இரண்டாம் உலகப்போரின்போது அவர் இந்தியாவில் இருந்தார். ருஷ்யப் புராண நாயகர்களின் காவியம், துறவிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் இரண்டும் அப்போது அவரால் ஓவியமாகத் தீட்டப் பட்டன. (Alexander Nevsky, The Fidht of Mistislav, Redeclia, Boris and Gleb)

நிகோலஸின் 36 இமயமலைக் காட்சி ஓவியங்கள் கர்நாடகாவில் உள்ள சித்ரகலா பரிஷித் கலைக்கூடத்துக்கு அன்பளிப்பாக அவரது மகனால் அளிக்கப்பட்டன. அவை ஒரு தனி அறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றைக் காண்போர் தங்கள் மனதில் இனம் புரியாத மர்மமான ஒரு சலனம் தோன்றுவதாகவும் அது பலநாட்களுக்கு அகலாமல் இருப்பதாகவும் குறிப்பிடுவர்.

உலகளாவிய புகழும் விருதுகளும் பெற்ற அவரை இந்திய அரசு இந்தியாவின் ஒன்பது கலைஞர்களில் ஒருவராகச் சிறப்பித்து (1976 – Archaeological Survey of India- Ministry of Culture Govt. of India) அவரது படைப்புகளை நாட்டின் சொத்தாக அறிவித்தது.

அவ்விதம் அறிவிக்கப்பட்ட மற்ற எட்டுக் கலைஞர்கள் அவனேந்திரநாத் டாகூர், (Abanindranath Tagore), அமிர்தா ஷெர்-கில் (Amrita Sher-Gil), ககனேந்திரநாத் டாகூர் (Gaganendranath Tagore), நந்தலால் போஸ் (Nandalal Bose), ருஷ்யக் குடிமகனான நிகோலஸ் ரோரிச் (Nicholas Roerich), ரவீந்திரநாத் டாகூர் (Rabindranath Tagore), ராஜா ரவிவர்மா (Raja Ravi Varma), ஸைலோஸ் முகர்ஜியா (Sailoz Mookherjea). டெல்லியில் இயங்கும் லலித் கலா அகாதெமி அவரைப் பற்றின கையேட்டைத் தனது பதிப்பகத்தில் வெளியிட்டது.

குலு நகரில். வசித்து வந்த நிகோலஸ் 13-12-1947இல் அங்கேயே உயிர்நீத்தார்.

குறிப்பு: நிகோலஸின் இரண்டாவது மகன் ஸ்வயடோஸ்லாவ் ரோரிச் (Svetoslav Roerich 10 அக்டோபர் 1904- 30, டிசம்பர் 1993) தனது தந்தையிடமே ஓவியம் பயின்றார். இந்தியாவிலேயே வாழ்ந்த அவர் இந்தியாவின் முதல் திரைப்பட நடிகை என்று சிறப்பிக்கப்பட்ட தேவிகா ராணி முகர்ஜியை மணந்தார். பெங்களூருவில் விரிந்த நிலப்பரப்புக் கொண்ட பண்ணை மாளிகையில் வாழ்ந்து அங்கேயே உயிர் நீத்தார். இப்போது அது பொதுமக்கள் காணும் விதமான காட்சியகமாக கர்நாடகா அரசால் பராமரிக்கப்படுகிறது.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *