Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #37 – அப்துர் ரஹ்மான் சுக்தாய்

இந்திய ஓவியர்கள் #37 – அப்துர் ரஹ்மான் சுக்தாய்

இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உருவாவதற்கு முன்னர் இருந்த உடைபடாத பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் லாஹூர் நகர்தான் அப்துர் ரஹ்மான் சுக்தாய் பிறந்த ஊர். அங்குள்ள மொஹல்லா சடிக் சவாரன் என்னும் பகுதியில் 21-செப்-1894இல் அப்துர் ரஹ்மான் சுக்தாய் பிறந்தார். கைவினைக் கலைஞர்கள், கட்டடப்பொறியாளர்கள், இல்ல அலங்கார அமைப்பாளர்கள் என்னும் பன்முகத் திறமைகொண்ட கலைஞர்கள் குலத்தில் வந்த அப்துர் அவரது தந்தையான கரீம் பாட்சாவுக்கு இரண்டாம் மகன். தனது மாமன் பாபா மிராண்டஹாவிடம் நகாஷி பாணி ஓவியப்படைப்பைத் தொடக்கமாகக் கற்றுக் கொண்டார். ரயில்வே தொழில் நுட்பப் பள்ளியில் படிப்பை முடித்த பின் 1911இல் லாஹூர் மாயோ ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். அப்போது அதன் துணை முதல்வராக அபநேந்திரநாத்தின் மாணவர் சமேனேந்திர நாத் குப்தா இருந்தார். பட்டப் படிப்பை முடித்தபின் சுக்தாய் பள்ளி ஓவிய ஆசிரியராகவும் புகைப்படக் கலைஞராகவும் வாழ்க்கையைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பின் மாயோ ஓவியப் பள்ளியில் க்ரோமோ லிதொகிரஃபி (Chromo-Lithography) பிரிவில் பணிக்கு அமர்த்தப் பட்டார்.

அப்துர் ரஹ்மான் சுக்தாய்

அவரது ஓவியம் வங்க பாணி சுதேசி மறுமலர்ச்சி வழியில் அமைந்தது. 1916இல் Mordern Review Magazine இதழில் இடம் பெற்றது. 1920இல் பஞ்சாப் நுண் கலைக் கழகத்தில் (Punjab Fine Arts Society) அவரது தனிநபர் காட்சி இடம் பெற்றது. விரைவில் அவர் நன்கு அறியப்பட்ட ஓவியர் என்னும் தகுதியைப் பெற்றார். அவரால் நீர் வண்ண ஓவியங்கள் பெருமளவில் படைக்கப்பட்டன. என்றாலும் அவர் ஒரு தேர்ந்த அச்சு உருவப் படைப்பாளி (Print Maker). தனது செதுக்கல் திறமையை மேம்படுத்திக்கொள்ள 1930களில் அவர் லண்டன் நகரம் சென்றார். பஞ்சாப் மொழிக்கவிஞர் பாய் வீர் சிங் (Bhai Vir Sing) படைத்த கவிதைத் தொகுப்புகளில் சுக்தாயின் கோட்டு ஓவியங்கள் இடம் பெற்றன. ‘ராணா சூரத் சிங்’ என்னும் புகழ்பெற்ற நூல் அதில் ஒன்று. தனது அறுபது ஆண்டுக்கால ஓவியப் படைப்புகளில் அவர் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் வண்ண ஓவியங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பென்சில் கோட்டோவியங்களையும், ஏறத்தாழ 300 செதுக்கல் படைப்புகளையும் உருவாக்கினார். ஓவியக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதினார். புத்தகத்துக்கு மேலுறை ஓவியம், தபால்தலை வடிவமைப்பு போன்றவற்றையும் படைத்தார்.

1947ஆம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உருவானபின் பாகிஸ்தான் குடிமகனாக நிலைகொண்ட அவருக்கு, பாகிஸ்தான் அரசு பெரும் சிறப்பைச் செய்தது. அவர் Naqsh-e-Cughthai-1935, Chughtai’s Paintings 1940, Murraqqai-e-Chughtai 1927 ஆகிய மூன்று நூல்களைத் தமது ஓவியங்களுடன் தாமே பதிப்பித்தார். Murraqqai-e-Chughtai நூலில் மிர்ஜா காலிப் கவிதைகள் அவருடைய ஓவியங்களுடன் இடம் பெற்றன. அந்த நூல் அவரது காலத்தில், நூல் வடிவ அமைப்பில் ஒரு மைல்கல்லாகச் சிறப்பித்துப் பாராட்டப் பெற்றது. பாகிஸ்தான் அரசு நல்லெண்ணப் பயணம் வரும் வெளிநாட்டு உயர் மக்களுக்கு அவரது ஓவியங்களைப் பரிசாக அளித்தது.

அவரது தொடக்கால ஓவியப் படைப்புகளில் வங்கத்து மறுமலர்ச்சித் தாக்கம் மிகுந்து காணப்பட்டது. ‘ஜஹானாராவும் தாஜ்மஹாலும்’ என்னும் அவரது ஓவியம் அவநேந்திரநாத் டாகூர் தீட்டிய ‘ஷாஜஹானின் இறுதி நாட்கள்’ என்னும் ஓவியத்தின் தொடர்ச்சியாகவே இருந்தது. ஆனால், விரைவில் அவர் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டுவிட்டார். அது இஸ்லாமியக் கலை மரபின் தாக்கம் கொண்டது. ஆனாலும் அதில் மேலை நாட்டு Art Nouveau தாக்கமும் கலந்து காணப்பட்டது. பழைய வரலாறு, கிராமிய வாழ்க்கை, இஸ்லாமிய / ஹிந்து உலகத்து வரலாறு போன்றவற்றிலிருந்து அவர் தனது ஓவியங்களுக்கான கருப்பொருளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (P.T.V.) அவர் படிமம் (Logo) ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். அது இன்றளவும் சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1957இல் பாகிஸ்தானின் விடுதலை நாள் விழாவுக்காக ஒன்பது தபால் தலைகளை வடிவமைத்தார். அது, ‘சுக்தாயின் கலைத்தொகுப்பு’ (Chugtai Art Set) என்றும், உலகிலேயே மிகச் சிறந்த தபால் தலை வடிவ அமைப்பு என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

தமையனாருக்கு மிகவும் உறு துணையாக இருந்த அவரது இளைய சகோதரர் அப்துல்லா சுக்தாய் சிறந்த கல்வியாளர். மேலும் இஸ்லாமியக் கலை பற்றின ஆராய்ச்சியாளர்.

உலகெங்கும் அவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் British Museum, Victoria and Albert Musuem, National Gallery of Modern Art -Delhi, National Art Gallery Islambad ஆளுனர் இல்லம் கராச்சி, அரசு மாளிகை Bangkok போன்றவை சிலவாகும். 17-1-1975 இல் லாஹூர் நகரில் சுக்தாய் இயற்கையுடன் கலந்தார்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *