Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

ஓவியர் மஞ்சித் பாவா 29-12-1941இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள துரி என்னும் சிறிய ஊரில் பிறந்தார். தனது இளவயதுக்காலத்தில் பாரதம், ராமாயணம், புராணக் கதைகள், பஞ்சாப் கவி வாரிஸ் ஷா கவிதைகள், குருநானக் பேருரைகள், சூபி சித்தாந்தம் போன்றவற்றைப் பெரியோரிடமிருந்து கேட்டதால் அவருள் அவை ஆழப் பதிந்தன. பின்னாளில் அவரது ஓவியங்களில் அவற்றின் தாக்கம் கருப் பொருளாக அமைந்தன. இதை அவர் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைச் சூழலில் மஞ்சித் பாவாவின் இளமைக்காலம் கழிந்தது. முறையாக அவர் ஓவியம் பயில விரும்பியபோது அவரது தாய்க்கு அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அது ஒரு வருமானம் தரும் தொழில் போன்றது அல்ல என்னும் கருத்துடையவர் அவர். ஆனால் மஞ்சித் பாவாவின் தமையன்மார் கொடுத்த ஒப்புதலால் அவர் டெல்லி ஓவியக் கல்லூரியில் சேர்ந்து B.C. சென்யால், தன்ராஜ் பகத், சோம்நாத் ஹோரே ராகேஷ் மேத்தா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் (1958-1963) ஓவியம் பயின்றார். ‘ஆனால் நான் அடையாளத்தைப் பெற அபானி சென்தான் (1932-1972) காரணமாக இருந்தார். அவர் என்னை ஒரு நாளில் 50 கோட்டுச் சித்திரங்களை செய்யச் சொல்வார். பெரும்பாலானவற்றை முறையாக இல்லை என்று ஒதுக்கி விடுவார். இது எனக்குத் தொடர்ந்து அயர்வின்றிப் படைக்கும் குணத்தைக் கொடுத்தது. மேலைநாட்டு அருவப் பாணிச் சிந்தனை எல்லோரையும் விழுங்கிக் கொண்டிருந்தபோது அவர்தான் உருவத்தில் மாற்று வடிவம் உண்டாக்குவதைக் காண்பித்துக் கொடுத்தார். நீங்கள் இன்று எனது ஓவியங்களில் காணும் என் பாணிக்கு அவர்தான் வித்திட்டார்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

மஞ்சித் பாவா

மஞ்சித் பாவா

காளி, சிவன், கிருஷ்ணன் போன்ற கடவுளர்தான் இந்தியாவின் அடையாளம் என்று அவர் நம்பினார். கடவுள் நம்பிக்கை மிகுந்த அவர் தனது வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கடவுளிடமே ஒப்படைத்தார்.

1964 – 71களுக்கு இடையில் அவர் பட்டுத்துணியில் உருவங்களைப் பதிப்பிக்கும் முறையைக் கற்க (Silk Screen Printing) லண்டன் நகரம் சென்றார். அந்தப் பணியிலும் ஈடுபட்டார். இந்தியா திரும்பிய அவருக்கு இளவயதில் கேட்ட புராணங்கள் ஓவியம் படைக்கக் கருப்பொருளாக அமைந்தன. மேலை நவீன பாணி அவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரது படைப்புகளில் வண்ணத்தொகுப்பு எளிமையான விதத்தில் இருக்கும். சூரியகாந்தி மலரின் மஞ்சள் நெற்கதிரின் பச்சை, காலை மாலை சூரியனின் இளஞ்சிவப்பு வானத்தின் அடர்நீலம் போன்ற வண்ணத் தொகுப்புகளில் அவை அமையும். சாம்பல், பழுப்பு நிறங்களை அவர் முற்றாக ஒதுக்கினார். இந்திய வண்ணச் சிந்தனையையே அவர் பின்பற்றினார்.

தனது இருபது வயதுகளில் அவர் எப்போதும் மிதிவண்டியிலோ, அல்லது கால்நடையாகவோ பயணித்தவாறே இருந்தார். ‘இமாச்சலப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் என்று நான் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்தேன். திறந்த வெளியில், மரநிழலில், ஒரு தாளைப் பரப்பி இயற்கையை ஓவியமாக்கினேன். மக்களின் எளிமையும், வண்ணங்களுடன் புழங்குவதும் என்னுள் பெரும் உவகையைத் தோற்றுவித்தது’ என்கிறார் மஞ்சித். ஹிந்துஸ்தானி இசை மேதை பனாலால் கோஷ் அவர்களிடமிருந்து குழலிசைக்கக் கற்றுக்கொண்டார். குழல் இசைக்கும் கண்ணனைச் சுற்றிப் பசுக்களுக்கு மாறாக நாய்களின் கூட்டம் இருக்கும் விதமாக அவர் தீட்டிய ஓவியம் உண்மையிலேயே ஒரு புரட்சிதான்.

அவரது முதல் விருப்பம் வரைவதுதான். ‘ஓவிய மேதை மைக்கலாஞ்சலோவின் கோட்டோவியங்கள்தான் என்னையும் படைக்கத் தூண்டின’ என்கிறார். பொருட் தேவைக்காக அவர் படைக்கவில்லை. மனநிறைவையே முன்வைத்தார். ஒருவருக்கு உரிய நேரத்தில் கிட்டவேண்டியது தவறாமல் கிட்டும் என்னும் மனமுடையவராக அவர் வாழ்ந்தார்.

அவர் டெல்லியில் வாசம் செய்தார். 2005இல் பக்கவாதத்தால் நோயுற்ற அவர் தன்னிலை இழந்து (Coma stage) மூன்று ஆண்டுகள் கிடந்தார். 29-12-2008 அன்று அவரது உயிர் பிரிந்தது.

அவருக்குக் கிட்டிய விருதுகள் மிகவும் குறைவானவைதான்.

  • 1963 – Sailoz Prize – New Delhi
  • 1980 – National Award All India Art Exhibition in Delhi
  • 1981 – All India Exhibition of Prints and Drawings – Chandigarh
  • 1986 – 1st Barath Bahawan Biennale at Bopal

‘Meeting Manjit’ என்னும் தலைப்பில் புத்ததேவ் தாஸ்குப்தா இயக்கிய அவரைப்பற்றிய குறும்படம் 2002 இல் சிறந்த தேசியக் குறும்பட விருதைப்பெற்றது.

0

பகிர:
nv-author-image

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *