Skip to content
Home » ‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.

1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரையை நிகழ்த்தினார். வயிற்றிலிருக்கும் குழந்தைக்குப் பிறக்கும் முன்னரே பெயர் சூட்டுவதைப் போல, இன்னும் 24 நாள்களில் விடுதலைப் பெறவிருந்த புதிய தேசம் தனது தேசியக் கொடியை அதிகாரபூர்வமாக முன்மொழிந்தது.

சரியாக 6,412 நாள்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் நேரு ஏற்றிய அதே கொடியின் மாதிரியைத்தான் சிறு மாறுதலோடு கொண்டுவந்திருத்தார் நேரு. இந்தியாவுக்குக் கொடியின் தேவை என்ன எனத் தொடங்கி, கொடியின் மேன்மையை, முக்கியத்துவத்தை, அடையாளத்தை அவர் சுருக்கமாக விவரித்தார். மூவர்ணக் கொடியின் மையத்தில் ஏன் சக்கரம் நிலைகொண்டிருக்கிறது என்பற்கான விளக்கத்தையும் நேரு அளித்தார்.

இந்தியாவின் நொடிந்து போன தேகத்தின்மீது தேசியக் கொடி எனும் பட்டாடையைப் போர்த்தி, நேரு ஆற்றிய எழுச்சி உரை இது.

0

இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிவதற்கு முன்பு உங்களிடம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் பெரிதும் மதிக்கும் இந்திய நாட்டின் சுதந்திரக் கொடியை, இந்தச் சபையின் முன்னதாக, இன்னும் சில நொடிகளில் இந்தத் தேசம் ஏற்கவிருக்கிறது. அந்தப் பொழுதில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தேசத்தின் நெடிய வரலாற்றில், நம் கொடிக்கும் ஒரு குறுகிய காலக் கதை இருக்கிறது.

குறுகிய காலம்தானா? ஆமாம். அதனாலென்ன? சில சமயம் கண நேரப் பொழுதில்தான், நூற்றாண்டுகாலப் பயணங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்தக் குறுகிய வேளையில் நாம் வெற்றுடலாக வெறுமனே வாழ்ந்து வந்தோமா, இல்லை வெந்து தணிந்து போராடி காலம் கழித்தோமா என்பதுதான் அது நூற்றாண்டுப் பயணமா இல்லை நூலறுந்த பயணமா என்பதை முடிவுசெய்கிறது.

அவ்வகையில் நம் தேசியக் கொடியின் குறுகிய கால வரலாறு சாதாரண கதை அல்ல. கால் நூற்றாண்டு காலமாக நம் மக்கள் மிக விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். என்னால் துணிந்து சொல்ல முடியும், அவர்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடும் ஒன்றிரண்டு வருடப் போராட்ட அனுபவத்தில் கிட்டியது அல்ல. நம்மால் நினைத்தும் பார்க்க முடியாதபடி, இந்தத் தேசம் நம்மைப் பிணைத்து வைத்த பலனால் கிட்டியது.

இந்தச் சபையினர் எல்லோரும் அறிந்தது போல, பல காரணிகளால் நம் வெற்றி சிதைக்கப்பட்டதை நானும் அறிவேன். சில மாதங்களாக நம்மை வாட்டியெடுக்கும் பல செய்திகள் காதைத் துளைத்தபடி இருக்கின்றன. நம் பெருமதிப்புக்குரிய இந்தியத் தாயின் ஒரு பாதி நம்மைவிட்டுப் பிரிந்து செல்கிறது. இதை நம்மால் மறக்க முடியாது. உலுக்கிப் போட்ட பல இன்னல்கள் இன்னுமிருந்தாலும் மீண்டும் அதைச் சபையில் சொல்ல நான் விரும்பவில்லை.

சொல்லமுடியாத ரணமெல்லாம் ஒற்றைத் துரும்பாகி நம் காலடியைத் துருத்திக் கொண்டே இருக்கிறது. நாம் வெற்றிப் பெற்றாலும், இந்தத் தேசம் பெருமகிழ்வு கொண்டாலும் இந்தச் சோகமெல்லாம் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.

நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நொடியில்கூடப் பல பூதாகரமான சிக்கல்கள் நம் தேசத்தை அச்சுறுத்தி வருகின்றன. நம் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும், மிக்க களிப்புடன் நாம் கொண்டாட வேண்டிய தருணம் இது; நூற்றாண்டுகளாக நாம் ஏங்கித் தவித்த தருணம் இது; நம் புரட்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தருணம் இது!

இந்தக் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் எல்லோரும் விரும்பி ஏற்கும்படியான கொடியை, இந்தத் தீர்மானம் உங்களுக்கு நிச்சயம் வரையறுக்கும். ஒரு விதத்தில் இந்தக் கொடியை நாம் சாதாரண தீர்மானத்தால் பெற்றுவிடவில்லை; மக்களின் பாராட்டுகளால், ஏகோபித்த வரவேற்புகளால், சில தசாப்தங்களாக இது ஈந்துத் தந்த தியாகங்களால் என்றைக்கோ இக்கொடியை நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம்! நாம் செய்ய வேண்டியதெல்லாம், இதை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதே.

இந்தக் கொடியைப் பலரும் பலவாறாக வர்ணிக்கிறார்கள். இதன் சிறப்பம்சத்தை உணர மறுக்கும் சிலரோ, நிறச் சாயத்தை பார்த்து இதன் மேல் மதச் சாயம் பூசுகிறார்கள்! மிகத் தெளிவாகச் சொல்கிறேன், இந்தக் கொடியின் முதன்மை உருவத்தை வடித்த நாள்முதல் எங்களுக்கு எந்தவித மத அபிப்பிராயங்களும் இருந்ததில்லை.

நான், இந்தக் கொடியைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லவா? நாம் நெடுநாட்களாகப் பயன்படுத்தி வந்த கொடியிலிருந்து ஒரு சிறிய மாறுதலை இதில் உட்படுத்தியிருக்கிறோம். மேலே அடர் குங்குமப்பூவின் நிறம்; கீழ்ப்பகுதியில் அடர்பச்சை; நடுவில் வெள்ளை என்று நிறமெல்லாம் ஒன்றுதான். ஒரு சாதாரண இந்தியனை அடையாளப்படுத்திய; இந்தியப் பெருந்திரளை அடையாளப்படுத்திய; இந்தியரின் தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்திய அந்தக் கை ராட்டை – மகாத்மா காந்தியால் புத்துயிர் பெற்ற அந்தக் கைராட்டை – வெள்ளைப் பட்டையின் நடுவே இருந்தது. அந்தக் கைராட்டை சக்கரத்தைதான் சிறிது மாற்றியுள்ளோம். கொடியின் ஒருபக்க உருவம், அப்படியே மறுபக்கம் தெரிய வேண்டும் என்பது விதி. இதுவே மாற்றத்திற்கான காரணமே ஒழிய வேறெதுவுமல்ல.

நாம் மாற்றியிராவிட்டால் கொடியின் ஒருபக்க பார்வையில் கைராட்டையும் சக்கரமும் ஒருவாறு தெரிவது, மறுபக்க பார்வையில் அப்படியே நேர் எதிராகத் தெரியும். இது கொடி விதிகளுக்கு முரணாகிவிடும். சக்கரங்கள் துருவம் நோக்கி இருக்க வேண்டுமே ஒழிய துருவத்தில் இருக்கக்கூடாது.

மணிக்கணக்கான ஆலோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். இந்த மாபெரும் அடையாளம் நிச்சயம் மறைக்கப்பட்டுவிடக் கூடாது; ஆனால் அதே சமயம் வீதிமீறலும் கூடாது! எனவே சக்கரத்தை அப்படியே வைத்துக்கொண்டு, நூற்பு இயந்திரத்தை மட்டும் எடுத்துவிட சம்மதித்தோம்.

நூற்றுக்கணக்கான வரலாற்றுப் பக்கங்களை, இந்தச் செயல் மீண்டுமொருமுறை புரட்டிப் பார்க்க வைத்து. வரலாற்றில் பல சக்கரங்களை நாம் கடந்து வந்தபோதும், நம்மை மிக ஆழமாக ஒன்று பாதித்திருக்கிறது. நாம் எல்லோரும் அதை ரசித்திருக்கிறோம். பல இடங்களில் இன்புற்றிருக்கிறோம். அசோகத் தூணின் உச்சியில், மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு சக்கரமே அது!

அந்த ஒற்றைச் சக்கரம்தான் பண்டைய இந்திய வரலாற்றின் ஒட்டுமொத்த பண்பாட்டு அடையாளம்; இந்தியாவின் இத்தனையாண்டு போராட்டாங்களின் அடையாளம். அதனால் இந்தச் சக்கரத்தின் வரலாற்று ஒளியில் கைராட்டையின் சக்கரம் பதியவேண்டுமென நாங்கள் விரும்பினோம்.

மிகுந்த பெருமையுடன் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தக் கொடி ஒரு பேரரசின் அடையாளம் அல்ல; ஒரு ஏகாதிபத்தியத்தின் அடையாளம் அல்ல; இருள்படிந்த அடிமைத்தனத்தின் அடையாளம் அல்ல; மாறாக, கட்டவிழ்த்து விடுதலைப் பெற்ற தேசத்தின் வெற்று அடையாளமும் அல்ல. தன்னைப் பார்ப்பவர்க்கெல்லாம் விடுதலை உணர்வூட்டி அக்னி பிரவேசிக்க விடுதலை கொப்பளிக்கும் அடையாளம், இந்தக் கொடி.

ஜெய் ஹிந்த்!

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *