Skip to content
Home » தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி ‘முதல் சுதந்திரப் போர்’ என்று குறிப்பிடப்பட்டாலும் அந்த நிகழ்வு நடந்ததற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தென்னகத்தில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரப் போருக்கான விதை ஊன்றப்பட்டு பிரிட்டிஷ் படையைக் கலகலகலக்க வைத்த ஒரு மாபெரும் எழுச்சி நடைபெற்றது.

ஆற்காட்டு நவாபான முகம்மது அலி, கர்நாடகப் போரில் வெற்றியடைந்தாலும் அதற்குப் பெரும் உதவி புரிந்த ஆங்கிலேயர்களுக்கு வரி வசூலிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உள்ள சமஸ்தானங்களுக்கும் பாளையங்களுக்கும் பெரும் பிரச்சனையாக வந்து முடிந்தது. இந்தியாவில் காலூன்றத்துடித்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதற்கான செலவுகளையும் இந்த வரி வசூல் மூலம் வந்த வருமானத்தின் வழியாக ஈடு செய்ய முயன்றது.

அதனால் கடுமையான வரிகள் பாளையங்கள் மீது விதிக்கப்பட்டன. சில பாளையக்காரர்கள் இதனை எதிர்த்துப் புரட்சி செய்தனர். ஆனால் நெற்கட்டான்செவலின் பூலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் பிரிட்டிஷாருக்கு எதிராகச் செய்த போர்கள் தனிப்பட்ட முறையில் நடைபெற்றதனாலும், அருகிலுள்ள பாளையங்கள் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டதாலும் இந்தப் போர்கள் அவர்களுக்கு எதிராக முடிந்தன. கட்டபொம்மன் போன்ற பல பாளையக்காரர்கள் தங்கள் உயிரையும் இழக்க நேரிட்டது. அதன்பின் பிரிட்டிஷ் மேஜர் பானர்மான் செப்புப் பட்டயம் மூலம் அனுப்பிய கடுமையான எச்சரிக்கையினால் சில காலம் அமைதி நிலவியது.

திண்டுக்கல்லுக்கு அருகில் இருந்த விருப்பாச்சியின் பாளையக்காரரான கோபால் நாயக்கரும் இதே போன்று தனியாகப் போரிட முனைந்தவர்தான். கர்னல் ஃபுல்லர்ட்டனின் படைகளால் தோற்கடிக்கப்பட்ட அவர் அதன்பின் கம்பெனியாருக்கு ஒழுங்காக வரிகளைச் செலுத்தி வந்தார். அதேசமயம், ஒருங்கிணைந்த ஒரு முயற்சியால்தான் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்கமுடியுமே அல்லாது தனித்தனியாகச் செயல்பட்டால் அனைவரும் விரைவில் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துகொண்ட அவர் அதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய ஆரம்பித்தார்.

மணப்பாறை, கன்னிவாடி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் உள்ள பாளையக்காரர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு கூட்டணி ஒன்றை ஏற்படுத்தினார். பெரியபட்டி, மேவாடி, தொண்டாமுத்தூர் , நத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைவர்களும் அந்தக் கூட்டணியில் இணைந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் தோல்விக்குப் பின், அவனது தம்பியான செவத்தையாவும், குமாரசாமி என்ற ஊமைத்துரையும் சிறை வைக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர்களுக்கும் தூது ஒன்றை அனுப்பினார். இதில் தனித்து நின்றவர்கள் சிவகங்கையை அப்போது ஆண்டுகொண்டிருந்த மருது சகோதரர்கள்தான்.

வெள்ளை மருது என்று அழைக்கப்பட்ட பெரிய மருது ஆங்கிலேயருடனான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அப்போதுதான் சமஸ்தானத்தில் அமைதி நிலவ வழி செய்திருந்தார். ஆகவே பிரிட்டிஷாருடனான நேரடி மோதலை அவர் விரும்பவில்லை. ஆனால் அவரது தம்பியும் மருது பாண்டியன் என்று பெயருடையவருமான சின்ன மருது, எப்படியிருந்தாலும் ஆங்கிலேயருடனான போரட்டம் தவிர்க்கமுடியாதது என்பதை அறிந்து கொண்டிருந்தார். அதன் காரணமாக ரகசியமாக தரைப்படை மற்றுமின்றி கடல்படை ஒன்றையும் திரட்ட ஆரம்பித்திருந்தார். அவரோடும் கோபால் நாயக்கர் தொடர்பு கொண்டிருந்தார்.

1801ம் ஆண்டு ஜனவரி மாதம் விருப்பாச்சியில் அதைச் சுற்றியுள்ள பாளையக்காரர்கள் ஒன்று கூடினர். அவர்களின் முயற்சியால் மேற்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் கலகங்கள் தோன்ற ஆரம்பித்தன. இதனால் எச்சரிக்கையடைந்த பிரிட்டிஷ் நிர்வாகம் கர்னல் இன்னஸின் தலைமையில் ஒரு படையை திண்டுக்கல்லை நோக்கி அனுப்பியது. அதே நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சிக்கும் சில வீரர்களை அனுப்பினார் கோபால் நாயக்கர். திருச்செந்தூருக்குச் செல்லும் யாத்திரீகர்களின் போர்வையில் பாஞ்சாலங்குறிச்சியில் புகுந்த அவர்களின் முயற்சியால் செவத்தையாவும் ஊமைத்துரையும் அங்குள்ள சிறையிலிருந்து தப்பினர். திருநெல்வேலிக்கு கிழக்கே இருந்த காடுகளில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து படைகளைத் திரட்ட ஆரம்பித்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டை வெறும் மண்ணைக் கொண்டு வலிமையானதாக மீண்டும் எழுப்பப்பட்டது. இதைக் கண்ட திருநெல்வேலியில் இருந்த ஆங்கிலத் தளபதியான மெக்காலே ஒரு படையோடு பாஞ்சாலங்குறிச்சிக்கு விரைந்தார். பிரிட்டிஷ் பீரங்கிகள் கோட்டையைத் தாக்க ஆரம்பித்தன. ஆனால் ஊமைத்துரையின் வீரர்களின் கடுமையான தாக்குதலினால் பிரிட்டிஷ் படை பின்வாங்க நேரிட்டது. திண்டுக்கல், பெரியபட்டி, ஜல்லிப்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் பாளையக்காரர்களின் படைகளும் கர்னல் இன்னெஸின் ஆங்கிலேயப் படைகளும் மோதின. தொடர்ந்து சென்னையிலிருந்து கிடைத்த உதவிப்படைகளைக் கொண்டு பல முனைத் தாக்குதலை நடத்தியது பிரிட்டிஷ் படை. இதன் காரணமாக கோபால் நாயக்கரின் படைகள் பின்னடைவைச் சந்தித்தன. தன் படைகளோடு நத்தம் அருகில் இருந்த காட்டில் புகுந்தார் கோபால் நாயக்கர்.

மே 1801ல், சென்னையில் பிரிட்டிஷ் கவர்னராக இருந்த எட்வர்ட் க்ளைவ், கர்னல் அக்னியூவின் தலைமையில் ஒரு படையை திருநெல்வேலி நோக்கி அனுப்பி வைத்தார். வலிமையான படை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்க வருவதை அறிந்த செவத்தையா, தஞ்சை மன்னரான சரபோஜிக்கு உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் சரபோஜி அவர்களுக்கு உதவ மறுத்துவிட்டார்.

திருநெல்வேலியில் ஏற்கெனவே இருந்த பிரிட்டிஷ் படையோடு சேர்ந்து கொண்டு அக்னியூ பாஞ்சாலங்குறிச்சியை மீண்டும் தாக்கினார். இம்முறை ஊமைத்துரையும் அவரது வீரர்களும் கடுமையாகப் போரிட்டும் கோட்டை வீழ்வதைத் தடுக்க முடியவில்லை. ஊமைத்துரையும் செவத்தையாவும் சிவகங்கைக்குத் தப்பிச் சென்றனர்.

அங்கு மருது பாண்டியர்களின் உதவியை அவர்கள் கோரினர். இது போன்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சின்ன மருது அவர்களுக்கு ஆதரவளித்தார். இதை அறிந்து பிரிட்டிஷார் ஆத்திரம் அடைந்தனர். மருது சகோதரர்கள் சிவகங்கையின் உண்மையான அரசர்கள் அல்ல என்றும் உடனடியாக அந்த சமஸ்தானத்தை பிரிட்டிஷரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் எச்சரித்து கர்னல் அக்னியூ ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஆனால் இதைக் கண்டு அயராத மருது சகோதரர்கள், பிரான்மலை, ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ஆங்கிலேயப்படையை அழித்தனர். நத்தத்தில் இருந்த கோபால் நாயக்கரின் படைகளும் திருமயத்தில் இருந்து ஊமைத்துரையின் தலைமையில் மற்றொரு படைப்பிரிவும் பிரிட்டிஷருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தின.

போரின் உச்சக்கட்டத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் சின்ன மருது. ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ என்று அழைக்கப்பட்ட இந்த அறிக்கை திருச்சிக் கோட்டையிலும் ஶ்ரீரங்கம் கோவிலிலும் ஒட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் நிகழ்த்திய அட்டூழியங்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருந்தார் சின்ன மருது. சுதேச மன்னர்களுக்கான உரிமைகளை மீட்டுத்தரவேண்டும் என்றும் அதைச் செய்வது இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடமை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன், ஜூலை 1801ல் இந்தப் போர் மும்முரமாவதைக் கண்ட பிரிட்டிஷ் நிர்வாகம், தன்னுடைய பல தளபதிகளைப் போர்முகத்திற்கு அனுப்பியது. கர்னல் அக்னியூ தவிர, இன்னெஸ், க்ரே, மேஜர் ஜேம்ஸ் க்ரஹாம், மேஜர் ஷெப்பர்ட், கர்னல் வெல்ஷ் ஆகியோர் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, காளையார்கோவில் ஆகிய பல முனைகளிலிருந்து தாக்குதல்களைத் தொடுத்தனர். அவர்களுக்கு உதவியாக சென்னை, தரங்கம்பாடி ஏன் இலங்கையிலிருந்து கூடப் படைகள் அனுப்பப்பட்டன. தஞ்சையின் அரசரான சரபோஜியும் புதுக்கோட்டை போன்ற சில சமஸ்தானங்களும் ஆங்கிலேயர் பக்கம் நின்றன.

இருப்பினும் பல இடங்களில் பிரிட்டிஷ் படை தோல்வியைச் சந்தித்தது. மருதுவால் ஏற்படுத்தப்பட்ட கடல் படை மூலமாக பாளைய வீரர்களுக்குத் தொடர்ந்து உதவி கிடைத்து வந்ததை அறிந்த பிரிட்டிஷார், செப்டம்பர் 1801ல் ஷூலர் என்ற பீரங்கிக் கப்பலை தொண்டிக்கு அனுப்பி வைத்தனர். துடுப்புகளால் செலுத்தப்பட்ட மருதுவின் படகுகளால் வலுவான பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலை நீண்ட நேரம் எதிர்த்து நிற்க இயலவில்லை. அந்தப் படகுகள் சிதறடிக்கப்பட்டு அதிலிருந்த வீரர்களின் உடல்கள் கடலில் மிதந்தன.

நாட்டின் பல பகுதிகளிலிருந்து தொடர்ந்து வந்த உதவிப்படைகளால் வலிமையடைந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளை பாளையக்காரர்களால் நீண்ட நாட்கள் எதிர்த்து நிற்க இயலவில்லை. அக்டோபர் 1801ம் ஆண்டு விருப்பாச்சியிலிருந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கோபால் நாயக்கரைச் சுற்றி வளைத்துப் பிடித்தார் கர்னல் இன்னெஸ். காளையார் கோவிலை முற்றுகையிட்ட பிரிட்டிஷ் படை, மருது பாண்டியர்கள் சரணடையாவிட்டால் கோவிலைத் தகர்த்துவிடுவோம் என்று மிரட்டினர்.

அதன் காரணமாகவும் ஆங்கிலேயர் அளிப்பதாக அறிவித்திருந்த பரிசுக்காக படைவீரர்கள் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் மருது பாண்டியர்கள் அக்டோபர் 19ம் தேதி பிரிட்டிஷாரிடம் பிடிபட்டனர். திருமயம் கோட்டையிலிருந்து போர் புரிந்த ஊமைத்துரையும் அவர்களிடம் பிடிபட்டார். தங்களை பல போர்முனைகளில் தோற்கடித்துப் பல தளபதிகளைக் கொன்ற பாளையக்காரர்கள் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்த ஆங்கிலேயர்கள் கண்துடைப்பு விசாரணை நடத்தி அவர்களில் பலரைத் தூக்கிலிட்டனர்.

மருது சகோதரர்கள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். சின்ன மருது ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். சின்ன மருதுவின் மகனான துரைச்சாமி மட்டும் பினாங்குத் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். எழுபது வயதைக் கடந்த கோபால் நாயக்கர் திண்டுக்கல்லில் இருந்த ஒரு ஏரிக்கரையிலும் ஊமைத்துரை திருமயம் கோட்டையிலும் தூக்கிலிடப்பட்டனர்.

பாளையக்காரர்களின் வீரமிக்க இந்தப் போராட்டம் முடிவில் ஒற்றுமையின்மையின் காரணமாகவும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்டாலும், கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரையில் வலிமையான பிரிட்டிஷ் படைகளுக்கு கடும் சேதத்தை விளைவித்தது என்பது பெருமைக்குரிய செய்தி. பாரதத்தின் சுதந்திரப் போரட்டத்திற்கு தங்கள் தியாகத்தால் அவர்கள் விதைத்த வித்தை நன்றிகூர வேண்டியது நம்முடைய கடமையாகும்.

0

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

1 thought on “தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்”

  1. உன்மையை பூட்டி வைத்தாலும் ஒரு நாள் அவை வெளிச்சத்துக்கு வரும்! இந்த பதிவு, அதிகாரத்தில் இருந்தவர்களால் பூட்டி வைக்கப்பட்ட சரித்திரத்தை வெளிப்படுத்தியதோடு இல்லாமல் நாட்டு சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வீர்ர்களை வீழ்த்தியது நம்முள் இருந்த நயவஞ்சகர்களே என்ற உன்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. பதிவிட்டவர்களுக்கும், எழுதிய கிருஷ்னன் அய்யாவுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளோம!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *