Skip to content
Home » இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

இந்தியாவைக் கண்டடைதல்

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை பெருமளவில் மையப்படுத்தும் 25 நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது முடிந்தளவு பரந்த நோக்கோடு செயல்பட்டிருந்தாலும் ஜவாஹர்லால் நேருவின் காலத்துக்குச் சற்றே கூடுதல் இடம் அளித்ததற்குக் காரணம் அவர் ஆட்சிக்காலமே நவீன இந்தியாவின் அடித்தளம் என்பதுதான். ஓரளவு பொருண்மை அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறேன். இது தர வரிசை அல்ல. கிழக்கு டுடே ஆசிரியர் மருதனின் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கிலத்தில் வெளியான நூல்களின் பட்டியல் மட்டுமே இது. எனவே சில விடுபடல்கள் உள்ளன.

1. Gandhi Before India & Gandhi: The Years That Changed the World, Ramachandra Guha

இரு பாகங்களில் வந்தாலும் ஒரே வாழ்க்கை வரலாறுதான். இரண்டாம் பாகத்தில் காந்தியின் இந்திய வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்த காந்தி பற்றிய வாழ்க்கைப் பதிவுகளில் இதில்தான் முதல்முறையாக அம்பேத்கர் காந்தி உறவுக்குக் கணிசமான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

2. Indian Critiques of Gandhi, Harold Coward

காந்தி ஒரு மந்திரவாதி அல்ல. தன் காலத்தைச் சேர்ந்த அனைவரையும் அவர் தன்வசப்படுத்திவிடவில்லை. சமகாலத்தைச் சேர்ந்த பலராலும் பல்வேறு தரப்பினராலும் அவர் விமரிசிக்கப்பட்டிருக்கிறார். இஸ்லாமியர்கள் தொடங்கி சீக்கியர்கள் வரை பலரும் அவரோடு முரண்பட்டிருக்கிறார்கள். எதிர்ப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். காந்தியை விமரிசித்த இந்தியர்கள் பற்றிய நல்ல தொகுப்பு இது. கடந்த காலத்தை மட்டுமல்ல, சம காலத்தையும் புரிந்துக்கொள்ள உதவும்.

3. Jawaharlal Nehru (3 volumes), Sarvepalli Gopal

காந்தியை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் ஏனோ நேருவின்மீது அரிதாகவே தங்கள் பார்வையைத் திருப்பினர். சர்வபள்ளி கோபாலின் இத்தொகுப்பு பழையதுதான். இருந்தாலும் முக்கியமானது.

4. Nehru: A Political Biography, Michael Brecher

நேருவின் சமகாலத்தில் வெளிவந்த புத்தகம் இது. நேரு குறித்து இந்தியாவுக்கு வெளியில் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்கது என்று இதனைச் சொல்லமுடியும். நூலாசிரியர் சமீபத்தில் எழுதிய இன்னொரு நூலில் நேரு, பென் குரியன் (இஸ்ரேல்) போன்ற தலைவர்களை ஒப்பிட்டு, நேருவே உயர்ந்து நிற்பதாகச் சொல்கிறார்.

5. Jinnah: His Successes, Failures and Role in History, Ishtiaq Ahmed

ஜின்னா பற்றி அவருடைய மூலாதாரங்களைத் தேடிச் சேகரித்து பாகிஸ்தானிய வரலாற்றாசிரியர் எழுதிய மிக விரிவான வாழ்க்கை வரலாறு.

6. The Great Partition: The Making of India and Pakistan, Yasmin Khan

உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வு இந்தியப் பிரிவினையின்போது நிகழ்ந்தது. அப்போது மிகப் பெரிய கலவரங்கள் நடந்தன என்பதைத் தாண்டி பலருக்கு வேறெதுவும் அக்காலகட்டம் குறித்துத் தெரியாது. உண்மையில் பிரிவினையின் விளைவுகள் இன்றளவும் இந்திய அரசியலில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கான அரசியல், வரலாற்றுக் காரணங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.

7. Muslims Against the Muslim League: Critiques of the Idea of Pakistan, Edited by Ali Usman Qasmi

ஜின்னாவின் பாகிஸ்தான் கருத்தியலையும் முஸ்லிம் லீகையும் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டு ஆதரித்தனர் என்று இன்றும் நம்புபவர்களுக்கு இந்நூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அதிர்ச்சியையும்.

8. Dravidian Sahibs and Brahmin Maulanas: The Politics of the Muslims of Tamil Nadu, 1930-1967, M. Abdul Khader Fakhri

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் முதலில் காங்கிரஸ் கட்சியோடும் அதன்பின் திராவிட இயக்கத்தோடும் பயணித்த வரலாறு.

9. Christians and the National Movement: The Memoranda of 1919 and the National Movement, Arthur Jeyakumar

இந்தியக் கிறிஸ்தவர்கள் தேச விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் புத்தகம்.

10. Letters for a Nation: From Jawaharlal Nehru to His Chief Ministers 1947-1963, Madhav Kosla

மாநில முதல்வர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நேரு எழுதிய கடிதங்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அதிகாரம் கரங்களில் குவிந்திருந்தபோதும் நேரு எவ்வாறு ஒரு ஜனநாயக ஆசானாகத் திகழ்ந்தார் என்பதை இக்கடிதங்கள் வாயிலாகத் தெளிவாக உணரமுடிகிறது.

11. War and Peace in Modern India, Srinath Raghavan

பாகிஸ்தான், சீனப் போர்கள்; ஹைதராபாத் ஒருங்கிணைப்பு என்று நேருவின் காலத்தில் நடைபெற்ற மோதல்களை ஒரு ராணுவ வரலாற்றாசிரியராக ஶ்ரீநாத் ராகவன் அலசி ஆராய்கிறார்.

12. Protracted Contest: Sino-Indian Rivalry in the Twentieth Century, John W. Garver

இந்தியா-சீனா உறவு குறித்து சமீபத்திய புதிய தரவுகளுடன் வந்திருக்கும் புத்தகம்.

13. Planning for Democracy: Modern India’s Quest for Development, Nikhil Menon

இந்தியப் பொருளாதார திட்டமிடலின் தந்தையும் புள்ளியியலின் தந்தையுமான பி.சி. மஹலநோபிஸை மையப்படுத்தும் வரலாற்று நூல். முதல் கணிணியை இந்தியா வாங்கிய விதம், உலகமே வியந்த ஓர் ஆய்வு மையத்தைப் புள்ளியியலுக்கென்று நிறுவிய கதை என்று பல நிகழ்ச்சிகளை விறுவிறுப்பான நடையில் ஏராளமான தகவல்களுடன் வழங்கும் நூல்.

14. How India Became Democratic: Citizenship and the Making of Universal Franchise, Ornit Shani

இந்தியாவின் முதல் தேர்தல் பற்றியும் அத்தேர்தலை நடத்த அரசியல் சாசனத்தில் முன்மொழியப்பட்ட உரிமைகள் குறித்தும் உருவாக்கப்பட்ட முறைமைகள் குறித்தும் அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம். அம்பேத்கர் ஏன் வலுவான தேர்தல் ஆணையத்தை விரும்பினார், பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க இருந்த தடைகள் என்னென்ன என்பது தொடங்கி பல சுவாரசியமான தகவல்கள் இந்நூலிலிருந்து கிடைக்கும்.

15. The Indian Constitution: Cornerstone of a Nation, Granville Austin

இந்திய அரசியல் சாசனம் பற்றிய மிகவும் முக்கியமான புத்தகம்.

16. Emergency Chronicles: Indira Gandhi and Democracy’s Turning Point, Gyan Prakash

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் இந்திரா அறிவித்த அவசரகாலச் சட்டம் ஒரு கறுப்பு அத்தியாயம். இது சட்டப்படி, அரசியல் சாசனத்தின் துணைக் கொண்டு அமல்படுத்தப்பட்டது என்பது இதிலுள்ள நுணுக்கமான உண்மை. மோடி இந்திராவின் அதே எதேச்சாதிகாரத் தன்மையுடன் இன்று செயல்படுவதாகவும் அதனால் அந்தக் கறுப்பு அத்தியாயத்தை நாம் முழுதுமாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் கியான் பிரகாஷ் கவனப்படுத்துகிறார்.

17. The Idea of India, Sunil Khilnani

இந்தியா என்ற தேசம் ஒரு கருத்தியலாக எப்படி உருபெற்றது என்பதை விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கும் முக்கியமான புத்தகம்.

18. Nucleus and Nation: Scientists, International Networks, and Power in India, Robert S. Anderson

தீராத வறுமை ஒரு பக்கம், பிரிவினை உண்டாக்கிய ஆறாத வடுக்கள் மறுபக்கம். இந்த அசாதாரண நிலையிலும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளை முனைப்போடு முன்னெடுத்ததோடு, அணு ஆராய்ச்சிக்கான அடித்தளங்களையும் உருவாக்கி உலகையே வியக்க வைத்தது இந்தியா. நேரு-இந்திரா ஆட்சிக் காலங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புத்தகம்.

19. Hungry Nation: Food, Famine, and the Making of Modern India, Benjamin Robert Siegel

சுதந்திரமடைந்த புதிதில் பல வருடங்கள் இந்தியாவைப் பீடித்த உணவுப் பற்றாக்குறை பற்றியும் அதனை இந்தியா எதிர்கொண்டது பற்றியும் விவரிக்கும் முக்கியமான நூல்.

20. Army and Nation: The Military and Indian Democracy Since Independence, Steven Wilkinson

இந்திய ராணுவத்தை எப்படிச் சுதந்திர இந்தியாவில் மாற்றி அமைத்தார்கள், ஏன் இந்தியாவில், பாகிஸ்தான் போலல்லாது, ராணுவப் புரட்சிகள் நடக்கவில்லை என்பது முதல் பல கோணங்களைத் தொட்டுச் செல்லும் அற்புதப் புத்தகம்.

21. The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India, Rupa Viswanath

தலித்துகளின் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் மதமாற்றங்கள் பற்றியும் நிலவும் பெரும்பாலான தவறான புரிதல்களைத் தெளிவாக்கும் புத்தகம். மிக ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

22. Panthers in Parliament: Dalits, Caste, and Political Power in South India, Hugo Gorringe

வி.சி.கவின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் கள ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்.

23. Dr. Ambedkar and Democracy: An Anthology, Editors: Christophe Jaffrelot and Narender Kumar

அம்பேத்கரின் முக்கியமான கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.

24. When Crime Pays: Money and Muscle in Indian Politics, Milan Vaishnav

இந்திய அரசியலில் ஊழலின் பங்கு பற்றித் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம். பாஜக சுத்தமான கட்சியென்று நம்பும் உள்ளங்களைப் புண்படுத்தக்கூடியது.

25. Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy, Christophe Jaffrelot

மோடியின் இந்துத்துவம் இந்திய ஜனநாயகத்தை மதவாத அடிப்படையில் மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதைத் தரவுகளுடனும் விவாதங்களுடனும் நிறுவும் முக்கியமான புத்தகம்.

கடைசியாக ஒரு போனஸ் :

The Goddess and the Nation: Mapping Mother India, Sumathi Ramaswamy

‘பாரத மாதா’ என்பதே இரவல் வாங்கிய கருத்தியல்தான் என்பதைத் தகுந்த வாதங்களை முன்வைத்து போட்டு உடைக்கும் நூல்.

பகிர:
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன்

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிப்பவர். வரலாற்றார்வலர். குறிப்பாக, இந்திய சுதந்திரப் போராட்டம், காந்தி, நேரு வரலாறுகள் குறித்துப் படித்தும், எழுதியும் வருபவர்.View Author posts

1 thought on “இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *