இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன் மகத்தான பங்கை ஆற்றியிருக்கிறது. என்னளவில் நான் வாசித்தறிந்த சில புத்தகங்களின் பட்டியலைப் பகிர்ந்துகொள்கிறேன்.
விடுதலைப் போரில் தமிழகம்
ம.பொ. சிவஞானத்தால் எழுதப்பட்டு இரு தொகுதிகள் கொண்ட இந்தப் புத்தகம் விரிவானதொரு சித்திரத்தை வழங்குகிறது.
விடுதலை வேள்வியில் தமிழகம்
ஸ்டாலின் குணசேகரன் எழுதிய இப்புத்தகம் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட பல நூறு தியாகிகள் குறித்த விவரங்களைத் தொகுத்து வழங்குவது. இவரது தேச விடுதலையும் தியாகச் சுடர்களும் என்ற புத்தகமும் இந்த வரிசையில் எண்ணத்தக்கது.
வேதாரண்யம் உப்பு சத்யாகிரகம்
ராஜாஜி, அருணாசலம் ஆகியாரின் கட்டுரைகள் தாங்கிய இப்புத்தகம் சர்தார் வேதரத்தினம் பிள்ளை நடத்திய கன்யா குருகுலம் வெளியீடு. வேதாரண்யம் உப்புசத்தியாகிரகம் நடந்த விதத்தினைச் சுவையாக விவரிக்கும் புத்தகம் இது.
நான் கண்ட பாரதம்
காந்தியரான அம்புஜம்மாளின் சுயசரிதையான இப்புத்தகம் விடுதலைப் போராட்டக் காலகட்டச் சூழலைச் சுவைபடக் கூறுவது. இது அவரது அனுபவங்களைக் குறித்த புத்தகமே எனினும் அக்காலச் சூழலை நாம் உய்த்துணர உதவுகிறது.
நினைவு அலைகள்
தி்.சே.சௌ. ராஜனின் சுயசரிதையான இந்தப் புத்தகம் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தின் சூழலையும் அக்காலகட்ட உணர்வையும் உணர்த்தும் புத்தகம்.
தமிழ்நாட்டில் காந்தி
அ. ராமசாமி எழுதிய இப்புத்தகம் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்த நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தொகுத்தளிக்கும் முக்கியமானதொரு ஆவணம். அக்காலத்தில் எந்த அளவு தமிழகத்தில் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவிடும்.
தமிழ்நாட்டில் காந்தி
காந்தி தீண்டாமை யாத்திரைக்காக இந்தியா முழுக்கப் பயணித்தபோது தமிழகத்துக்கும் வந்தார். அப்போது அந்தப் பயணத்தை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமானவரான தி்.சே.சௌ. ராஜன் அந்தப் பயண அனுபவத்தை இதில் விவரித்திருக்கிறார்.
அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்
பழ.அதியமான் எழுதிய இப்புத்தகம் தமிழகத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட ஆளுமையான ‘ரோசாப்பு துரை’ என மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப்பின் வரலாற்றை விவரிக்கும் முகமாக விடுதலைப் போராட்டச் சூழலைப் பேசுகிறது.
எனது நினைவுகள்
கோவை. அய்யாமுத்துவின் சுயசரிதையான இப்புத்தகம் ஆர்வத்தைத் தருவது. காந்தியின் நிர்மாணத் திட்டப் பணிகளிலும் முக்கியமாக கதர் மேம்பாட்டிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அய்யாமுத்து அக்காலச் சூழலை நம் கண்முன் நிறுத்துகிறார்.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள்
பெ.சு.மணியின் இந்த முக்கியமான புத்தகம் ஏராளமான தரவுகளுடன் எழுதப்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்தில் அவ்வுணர்வைப் போற்றி வளர்த்தத் தமிழ் இதழ்கள் குறித்த விரிவான பார்வையை வழங்குவது.
பத்திரிக்கைத் துறையில் பாரதியின் பங்கு
பாரதியின் கவிதைகளை மட்டுமே தமிழகம் போற்றும் நிலையில் பாரதி ஒரு பத்திரிக்கையாளராக நிகழ்த்திய சாதனைகளை விரிவாகப் பெ.சு.மணி இப்புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.
முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
இந்த இரு புனைவுகளும் கா.சி. வேங்கடரமணி எழுதிய படைப்புகள். 1930 களில் எழுதப்பட்ட இவை காட்டும் கிராமாந்திரச் சூழலும் அன்று நிலவிய விடுதலைப் போராட்டச் சூழ்நிலையும் சுவையானவை.
சுதந்திர தாகம்
சி.சு.செல்லப்பா எழுதிய மூன்று தொகுதிகளான இந்நாவல் மதுரையை மையமாகக் கொண்டு விடுதலை வேள்வியை விவரிப்பது. உரையாடல்கள் மிக நீண்டவையாகவும் சிப்பு ஏற்படுத்துவனவாகவும் இருப்பினும் வரலாறும் புனைவும் கலந்த முக்கியமான படைப்பு இது.
அலை ஓசை
கல்கி எழுதிய புகழ்பெற்ற இப்புதினம் விடுதைப் போராட்டச் சூழலை விவரிக்கத் தவறவில்லை.
சத்திய வேள்வி
பாவண்ணன் எழுதிய இப்புத்தகம் காந்தியர்கள் பலரின் போராட்ட வாழ்வை விவரிப்பது. காந்திய யுகம் என்பதே விடுதலைப் போராட்டத்தின் மையப் புள்ளி என்பதால் காந்தியர்களின் வாழ்வு முக்கியமானதாகிறது. இந்த வரிசையில் பாவண்ணன் மூன்று புத்தகங்களை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விடுதலைப் போராட்டம்
இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் எழுதிய இப்புத்தகத்தை கே. லட்சுமணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களாகவும் காந்திய நூல்களாகவும் சுய சரிதைகளாகவும் விடுதலைப் போராட்டத் தியாகிகள் குறித்த கட்டுரை நூல்களாகவும் இன்னும் பல நூறு நூல்களைக் குறிப்பிட இயலும். ஒவ்வொரு நூலும் தன்னளவில் அது பேசும் பொருளைக் குறித்துச் சிறப்புற எடுத்துரைத்தாலும் வரலாற்று ரீதியிலான நூல்கள் தமிழில் குறைவே என்ற எண்ணம் எழுவதை மறுப்பதற்கில்லை.
0