இந்து ராஷ்டிரத்தின் ஆதரவாளர்கள் தங்களுடைய சமூகப் பெருந்திட்டங்களுள் ஒன்றாக, சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டும் முயற்சியை முனைப்போடு முன்னெடுத்து வருவதைப் பார்க்கிறோம். ஹீப்ரு மறுமலர்ச்சி இயக்கத்தை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முன்னெடுத்த எலிஸர் பென் யெஹுதா என்பவர்தான் இவர்களுக்கான முன்மாதிரி. யூதர்களால் ஹீப்ருவுக்கு உயிரூட்டமுடியும் எனும்போது, இந்துக்களால் சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டமுடியாதா, என்ன?
ஆனால் ஹீப்ரு மறுமலர்ச்சிக்கு ஐரோப்பா முழுவதும் கிளம்பிய யூத வெறுப்புதான் காரணம் என்பதை மட்டும் இவர்கள் ஏனோ மறந்துவிட்டார்கள். தவிரவும், ஹீப்ருவுக்கு உயிரூட்டும் முயற்சிகள் ஆரம்பமானபோது அம்மொழி வாழ்ந்து முடித்திருந்தது. மறக்கடிக்கப்பட்ட மொழியாகவும் இருந்தது.
சமஸ்கிருதம் அப்படியல்ல. கிரேக்கம், லத்தீன், அரபு, தமிழ், ஹீப்ரு போல நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும் மொழிகளுள் ஒன்று, சமஸ்கிருதம். இவை யாவும் பண்டைய உலகில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தோன்றிய மொழிகள். அரபும் கிரேக்கமும் தமிழும் உயிர்ப்போடு இருக்கின்றன. லத்தீனும் சமஸ்கிருதமும் வீழ்ச்சியடைந்து, பல நவீன மொழிகளாகப் பிரிந்து சென்றன.
வரலாற்றில் யூதர்கள் நீண்டகாலம் நிலமின்றி அகதிகளாகத் திரிந்தவர்கள். எனவே, தங்கள் மரபுக்கேற்ப ஒரு ‘புண்ணிய பூமியை’ அடையவேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. லத்தீனுக்கு இந்நிலை ஏற்படவில்லை என்பதால் அம்மொழிக்கு உயிரூட்டும் இயக்கம் என்று தனியே எதுவும் தேவைப்படவில்லை. லத்தீன் மொழி தேய்ந்ததும் அந்த இடத்தில் பல நவீன ஐரோப்பிய மொழிகள் மலர்ந்தன. அறிவியல்மூலமும் வெற்றிகரமான செயல்திட்டங்கள்மூலமும் உலகின் பிற பகுதிகளுக்கு லத்தீன் உலகம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
இப்போது ஹீப்ருவுக்குத் திரும்புவோம். ஹீப்ரு மறுமலர்ச்சியை சமஸ்கிருத மறுமலர்ச்சிக்கான முன்னுதாரணமாக நாம் கொள்ளமுடியுமா? இந்தியாவின் கல்வி, பண்பாட்டுச் செயல் திட்டங்களுக்கு சமஸ்கிருத மறுமலர்ச்சி உதவுமா என்றால் உதவாது என்பதே பதில். காரணம் ஹீப்ரு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வரலாற்றுப் பின்புலம் இங்கே சமஸ்கிருதத்துக்கு நிலவவில்லை.
இந்த அடிப்படை வேறுபாட்டை உணராமல் இந்து ராஷ்டிர ஆதரவாளர்கள் சமஸ்கிருதம் குறித்து பல ஏற்கவியலாத வாதங்களை முன்வைக்கிறார்கள். அவற்றுள் ஒன்று, அனைத்து நவீன அறிவியல் முன்னேற்றங்களுக்குமான விதை சமஸ்கிருதத்தில்தான் புதைந்துகிடக்கிறது எனும் வாதம்.
ஒரு மொழி எவ்வாறு தழைக்கிறது? மக்கள் அன்றாட வாழ்வில் சமூகப் பரிமாற்றங்களுக்கும் வணிகத்துக்கும் அறிவார்ந்த விவாதங்களுக்கும் அதைப் பயன்படுத்தும்போதுதான். இந்தப் பயன்பாடுதான் அதை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவிலுள்ள 121 கோடி பேரில் 24,000 சொச்சம் பேர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள். 2021 கணக்கெடுப்பு தாமதமாகி வருவதால் சமீபத்திய எண்ணிக்கை தெரியவில்லை. நிச்சயம் அது பற்பல மடங்கு அதிகரித்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஓர் அனாமதேய வேண்டுகோள் பல மொழிகளில் உலவிக்கொண்டிருந்தது. அதன் சாரம் இதுதான். ‘இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதம்தான் என் தாய்மொழி என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் பொது மக்கள் நிதி அந்நிய மொழிகளுக்குச் (என்றால் பாரசீகமும் அரபு மொழியும் என்று பொருள்) சென்றுவிடும்!’
இத்தகைய பரப்புரைகள் இல்லாமலேயே சமஸ்கிருதம் வாழும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அதைச் சொற்பமான மக்களே பயன்படுத்துகிறார்கள் என்பதும். பண்டைய மொழியான சமஸ்கிருதமும் வாழும் மொழியான தமிழும் செழுமையான வரலாற்றைக் கொண்டவை. புதிய சொற்களை வளர்த்தெடுக்கும் ஆற்றலை சமஸ்கிருதம் பெற்றிருப்பதால்தான் அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ‘அ‘, (அமர்) ‘நா‘ (நாஸ்திக்), ‘அன்‘ (அனர்த்தம்) போன்ற முன்னொட்டுகளை ஒரு சொல்லின் முன்னால் சேர்ப்பதன்மூலமும் சமஸ்கிருதத்தில் எதிர்ச்சொற்களை உருவாக்கிவிடமுடியும். அதேபோல், சில இணைப்பு எழுத்துகளைப் பயன்படுத்துவதன்மூலம் இணைப்புச் சொற்களையும் எளிதில் உருவாக்கிவிடலாம்.
இவ்வாறு தன்னை வளர்த்துக்கொள்ளும் பலம் சமஸ்கிருதத்துக்கு இருக்கிறது. அதனால்தான் அது தாக்குப்பிடிக்கிறது; புவியியல்ரீதியில் பரவிச்செல்லவும் முடிகிறது. ஆனால் இந்தப் பரவலுக்கு அதன் மொழியியல் அமைப்பு மட்டுமே காரணம் என்று சொல்லிவிடமுடியாது.
செம்புப் பயன்பாடு, குதிரைகள் பழக்கப்படுத்தப்பட்டது, சக்கரத்தால் இயங்கும் வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது ஆகியவை பண்டைய வரலாற்றின் திருப்புமுனைகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய ஐரோப்பிய ஸ்டெப்பி மக்கள் தெற்குக்கும் மேற்குக்கும் இடம்பெயர்வதற்கு இவை உதவின. மக்களின் இடமாற்றம் அவர்களுடைய மொழிகளிலும் பிரதிபலித்தது. முந்து இந்தோ ஐரோப்பிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய, இந்தோ இரானிய, இண்டிக் மொழிகளாகப் பிளவுண்டன. இவற்றுள் ‘இண்டிக்’ என்பது சமஸ்கிருதம் என்று பின்னர் அழைக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவம் அவெஸ்தா மொழியோடு தொடர்பு கொண்டிருந்தது. இந்திரா, மித்ரா, வருணா, ஹோமா என்று தொடங்கி அவெஸ்தா மொழியிலுள்ள 380 சொற்கள் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளன.
பொஆமு (பொது ஆண்டுக்குமுன்) இரண்டாம் ஆயிரமாண்டில் உலகில் நடைபெற்ற பலவிதமான வாழ்வியல் மாற்றங்களின் விளைவாக மொழிகள் பல பிரதேசங்களுக்குப் பரவின. மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் முடியாட்சியின் ஆரம்ப வடிவம் மலர்ந்து வந்த காலமும் அதுதான். சமஸ்கிருதத்தின் வருகைக்குப் பிறகு, அதற்கு முன்புவரை இந்தியாவில் பேசப்பட்டுவந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தோடு உரையாடத் தொடங்கின. இந்த உரையாடல்களிலிருந்து பிராகிருதம், அபபிரம்சம் ஆகியவற்றின் புதிய வடிவங்கள் தோன்றின.
பொஆ இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில், சமஸ்கிருதம் வீழ்ச்சியடையத் தொடங்கும்வரை மற்ற மொழிகளுடனான அதன் பரிமற்றம் தொடர்ந்துகொண்டிருந்தது. நவீன இந்திய மொழிகள் உருவாவதற்கு இத்தகைய பரிமாற்றங்கள் உதவின.
அதுவரை சமஸ்கிருதத்தில் எழுதி வந்தவர்கள் 10ஆம் நூற்றாண்டு வாக்கில் கவனமாக இரு மொழிப் பயன்பாட்டாளர்களாக மாறினார்கள். எடுத்துக்காட்டுக்கு, 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜசேகர் தனது அங்கத நாடகங்களை மகாராஷ்டிர பிராகிருதத்தின் ஆரம்ப வடிவத்தில் எழுதத் தொடங்கினார். அவருடைய பிற படைப்புகள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை.
சமஸ்கிருதம் தெரிந்த அதே சமயம் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தும் எழுத்தாளர்களை 11ஆம் நூற்றாண்டு தொடங்கி நிறையவே காண்கிறோம். 16ஆம் நூற்றாண்டில், மராத்தியக் கவிஞரான ஏக்நாத் சமஸ்கிருதத்தை வெளிப்படையாக எதிர்த்து நின்றார். ‘சமஸ்கிருதத்தைக் கடவுள்கள் உருவாக்கினார்கள் என்றால் மராத்தியைக் கயவர்களா உருவாக்கினார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இறையியல், பண்பாடு, அரசியல் என்று முன்பு எங்கெல்லாம் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தி வந்ததோ அங்கெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் தோன்றின. 11ஆம் நூற்றாண்டு வரைதான் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு நீடித்தது. அதன்பின் அசாமி, பங்களா, மராத்தி, குஜராத்தி, காஷ்மிரி, ஒடியா, நேபாளி, இந்தி (ஆரம்ப வடிவம்) என்று பல நவீன மொழிகள் சமஸ்கிருதத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன.
லத்தீன், கிரேக்கம் போல் சமஸ்கிருதமும் செழிப்பான மொழிதான். சமஸ்கிருத மரபு குறித்து ஒருவர் நிச்சயம் பெருமிதம் கொள்ளமுடியும்தான். ஆனால் அளவற்ற பெருமிதம் அர்த்தமற்றது. சமஸ்கிருதம் வர்ணத்தோடு தொடர்புடையது என்பதையும் முந்தைய காலங்களில் சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு அது மறுக்கப்பட்டிருந்தது என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது. இந்தச் சமத்துவமின்மையும் சமஸ்கிருத மரபின் ஒரு பகுதிதான். அறிவுக்குத் தடை விதிக்கும் அளவுக்கு அப்போதைய சமூக நிலை இருந்திருக்கிறது.
சமஸ்கிருதத்தின் வருகைக்கு முன்பு ஒருபோதும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை. சமஸ்கிருத சாஸ்திரங்களில் தென்படும் தீட்டு குறித்த கருத்துகள் அறிவியக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தின. உழைப்பாளர்கள், கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்டோரால் அறிவார்ந்த பரிமாற்றங்களில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக சமூகத்தில் அவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டதோடு இழிநிலைக்கும் ஆளாயினர்.
கடந்த காலத்தோடும் கடந்த காலத்தின் அறிவுச் செயல்பாடுகளோடும் சமஸ்கிருத அறிவுலகம் தன்னைச் சுருங்கிக்கொண்டது. அறிவாற்றலின் பெரும் பகுதியை ஏற்கெனவே திரட்டப்பட்ட அறிவை மீளவும் அலசுவதற்கே அது செலவிட்டது. பழங்கால மோகமும் ஒருவித போலிப் பெருமிதமும் ஒன்று சேரும்போது அங்கே உண்மை காணாமல் போய்விடுகிறது. இந்தத் தெளிவற்ற நிலை, நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகவும் நம் ஜனநாயகத்தின் அடித்தளமாகவும் திகழும் சமத்துவத்துவத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பதில்தான் சென்று முடியும்.
மூர்க்கத்தனமாக சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதென்பது வெறும் மொழித் திட்டம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் பல அரசியல் கணக்குகளும் செயல் திட்டங்களும் உள்ளன.
0
(‘தி டெலிகிராஃப்’ நாளிதழில் 11 ஆகஸ்ட் 2022 அன்று வெளிவந்த ‘Hidden Agenda’ எனும் கட்டுரையின் மொழியாக்கம்)
தமிழில் : மருதன்