Skip to content
Home » அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹர்லால் நேருவுக்குமுன் பல நெருக்கடிகள் இருந்தன. புதிய தேசத்தை கட்டமைக்க, சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை அவர் சரி செய்யவேண்டியிருந்தது. நாட்டைச் சீரமைக்க நல்ல கொள்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நாட்டின் ஒவ்வொரு அடிப்படைக் கட்டமைப்பையும் நிறுவவேண்டியிருந்தது. இந்தப் பெரும் பணியில் அறிவியல் மிகப் பெரிய அளவில் உதவும் என்று நேரு நம்பினார்.

நாட்டைச் சீரமைக்க முதலில் பழமைவாதத்தில் பின் தங்கி இருக்கும் மக்களிடையே அறிவியல் பார்வையை வளர்த்தெடுக்கவேண்டும் என்று விரும்பினார் நேரு. தனது கனவை ‘கண்டுணர்ந்த இந்தியா’ (The Discovery of India) என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘அறிவியல் மனோபாவம் என்பது வாழ்வியல் முறையாகும். கேள்வி கேட்டு, அனுமானம் செய்து, சோதனை செய்து, உண்மையை ஆராய்வதுதான் அறிவியல். அவற்றைப் பின்பற்றி சிந்திக்கும்,செயலாற்றும், தனிநபர் மற்றும் சமூகச் செயல்பாடுகளை கொண்டிருப்பதே சிறந்த வாழ்வியல் முறை’ என அவர் விளக்கினார்.

நேரு சிந்தித்தது போல சுதந்திரத்திற்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அறிவியலுக்கு அதீத முக்கியத்துவம் தருபவையாகவே இருந்தன. அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக 15 ஆண்டுகளில் ஐஐடி, எய்ம்ஸ் முதற்கொண்டு பல்வேறு நிறுவனங்களையும் கட்டமைப்புகளையும் அவர் உருவாக்கினார்.

அரசியலமைப்பில் அறிவியல்

1958இல் நாடாளுமன்றத்தில் நேருவின் அரசாங்கத்தால் அறிவியல் கொள்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில், அறிவியலைப் பெரிய அளவில் தீவிரமாக வளர்த்து, அதை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் 1976ம் ஆண்டு அரசியலைப்பில் 51ஏ பிரிவில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டபோது, அதில் 8வது கடமையாக, ‘விஞ்ஞான உணர்வு, மனித நேயம் மற்றும், விசாரணை மற்றும் சீர்த்திருந்த உணர்வை பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அடிப்படையாகக் கட்டமைக்கும் பண்புகளே நமது அரசியலமைப்புக்கு உலகில் உயரிய இடத்தையும் பெற்றுத்தருகிறது. இவ்வாறு உயர்ந்த அறிவியல் அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட இந்தியா இன்று எத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்றைய இந்தியா

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வீடுகளில் கொடியேற்றச் சொல்கிறார். சமூக வலைதளங்களில் சுயவிவரப் படங்களை மூவர்ணக் கொடியாக மாற்றச் சொல்கிறார். இவ்வாறெல்லாம் செய்தால் தேசப்பற்று வளரும் என்றும் கூறுகிறார். அmது எப்படி என்று கேட்காமலேயே பலர் மோடி சொல்வதை அப்படியே செய்கின்றனர்.

இதைக்கூட தேசத்தின் மீதான தீராத காதலால் மக்கள் செய்வதாக ஏற்றுக்கொள்ளலாம். கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியபோது வீட்டில் விளக்கேற்றும்படியும், கைத்தட்டும்படியும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அப்போதுகூட மக்கள் ஏன் என்று கேட்காமல் கூட்டம் கூட்டமாகச் சாலையில் கைத்தட்டிக்கொண்டு, தீப்பந்தங்களை ஏந்தி கொரோனாவை ஒழிக்க முனைந்தனர்.

மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா பரவாது என சிலர் வாதிட்டனர். மாட்டுச் சிறுநீர் கொரோனாவை ஒழிக்கும் என சிலர் ஆரூடம் கூறினர். இவ்வாறு பேசிக்கொண்டு திரிவது சாமானிய மக்கள் அல்ல. அரசியல் பிரமுகர்களும் அறிஞர்களும்தான்.

இது அறியாமையால் செய்யப்படுவது அல்ல. திட்டமிட்டுப் பரபரப்படும் பிரசாரம். அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான கண்ணோட்டத்தை வலதுசாரி அமைப்புகளும், மத்திய அரசும் திட்டமிட்டே உருவாக்குகின்றன. இந்தியப் பாரம்பரியம், கலாசாரம், பண்டைய ஞானம் என்ற பெயரில் பிற்போக்குக் கருத்துகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. யாரும் எதுவும் கேள்விக் கேட்பதில்லை. கேட்பவர்கள் தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என அதிகாரம் சொல்கிறது.

2021ம் ஆண்டு மே மாதம் எழுத்தாளர் கிஷோர் சந்திர வாங்கேம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் எரெண்ட்ரோ லீச்சோம்பாம் (Erendro Leichombam) ஆகியோர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் செய்தது பசு சாணமும், பசு சிறுநீரும் கொரோனாவுக்கு எதிரான மருந்தாக செயல்படும் என்ற வலதுசாரிகளின் கருத்தை மறுத்து, கொரோனாவுக்கான தீர்வு அறிவியலும் பகுத்தறிவும்தான் என்று பதிவிட்டதுதான்.

அறிவியலுக்கு மாற்றான பிரசாரங்கள்

அறிவியலை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான அடிப்படைக் கல்வி நிலையங்களே இன்று பிற்போக்குவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பள்ளிக்கூடப் புத்தகங்களில் வலதுசாரி, இந்துத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. வேத கலாசாரமும், இந்துத் தத்துவங்களும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போற்றப்படுகின்றன.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்காக கர்நாடக அரசு குழு ஒன்று அமைத்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியானது. குழு வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இவை:-

பள்ளிப் பாடத்திட்டங்களில் மனுஸ்மிருதியைச் சேர்க்க வேண்டும். பிதாகாரஸ் தேற்றம் மற்றும் புவி ஈர்ப்பு குறித்து நியூட்டன் கூறிய விஷயங்கள் அனைத்தும் பொய். பிரசாரத்திற்காகத் தயாரிக்கப்பட்டவை. வேத காலத்துக் கணிதப் புத்தகத்திலேயே மேற்கூறிய அறிவியல் எல்லாம் இருந்தது. அதற்குச் சான்று கூகுளில் தேடினாலே கிடைக்கும். மேலும் புராணக் கதைகளில் இடம்பெற்றிருந்த வேதகாலப் புவி அமைப்பு பற்றிய அறிவும் புவிவியல் பாடங்களில் சேர்க்கப்படும்.

மேலே கூறிய விஷயங்கள் உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் இதுதான் இன்றைய இந்தியாவின் உண்மை முகமாக மாறி வருகிறது. இத்தகைய கருத்துகள் நம் எதிர்காலத் தலைமுறையினரின் அறிவியல் பார்வையை மழுங்கடிப்பது மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்குமே பெரும் கேடு விளைவிக்கும் என்பதுதான் உண்மை.

இது ஒருபுறம் என்றால் மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையைப் புகட்ட வேண்டிய அரசு நிறுவனங்களும், அறிவியல் ஆளுமைகளும் எப்படி அறிவியலைத் திரிக்கின்றனர் என்பதற்கு வேறு சில உதாரணங்கள் இருக்கின்றன.

இன்றைக்கு நாம் எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை எடுத்துகொண்டாலும் அது இந்தியப் புராணத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதாக, வேதத்தில் அதற்கான சூத்திரங்கள் சொல்லப்பட்டிருப்பதாகத் தவறான கண்னோட்டம் கட்டமைக்கப்படுகிறது. பழம் பெருமையை அறிவியல் பார்வையுடன் இணைத்து வாட்ஸ்ஆப்பில் பல்கலைக்கழகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்திய அறிவியல் சங்கம் நடத்தும் கூட்டங்களில்கூட பிற்போக்குத்தனமான கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் சங்கக் கூட்டத்தில் பேசிய ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி நாகேஷ்வரராவ், மகாபாரதத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருந்து 100 கெளரவர்கள் பிறந்ததற்கு ஸ்டெம் செல் தொழில்நுட்பமே காரணம் எனக் கூறுகிறார். அதேபோல விஷ்ணுவின் கையில் இருந்தவை ஏவுகணைகள்தான் என்றும், ராவணன் 24 வகையான போர் விமானங்களையும், விமான நிலையங்களையும் வைத்திருந்தான் எனவும் பிதற்றுகிறார்.

அதே கூட்டத்தில் கூட்டத்தில் கடவுள் பிரம்மாதான் இந்தப் பூமியில் டைனோசர்கள் இருப்பதை முதலில் ஆவணம் செய்திருக்கிறார் என்ற ஒரு கூற்றும் முன்வைக்கப்படுகிறது. 2018ம் ஆண்டு திரிபுராவின் அப்போதைய முதல்வர் பிப்லாப் குமார் டெப், மகாபாரத காலத்திலேயே இணையமும், செயற்கைகோள்களும் இருந்ததாகக் கூறுகிறார்.

முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ஹர்ஷ வர்தன், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி இந்து வேதங்களில் இருப்பதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்கே பாராட்டி இருப்பதாக அறிவியல் சங்க கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதேபோல் டார்வின் கோட்பாடு தவறு என்றும், யாகம் செய்தால் பூமி சுத்தமாகும் என்று பல அரசியல் தலைவர்களும் பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கிறதா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை.

இவற்றுக்கு எல்லாம் மேலாக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, இந்துக்களின் கடவுளான விநாயகரின் கதை, இந்தியாவில் வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய அறிவு இருந்தது என்பதற்கு ஆதாரம் என உரையாற்றுகிறார். கல்வியறிவு இல்லாத ஒரு சாமானியர் இப்படிச் சொன்னால் அது கவலைக்குரிய விஷயமல்ல. ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் இப்படிப் பேசுவது கவலைப்பட வேண்டிய விஷயமாகும். நாட்டின் பிரதமர் ஒரு விஷயத்தை கூறும்போது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டுக் கட்டமைப்பின் ஊடாகவும் அந்தச் செய்தி சென்றடைகிறது.

நமது கடந்தகாலச் சாதனைகள் குறித்து பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைப் புனிதப்படுத்தியும் மிகைப்படுத்தியும் பேசுவது இன்று நாகரிகமாகிவிட்டது. இவ்வாறு பொய்யான கூற்றுகளை முன்வைப்பதன் மூலம், நாம் நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம். மேலும் நமது உண்மையான சாதனைகளின் நம்பகத்தன்மையை மறுக்கிறோம், கொச்சைப்படுத்துகிறோம்.

அறிவியல் மனப்பான்மையும் சமூக நீதியும்

அறிஞர்கள் அறிவியல் மனோபான்மையை வளர்த்தெடுப்பதற்கான முன்னெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்குக் காரணம் நம் நாட்டில் அறிவியல் மனோபாவம் வளராமல் சமூகநீதி என்பது சாத்தியமில்லை என்பதால்தான்.

1946ஆம் ஆண்டு அறிவியல் மனோபான்மை பற்றி நேரு எழுதிய விஷயங்கள்தான் 1958இல் அறிவியல் கொள்கைத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அடிப்படையாக இருந்தது. அந்தத் தீர்மானத்தை நேரு நாடாளுமன்றத்தில் வாசித்தபோது அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். அந்தத் தீர்மானம் அடுத்த 60 ஆண்டுகளில் இந்தியர்களின் அறிவியல் ஞானம் மற்றும் அறிவியல் மனநிலையை மேம்படுத்துவதில் மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை; சமூக நீதியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.

நேருவின் அறிவியல் மனோபான்மை குறித்த கொள்கையும், அம்பேத்கரின் சமூக நீதி குறித்த சட்டதிட்டங்களும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவை கோருபவை. அறிவியல் புரிதல் இல்லாமல் சமூக நீதி என்பது சாத்தியமில்லை. அறிவியல் என்பது வெறும் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மட்டும் அல்ல. நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு பகுந்தறிந்து புரிந்துகொண்டால் மட்டுமே மனித ஏற்றத்தாழ்வு, சமூக நீதி குறித்த புரிதலை பெற முடியும். சமூக நீதியை எட்டுவதற்கு தடையாக இருக்கும் மதங்களையும், சாதி ஏற்றத்தாழ்வையும் ஒழிப்பதற்கு அறிவியல் பார்வை அவசியத்திலும் அவசியம்.

அறிவியல் என்பது அரசியல்

இந்திய மக்களிடையே நிலவி வரும் அறிவியல் மனப்பான்மையை ஒழித்து 5000 வருடங்களுக்கு பின்னான வேதங்களில் இருந்து அறிவியல், பொருளாதார கொள்கைகளை வகுக்க ஆளும் மத்திய அரசு தீவிர முன்னெடுப்பை எடுத்து வருகிறது. அதிகாரத்தின் பார்வையே அறிவியலுக்கு புறம்பாக இருக்கும்போது நாம் அவற்றிருக்கு எதிராகத் திரள்வது அவசியமாகும்.

அதிகார வர்க்கத்தின் போலி அறிவியல் கருத்துகளுக்கு மக்கள் செவி சாய்ப்பதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் அறிவியல் சென்றடையவில்லை என்பதுதான் காரணம். தேசத்தின் சந்து, பொந்துகளில் எல்லாம் அறிவியல் சென்றடைய வேண்டும் என்றால் வெறும் ஊடகங்கள் மட்டும் போதாது, ஊடகவியலாளர்களுடன் அறிவியல் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம்.

இன்றைய செய்தித்தாள்களைப் புரட்டும்போது அதிகாரத்தின் அழுத்தத்தின் காரணமாக அறிவியலுக்கு குறைவான முக்கியத்துவமே தரப்படுவதைக் காண்கிறோம். இதுகுறித்து பத்திரிகையாளர் வாங்கேம் கூறும்போது, இன்றைய முன்னணிப் பத்திரிகைகளில் கோயில்களைப் பற்றிய செய்திகளும், மசூதிகளைப் பற்றிய செய்திகளுமே நிறைந்திருக்கின்றன. அறிவியலுக்கான இடம் ஒரு மூலையில் கூட இல்லை எனக் குற்றம்சாட்டுகிறார். மேலும் அறிவியல் கருத்துகள் பள்ளி, கல்லூரிப் பாடத்திடங்களில் மட்டும் இடம்பெறுபவையாக இருக்கும் நிலை மாற வேண்டும். எளிய மொழியில் அறிவியல் அனைவரையும் சென்றடையும்போது தானாகவே மக்கள் பிற்போக்குக் கருத்துகளில் இருந்து விடுதலையடைந்து உண்மையைத் தேட முனைவர்.

முடிவாக, அறிவியல் ஞானத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அறிவியல் மனோபான்மையை மக்களிடம் வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைச் செயற்பாட்டாளர்கள் உணர வேண்டும். அறிவியல் மனோபான்மையை உருவாக்குவது என்பது அரசியல் செயல்திட்டத்தோடு அணுக வேண்டிய முறையாகும். உண்மையில் நேரு கண்ட கனவின்படி நாட்டில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது.

அறிவியல் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சமூக மாற்றம் ஏற்படும். அதற்கு அறிவயலைத் தடை செய்யும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேற்கூறிய மாற்றங்கள் நிகழ்ந்ததால்தான் இந்தியாவின் வளர்ச்சி அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியாக இருக்க முடியும். அனைத்துத் தரப்பினருக்கான வளர்ச்சியே இந்தியாவை உண்மையான வளர்ந்த நாடாக மாற்றும்.

0

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *