Skip to content
Home » பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் 1500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. உண்மையான எண்ணிக்கை இன்றுவரை தெரியவில்லை. இந்தியர்களை மட்டுமல்ல, பிரிட்டனைச் சேர்ந்த பலரையும்கூட இச்சம்பவம் உலுக்கியெடுத்தது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட 12 வயது பகத் சிங் ஆங்கிலேயர்களைப் பழி வாங்குவேன் என்று சபதம் மேற்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த பகத் சிங், கல்லூரியில் சேர்ந்தவுடன் தன்னுடன் ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரைச் சேர்த்துக்கொண்டார். அவர்களை வைத்து ‘நவ்ஜவான் பாரத சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார். இந்துஸ்தான் குடியுரிமைச் சங்கம் என்ற தீவிரவாத அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த அமைப்பில் செயல்பட்ட முக்கிய சுதந்திரப் போராளிகள், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆசாத் மற்றும் அஸஃபுல்லா கான்.

இதற்கிடையில் இந்திய அரசியல் நிலை குறித்து அறிய சைமன் கமிஷன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓர் இந்தியர்கூட உறுப்பினராக இல்லாத காரணத்தினால் லாலா லஜபதி ராய் அவர்களின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அடக்குவதற்காக போலீஸ் தடியடி நடத்தியது. இந்தத் தடியடியில், லஜபதி ராய் தீவிரமாகத் தாக்கப்பட்டுப் பின்னர் இறந்தார். அவர் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமான போலிஸ் சூப்பரிண்டன்ட் ஸ்காட்டைப் பழி வாங்க பகத் சிங் மற்றும் அவனது நண்பர்களான ராஜகுரு, சுகதேவ் மூவரும் திட்டம் தீட்டினர். ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்காட்டிற்குப் பதிலாக துணை சூப்பரிண்டன்ட் சாண்டர்ஸ் கொல்லப்பட்டான்.

சாண்டர்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க போலிஸ் லாகூரில் சல்லடை போட்டுத் தேடியது. எனவே பகத் சிங்கும், ராஜகுருவும் லாகூரை விட்டுக் கல்கத்தாவிற்குத் தப்பித்துச் செல்லத் தீர்மானித்தனர். இதில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் இந்துஸ்தான் குடியுரிமை இயக்கத்தைச் சேர்ந்த பெண் போராளியான துர்காவதி தேவி (பகவதி சரண் வோரா என்ற போராளியின் மனைவி). இவர்கள் மூவரும் சந்தேகம் வராத வகையில் மாறுவேடம் பூண்டு ரயிலில் லாகூரை விட்டு ஹவுரா சென்றனர். பின்னர் சில நாட்களில் லாகூர் திரும்பினார் பகத் சிங்.

பஞ்சாப் மாகாணச் சட்டசபையில் இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து பகத் சிங் மற்றும் அவர் கூட்டாளி பத்கேஷ்வர் தத், சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர் கூண்டிலிருந்து கையெறிக் குண்டுகளை வீசி எரிந்தனர். பின்னர் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைச் சட்டசபையில் வீசினர்.

பகத் சிங் மற்றும் பத்கேஷ்வர் தத் சட்டசபையில் கையெறிக்குண்டுகளை வீசி யாருக்கும் உயிரிழப்பையோ, சேதத்தையோ ஏற்படுத்தவில்லை. குண்டு எறியப்பட்டவுடன் ஏற்பட்ட சலசலப்பிலும், கூச்சலிலும் அவர்கள் தப்பித்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை, மாறாக தாமாக முன்வந்து போலிசாரிடம் சரணடைந்தனர். பகத் சிங் மற்றும் தத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதன் விசாரணையின் முடிவில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையில் இந்துஸ்தான் குடியுரிமைச் சங்கத்தின் குண்டு தயார் செய்யும் தொழிற்சாலையை மோப்பம் பிடித்துக் கண்டறிந்த காவல்துறை, அந்த இயக்கத்தைச் சேர்ந்த முக்கியப் போராளிகள் (சுகதேவ் உட்பட) அனைவரையும் கைது செய்தது. விசாரணையின்போது சாண்டர்ஸ் கொலை வழக்கில் ஈடுபட்டது பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் என்று தெரியவந்தது. இதன் காரணமாக பகத் சிங் மீண்டும் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையிலிருந்து மியான்வாளி (இன்று பாகிஸ்தானில் உள்ளது) சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் ஆங்கிலேயக் கைதிகளுக்குப் பிரத்தியேக உணவும், இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை, சுகாதாரம் என அனைத்திலும் இந்தியக் கைதிகளுக்குப் பாரபட்சம் காட்டப்பட்டது. இந்தியக் கைதிகள் சிறையில் மிகவும் மோசமாகவும், கொடுமையாகவும் நடத்தப்பட்டனர். பகத் சிங் போன்ற அரசியல் குற்றம் புரிந்தவர்களுக்கு, சிறை விதிகளுக்கு மாறாகக் கடுமையான வேலைகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் எதிர்க்கும் விதமாக பகத் சிங் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

பகத் சிங் சிறையில் மேற்கொண்ட சாகும்வரை உண்ணாவிரதம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜவாஹர்லால் நேரு, பகத் சிங்கைச் சிறையில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். முகமது அலி ஜின்னா, பகத் சிங்கின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தந்து பேசினார்.

பகத் சிங்குடன் சேர்ந்து அவன் கூட்டாளிகள் பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராளிகளின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்காகக் காவலர்கள் பல யுக்திகளைக் கையாண்டனர். எதுவும் எடுபடாது போகவே போராளிகளுக்கு வலுக்கட்டாயமாக வாயில் உணவைத் திணித்தனர். ஆனால் போராளிகளின் மன உறுதியை அசைக்க முடியவில்லை.

இளைஞர்களின் போராட்டம் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. அரசாங்கத்தின் மீது மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதை உணர்ந்த வைசிராய் இர்வின், பகத் சிங் மற்றும் அவர் கூட்டாளிகளின்மீது தொடுக்கப்பட்ட சாண்டர்சன் கொலை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டார். உண்ணாவிரதம் இருந்ததால் பகத் சிங்கின் உடல் நிலை மோசமாக இருந்தது. பகத் சிங் விசாரணைக்காக ஸ்ட்ரெட்சரில் தூக்கி வரப்பட்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜதின்தாஸ் என்ற இளைஞன் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தார். இது நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் அரசாங்கம் போராளிகளின் பல கோரிக்கைகளை ஏற்றது. ஆனால் சுதந்திரப் போராளிகளை அரசியல் கைதிகளாகக் கருத மறுத்துவிட்டது. பகத் சிங் தன் உண்ணாவிரதத்தை மேலும் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியும், பகத் சிங்கின் தந்தையும் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்கி பகத் சிங் தன்னுடைய உண்ணாவிரதத்தை 116 நாள்கள் கழித்து கைவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையில் கவனம் செலுத்தினார்.

விசாரணையின்போது போராளிகளில் ஒருவரான ஜெய் கோபால் எட்டப்பனாக மாறினார். இதைப் பொறுக்கமாட்டாது குற்றவாளியான பிரேம் தத் வர்மா ஜெய்கோபால் மீது செருப்பைக் கழட்டி வீசினார். இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரது கைகளுக்கும் விலங்கிட உத்தரவிட்டது. பகத் சிங்கும் கூட்டாளிகளும் தங்கள் கைகளுக்கு விலங்கிட ஒத்துழைக்கவில்லை. இதனால் காவல்துறை அவர்கள்மீது தடியடி நடத்தி, கொடூரத் தாக்குதல் புரிந்தது. இதன் காரணமாக போராளிகள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுத்துவிட்டனர்.

வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வைசிராய் இர்வின், பிரத்யேக தீர்ப்பாயத்தை நிறுவினார். குற்றவாளிகள் இல்லாமலே வழக்கு விசாரணை நடைபெற்று, தீர்ப்பும் வழங்கப்பட்டது. 27 போராளிகளில் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் சிறை தண்டனை. மூவருகுக விடுதலை. தீர்ப்பை எதிர்த்து ப்ரிவி கவுன்சிலில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரயோஜனம் இல்லை. இறுதியாக தூக்கு தண்டனைக் கைதிகள் மூவருக்கும், ரகசியமாக தூக்கு நிறைவேற்றப்பட்டது. சிறையின் சுவற்றை உடைத்து மூவரின் சடலங்களும் இரவு நேரத்தில் ரகசியமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. சட்லஜ் நதிக் கரையோரம், ஆள் அரவரமற்ற நேரத்தில் போராளிகளின் சடலங்கள் கோடாரியால் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் நதியில் வீசப்பட்டன.

இப்படி வரலாறு நெடுகிலும் பல இந்தியப் போராளிகளை அழிக்கமுடிந்ததே தவிர, போராட்டங்களை பிரிட்டனால் அடக்கமுடியவில்லை. அநீதியான ஆட்சியை நாளடைவில் முடிவுக்குக் கொண்டுவந்தது காலம். இயற்கை நீதி வென்றது.

0

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

2 thoughts on “பகத் சிங்கும் தோழர்களும்”

    1. சொக்கலிங்கம். எஸ். பி.

      காந்தி அஹிம்சை முறையில் போராடினார். அதில் பல தலைவர்களுக்கும், போராளிகளுக்கும் உடன்பாடு இல்லை. அதனால் அப்போதைய காங்கிரஸ் மிதவாதம் மற்றும் தீவிரவாதம் என்று இரண்டாக பிளவுப்பட்டது.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *