நவம்பர் 1909இல் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது காந்தி எழுதிய நூல், ‘ஹிந்த் ஸ்வராஜ்’. இன்றும் புகழ் வாய்ந்ததாகவும் விரிவான விவாதத் திறப்புகளை தன்னளவில் கொண்ட படைப்பாகவும் இது திகழ்கிறது.
கப்பலில் செல்லும்போதுகூடத் தனது அன்றாட வேலைகளை விடாது செய்பவர் காந்தி. லியோ டால்ஸ்டாயின் ‘இந்துவுக்கு ஓர் கடிதம்’ (A Letter to a Hindu) எனும் படைப்பை அப்போது குஜராத்தியில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார் காந்தி. தாரக் நாத் தாஸ் எனும் இளைஞருக்கு டால்ஸ்டாய் எழுதிய பதில் கடிதம் அது. தாரக் நாத் தாஸ் வான்கூரில் வசித்தவர். ‘ஃப்ரி இந்துஸ்தான்’ என்னும் புரட்சிகர பத்திரிகையை நடத்தி வந்தவர்.
பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறியும் உரிமை இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதையும் அதற்காக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி அவசியமாகிறது என்கிற வாதத்தையும் முன்வைத்து தாஸ் எழுதிய கடிதத்துக்கு டால்ஸ்டாய் விரிவான பதில் எழுதியிருந்தார். ‘வியாபாரி ஒயின் விற்கிறார் என்பதற்காக அதை வாங்கிக் குடித்துவிட்டு வியாபாரியை மட்டும் குறை சொல்வது ஏற்கத்தகுந்ததா? தங்களை அடிமையாக்கும் சூழலை இந்தியர்களே உருவாக்கிக்கொண்டனர். ஆயுதங்களைவிடவும் சிறந்த கருவி ஒத்துழையாமையே’ என்று அந்த இந்துவுக்கு டால்ஸ்டாய் எழுதியிருந்தார்.
இதைப் படித்த காந்தியால் எப்படி அதனை ஏற்காமல், கொண்டாடாமல் இருக்கமுடியும்? அதனை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான அனுமதி கோரி டால்ஸ்டாய்க்கு எழுதியிருந்தார். டால்ஸ்டாய் தனது கடிதத்தில் மறுபிறப்பு (ரீஇன்கார்னேஷன்) குறித்து சில வரிகள் எழுதியிருப்பார். அந்த வரிகளை மட்டும் விலக்கிவிட்டு வெளியிடுகிறேன் என்று காந்தி தனது கடிதத்தில் எழுதியிருந்தார். அந்தப் பதம் அப்படியே இருக்கலாம் என்பதுதான் டால்ஸ்டாயின் நிலைப்பாடு என்றாலும் காந்தியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.
ஒரு பக்கம் டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பு. இன்னொரு பக்கம் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ எழுத்துப்பணி. இரண்டையும் கப்பலில் பயணம் செய்துகொண்டே தொடர்ந்து கொண்டிருந்தார் காந்தி. ஒன்பதே நாட்களில், தனது கையெழுத்தில் 271 பக்க அளவில் (அச்சில் 70-80 பக்கங்கள்) புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். வலது கை வலிக்கும்போது இடது கையால் எழுதினார். இவ்வாறு சுமார் 50 பக்கங்களாவது இடது கையில் எழுதியிருப்பார்.
இந்தப் புத்தகத்தை ஒரு வகையான ‘நீண்ட உரையாடல்’ என்று அழைக்கலாம். தன் மனதில் அலைமோதிய பல விவாதங்களை பதிவு செய்து, அலசியதன்மூலம் காந்தி தெளிவு பெற்றார். வன்முறை வழி உகந்தது தானா? மேற்கு நாகரிகமும் கிழக்கு நாகரிகமும் சந்திக்குமா? அப்படி ஒரு சந்திப்புப் புள்ளி வரலாற்றில் இருந்திருக்கிறதா? இந்தியா போன்ற கிழக்கு நாடுகள் முன்னேறுவதற்கு மேற்கின் பொருளாயத நாகரிக முறை மட்டும்தான் உகந்ததா? மேற்கு நாகரிகத்தில் தீமைகளே இல்லையா? வாருங்கள், விவாதிப்போம் என்று காந்தி அதில் அழைத்திருப்பார்.
காந்திக்கு இந்திய மூலங்களிலும் மாற்று உரையாடல்களை முன்வைக்கும் மரபுகளிலும் நாட்டம் இருந்தது. இவற்றைத் தன் சிந்தனைக்கான முன் தேவைகளாக அவர் எடுத்துக்கொண்டார். மேற்கத்தியத் தாக்கங்களுக்கு உள்ளான இந்தியர்களிடம் அவர் உரையாடவேண்டியிருந்தது. மேற்குதான் உலகின் நாகரிகத் திறப்பிற்கான வழி. மற்றவர்களை நாகரிகமானவர்களாக மாற்றும் இறைக் கடமையும் அதிகாரமும் அவர்களுக்கே உரியது என்னும் வாதத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
லண்டன் ’இந்தியா இல்லம்’ வாழ் மாணவர்கள், ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா என்பவரின் பொருளாதார ஆதரவில், சாவர்க்கரின் உணர்ச்சியூட்டும் தேச பக்தி பரப்புரைகளில் மூழ்கியிருந்தனர். அவர்களில் ஒருவரான மதன்லால் திங்ரா பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த சர் கர்சன் வைலி என்பவரை ஜூலை 1909இல் படுகொலை செய்திருந்தார். காந்தி லண்டன் வந்திருந்த நேரம் அது. வழக்கு முடிந்து ஒரே மாதத்தில் திங்ரா தூக்கில் ஏற்றப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியாகிறார்.
காந்தியைப் பொறுத்தவரை திங்ரா அப்பாவி. செய்வதன் தன்மையை அறியாமல் தவறான செயலுக்குத் தன் உடலை அர்ப்பணித்தவர். அவரை அந்த வெறித்தனமான மயக்கத்தில் ஆழ்த்தியது எது என்பதே காந்திக்கு முக்கியமானதாக இருந்தது. மாணவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்களை விதைத்து அவர்களை வசப்படுத்தும் சிந்தனைகளுடன் அவர் உரையாட முயற்சித்தார்.
காந்தியும் சாவர்க்கரும் இணைந்து ஒரு கூட்டத்தில் பேச வேண்டிய சூழல் ஒரு தசரா விழாவின்போது (அக்டோபர் 24, 1909) உருவானது. காந்தி ராமனின் கல்யாண குணங்களை வர்ணித்து, ராவண வீழ்ச்சி சாத்தியமானதை உயர்த்திப் பிடிக்கிறார். கடமை, நிதானம், பொறுமை, அஞ்சாமை, அமைதி, கனிவு ஆகிய ராமனின் குணங்களை வரித்துக்கொண்டு பிரிட்டிஷ் வீழ்ச்சியை உருவாக்க முயற்சிப்போம் என்கிறார். சாவர்க்கரோ, தசரா நாட்கள் பத்து கரங்களிலும் ஆயுதம் ஏந்திய துர்க்கைக்கானது. மீட்சி துர்க்கா வழியில்தான் சாத்தியம் என்றார். வன்முறை வழியா, துன்பங்களுக்கு அஞ்சாமல் அமைதி வழியில் உறுதியாக நிற்கும் அகிம்சை வழியா? இதை விவாதிக்கவேண்டிய அவசியத்தை காந்தி உணர்ந்தார்.
ஒருமுறை நண்பர்கள் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்காக காந்தி லண்டன் சென்றிருந்தார். அழைப்பைத் தந்தவர்கள் ‘ஹாம்ப்ஸ்டீட் பீஸ் அண்ட் ஆர்பிரிட்ரேஷன் சொஸைட்டி’ எனும் அமைப்பின் பொறுப்பாளர்கள். தலைப்பு, கிழக்கும் மேற்கும். காந்தியின் மனதில் டால்ஸ்டாயின் இந்துவுக்கு ஒரு கடிதம் ஆழமாகப் பதிந்திருந்தது. தவிரவும் ஜி.கே. செஸ்டர்டனின் பதிவையும் அவர் படித்திருந்தார். இந்தியன் சோஷியாலஜி பத்திரிகையை ஹெர்பர்ட் ஸ்பென்சர் செல்வாக்கில் ஷ்யாம்ஜி என்பவர் நடத்திக்கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகை எழுத்துகளைப் பார்த்து அந்த இந்தியர்களின் புரிதலுக்கு எதிர்வினையைத்தான் செஸ்டர்டன் தன் கட்டுரை ஒன்றில் தந்திருந்தார்.
செஸ்டர்டன் கட்டுரை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி லண்டன் இதழில் 1909 செப்டெம்பரில் வந்திருந்தது. காந்தி அதை முழுமையாகப் படித்தார். செஸ்டர்டனின் பார்வை இது.
‘இந்தியர்கள் தங்களுக்கு விடுதலை வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். ஆனால் சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாமலேயே கேட்கிறார்கள். இந்தியர்கள் தேசியம் பேசுகிறார்கள். ஆனால் இந்திய தேசியத்தின் பலகீனம் என்னவென்றால் அதில் இந்தியனும் இல்லை தேசியமும் இல்லை.
‘அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரிடம் அவர்கள் என்ன கோருகிறார்கள்? நீங்கள் ஏற்படுத்திய நிறுவனங்களை எங்களிடம் தாருங்கள். நாங்கள் மந்திரியாகிறோம், பிரதமர் ஆகிறோம் என்கிறார்கள். எங்கள் பட்ஜெட்டை நாங்கள் போடும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.
‘மாறாக, இந்தியர்கள் சொல்லவேண்டியது என்ன? இந்தியா வெள்ளையர்களிடமிருந்தும் அவர்கள் செயல்பாடுகளிலிருந்தும் விலகியிருக்கவேண்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக விரும்புகிறேம். எல்லா அமைப்புகளிலும் குறை இருக்கும். எங்களுடையதிலும் இருக்கிறது; பரவாயில்லை இருக்கட்டும். எங்களிடம் வாரிசுப் போர்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் மருத்துவமனையில் சாவதைவிடப் போரில் மரணடைவதை நாங்கள் விரும்புகிறோம். கொடுங்கோல் மன்னர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் உணவில், எங்கள் குழந்தைகள் வாழ்வில் குறுக்கிடும் பல மன்னர்களுக்குப் பதில் அரிதாகவே தோன்றும் எங்கள் ஒரே மன்னர் எவ்வளவோ பரவாயில்லை. எங்களுக்கு மதம் முக்கியம்தான். எங்கள் வழியில் நாங்கள் செல்கிறோம். எங்களை விட்டுவிலகுங்கள்.’
இந்தக் கட்டுரையின் சாரத்தை காந்தி உள்வாங்கியிருந்தார். நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தனது நம்பிக்கையை காந்தி தெளிவாகப் பிரகடனப்படுத்தினார். கிழக்கும் மேற்கும் சந்திக்க முடியாதவையல்ல. இன்றைய தொழில்நுட்ப சமூகத்திற்கு முன்பிருந்த மேற்கு கிழக்கைப்போல்தான் இருந்தது. நவீனத்துவ நாகரிகத்தின் தீமைகளிலிருந்து மேற்கு தன்னை மீட்டுக்கொண்டால் கிழக்குடன் அது கைகுலுக்குவது சாத்தியமே. பொருளாயத நலன்களால் மானுட நெறி வளர்ச்சியை உருவாக்க இயலாது. பிரிட்டிஷாரிடம் கடந்த 50 ஆண்டுகளாகக் கற்றுக்கொண்ட சிலவற்றை அகற்றினால் இந்தியாவுக்கு மீட்சி சாத்தியம்.
இதுதான் காந்தியின் எளிய நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் காந்தி ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலை எழுதினார். அந்த நம்பிக்கை இன்னமும் உயிர்த்திருக்கிறது.
0