Skip to content
Home » நமக்கான இந்தியா

நமக்கான இந்தியா

நமக்கான இந்தியா

இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, குறிப்பாக, சுதந்தரம் பெறப் போராடிய காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது திகைப்பு அதிகரிக்கிறது. ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை / கண்ணீரால் காத்தோம் சர்வேசா கருகத் திருவுளமோ‘ என்ற மகாகவி பாரதியின் வரிகள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

சுதந்தரம் பெறுவதற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகங்களை நாம் இன்று நினைவில் வைத்திருக்கிறோமா? பெற்ற சுதந்தரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா?

நான் பலரிடம் சுதந்தரப் போராட்டம் பற்றிய கேள்விகளைக் கேட்பதுண்டு. நூறாண்டுகளைக் கடந்துவிட்ட கதார் இயக்கம் குறித்துப் பெரும்பாலோர் அறியவில்லை என்பது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுதந்தரம் பெறுவதற்குச் சற்று முன்பு, 1946 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ராயல் நேவி கப்பல் படை எழுச்சி குறித்தும் பெரும்பாலோர் அறியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. வேறு வழியின்றி நமக்குச் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு பிரிட்டிஷ் பேரரசு தள்ளப்பட்டதில் இந்த எழுச்சிக்குப் பெரும் பங்கு உண்டு.

பிரிட்டிஷ் அரசு சுலபத்தில் இங்கிருந்து கிளம்பிவிடவில்லை. 1857 முதல் சுதந்தரப் போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்ப் புரட்சியைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டு இந்து முஸ்லிம் பிரிவினையைத் திட்டமிட்டுப் புகுத்தியது. இறுதியில் அது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையில் முடிந்தது.

சமஸ்தானங்கள் எங்கு வேண்டுமானாலும் இணையலாம் அல்லது இணையாமலே இருக்கலாம் என்றும் கொளுத்திப் போட்டது. அது மட்டுமின்றி, புதிதாக உருவாகும் குடியரசு நிலைக்காமல் இருப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டுதான் பிரிட்டன் வெளியேறியது. இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியா என்ற குடியரசு தம்மை நிலைப்படுத்திக் கொண்டு 75 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. மதத்தின் அடிப்படையில் தம்மைப் பிரித்துக் கொண்ட பாகிஸ்தானும் மியான்மரும் என்ன பாடுபடுகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த வகையில், கண்ணீரும், செந்நீரும் சிந்தி, ஏராளமானோரின் உயிரைத் தியாகம் செய்து பெற்ற சுதந்தரம் 75 ஆண்டுகளைக் கடந்திருப்பது என்பது நிச்சயமாக நாம் அனைவரும் இந்தியர்களாகப் பெருமைப்பட வேண்டிய விஷயம். அதே சமயத்தில், சுதந்தரப் போராட்டத் தலைவர்கள் கனவு கண்ட இந்தியாவை நாம் உருவாக்கியிருக்கிறோமா என்பதையும் சுய பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது.

0

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி 77 நிமிடங்களுக்கொரு பெண் சித்திரவதைக்கு ஆளாகிறாள், ஆறு மணி நேரத்துக்கொரு பெண் உயிருடன் கொளுத்தப்படுகிறாள் அல்லது அடித்தே கொல்லப்படுகிறாள்.

திருமணமான நூறு பெண்களில் 20 பேர் கணவனாலோ அவனுடைய குடும்பத்தினராலோ தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். 47 நிமிடங்களுக்கொரு பெண் பாலியல் குற்றத்துக்குப் பலியாகிறார். சராசரியாக பெண் தொழிலாளர்களில் 96 விழுக்காட்டினர் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் குழந்தைகள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது. இவற்றில் பல வெளிச்சத்துக்கே வருவதில்லை.

சுதந்தரப் போராட்ட காலத்தில் சில சமூகச் சீர்திருத்தவாதிகள், தலித்துகளுக்கு உண்மையான விடுதலை கிடைத்தால் மட்டுமே விடுதலை. அது இல்லாமல் விடுதலை என்பது சாத்தியமில்லை என்று கூறியபோது பலரும் கொதித்தார்கள். இந்தச் செய்திகளைப் பாருங்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 386 ஊராட்சிகளில் செய்த ஓர் ஆய்வில் தலித் ஊராட்சித் தலைவர்களைப் பணி செய்யவிடாமல் தடுப்பதோடு, வார்த்தைகளால் இழிவுபடுத்துவதில் தொடங்கி கொடூரமான தாக்குதல்கள் வரை நடைபெற்றுள்ளன. ஊர்வாரியாக அது அறிக்கை கொடுத்துள்ளது.

கடந்த சுதந்தர தினத்தில் 20 ஊராட்சிகளில் தேசியக் கொடியைத் தலித் ஊராட்சித் தலைவர்களால் ஏற்ற முடியவில்லை. சில இடங்களில் ஏற்றினாலும் மற்ற பிரிவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். 42 ஊராட்சிகளில் தலைவர் பெயரைப் பெயர்ப்பலகையில் எழுத முடியவில்லை. சில இடங்களில் பெயர்ப்பலகையே வைக்கவிடவில்லை. நாற்காலியில் இயல்பாக அமரும் உரிமைகூட தலித்துகளுக்கு மறுக்கப்படுகிறது.

19 வகையான தீண்டாமை வடிவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலில் இடம்பெறாத வடிவங்களும் உள்ளன. சாதி ஆணவப் படுகொலைகள் ஒரு பக்கம் அச்சமூட்டுகின்றன என்றால் இன்னொரு பக்கம் தலித் சமைத்த உணவை உண்ணமாட்டோம் என்று போராட்டங்கள் நடக்கின்றன. வட மாநிலங்களில் இந்த நிலை இன்னும் மோசம்.

2021 உலகப் பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் இருக்கிறது. இப்போது இந்தியா வறுமை நிலை பற்றிய குறியீட்டைக் கொடுக்கவேயில்லை. வேகமாக வளரும் பொருளாதாரங்களில் 2014இல் 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2020இல் 164ஆம் இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தியாவின் கடன் நிலைமை 140 லட்சம் கோடிகளாக உள்ளது. இது மிகவும் அபாயகரமான போக்கு.

கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கானோர் பொருளாதார நிலையினாலும், கரோனா பாதிப்பாலும் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு எண்ணற்றோர் வேலையிழந்து தெருவில் நிற்கிறார்கள். அதே வேளையில், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் செல்வம் 57.3 லட்சம் கோடிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளதாக ஆக்ஸ்பாம் அறிக்கை 2021 கூறுகிறது. அதே வருடத்தில் 80% இந்தியக் குடும்பங்களின் வருமானம் சரிந்துள்ளது. பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102இலிருந்து 142 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவின் மோசமான இரண்டாவது அலையில், இந்திய செல்வந்தர் கௌதம் அதானியின் சொத்து மட்டும் எட்டு மடங்கு ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளது. அதே காலத்தில் 4.6 கோடி இந்தியர்கள் தீவீர வறுமையில் விழுந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் 146 நாடுகளில் இந்தியா 136ஆவது இடத்தில் (2022) இருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் 100 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான காலகட்டத்தில் பொருளாதாரம் இருப்பதாகக் கூறுகிறார். வங்கி வட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாபாசாகேப் அம்பேத்கர் அரசியல் சட்டம் நிறைவேறும்போது, ‘வயது வந்த அனைவருக்கும் ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்பது அரசியமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அனைவருக்கும் சமத்துவம் கிடைக்காவிட்டால், மிகவும் பாடுபட்டு உருவாக்கிய இந்த அமைப்பையே மக்கள் நொறுக்கி விடுவார்கள்’ என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.

அந்நிலை ஏற்படாமல் எல்லாரும் சமநிலை பெற்று, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டுமானால் இனம், மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் கடந்து நாம் அனைவரும் இந்தியர்களாக ஒன்றிணையவேண்டும். நமக்கான இந்தியாவை உருவாக்கவேண்டும்.

0

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *