அஜந்தா குகை ஓவியங்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. ‘ஆங்கிலேயர் ஒருவர் இந்தச் சுவர் ஓவியங்களில் சிவற்றைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து தம்முடைய ஊருக்குக் கொண்டு போக முயன்றாராம். வழியிலேயே விபத்து ஏற்பட்டு அந்த ஓவியங்கள் அழிந்து விட்டன’ எனும் தகவலைத் தருகிறார் ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி. (நூல்: நுண்கலைகள்).
இந்தியாவைச் சேர்ந்த கோஹினூர் வைரம் இங்கிலாந்து மகாராணியின் மணிமுடியை அலங்கரிக்கிறது என்கிறார்கள். பிரெஞ்சுப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, வேங்கடரமணர் கோயில் தூண்கள் புதுச்சேரி கடற்கரையை இப்போதும் அலங்கரித்து வருகின்றன. புதுவை அருகே அரிக்கமேட்டில் இருந்து ஆய்வு எனும் பெயரில் ஏராளமான பொருள்கள் கடல் கடந்து சென்றிருக்கின்றன.
பல்லவர் கால பாகூர் செப்பேடு, இப்போது பாரிஸ் நகரத்தில் இருக்கிறது. சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்தில் இருக்கின்றன. வேள்விக்குடி செப்பேடு லண்டனிலும், நாகப்பட்டினம் புத்தர் சிற்பங்கள் ஜப்பானிலும் இருக்கின்றன. இதுமாதிரியான பட்டியல் இன்னமும் நீளும்.
இப்படியாக இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் கலைச் சின்னங்கள் கடல் கடந்து போய் இருக்கின்றன. தொடர்ந்து போய்க்கொண்டும் இருக்கின்றன. இதற்கு அண்மைக்கால காரணகர்த்தர்கள், சுபாஷ் கபூர், தீனதயாளன்.
நமக்கெல்லாம் போர்களும் போர்களின்மூலம் அடிக்கப்பட்ட கொள்ளைகளுமே நினைவில் நிற்கும். ஆனால் இப்படியான சந்தடி இல்லாமல் காலந்தோறும் நடக்கும் களவுகள் குறித்து நாம் எப்போதும் யோசிக்க மாட்டோம்.
இதற்கெல்லாம் முதற் காரணம் யார்? சட்டென்று சொல்லிவிடலாம். உள்ளூர் மக்கள்தான். அவர்களுடைய விழிப்பின்மை அல்லது சட்டவிரோதம் என்று தெரிந்தே கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதுதான் முதல் காரணம்.
அண்மையில் விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில் இருந்து 33 அடி உயரமுள்ள நாயக்கர் கால கல்தூண் ஒன்று ஒரு மாலைப் பொழுதில் அருகிலிருக்கும் இன்னொரு கிராமத்திற்குக் கடத்தப்பட்டது. கனரக வாகனத்தில், பிரம்மாண்டமான கல் தூண், யார் கண்ணிலும் படாமல் பயணமானது எப்படி? இதுதான் எல்லோர் முன்பும் நிற்கும் கேள்வி. நம்முடைய தொடர் அழுத்தத்தின் காரணமாக, கடத்தப்பட்ட கல்தூண் அடுத்த நாளே அதே இடத்திற்கு வந்துவிட்டது வேறு விஷயம். இவ்வாறு வந்து சேர்ந்தவை குறைவு. இன்னமும் வராதவை மிக அதிகம்.
0
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில் 1998இல் மண்ணுக்கு அடியில் இருந்து ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அனைத்தும் பல்லவர் கால சிற்பங்கள். இதுகுறித்து நடன.காசிநாதன், முத்து எத்திராசன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்ட ‘தடயம்’ நூலில் புகைப்படங்களுடன் 2000ஆம் ஆண்டில் பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில் 2011இல் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்படுகிறார். அவரது கேட்டலாகில் தச்சூர் சிற்பங்களில் ஒன்றான முருகன் சிற்பம் இருக்கிறது. இதனைக் கொண்டு விசாரிக்கும்போது அந்தச் சிற்பம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனாலும் இதுநாள் வரை தச்சூர் முருகன் ஊர் திரும்பவில்லை. அமெரிக்காவிலேயே இருக்கிறார். காரணம், இந்தச் சிற்பம் களவு போனது குறித்து இதுநாள் வரையிலும் உள்ளூர் காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் இல்லை; வழக்குப் பதிவும் இல்லை. எதை வைத்து இது எங்களுக்குச் சொந்தமானது என நாம் உரிமை கோருவது?
நம் கலைச்சின்னங்கள் குறித்து நமக்கு அக்கறையும் இல்லை; போதுமான அறிவும் இல்லை என்பதை இந்த இடத்தில் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.‘கோயில்கள் கொள்ளையர் கூடாரம்’ என உரக்கச் சொல்லும் அளவுக்கு, கொள்ளையடிக்கும் அளவுக்கு நம் கலைச் செல்வங்கள் கோவில்களில் நிறைந்திருக்கின்றன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என நமக்கு சொல்லப்படவில்லை. அதனாலேயே அவற்றின் மீது நாம் நம் கவனத்தைச் செலுத்தவில்லை.
கோயில்களில் இருக்கும் சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓவியங்கள் மட்டும் அல்ல; ஆங்காங்கே உதிரியாகக் கிடக்கும் அனைத்து வரலாற்றுச் சின்னங்களும் நம் கடந்த கால வரலாற்றின் இன்றியமையாத பகுதிகள், ஆவணங்கள். இவற்றின் மதிப்பை நம்மைவிட வெளிநாட்டுக்காரர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவை கடல்கடந்து செல்கின்றன. உலோகச் சிலைகளைவிட கலைநயம் மிக்க கற்சிலைகளே பெருமளவில் கடத்தப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கலைச்சின்னங்கள் மட்டும்தான் இப்படி என்று நினைத்துவிடவேண்டாம். நமக்கு அருகிலேயே கிடைக்கும் புராதனப் பொருட்களை என்ன செய்கிறோம்?
விழுப்புரம் அருகே செ.கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச் சின்னங்கள் சில்லுகளாக உடைக்கப்பட்டு இருக்கின்றன. பூவரசங்குப்பம் பகுதியில் இருந்த இதே போன்ற தடயங்கள், மேம்பால வேலைகளுக்காகப் பொதுப்பணித்துறையினராலேயே சிதைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிக்கல் கிராமத்தில் ஈமச் சின்னங்கள் நிறைந்த பகுதி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு மட்டும் அல்ல; அரசு நிர்வாகமும் கூட பொறுப்பின்மையுடன் இருக்கிறது என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு எதையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன போதும் இப்படியான நிலைதான் என்பது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரியது.
வரலாற்றிற்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகம். இன்னும் நாம் கனிஷ்கர், குப்தர் காலங்களிலேயே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றுத்துறை ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இவற்றைப் பிரதி எடுக்கும் ஜெராக்ஸ் மிஷின்களாகவே இருக்கின்றனர். இதன் காரணமாகவே உள்ளூர் வரலாற்றிலிருந்து மக்கள் அந்நியப்பட்டு நிற்கின்றனர். ‘உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது’ எனச் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நெய்வனை கிராமம். இங்கு தேவாரப் பாடல் பெற்றத் தலமான சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு பல்வேறு காலகட்டங்களில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நானூற்றுவன் மலையனான ராசேந்திரச் சோழ சேதிராயர், கிளியூர் மலையமான் விக்கிரமச் சோழ சேதிராயர். இவர்கள் இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர்.
இவர்கள் இருவரதுச் சிற்பங்களும் மேற்காணும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்தத் தகவல் மற்றும் புகைப்படங்கள் சில வரலாற்று நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த (ஜூலை) மாதத்தின் இறுதியில் நான் இக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது இந்தச் சிற்பங்கள் அங்கு இல்லை. விசாரித்த போது, ‘20 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள்’ என்று நிதானமாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கலைநயமிக்க இவ்விரு சிற்பங்களும் கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. யார் எடுத்துப் போனார்கள்? எங்கே போனது? யாருக்கும் தெரியவில்லை.
இந்த சிற்பங்களின் மூல ஆவணங்களான 1967 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் இருக்கின்றன. இவற்றைப் பெற்று வந்த நான், காணாமல்போன சிலைகளைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று 14 ஆகஸ்ட் அன்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.
நம் ஊரில், நமக்கு அருகில் இருக்கும் கலைச் சின்னங்கள் நம்முடைய சொத்து. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை அரசாங்கமும் பொதுமக்களாகிய நாமும் உணர வேண்டும். உணராவிட்டால் நம் கலைச் சின்னங்கள் கடல்கடந்துப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
0