Skip to content
Home » பண்பாடுகளை இணைப்பது எப்படி?

பண்பாடுகளை இணைப்பது எப்படி?

பண்பாடுகளை இணைப்பது எப்படி

கிறித்துவக் கொள்கைகளையும் கண்ணோட்டத்தையும் தமிழ்ப் பண்பாட்டோடு ஒன்றிணைத்த பெருமை வீரமாமுனிவருக்கு உண்டு. இன்றைய தமிழ் உலகில் கிறித்துவம் பெருமைப்பட வேண்டிய உண்மை இது. மொழியளவில், இலக்கிய அளவில், பண்பாட்டு அளவில் கிறித்துவம் தமிழ் மக்களோடு இணைந்த நிலை உருவாக வழிவகுத்தவர் வீரமாமுனிவர்.

கிறித்துவ உலகம் இந்த மண்ணோடும் மக்களோடும் இணைந்திருப்பது தமிழ் மொழி வழியாகத்தான். மேல் நாட்டிலிருந்து வந்த ஒரு சமயக் கலாசாரம் இம்மண்ணில் வேரூன்றி வளர மொழியின் பங்களிப்பு மிக முக்கியம். மொழிச்செறிவு, மொழிவளர்ச்சி இன்றி எந்த ஒரு சமயமோ சமுதாயமோ நீடித்து வாழ்ந்ததாக வரலாறு இல்லை. உலகப் பண்பாட்டுக்குப் பங்களித்ததாகவும் சொல்லமுடியாது. அதனால்தான் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைக் கிறித்துவச் சமூகம் ஆழ்ந்த கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்.

வீரமாமுனிவர் கிறித்துவப் பண்பாட்டுக்கும் தமிழ் உலகுக்கும் இடையே ஒரு பாலம் கட்டியுள்ளார் என்றும் சொல்லலாம். எடுத்துக்காட்டாக அவர் திருக்குறள்பால் கொண்ட ஈடுபாட்டைக் கூறலாம். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று, குறள். அது சமயம் சாராத நூல். இருப்பினும் பல தரப்பினரும் தங்களது சொத்து என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.

வீரமாமுனிவர் மேற்கித்திய நாட்டிலிருந்து இங்கு மறை பரப்ப வந்தவர். உண்மைதான். ஆனால் திருக்குறளைப் படித்துவிட்டு வியந்து அதை லத்தீனில் மொழிபெயர்த்து வத்திக்கானுக்கு அனுப்புகிறார். நான் சொல்ல வேண்டிய கிறித்துவக் கோட்பாடுகளை மிக அழகாக ஏற்கெனவே ஒருவர் தமிழில் செய்துள்ளார் என்று மேலை நாட்டுக்குச் சொல்லுகிறார். மேல் நாட்டுக் கோட்பாட்டை கொண்டுவந்து இங்கு திணிக்கும் எண்ணம் இருந்திருந்தால் திருக்குறளை லத்தீனில் அவர் மொழி பெயர்த்திருக்க மாட்டார். நல்லதொரு பண்பாட்டில் வளர்ந்து, அப்பண்பாட்டில் முதிர்ச்சி பெற்றவரால்தான் மற்ற பண்பாடுகளைப் பாராட்டவும், மதிக்கவும் முடியும். அப்படிப்பட்டவர்கள்தான் பண்பாட்டுப் பரிமாற்றங்களில் பங்களிக்கவும் முடியும்.

லத்தீனுக்கு மொழிபெயர்த்தன்மூலம் முதன் முதலில் திருக்குறளை மேல் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். ஜி.யு. போப், எல்லிஸ் போன்றவர்களெல்லாம் முனிவரின் அடிச்சுவட்டில் வந்தவர்கள்.
திருக்குறள் மேல் வீரமாமுனிவர் வைத்திருந்த மதிப்பை, அவரது ஈடுபாட்டை, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன், ஆகுல நீர பிற’ என்ற குறளுக்கு அவர் எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். (‘தொன்னூல் விளக்கம்’).

அதுபோல வீரமாமுனிவர் அன்னை மரியாள் பேரில் பற்றுடையவர். சூசையும் மரியாளும் நசரேத் என்ற ஊரில் வாழ்ந்த ஒரு சிறு குடிசை எப்படியோ பாதுகாக்கப்பட்டு துருக்கியர் நடத்திய போர்க்காலத்தில் விண்ணகத் தூதர்கள் அதை கிரோவாட்சியாவிற்குத் தூக்கிச்சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து இத்தாலியில் உள்ள லொரேட்டோ நகருக்கு வந்துள்ளதெனவும் கிறித்துவ வரலாறு கூறுகிறது. வீரமாமுனிவர் அந்த மரபை அப்படியே ஏலாக்குறிச்சிக்கு இடம் பெயர்க்கிறார். திருக்காவலூர் கலம்பகம் என்ற நூலை எழுதி அதைத் தமிழ் மரபோடு இணைத்துள்ளார். இது பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

புலம்பெயர் மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குச் செல்லும்போது தங்கள் மொழி, கடவுளர்கள், மரபுக்ககைகள் எல்லாவற்றையும் தங்களோடு எடுத்துச் செல்கின்றனர். அதேபோல், தமிழர்கள் தாங்கள் சென்ற இடத்திற்கெல்லாம் தங்கள் மொழியையும் தங்கள் கடவுளர்களையும், கதைகளையும் எடுத்துச்சென்றனர். அப்படித்தான் வீரமாமுனிவரும் தனது நம்பிக்கை சார்ந்த கதையை இடம் பெயர்த்துள்ளார். இரு வேறு பண்பாடுகளை எவ்வாறு ஒன்றிணைப்பது எனும் கேள்விக்கு வீரமாமுனிவரின் அணுகுமுறை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

0

எந்தவொரு கருத்தாக்கமும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் மத்தியில்தான் தோன்றுகிறது. அந்தப் பண்பாட்டின் சுற்றுச்சூழலில்தான் அது தகவமைத்துக்கொள்கிறது. மற்றொரு பண்பாட்டில் அதே பொருளில் அந்தக் கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எடுத்துக்காட்டாக, காட்சியியலை (தொல்காப்பியம்) ‘பிலாசபி’ என்ற பொருளில் மேற்கத்தியர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே போல தத்துவத்தையோ ‘பிலாசபியையோ’ நமது சொற்களாக நாம் பயன்படுத்தவும் தேவையில்லை.

எனில் என்ன செய்யவேண்டுமென்றால் ஒத்த பணிபுரியும் சொற்களைத் தேடலாம் (Functional Similarity). அதுதான் வெவ்வேறு பண்பாடுகளுக்கிடையே பாலம் கட்டும் வழியாக அமையும். அதாவது ஐரோப்பிய மரபில் ‘பிலாசபி’ என்ன பொருள் கொண்டு பயன்படுகிறதோ அதே பணியைத் தமிழ் மரபில் காட்சியியல் (மெய்யியல்) என்ற சொல் நிறைவு செய்கிறது எனலாம்.

ஆனால் பிலாசபியும் காட்சியியலும் சமன்பாடான சொற்கள் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு கருத்தாக்கத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்தத் தனித்துவத்தை மற்றொரு பண்பாட்டுச் சூழலில் அப்படியே இறக்குமதி செய்வது சாத்தியமல்ல.

‘பிலாசபி’ போன்ற கருத்தாக்கத்தை ஒரு பண்பாட்டு அடிப்படையில் வரையறுத்துவிட்டு, இலக்கணம் எழுதிவிட்டு, அதை மற்ற பண்பாட்டில் திணிப்பதோ அல்லது மற்றவர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதோ தவறு. ஒரு கருத்தை எப்படி வரையறுக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பொருளின் உள்ளியல்பை அறிவதுதான் பிலாசபிக்கு இலக்கணம் என்று வகுத்தால் அது கிரேக்க மரபுக்கு மட்டும்தான் பொருந்தும். அங்கு மட்டும்தான் பிலாசபி இருக்கும். ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் அத்தகைய பிலாசபி பொருந்தாது. அதனால் ஒன்றை நிறைவாகவோ குறைவாகவோ கருத வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டாக, ஊசி மரம் (பைன்) ஆல்ப் மலைப் பகுதியில்தான் வளரும். சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் அது வளராது. ஏனெனில் அதற்கான குளிர்-வெப்பச் சூழ்நிலை இங்கு இல்லை. அதனாலே ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்லமுடியாது.

பிலாசபிக்கு வேறு வகையில் இலக்கணம் வகுக்கலாம். தனக்குக் கிடைத்த சாதனத்தைக் கொண்டு ‘உள்ளதை’ (இயற்கையையும் மனிதரையும் இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட எதையும்) பொருள்படப் புரிந்து கொள்ளும் முறைதான் காட்சியியல் என்று இலக்கணம் வகுத்தால் எல்லாப் பண்பாட்டிலும் இதைக் காணமுடியும். தங்கள் வாழ்வையும் தங்களுக்கும் தங்கள் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவின் பொருளையும் உணராது எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

எதையும் பொருள்படப் புரிந்துகொள்ளும் வகைகள் பலவாகும். புராணக் கதைகளின் (இலக்கியம்) வடிவில் விளக்கம் கூறுதல் ஒரு வகை. நாடக வடிவில் நடித்துக் காட்டுவது மற்றொரு வகை. ஒரு வழிபாட்டுச் சடங்கு வழியாக தனக்கும் தன்னைச் சூழ்ந்த சக்திகளுக்குமிடையே உறவு கொண்டு உள்ளதைப் புரிந்து கொள்வது இன்னுமொரு வகை. விவாதத்தில் சான்றுகள் காட்டிக் காரண காரிய விளக்கம் காட்டுவதுதான் காட்சியியல் என்று வரையறுக்க முடியாது. ஒரு பகுதியாக வேண்டுமானல் அது இருக்கலாம்.

இந்தச் சிந்தனை மொழிபெயர்ப்போர் மத்தியிலும், குறிப்பாக நாட்டார் மரபில் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்பவர் மத்தியிலும் சர்ச்சையை எழுப்பக்கூடும்.

0

பகிர:
ஆனந்த் அமலதாஸ் சே.ச.

ஆனந்த் அமலதாஸ் சே.ச.

சமஸ்கிருதத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழியல், அழகியல், பண்பாட்டுப் பரிமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்துவருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். சமீபத்திய நூல், ‘வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை.’View Author posts

1 thought on “பண்பாடுகளை இணைப்பது எப்படி?”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *