நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்தரம் பெற்ற கதை பலராலும் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் என்ன ஆனது, இன்றுள்ள நிலைக்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்னும் கதையைக் கோர்வையாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் விவரிக்கும் நூல் நீண்ட காலம் எழுதப்படாமலேயே இருந்தது. அந்தக் குறையைப் போக்கிய முக்கியமான படைப்பு ராமச்சந்திர குஹாவின் India After Gandhi (2007).
வெளிவந்த நாள் முதல் இன்றுவரை இந்தியா தொடங்கி உலகெங்கும் இந்நூல் ஏராளமான புதிய வாசகர்களைத் தொடர்ந்து கண்டடைந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து விற்பனையில் சாதனையும் படைத்துவருகிறது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரிந்து செல்லும் இந்நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கத்தை இரு பாகங்களில் கிழக்கு வெளியிட்டிருக்கிறது. தனது நூலுக்கு குஹா எழுதிய முன்னுரை கீழே.
***
செயற்கையான தேசம்
சென்ற நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் நான் காலிபின் ஊரில் வசிக்கத் தொடங்கியிருந்தேன். அவருடைய குடும்பம் வசித்த பழைய நகரில் நான் வசிக்கவில்லை. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகராகக் கட்டப்பட்ட புது டெல்லியில் வசித்தேன். கவிஞர் காலிபின் காலத்தைப் போன்றே, இந்தியர்கள் இந்தியர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
நான் வேலைக்குச் செல்லும்போது ராஜபத் வழியாகச் செல்ல வேண்டும். அந்தச் சாலையின் பெயரும் அமைப்பும் அரச அதிகாரத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது. ராஜபத், ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பை மக்கள் காண்பதற்கு ஏற்றதாக, ஒரு மைல் தூரத்துக்கு இரு பக்கமும் விஸ்தாரமான நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. அந்தச் சாலை அதற்கப்பால், ஒரு குன்றின்மீது ஏறி கம்பீரமான கல் கட்டடங்களை அடைந்தது. அக்கட்டடங்கள் வடக்கு, தெற்கு பிளாக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. அச்சாலை பிரிட்டிஷ் இந்திய அரசின் வைஸ்ராய் மாளிகையில் முடிவடைகிறது.
நான் புது டெல்லிக்கு மாறியபோது பிரிட்டிஷார் வெளியேறி இருந்தனர். இப்போது இந்தியா முழு சுதந்தர, தனி ஆளுமை பெற்ற குடியரசாகியிருந்தது. ஆனால், அது முழுதும் மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தோன்றவில்லை. எங்கு பார்த்தாலும் முரண்பாடுகளுக்கான அடையாளங்கள் இருந்தன. குறிப்பாக, ஆளின்றிக் காலியாக இருக்கவேண்டிய ராஜபாதையின் இரு பக்க மைதானங்களிலும் கூடாரக் கிராமங்கள் தோன்றி இருந்தன. ஒவ்வொரு கூடாரத்துக்கு வெளியிலும் வண்ண வண்ண அரசியல் வாசக அட்டைகள் தொங்கின. ஒரு கூடாரத்தில் தனி மாகாணம் கோரி இமாலய உத்தராகண்ட் விவசாயிகள் வசிக்கலாம்; இரண்டாவது கூடாரத்தில் தங்கள் விளைபொருளுக்கு அதிக விலை கோரும் மகாராஷ்டிர விவசாயிகள் இருப்பார்கள்; மூன்றாவது கூடாரத்தில், அரசியல் திட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தங்கள் மொழியை அரசு மொழியாக்கக் கோரும் கொங்கணிவாசிகள் இருக்கலாம். கூடாரங்களில் இருப்பவர்களின் கோரிக்கைகள் மாறிக்கொண்டே இருக்கும். மலைவாசிகளுக்குப் பதிலாக ஆலைத் தொழிலாளர்கள் ஆட்குறைப்பை எதிர்க்கலாம். மகாராஷ்டிர விவசாயிகளுக்குப் பதிலாக திபெத்திய அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரலாம். கொங்கணி பேசுபவர்களுக்கு பதிலாக, இந்து சந்நியாசிகள் பசுவதை தடுப்பைக் கோரலாம்.
வெளிநாட்டுப் பார்வையாளர்களின் பார்வையில் இந்த வெளிப்படையான எதிர்ப்புகள் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையில், 1990களின் ஆரம்பத்தில் இக்கூடாரங்கள் அரசால் முழுமையாகப் பிரித்துப் போடப்பட்டன. ராஜபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புல்வெளிகளின் பழம்பெருமை மீட்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பவர்கள் மீண்டும் கூடி புதிய இடங்களைப் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அந்த இடத்துக்கு வடமேற்கே ஒரு மைல் தள்ளி, கன்னாட் ப்ளேஸில் உள்ள ஜந்தர் மந்தர் கண்காணிப்பகத்துக்கு அருகில் குடிபெயர்ந்தனர். இங்கே அவர்கள் அரசாங்கத்தின் கண்களுக்குப் படவில்லை; ஆனால் நாள்தோறும் கடைகளுக்குப் போகும் நகர மக்கள் கண்ணில் பட்டனர். 1998ல், இதுவும் சரிப்படாது என்று கூடாரங்கள் மீண்டும் கலைக்கப்பட்டன. ஆனால் இடம்தான் மாறியது; பிரச்னைகள் நீடித்தன. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அதிக நடமாட்டம் இல்லாத மந்திர் மார்க்-சங்கர் சாலை சந்திப்புக்கு மாற்றப்பட்டனர்.
நான் டெல்லியில் 1990களில் வசித்தபோது, ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தினந்தோறும் ராஜபாதையில் நடந்துபோய் அங்குள்ள கூடாரங்கள், அதில் வசிப்பவர்கள் மாறுவதைக் காலவாரியாகக் குறித்துக்கொள்ள விரும்பினேன். அது ஓராண்டில், ஒரு தெருவின் வரலாறாக இருந்திருக்கும். ஆனால், உங்கள் கையில் உள்ள இந்தப் புத்தகம் வேறு வழியைப் பின்பற்றி எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் 1947 முதல் இப்போது வரையிலான அறுபது வருட வரலாறை விவரிக்கிறது. எனினும், ராஜபாதையில் போய்வரும் அனுபவங்களைக் கொண்டு எழுத நினைத்த புத்தகத்தைப் போலவே இதுவும் ஒரு கதை. சமூகப் போராட்டங்கள், அவை எழுந்த விதம், அவை வெளிப்பட்ட விதம், முடிவு கண்ட முறை ஆகியவை பற்றியது.
இந்தப் போராட்டங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்கின்றன. அவற்றுள் நாம் இப்போது மிக முக்கியமான நான்கை மட்டும் எடுத்துப் பார்க்கலாம். முதலாவதாக இனம் அல்லது சாதி. அது பல இந்தியர்களுக்கு முக்கியமான அடையாளமாக இருக்கிறது. அவர்கள் யாரை மணம் செய்துகொள்ளலாம், யாருடன் தொடர்பு கொள்ளலாம், யாரோடெல்லாம் சண்டையிடலாம் என்பதை முடிவு செய்கிறது. ‘கேஸ்ட்’ என்ற ஆங்கிலச் சொல் ஒரு போர்ச்சுகீசிய வார்த்தை. அது இரண்டு இந்திய சொற்களில் அடங்கியுள்ளது. ஒன்று, ஒருவர் பிறக்கும் அகமணக் குழுவான ஜாதி. இன்னொன்று, வருணம். அது இந்துப் புனித நூல்களில் விதிக்கப்பட்ட சமுதாய அந்தஸ்து ஏணியில் அவர்கள் வைக்கப்படும் இடம்.
அம்முறையில் நான்கு வருணங்கள் உண்டு. அவற்றுடன் மிகத் தாழ்ந்த நிலையில் தீண்டத்தகாதோர் என்ற ஐந்தாவது வருணமும் ஏற்பட்டது. இந்த வருணங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜாதிகள் உண்டு. ஒவ்வொரு ஜாதியினரும் அவர்களுக்கு மேற்பட்ட ஜாதிகளின் உரிமைக்குச் சவால் விடுகின்றனர். அதேபோல கீழுள்ள ஜாதிகள் அவர்களுக்குச் சவால் விடுகின்றன.
அடுத்து வருவது மொழி. இந்திய அரசியல் சட்டம் 22 மொழிகளை அரசாங்க மொழிகளாக அங்கீகரிக்கிறது. இவற்றுள் மிக முக்கியமானது ஹிந்தி. இது 400 மில்லியன் மக்களுக்கும் மேலாக ஏதாவது ஒரு விதத்தில் பேசப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், மராட்டி, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி மற்றும் அஸ்ஸாமி ஆகியவை பிற அரசாங்க மொழிகள். இவை ஒவ்வொன்றும் தனக்கென தனி எழுதும் முறையை, வரி வடிவத்தைத் தெளிவாகப் பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றும் பல மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இயற்கையாகவே தேசிய ஒற்றுமையும் மொழி வேறுபாடும் ஒன்றுக்கொன்று இயைந்துபோகக்கூடியவை அல்ல. ஒரு மொழி பேசும் இந்தியர்கள் மற்றொன்றைப் பேசும் இந்தியரோடு சண்டையிடுகின்றனர்.
மூன்றாவதாக, சர்ச்சைக்குரியதான அம்சம் மதம். ஒரு பில்லியனுக்கு அதிகமாக உள்ள இந்தியர்களில் மிகப் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆனால் அதே நேரம், முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் இந்தியாதான் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு. இங்கு 140 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். (இந்தோனேஷியாவில் மட்டுமே இதைவிட அதிகமாக உள்ளனர்.) மேலும், அதிகமான அளவில் கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர், ஜைனர்கள் உள்ளனர். மொழி என்ற அடையாளத்தைப் போலவே மத நம்பிக்கையும் அடிப்படையான அம்சமாகும். ஒரே மதக் கடவுளின் வெவ்வேறு வடிவங்களை வணங்குபவர்கள்கூட சில நேரங்களில் சண்டையிடுவதும் வியப்பானதல்ல.
நான்காவதாக, சச்சரவுக்கு உள்ளாகும் மிகப்பெரிய விஷயம், வகுப்பு (class). இந்தியா, இணையற்ற பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட நாடு மட்டுமல்ல; அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடும்கூட. லண்டன், நியூ யார்க்கில் மிகப்பெரும் பங்களாக்களுடன் இந்தியத் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். ஆயினும், அரசுக் கணக்கின்படி 26 சதவிகித மக்கள், அதாவது 300 மில்லியன் பேர் முழுமையாக வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். கிராமப்புறங்களில் நில உடைமை தொடர்பாக பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. நகர்ப்புறங்களில் வருமானம் தொடர்பாக இந்நிலை நிலவுகிறது. எதிர்பார்த்ததைப் போலவே, இந்த வேறுபாடுகள் பலவித எதிர்ப்புகளை உருவாக்கின.
இந்தச் சச்சரவுகளுக்கான கூறுகள் தனியாகவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தும் செயல்படும். சில சமயம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை சார்ந்தவர்கள் அவர்களுக்கென ஒரு தனிமொழியில் பேசலாம். பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியினர், சமுதாயத்தில் கீழான நிலையில் உள்ளவர்களாகவே இருந்தனர். இந்த நான்கு கூறுகளோடு ஐந்தாவதாக ஒன்றையும் சேர்க்கவேண்டும். அது மற்ற எல்லாவற்றிலும் ஊடுருவிச் செல்வது. அதுதான் ஆண்-பெண் வேறுபாடு. இதிலும் இந்தியா தனித்துத் தெரிந்தது.
ஒரு பெண் பதினைந்தாண்டுகள் முழுமையாக இந்தியாவின் பிரதமராக இருந்திருக்கிறார். ஆயினும், இந்தியாவின் சில பகுதிகளில் பெண் சிசுக் கொலை சர்வ சாதாரணமாக இருக்கிறது. நிலமற்ற விவசாயக் கூலிகள் குறைவான ஊதியமே பெற்று வருகின்றனர். அவர்களுக்குள்ளும் பெண்களே மிகமிகக் குறைவான கூலி பெறுகின்றனர். கீழ் ஜாதியினர் சமுதாயத்தில் மிக இழிவாக நடத்தப்படுகின்றனர். அதிலும் மோசமாக அந்த ஜாதிகளில் உள்ள பெண்கள். ஒவ்வொரு மதத்தின் தலைவர்களும் பெண்களுக்கு இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் தாழ்வான இடத்தையே தருகின்றனர். மற்ற எல்லாவற்றையும்விட பால் பாகுபாடே மிக அதிகமாகப் பரவி ஊடுருவியிருக்கிறது. ஆனால் வெளிப்படையாகவோ கூட்டாகவோ இது எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை.
சமுதாயப் போராட்டம் நிகழும் சோதனைச் சாலை என்ற வகையில், 19ம் நூற்றாண்டு ஐரோப்பாவைப் போன்றே, 20ம் நூற்றாண்டு இந்தியாவும் வரலாற்றாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. இரு பிரதேசங்களிலும், தொழில்மயமாதல் மற்றும் நவீன தனி நாடுகள் உருவாக்கம் ஆகிய சமுதாய மாற்றத்தின் இரு அம்சங்கள் ஒன்றுசேர்ந்ததால் போராட்டங்கள் ஏற்பட்டன. பல்வேறு மதம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவை காரணமாக, இந்தியாவில் இந்த சச்சரவுக்கான களம் இன்னும் பெரிது. 19ம் நூற்றாண்டு ஐரோப்பாவைப் போலன்றி இந்தியாவில் வயது வந்தோர் வாக்குரிமை, சுதந்தரமான பத்திரிகைகள், பெரும்பாலும் சுதந்தரமான நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்ட ஜனநாயக நாடாக இருப்பதால் இந்தப் போராட்டங்கள் அதிகமாக வெளியே தெரிகின்றன. மனித வரலாறின் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் சமூகப் போராட்டங்கள் இப்படிப் பரந்துபட்டதாக இருந்ததில்லை; இவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டதில்லை; கலை, இலக்கியங்களில் இத்தனை நயத்துடன் பதிவு செய்யப்பட்டதில்லை; அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் இத்தனை வெளிப்படையாக எதிர்கொள்ளப்பட்டதில்லை.
இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களையும் இந்திய சுதந்தர வரலாறையும் சுருக்கமாகச் சொல்ல ஒரு வழி, இந்த முரண்களின் வரைபடங்களை தொடர்ச்சியாகப் பார்ப்பது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்திய தேசத்தின் வரைபடம் ஒன்றை வரையலாம். அதில் நாட்டில் நிலவும் முரண்பாடுகளை, அவற்றின் தீவிரத்துக்கு ஏற்ப வண்ணமிட்டுக் காட்டலாம். ஒரு குறிப்பிட்ட குழுவின் பிரச்னைகளை ஜனநாயக ரீதியில் வெளியிடும் போராட்டத்துக்கு நீல வண்ணம் தீட்டலாம். அதி தீவிரத்துடன் நிகழும் பயங்கரமான போராட்டங்களுக்கு சிவப்பு வண்ணம் இடலாம். வன்முறையின்றி, ஆனால் சட்டத்தில் மிகப்பெரும் மாறுதல் கோரும் பிரச்னைகளுக்கும் சிவப்பு வண்ணம் இடலாம். ஆயுதம் கொண்டு நாட்டை அழிக்க முற்படும் போராட்டங்களுக்கு கருப்பு வண்ணம் பூசலாம். சண்டை சச்சரவுகள் இல்லாத பகுதிகளைக் குறிக்கும் நிறம் வெள்ளை.
காலவாரியாக இந்த தேச வரைபடங்களை பத்து, பத்து ஆண்டுகளாகப் பார்க்கும் பெரிய வித்தியாசங்கள் தென்படும். சிவப்புப் பகுதிகள் கருப்பாகவும், கருப்புப் பகுதிகள் சிவப்பாகவும் மாறியிருக்கலாம். நீல, சிவப்புப் பகுதிகள் வெள்ளையாகி இருக்கலாம்.
இந்த வரைபடங்கள், கலைடாஸ்கோப் கருவிபோல வண்ணங்களைக் காண்பிக்கும். இத்தனை வேறுபாடுகளுக்கு இடையிலும், நுட்பமாகக் காணும் ஒருவர் இரு அம்சங்கள் நிலையாக இருப்பதைக் காண்பார். முதலாவதாக இத்தனை மாறுபாடுகளுக்கு இடையிலும் வரைபடத்தின் வடிவம் மாறவில்லை. இந்தியாவின் எந்தப் பகுதியும் வெற்றிகரமாக வெளியேறிவிடவில்லை. இரண்டாவதாக நீலம், சிவப்பு, கருப்புப் பகுதிகள் சேர்ந்தும் எந்தக் காலத்திலும் வெள்ளைப் பகுதி அளவுக்கு வரவில்லை. மிக அபாயகரமான பத்தாண்டுகள் என்று கருதப்பட்ட காலத்திலும் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான இந்திய நிலப்பரப்பு அமைதியாக, சௌகர்யமாகவே இருந்தது.
இந்திய மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகள், இந்தியாவின் பொருளாதார வெற்றி பற்றி எண்ணற்ற கட்டுரைகளை எழுதிவருகின்றனர். இது, இந்தியாவின் முந்தைய நிலையான வறுமை, பற்றாக்குறை ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறானது. எனினும் நவீன இந்தியாவின் வெற்றிக்கதை பொருளாதாரத் துறையில் அல்ல, அரசியலில்தான் அடங்கியுள்ளது! இந்திய மென்பொருள் துறையின் மாபெரும் வளர்ச்சியைப் பாராட்டுவது அவசரமான ஒரு செயலாக இருக்கக்கூடும். இது சாமானிய மக்களுக்குப் வளத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்குமா என்று இப்போது நமக்குத் தெரியாது. ஆனால் இந்தியா, விடுதலைக்குப் பிறகான அறுபதாண்டு கால சோதனைக் கட்டத்துக்குப் பின்னும் ஒரே தேசமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பெரும்பாலும் ஜனநாயகத் தன்மையுடனும் விளங்குகிறது. இந்த உண்மையை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அண்மையில் 135 நாடுகளில் ஜனநாயகத்துக்கும் முன்னேற்றத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான கூறுகள் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. குறைந்த அளவிலான வருமானம் மற்றும் எழுத்தறிவு, அதிக அளவிலான சமுதாய சச்சரவுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிதான் இருந்திருக்கவேண்டும் என்றே கணித்தனர். ஆனால் உண்மையில் ஆய்வுக்கு உட்பட்ட காலம் (1950-90) முழுவதும் ஜனநாயகமே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. இதனை விளக்க இது ஒரு மிகப்பெரும் விதிவிலக்கு என்று கூறுவது மட்டுமே ஒரே வழி. பொருத்தமற்ற இந்த முரணை விளக்குவதற்கு சமூக விஞ்ஞானப் புள்ளிவிவர ஆய்வு முறைகளையே கைவிட வேண்டியிருக்கும். அம்முறையில் இந்தியா எப்போதும் விதிவிலக்காகவே இருக்கும். அது பழங்கால முறையில் வரலாறை விவரிக்கும் வரலாற்றாளர்கள் பின்பற்றும் முறை.
இந்தியாவைப் பிரிக்கும் சக்திகள் பல. அவற்றின்மீது இந்தப் புத்தகம் போதிய கவனம் செலுத்துகிறது. ஆனால் இந்தியாவை ஒன்றிணைத்து வைக்கும் சக்திகளும் இருக்கின்றன. அவை வகுப்பு, கலாசார வேறுபாடுகளைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன. இந்தியா ஒன்றுபட்டு ஜனநாயக நாடாக இருக்காது என்ற ஆரூடங்களை இதுவரையிலாவது செல்லுபடி ஆகாதவையாக ஆக்கிவிட்டன. இவ்வாறு கட்டுப்படுத்தும் காரணிகள் அதிகம் வெளியே தெரிவதில்லை. மேலே தொடர்ந்து எழுதும்போது, அவை தெளிவாகும். அந்தக் காரணிகளில் தனி நபர்களும் உண்டு; நிறுவனங்களும் உண்டு.
– ராமச்சந்திர குஹா
_____________
இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (2 பாகங்கள்)
ராமச்சந்திர குஹா, தமிழில்: ஆர்.பி. சாரதி