Skip to content
Home » பராக்! பராக்! பராக்!

பராக்! பராக்! பராக்!

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

(கிழக்கு பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கும் சி. சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்கிற‌ பெருநாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.)

கல்கியின் பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானது பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த‌ சோழத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை. ஆனால் அதன் சூத்ரதாரி யார் என்பது இன்றளவும் துலங்காத‌ மர்மமாக நீடிக்கிறது. கொஞ்சம் உண்மைகளையும் நிறைய ஊகங்களையும் குழைத்துச் சரித்திர இடைவெளிகளை நிரப்பி அந்த‌த் துர்மரணத்தைத் துப்பறியும் வரலாற்று நவீனம்தான் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’. அனேகமாக‌த் தமிழின் முதல் Historical Whodunnit.

அடுத்து சோழ சாம்ராஜ்யம் ஆள‌ அரியணை ஏற வேண்டிய பட்டத்து இளவரசனாகிய அவன் ஏன் கொல்லப்பட்டான்? ஆசையா, பகையா, பாசமா, அல்லது வேறு காரணமா? வாளா, விஷ‌மா, புலியா, பெண்ணா, அல்லது இன்னோர் ஆயுதமா? கல்கி பூடகமாகக் காட்டியது போல் பாண்டிய ஆபத்துதவி சகோதரர்களா அல்லது வேறு எவருமா? புதிர்ச் சர்ப்பங்களும், விடை ஏணிகளும் நிரம்பிய இச்சரித்திரப் பரமபத ஆட்டத்தில் இடப்பட்ட முடிச்சுகள் அவிழுமா அல்லது மேலும் புது முடிச்சுகள் விழுமா? சின்ன விண்மீன்களாக‌ மின்னிக் கொண்டிருக்கும் ஆயிரம் பொய்களை மழுங்கடித்து விட்டு உண்மையானது ஒற்றைச் சூரியனைப் போல் முளைத்தெழுமா? வினாக்கள் வரிசை கட்டி நிற்க, சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கின் தீராமர்மம் இதில் வெளிப்படுகிறது.

வரலாற்றுப் புதினங்களில் வழமையாக உலவுகின்ற‌ வாள்கள், புரவிகள், பல்லக்குகள், அழகிகள் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய‌ தமிழ் நிலத்தின் அரசியல், சமூகம், கலை, பண்பாடு குறித்த நுண்மையான குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த‌ நாவலில் அளிக்க முனைந்திருக்கிறேன். நாம் அண்ணாந்து பார்த்த புனித பிம்பங்களை உடைத்து சாதாரண மானிடர்களாகவே அவர்களின் உளவியலைப் பேசியிருக்கிறேன். அதனால் வழமையான‌ மர்ம நாவல் எனக் கடக்கவியலாத கனம் கொண்டிருக்கிறது.

ஆதித்த கரிகாலன் கொலை என்ற விஷயத்தை முதலில் தொடுவது நானல்ல என்பது சரித்திரப் புனைவு வாசகர்களுக்கு நன்கு தெரியும். கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, கோவி. மணிசேகரனின் ஆதித்த கரிகாலன் கொலை, பாலகுமாரனின் உடையார் மற்றும் கடிகை, காலச்சக்கரம் நரசிம்மாவின் சங்கதாரா மற்றும் கூடலழகி, உளிமகிழ் ராஜ்கமல் எழுதிய‌ சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் மற்றும் கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன், தமிழரசியின் கடல் கொண்ட காதல், கிருஷ்ணராவ் கோவிந்தராஜனின் ஆதித்தனின் நிழல், இன்ப பிரபஞ்சனின் வீர பாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன், அனிதா ராஜ்குமாரின் காஞ்சித் தலைவன், நிவந்திகா தேவியின் ராஜராஜன் சிம்மாசனம் என நானறிந்த‌ வரை குறைந்தது பதினான்கு நாவல்களேனும் இச்சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கின்றன. (ஆனால் நான் இவற்றில் பொன்னியின் செல்வன் தவிர வேறெதையும் வாசித்ததில்லை. பொன்னியின் செல்வனுமே கூட வாசித்துச் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகிறது.)

என்னுடையது பதினான்கோடு ஒன்று பதினைந்து என்று ஆகாமல் ஆதித்த கரிகாலன் கொலை மர்மத்துக்கு ஒரு நிரந்தர‌ முற்றுப் புள்ளி வைத்திட‌ வேண்டும் என்பதே அவா.

*

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு என் மூன்றாம் நாவல். முதல் தொடர்கதை. அளவின் அலகில் எனது ஆகப் பெரிய நாவலும் இதுவே – ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சொற்கள்! இந்நாவலில் இன்னொரு சுவாரஸ்யமும் அமைந்தது. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட ஆண்டு எனக் கருதப்படுவது கிபி 969. ஆக, 96, 69 என்ற என் புத்தக‌ வரிசையில் இது 969!

இந்தத் தொடர்கதை Notion Press-ன் BYNGE செயலியில் ஓர் ஆண்டு முழுக்க வாரம் இரு அத்தியாயங்களாக வெளியானது. கிட்டத்தட்ட தமிழின் அத்தனை முக்கியமான தீவிர, வெகுஜன‌ எழுத்தாளர்களும் அதில் எழுத வந்து விட்ட சமயத்தில் தொடர்கதை எழுதிய‌ அனுபவமற்ற‌ சிறுவனாய் நானும் கால் பதித்தேன். பின்னுரை உட்பட 110 அத்தியாயம் என மிக நீண்ட ஒரு தொடர்கதையாக அமைந்தது. இது ஆரம்பத்தில் திட்டமிட்டதை (50 அத்தியாயங்கள்) விட இரு மடங்கு பெரிது. அதனாலேயே இரு பாகங்களாகப் பிரித்துக் கொண்டேன். கதை சென்று கொண்டிருந்த கதியைச் சுருக்கிச் சட்டென முடிக்க மனம் ஒப்பாததால் அதன் போக்கில் சென்று எனக்குத் திருப்தி வரும் வண்ணமே தீர்த்தேன்.

இதை எழுதிய‌ ஓராண்டில் பயணங்களில் இருந்திருக்கிறேன்; ஓரிரு முறை நோயில் விழுந்திருக்கிறேன்; கடுமையான அலுவலக நெருக்கடிச் சூழலில் இருந்திருக்கிறேன். ஆனாலும் எந்தத் திங்களும் வெள்ளியும் அத்தியாயம் வெளியாகத் தவறியதில்லை. அவ்வகையில் இந்த நாவலின் அத்தியாயங்கள் பெங்களூர், ஈரோடு, கோவை, ஊட்டி, பொள்ளாச்சி, நெல்லை, சென்னை, முருதேஷ்வர், மும்பை, லண்டன் எனக் குறைந்தது பத்துப் பிரதேசங்களில் பின்னிரவுகளில், பிரம்ம முகூர்த்தங்களில் எழுதப்பட்டவை.

தொடர் தொடர்பாக BYNGE நிர்வாகமும், நண்பர்களும், வாசகர்களும் தொடர்ந்து வைத்த‌ கோரிக்கை வாரம் இரு அத்தியாயங்கள் என்பதை அதிகரிக்க முடியுமா என்பதே! இந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் உவகை அளித்தாலும் அதை ஏற்க இயலாத சூழலே இருந்தது. காரணம் எளிமையானது – Bandwidth இல்லை! ஏற்கெனவே என் நேரம் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அலுவலகம், ஆரோக்கியம், குடும்பம், வீடு, நண்பர்கள், ஜெயமோகன் சரிதத்துக்கான பூர்வாங்க வேலைகள், ஃபேஸ்புக், சினிமா / வெப் சீரிஸ், வாசிப்பு, கம்ப ராமாயண உரை, ப்ரியங்கா மோகன் சீரிஸ் போக தூங்கும் நேரமே குறைந்து விட்டது. இதில் கூடுதலாக ஓர் அத்தியாயம் எழுதுவது சாத்தியமாக இருக்கவில்லை. இடையே சில‌ இதழ்கள் கதை, கட்டுரை எழுதக் கேட்ட போது என்னால் ஏதும் தர இயலவில்லை – ஓராண்டு முழுக்கவே இந்நாவல் மட்டுமே என் விரலிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

சமீப ஆண்டுகளாகவே எனது படைப்புகளின் வாசக ஏற்பு, நிராகரிப்பு குறித்த பதற்றம் ஏதும் எனக்கு இருப்பதில்லை என்றாலும் இத்தொடர் ஒரு மெஹா ஹிட். BYNGE சொல்வது ஏறத்தாழ‌ பத்து லட்சம் வாசிப்புகள். என் கணக்கு சுமார் பத்தாயிரம் வாசகர்கள் முழு நாவலையும் வாசித்திருக்கிறார்கள். என் முந்தைய படைப்பு ஏதும் இந்த எண்ணிக்கை தொட்டதில்லை. சன்மானம் என்ற‌ வகையில் பார்த்தாலும் இதுவரை எழுத்துக்காக நான் பெற்ற அதிகபட்சத் தொகை இத்தொடருக்குப் பெற்றது தான். ஆக, ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு நாவல் அச்சில் வெளியாகும் முன்பே வணிக‌ வெற்றி எய்தியதுதான்.

இத்தொடருக்கு வந்த நேர்மறை எதிர்வினைகள் சில உணர்ச்சிகரமானவை. தொடரின் வரிகளை தொடர்ச்சியாக‌ வாட்ஸாப் ஸ்டேட்டஸாக வைத்தபடி இருந்த வாசகர் உண்டு. பேறுகாலம் முழுக்க‌வும் புருஷனுடன் இணைந்து படித்ததாகச் சொன்ன வாசகி உண்டு. புதுப்பிள்ளைக்குப் பாலூட்டுகையில் வாசித்து வருவதாகப் பகிர்ந்த சினேகிதி உண்டு. இவை யாவும் இதுகாறும் நான் என் எழுத்துக்குப் பெற்றிடாத‌, மதிப்பற்ற‌ வெகுமதிகள்!

*

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு என்ற இந்தச் சரித்திர நவீனம் நிஜமா கற்பனையா எனக் கேட்டால் இரண்டும்தான். ப‌னிமூட்டமாய்த் தெரியும் வரலாற்றின் அந்தப் பக்கம் என்ன இருக்கக்கூடும் எனக் கற்பனை வண்ணங்களைத் தர்க்கத் தூரிகை தொட்டுத் தீட்டிப் பார்த்திருக்கிறேன். சுதந்திரம் எடுத்திருக்கிறேன். மீறல்க‌ள் செய்திருக்கிறேன்.

காரணம் இருக்கிறது. ஐரோப்பாவின் மத்திய கால வரலாறு நமக்குக் கிடைக்கிற மாதிரி துல்லியத்துடன் தமிழக மத்திய கால வரலாறு கிடைப்பதில்லை. இன்னும் சொன்னால் வட இந்தியச் சரித்திரத்தின் அளவுக்குக் கூட நம்முடையது தெளிவில்லை. குறிப்பாகப் பிற்காலச் சோழர் வரலாறு என்பது நேரடியான ஒன்றே அல்ல; மாறாகக் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் சொல்லும் தகவல்கள் வழியே நாம் வந்தடைகின்ற‌ தர்க்கப்பூர்வ ஊகங்கள்தாம். அதனால் அதில் புனைவுச் சாத்தியம் மிகவும் கூடுதல். அதனால்தான் அக்காலகட்டத்தை நமது சரித்திர‌ நாவலாசிரியர்கள் எழுதித் தள்ளி இருக்கிறார்கள்.

பொதுவாக சுதந்திரத்துடன் பொறுப்பும் பிணைந்தே வரும்! ஒரு வகையில் மெல்லிய ஆபத்தும் கூட அதில் சேர்ந்து கொள்கிறது என்று சொல்லலாம். அதை எல்லாம் மனதில் கொண்டே எழுதினேன். இதில் நான் இணைத்துக் கொண்டது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஓர் இளவரசனுக்குத் திராவிடச் சிந்தனை இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது மட்டுமே. இன்று பெரியாரும் கலைஞரும் அடிநெஞ்சிலிருந்து வெறுக்கப்படுவது போல்தானே அவனும் வன்மத்துடன் ஆதிக்க சக்திகளால் எதிர்கொள்ளப்பட்டிருப்பான்!

மற்றபடி, இந்த நாவலை முடிந்த அளவு வரலாற்றுக்குள் நின்று எழுதவே விழைந்தேன். விதிவிலக்கான பிறழ்வுகளில் பெரும்பாலானவை குழப்பம் தவிர்க்கவும், சுவாரஸ்யம் கருதியும் நான் தெரிந்தே செய்தவை. மிகச் சில அறியாமையில் அல்லது அவசரத்தில் நடந்தவை – அவை நாவலைத் தொடர்கதையாக எழுதுவதற்குத் தருகிற‌ சிறிய‌ விலை.

இதுகாறும் நான் எழுதிய நாவல்களுள் மீயதிக‌ உழைப்பை உறிஞ்சியதும் கூட இதுதான். சரித்திரப் புனைவு என்பதால் நிறைய வாசிப்பும், தேடலும் அவசியப்பட்டது. சில சமயம் ஒற்றை வரிக்குப் பல‌ மணி நேரம் தேடியதும் நடந்தது. இக்கதையில் பயிலும் பெயர்கள், சொற்கள், நிகழ்வுகள் என யாவற்றிலும் துல்லியத்தை, அதன் வழி நம்பகத்தன்மையை முடிந்த அளவு கொணரப் பிரயத்தனப்பட்டதே அதிக நேரமெடுக்க முக்கியக் காரணம்.

இன்னொரு விஷயம் நம்மவர்களுக்குச் சோழம் என்பது புனிதம். குறைகள், குற்றங்கள் இல்லாத பொற்காலம். அந்த நம்பிக்கைக்கு மாற்றாக யாரும் ஏதும் எழுதிவிடலாகாது. சில ஆண்டுகள் முன் இயக்குநர் பா. ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து எதிர்மறையாகச் சொல்லி எதிர்ப்பைச் சந்தித்தது நினைவிருக்கலாம். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் இப்போது அத்தகைய திசைகளில் இருந்து எதிர்ப்புகள் வருவதைப் பார்க்கிறோம். வரலாறோ புனைவோ அதைத் தம்முடைய‌ இன அல்லது குலப் பெருமையுடன் நம் மக்கள் பொருத்திப் பார்த்துக் குழப்பிக் கொள்வதால் நிகழும் பக்க விளைவுதான் இது. படைப்புச் சுதந்திரம் அதற்கெல்லாம் அப்பால் இருக்கிறது.

*

ஆதித்த கரிகாலன் கொலை என்பது தமிழ்ச் சூழலில் புகழ்பெற்ற மர்மமாக இருக்கக் காரணம் பொன்னியின் செல்வன்தான். எனக்கு அக்கொலை பற்றித் தெரிய வந்ததும் பொன்னியின் செல்வன் நாவல் மூலமே. அதைத் தொடர்ந்து வாசித்த சோழ வரலாறு அந்தச் சாவில் என் பாணியிலான புதினச் சாத்தியம் ஒன்று இருப்பதை உணர்த்தியது. கல்கி அதனைச் சரியாக எழுதாமல் மழுப்பிக் கடந்திருக்கிறார் என்றும் தோன்றியது.

அதனாலேயே நான் அச்சம்பவத்தை எழுதப் புகுந்தேன். பொதுவாக தமிழில் வரலாற்று நாவல் எழுதுதல் என்பதில் கல்கி மறுக்கவியலாத முன்னோடி. அவ்வகையில் எனக்கு ஆசிரியர். அந்த குரு வணக்கத்தின் நிமித்தமே நாயகிக்கு ‘கல்கி’ எனப் பெயரிட்டேன்.

ஆனால் ஒரு வாசகனாக‌ பொன்னியின் செல்வன் mediocre புதினம் என்பதே என் கருத்து. வெகுஜன நாவல் என்ற அளவுகோல்படி பார்த்தாலுமே அப்படித்தான். தொடர்கதையின் அலைக்கழிப்புகள் மிகுந்த படைப்பு. நவீன இலக்கியத்தின் கச்சிதமும் அதற்கு இல்லை. ஆனால் அதன் இருப்பு தமிழ் வாசிப்புச் சூழலில் முக்கியமானது. பதின்ம வயதில் எந்தத் தமிழ் வாசகனும் அதை வாசித்தே தீர வேண்டும். அது ஒரு மொழிப் பயிற்சி, பண்பாட்டு அறிமுகம். அதன் தனித்துவம் என நான் கருதுவது இரு விஷயங்களை. ஒன்று 2500க்கும் மேல் பக்கங்கள் கொண்ட‌ அதன் பிரம்மாண்டம். பிற்காலத்தில் சாண்டில்யன் உள்ளிட்ட பலர் பெரிய சரித்திர நாவல்கள் எழுத அதுவே உந்துதல். வெண்முரசின் ஆதி விதை கூட பொன்னியின் செல்வனில் இருக்கலாம். அடுத்து திடீரெனக் கடைசியில்தான் நடக்கிறது என்றாலும் தியாகமே அந்நாவலின் அடிநாதம். அதில் ஒரு காந்தியச் சாயை இருக்கிறது. அதனால் சுவாரஸ்யமான நீதிநூலாகவும் அதை ஒருவர் கண்டடைய முகாந்திரமுண்டு.

ஆனால் அந்நாவல் தமிழ்ச் சூழலில் உண்டாக்கிய பக்க விளைவுகளும் உண்டு. பலரும் கல்கி எழுதியதே அறுதியிட்ட சோழ வரலாறு என நம்புகிறார்கள். அதற்கு மிக முக்கியக் காரணங்கள் இரண்டு: ஒன்று கல்கிக்குப் பின் வந்த பல சரித்திர நாவலாசிரியர்களும் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளை ஒட்டியே தம் புதினங்களை எழுதி அதுவே நிஜ வரலாறு என்ற தோற்றத்தை உண்டாக்கி விட்டனர். அடுத்த காரணம் பொன்னியின் செல்வன் படித்தோரில் பெரும்பான்மையினர் அதோடு வாசிப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விடுவார்கள். அதனால் அவர்களுக்கு வரலாறு தெரியாது; வரலாறு எப்படி எழுதப்படுகிறது என்ற அடிப்படை தெரியாது. கல்வெட்டு, செப்பேடு தெரியாது. ஆதித்த கரிகாலன் முன்கோபி, வந்தியத்தேவன் துடுக்கானவன் எனப் பல பக்கங்களில் துல்லியமாகவே அக்காலத்திலேயே எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வது ஓர் அபத்தமான சவால்.

தொடருக்குக் கொதித்த‌ கேள்விகளும் எரிக்கும் விமர்சனங்களும் வரத்தான் செய்தன. பெரும்பாலும் பொன்னியின் செல்வன் உலகில் வாழும் வாசகர்கள். அவர்களுக்கான எனது தாழ்மையான‌ பதில்களைப் பின்னுரையில் விரிவாகவே சொல்லியிருக்கிறேன். The challenge here is to unlearn கல்கி. அதற்கு முடிந்தோர் இதை வாசிப்பதே ஆரோக்கியம்.

*

இப்பெருநாவலை என் இரு பத்தாண்டுச் சினேகன் இரா. இராஜராஜனுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். பொதுவாகக் காதற்கவிதைகளே ஒரே ஒருவர் நிமித்தம் எழுதப்படும். (ஆனாலது அவரைத் தவிர மற்றெல்லோருக்கும் பிடித்துப் போகும் என்பது வேறு கதை.) அப்படி இத்தொடர் நிஜத்தில் அவன் பொருட்டே ஆரம்பிக்கப்பட்டது எனச் சொல்லலாம்.

கல்லூரி விடுதியில் அறிமுகமான யாம் நட்புக் கொண்டதே கன்னிமாரா நூலகத்திற்குச் செல்லும் ஆர்வத்தில்தான். பிற்பாடு நான் எழுதத் துவங்கியதிலிருந்து இது வரை எழுத்து தொடர்பான என் பல தீர்மானங்களில் அவனது உள்ளீடுகள் உண்டு. ஆரம்பம் முதலே அவன் தீவிர சரித்திர நாவல் வாசகன் – ‘இராஜராஜன்’ என்ற‌ பெயரைச் சூடிக் கொண்டு, தஞ்சாவூர்க்காரனாக இருந்து கொண்டு வேறு எப்படி இருக்க முடியும்! அவனிடம் நான் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை நாவலாக‌ எழுதப் போகிறேன் என்று சொல்லி எப்படியும் டஜன் ஆண்டுகள் இருக்கும். இடைக் காலத்தில் ஒவ்வொரு முறையும் நான் ஒரு நூல் எழுத‌ தொடங்கும் போதும் தவறாமல் ஆதித்த கரிகாலனை நினைவூட்டுவான். இந்த வேலை மட்டும் முடித்து விட்டு சாவகாசமாய் ஆரம்பிக்கலாம் என்று சொல்வேன்.

அப்படி ஒரு முழு தசாப்தமும் அது கிடப்பில் இருந்தது. அவ்வப்போது அது பற்றிக் கிட்டும் நூல்களையும் கட்டுரைகளையும் தவறாமல் வாசித்தும் சேகரித்தும் கொண்டிருந்தேன். (2014 முதல் 2018க்குள் சங்கம் ஹவுஸ் Writers Residency-க்கு விண்ணப்பித்த மும்முறையும் இந்நாவலையே எழுத முன்மொழிந்திருந்தேன் – ஆனால் அவற்றில் தேர்வாகவில்லை.)

ஒரு கட்டத்தில் நான் பயணிக்க விரும்பும் எழுத்துப் பாதையில் ஒரு துப்பறியும் நவீனம் புகுவது எனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதி அதனைக் கைவிடும் மனநிலைக்கு வந்திருந்தேன். அதை ஓர் அபுனைவு நூலாக எழுதி விடலாம் என்று கூட இடையே தோன்றியது. இப்படியாக‌ அஃது ஓர் ஆழ்துயிலுக்குள் புதைந்து விட்டிருந்தது.

மீண்டும் அது உயிர் பெற‌ ஒரே காரணம் BYNGE. அவர்கள் இல்லையெனில் இன்னுமொரு பத்தாண்டுகள் இதைக் கிடப்பில் போட்டிருப்பேன். அல்லது எழுதாமல் போயிருக்கலாம். தமிழ்ச் சூழலில் இறந்து கொண்டிருக்கும் தொடர்கதை எனும் வடிவிற்கு நவீன உருவில் மறுஜென்மம் அளிக்க முயலும் எழுத்துலகின் OTT-யான‌ அவர்தம் கனவு வெல்லட்டும்.

சமீபத்தில் வெகுஜன அச்சிதழ்களில் வெளியான சில‌ சரித்திரத் தொடர்கதைகளின் வெற்றியும் ஊக்குவிப்பாக அமைந்தன. உதாரணமாக ஆனந்த விகடனில் வெளியான சு.வெங்கடேசனின் வேள்பாரியும் குங்குமம் இதழில் வெளியான கே.என். சிவராமனின் ரத்த மகுடமும், கல்கி இதழில் வெளியான காலச்சக்கரம் நரசிம்மாவின் கூடலழகியும்.

இதுகாறும் இத்தனை புத்தகங்கள் எழுதியும் நெருங்கிய சினேகமான இராஜராஜனுக்கு இன்னும் ஒன்றையும் சமர்ப்பிக்காமல் கடத்தியதற்குக் காரணம் என்றேனும் இந்நாவல் எழுதி விடுவேன் என்ற நம்பிக்கை. இத்தருணத்தில் அக்காத்திருப்பு நிறைவேறுகிற‌து!

*

இந்நாவலுக்கு நான் முதன்மையாக‌ நன்றி நவில‌ வேண்டியவர் ஒரு தசாப்தத் தோழி சௌம்யா ராகவன். அத்தனை அத்தியாயங்களுக்கும் முதல் வாசகியாக இருந்து, ஒரு சொல் தவறாமல் உடனுக்குடன் வாசித்து, கருத்துக்கள் பகிர்ந்து, முரண்களைச் சுட்டி, பிழை திருத்தமும் செய்தவர். தொடர் நிறைந்த‌ நாளில் அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவில் முடிந்தது குறித்த வருத்தத்தை வெளிப்படுத்திய‌ வரி: “தன் குழந்தையின் மழலையை ரசித்தபடியே சீக்கிரம் வளர்ந்து விடாதே என்று எண்ணும் தாயின் அபத்த மனநிலைக்கு ஒப்பு இது”. அவரே கவிதை, சிறுகதை எனச் செயல்பாட்டில் இருப்பவர் என்ற வகையில் உள்ளபடியே நெகிழ்கிறேன். அவர் நண்பியாக, வாசகியாக வாய்த்தது எனது நல்லூழ்!

BYNGE நிர்வாகி எம். ப்ரியதர்ஷினிக்கு எம் ப்ரியங்கள். திருத்தங்கள் தொடர்பான‌ எனது தொந்தரவுகளைப் பொறுமையுடன் கையாண்டார். எனக்கு முழு ஏற்பில்லாத‌ அவரது சில முடிவுகள் நிஜத்தில் தொடருக்குச் சாதகமாக அமைந்ததை உணர்ந்திருக்கிறேன். அவர்கள் தரப்பிலிருந்து ஒருங்கிணைத்த வெ. கார்த்திகேயன் மற்றும் த. ராஜனுக்கும் வெளியான பின் விடுபட்ட சில பிழைகளை சுட்டிய ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் நன்றி.

ஆலோசனைகள் தந்த எழுத்தாளர்கள் பா.ரா.வுக்கும் ரமேஷ் வைத்யாவுக்கும் அன்பு. நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி பாராட்டியதுடன் எழுப்பிய சில கேள்விகளும் உதவின. தவறாமலும் உடனடியாகவும் தொடர்ந்து வாசித்து பொதுவெளியிலும் தனிப்பட்டும் நற்சொற்கள் பகிர்ந்து வந்த வாசகர்களும் நண்பர்களும் என்றும் நன்றிக்குரியோர்.

தொடரின் முதல் அத்தியாயம் வெளியாகும் முன்பே கிழக்கு பதிப்பகம் இந்நாவலை வெளியிடுகிறதெனப் பேசி விட்டோம். மருதன் மருதன் மற்றும் பத்ரி சேஷாத்ரியின் நம்பிக்கைக்கு அன்பு. நூலைச் செம்மையாக ஆக்கிய பதிப்பக நண்பர்களுக்கு நன்றி. அற்புத அட்டை ஈந்த ஓவியர் சந்தோஷ் நாராயணனுடன் மகிழ்ச்சியைப் பகிர்கிறேன்.

இந்நாவலில் என்னோடு உடன் வந்த‌ தலை சிறந்த‌ வரலாற்று ஆய்வாளர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, டி.வி. சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் கே.கே. பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கனார், நொபொரு கராஷிமா மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியோரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். 2018ல் TourBee ஏற்பாடு செய்த ‘வந்தியத்தேவன் பாதையில் பொன்னியின் செல்வன் பயணம்’ என்கிற‌ சுற்றுலாவில் கலந்து கொண்ட போது அனந்தீஸ்வரம் கோயில் போயிருந்தேன். அங்குள்ள புகழ்பெற்ற உடையார்குடி கல்வெட்டில் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று” என்றிருந்த பழந்தமிழ் லிபியை விரல் தொட்டுத் தடவுகையில் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் அழிந்துபட்டு ஆதித்த கரிகாலன் ரத்தச் சகதியாக என் முன்னே பிரம்மாண்டம் கொண்டு நின்றான். உடல் இயல்பாய்ச் சிலிர்த்து நடுங்கியது. அந்த மாயக் கணத்தின் திரட்சிதான் இந்நாவல். சரித்திரத்தின் எச்சமாக இன்றும் நிற்கும் அந்தக் கல்வெட்டைச் செதுக்கிய சிற்பியை மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்.

சி. சரவணகார்த்திகேயன்
பெங்களூர், பவள விழா சுதந்திர தினம்

பகிர:
nv-author-image

கிழக்கு போஸ்ட்

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *