நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான விவாதங்களை உண்டாக்கியவை.
இரண்டு நூல்கள் ராமச்சந்திர குஹா எழுதியவை. முதல் நூலான ‘நவீன இந்தியச் சிற்பிகள்’ இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த வெவ்வேறு தலைவர்களையும் அவர்கள் பங்களிப்புகளையும் எளிமையாகத் தொகுத்துக்கொடுக்கிறது. குஹாவின் இரண்டாவது நூலான ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி‘ காந்தி எனும் மகத்தான ஆளுமை உருவாகி வளர்ந்த கதையை விரிவாக விவரிக்கிறது.
மூன்றாவது நூல், நயன்தாரா சகல் எழுதிய நேரு: உள்ளும் புறமும். நேரு இந்தியாவையும் உலகையும் எவ்வாறு புரிந்துகொண்டார், தன் காலத்துப் பிரச்னைகளுக்கும் சவால்களுக்கும் எத்ததகைய எதிர்வினைகள் புரிந்தார், ஏன் என்பதை விவாதிக்கிறது. நான்காவது நூல் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய அம்பேத்கரும் சாதி ஒழிப்பும். அம்பேத்கரை எங்கிருந்த வாசிக்கத் தொடங்குவது என்று மயங்கி நிற்பவர்கள் அனைவருக்குமான அற்புதமான நுழைவாயிலான இந்நூல் அமையும். நான்கும் கிழக்கு வெளீயிடுகள்.
***
ஒரு புதிய இந்தியாவுக்கான அடித்தளம்
நம் தேசத்தின் தலையாய அரசியல் தலைவர்களே அதன் முக்கிய அரசியல் சிந்தனையாளர்களாகவும் இருந்தனர். அதிலும் மோகன்தாஸ் காந்தி, ஜவாஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் ஆகிய மும்மூர்த்திகளின் விஷயத்தில் இந்தக் கூற்று மிக மிகச் சரியானது.
இம்மூன்று தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபடுதல், ஒடுக்குமுறைக்கு ஆளாகுதல், தலைமை தாங்குதல், நிர்வாகப் பொறுப்பேற்றல் எனப் பல நெருக்கடி மிகுந்த பணிகளைச் செய்தனர்; எனினும் தாங்கள் கண்ட மற்றும் வடிவமைத்த உலகைப்பற்றி விரிவாக எழுதியுமிருக்கிறார்கள்.
இந்திய அரசியல் தலைவர்களில் பலர் சுயமான சிந்தனைப்போக்கு கொண்டவர்கள். இது ஒரு அசாதாரணமான விஷயம்தான். ஆனால், இது அபூர்வமான, நமக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. ஏனெனில் வேறு பல நாடுகளிலும் அவை உருவாகக் காரணமாக இருந்த செயல்வீரர்களும் போராளிகளும் எழுத்தாளர்களாகவும் வாதத்திறமை கொண்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்.
அமெரிக்கர்களின் முதல் தலைமுறை தேசியவாதிகளான மாடிஸன், ஹாமில்டன், ஜெஃபர்ஸன், ஃபிராங்க்ளின் போன்ற தலைவர்கள் எல்லாருமே போராட்டக்காரர்களாக இருந்ததோடு சிந்தனையாளர்களாகவும் இருந்தனர். இவர்களைப்போலவே கியூபாவில் ஹோஸே மார்த்தி, செனகலின் லியோனார்டு செங்கோர், கானாவின் க்வாமே என்க்ரூமா ஆகியோரும் தத்தம் நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்ததோடு மேதைமை நிறைந்த படைப்புகளை எழுதவும் செய்தனர்.
புதிதாகப் பிறக்கும்போதும் நெருக்கடியில் மூழ்கும்போதும் செயல்திறனும் சிந்தனைத்திறனும் ஒருங்கே பெற்ற தலைவர்களை உருவாக்கும் குணம் கொண்டவையாக தேசங்கள் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸை நாஜி ஜெர்மனி அழித்துவிடும் என்ற அபாயம் ஏற்பட்டது. அப்போது அந்த நாடுகளின் தேசப்பற்று மிகுந்த தலைவர்கள் ஜெர்மனிக்கெதிரான போராட்டத்துக்குத் தலைமை வகித்ததோடு, அந்தப் போராட்டத்தைப்பற்றி மக்களின் மனதில் பதியும்படியாக எழுதவும் செய்தனர்.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் அதன் பின்னரும் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய புத்தகங்கள் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசைத் தேடித் தந்தன. அதேபோல ஃப்ரான்ஸின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சார்ல்ஸ் தெகால் 1940களுக்கும் 1950களுக்குமிடையில் தமது கட்டுரைகள் மூலம் ஃபிரெஞ்ச் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஃப்ரான்ஸ் என்றால் என்ன… ஃப்ரெஞ்சுக்காரராக இருப்பதென்றால் என்ன என்பது தொடர்பாகப் புதிய அர்த்தங்களை அவருடைய படைப்புகள் உருவாக்கிக்காட்டின.
அரசியல் தலைவராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் நபர்கள் உருவாக இன்னொரு காரணம், ஆட்சி முறையிலே ஏற்படும் புரட்சிகர மாற்றம். இதற்கான சிறந்த உதாரணம் ரஷ்யாவிலும் சீனாவிலும் நிகழ்ந்த புரட்சிகளின் தலைவர்களான லெனினும் மாசேதுங்கும்தான். இவர்களிருவரும் செயல் வீரர்கள் மட்டுமல்ல; அரசியல், பொருளாதார விஷயங்களைப்பற்றி மக்கள் மனத்தில் பதியும்படி எழுதவும் செய்தார்கள். அவற்றை அந்நாட்டு மக்கள் படிக்கவேண்டும் என்ற நிலையும் இருந்தது. மற்ற நாடுகளிலும் இவர்களுடைய கட்டுரைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.
மற்ற நாடுகளில் நிலைமை எப்படியிருந்தாலும், இந்தியா விசேஷமான தேசம் என்பதுதான் எனது அபிப்பிராயம். இந்த விசேஷ அம்சம் மூன்று வகைப்படும். முதலாவது, செயல்வீரர்சிந்தனையாளர் என்ற இந்த இரட்டைத் திறமை கொண்டவர்களின் பாரம்பரியம் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்துவந்திருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டை நிறுவிய தலைவர்களுக்கு மக்களாட்சி, நாடு, தேசம், என்பவற்றைப்பற்றி வசீகரமான கருத்துகளிருந்தன. ஆனால் அவர்களுக்குப் பின்வந்த தலைவர்கள் நாட்டை ஆளவோ நிர்வாகம் செய்யவோ சில நேரங்களில் நிர்வாகச் சீர்கேடு செய்யவோ மட்டுமே செய்துவந்தனர். வேறு சிந்தனையாளர்களும் அறிஞர்களும் வெளியிட்ட கருத்துகளையேதான் தங்களுடைய அபிப்பிராயங்களாக வெளியிட்டனர்.
இதற்கு மாறாக, நம் தேசத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த அரசியல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அதிகத் தாக்கம் ஏற்படுத்திய அரசியல் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். அரசியல்ரீதியாக இந்தியா ஒரு தனி நாடாக உருத்திரள்வதற்கு வெகு முன்பாகவும், சுதந்தரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும், நாடு சுதந்தரமடைந்த சில பத்தாண்டுகளிலும்கூட இந்தியச் சமூகம், அரசியல்பற்றி விரிவாகவும், அனைவருடைய கவனத்தைக் கவரும் வகையிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் அரசியலில் தங்களை முழுவதாக அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் எழுதியவையே.
இரண்டாவதாக, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அரசியல் சிந்தனையாளர்களின் தாக்கம் பல காலம் நீடித்தது. உதாரணமாக, லெனினின் கருத்துகள் எழுபது ஆண்டுகளுக்கு, அதாவது, சோவியத் யூனியன் உருவான நாளில் ஆரம்பித்து அது சிதறிப் போகும்வரை மட்டுமே நீடித்தன. மாவோவின் தாக்கமோ இன்னும் குறைவான காலமே நீடித்தது. அதாவது, 1949ல் சீனப்புரட்சி வெற்றி பெற்ற நாள் முதல் 1970களில் தெங் ஸியோ பிங் தன்னுடைய தலைவரின் கருத்துகளைக் கைகழுவிய நாள்வரையிலான முப்பது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.
மேற்கு ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்தி வின்ஸ்டன் சர்ச்சில் உணர்ச்சிபூர்வமாகப் பேசியதையும் எழுதியதையும் 1950களுக்குப் பிறகு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. ‘பிரான்ஸின் பெருமை’பற்றி சார்ல்ஸ் தெ கால் பேசியதெல்லாம் ஐரோப்பிய யூனியன் என்ற கருத்தாக்கம் நிலைபெற்ற பிறகு நீர்த்துப்போய் (அதிர்ஷ்டவசமாக?), கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
இதற்கு நேர்மாறாக, பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிகளிலும் இந்திய சிந்தனையாளர்கள் பேசியது இன்றைய இந்தியாவுக்கும் பொருந்துவதாக இருப்பதைக் காணமுடியும்.
நவீன இந்தியாவின் சிற்பிகள்
தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹா
தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி
நூலைப் பெற: Amazon | FlipKart
***
காந்தி : இந்தியாவுக்கானவர் அல்ல, உலகுக்கானவர்
காந்தியின் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள் தாம் பிறந்த கிராமம் அல்லது ஊரிலேயே வாழ்ந்து மடிவார்கள். தம் அன்றாட வாழ்வில் அவர்கள் பெரும்பாலும் ஒரே தாய்மொழியும், பூர்வீக மதமும் கொண்டவர்களையே சந்தித்து உரையாடுவார்கள்.
தென்னாப்பிரிக்கா வந்ததன் மூலமாக, காந்தி பழமைவாத, மாறாத உலகிலிருந்து எடுக்கப்பட்டு அப்போதுதான் உருவாகிவந்த நாட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்டார். அவர் வாழ்ந்து, பணியாற்றிய டர்பன், ஜோஹானஸ்பர்க் ஆகிய இரு நகரங்கள் ஐரோப்பாவிலிருந்தும், ஆசியாவிலிருந்தும் புலம்பெயர்பவர்களைக் கவர்ந்துவந்தன. வேறுபாடுகள் நிறைந்த, மாறிக்கொண்டிருந்த இந்த சமூகத்தில், காந்தி தன்னுடையவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்ட இன, மதப் பின்புலம் கொண்ட பலரோடு நீடித்த நட்புகொண்டார்.
ஆச்சரியப்படும் விதமாக, காந்தியின் தென்னாப்பிரிக்க நண்பர்களையும் கூட்டாளிகளையும் வரலாற்றுப் பதிவுகளில் காண முடியவில்லை. இது வருத்தத்துக்குரியதும்கூட.
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் குடும்பத்துக்கு வெளியில் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களில் இருவர் இந்துக்கள் (ஒருவர் மருத்துவராயிருந்து நகைக்கடைக்காரரானவர், மற்றவர் ஒரு லிபரல் அரசியல்வாதி); இருவர் யூதர்கள் (ஒருவர் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர், மற்றவர் ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த கட்டடக்கலை நிபுணர்); இருவர் கிறிஸ்தவ மத குருமார்கள் (ஒருவர் பாப்டிஸ்ட், மற்றவர் ஆங்லிக்கன்).
காந்தியின் குணாதிசயம், நடத்தை மேல் இவர்களது பாதிப்பு மிகவும் முக்கியமானது. காரணம் அவர்கள் காந்தியின் வாழ்வில் வந்தபோது அவர் இந்தியாவில் இருந்ததுபோல மிகப் பிரபலமான ஆளுமையாக அல்லது ‘மகாத்மாவாக’ இன்னும் உருவாகியிருக்கவில்லை; போராடிக்கொண்டிருந்த, தேடல்கொண்ட செயல்வீரராகவே இருந்தார்.
தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தில் காந்திக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்கள் காந்தியின் பதற்றங்கள், போராட்டங்கள், உறவுகளை, வளமான, பலசமயம் எதிர்பாராதவிதங்களில் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
தென்னாப்பிரிக்காவிலிருந்த இந்தியர்கள் அதிகம் படித்திருந்ததாலும், அதிகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததாலும் வெள்ளை ஆதிக்கத்தை அவர்களில் சிலரால் ஊக்கத்துடன் தட்டிக்கேட்க முடிந்தது. ஆட்சியாளர்கள் இதற்குச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் பதிலடி தந்தார்கள்: சில பகுதிகளில் வாழ, கடைகளைத் திறக்க இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொன்றுக்குக் குடிபுக நல்ல பள்ளிக்கூடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து மணமகள் வந்து சேர்ந்தால் குடும்பங்கள் பெருகி இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்று கருதி அதற்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள்தான் பின்பு இன்னும் அதிக அளவில் ஆப்பிரிக்கர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன என்பதால், நிற வெறியின் முதல் பலிகள் என இந்தியர்களைச் சொல்லலாம்.
மேலும் காந்திதான் இனவாத சட்டங்களுக்கு எதிரான முதல் போராட்டங்களை நடத்தியவர் என்பதால், இன ஒதுக்கல் கொள்கையின் முதல் எதிர்ப்பாளர்களில் அவரும் ஒருவராக இன்னும் உறுதியான விதத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும்.
நேட்டாலிலும் டிரான்ஸ்வாலிலும் காந்தி ஆரம்பித்த கிளர்ச்சிகள் இந்தியாவில் தேசிய அரசியலையும், கிரேட் பிரிட்டனின் நாடு பிடிக்கும் திட்டங்களையும் பாதித்தன. ஒரு கோணத்தில் பார்த்தால், காந்தி ஒரு சமூக ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. இருந்தாலும், அவருடைய உழைப்பு மூன்று கண்டங்களின் அரசியலைப் பாதித்ததால், அதற்கு இன்னும் பரந்த அளவில் விளைவுகள் இருந்தன. தொலைபேசிகூட புழக்கத்துக்கு வந்திருக்காத யுகத்தில், தொலைநகலும், இணையமும் பல தசாப்தங்கள் தாண்டிய பிறகே வரவிருந்த காலத்தில், காந்தியின் போராட்டங்கள் ‘உலகளாவிய சமூக இயக்கம்’ என்பதற்கான பண்புகளைக் கொண்டிருந்தன.
காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்ட நடவடிக்கைகள் ‘புலம்பெயர்ந்த தேசியவாதம்’ என்பதன் ஆரம்ப உதாரணம். இதையே பின்னர் பாஸ்டனில் ஐரிஷ்காரர்களும், நியூ யார்க்கில் யூதர்களும், டுனீஸில் பாலஸ்தீனியர்களும், வான்கூவரிலில் சீக்கியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடித்தார்கள்; இவர்களெல்லாம், தாம் அப்போது வாழ்ந்துவந்த மண்ணில் சிவில் உரிமைகள், தாம் விட்டுவந்த மண்ணில் தம் சக மக்களுக்குச் சுதந்திரம் என இரண்டுக்காகவும் போராடினார்கள். காந்தி காலத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சிக்கல், ஐரோப்பாவில் முஸ்லிம்களும், வட அமெரிக்காவில் ஹிஸ்பானிக்குகள், ஆசியர்களும் அனுபவிக்கும் சிக்கல்களுக்குக் கட்டியம் கூறியது.
உலகமயமாக்கலின் முதலாவது கட்டத்தில் விரும்பியும் விரும்பாமலும் புலம்பெயர்ந்த மக்கள் தொகுதிகளும் சமூகங்களும் என்னவிதமான கஷ்டங்களையும் அதிருப்திகளையும் அனுபவிக்க நேர்ந்தன என்பதை காந்தி ஆப்பிரிக்காவில் இருந்த காலகட்டத்து அனுபவங்கள் விளக்குகின்றன. அவை நமது இன்றைய இன்னும் அதிகமாக உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் நிலவும் நெருக்கடிகளைப்போலவே இருப்பதையும் காணமுடிகிறது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி
ராமச்சந்திர குஹா
தமிழில்: சிவசக்தி சரவணன்
நூலைப் பெற: Amazon | FlipKart
***
நேரு : இந்தியா முதல் உலகம் வரை
நேரு தன் வாழ்வின் பெரும் பகுதியை ஏகாதிபத்தியங்களின் யுகத்தில் கழித்தார். தங்களுக்கென சொந்த பெயர்களையும், பழமையான நாகரிகங்களையும் கொண்டிருந்த நாடுகள் அப்போது ஐரோப்பாவின் ‘உடைமைகளாக’, ஐரோப்பாவுக்குச் சொந்தமானவை என்பதைக் குறிக்கும் வகையில் பிரிட்டிஷ் இந்தியா, டச்சு கிழக்கிந்தியா, பிரெஞ்சு இந்தோசீனா, ஜெர்மானியக் கிழக்கு ஆப்பிரிக்கா என்று பட்டப் பெயர்களைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தன.
நேருவின் வாழ்க்கை இந்தியா சுதந்தரம் பெறும் வரை, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியிலேயே கழிந்தது. பிரதமர் என்ற முறையில் அவர் பணியாற்றிய ஆண்டுகள், பயங்கரமான ஆயுத பலம் கொண்ட இரண்டு புதிய வல்லரசுகள், ஏற்கெனவே ஏகாதிபத்தியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தைக் கைப்பற்றுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்த வேளையில், கறைபடிந்த ஏகாதிபத்தியங்களினால் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவுகளை அவிழ்க்கும் பணியில் கழிந்தன.
இரண்டாம் உலகப் போரினால் விளைந்த இந்த அச்சுறுத்தும் நிலவரத்தில் அவரது அயலுறவுக் கொள்கை இரு வல்லரசுகளில் எதனுடனும் கூட்டு சேர்வதை நிராகரித்தது. போருக்கான மாபெரும் ஆயத்தங்களின் பின்னணியில், அதை கந்தலாகிப் போன மெல்லிய துணியைக் கொண்டு மூடுவது போலத்தான் ‘அமைதி’ என்பது நேருவுக்கு ஒரு மாயத் தோற்றமாகத் தெரிந்தது.
இந்த மாயத் தோற்றத்தில் இருந்து வெளியே வந்த அணி சேராமை என்பது பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், உலக நிகழ்வுகள் பிரச்னைகள் குறித்து ஒரு சுதந்தரமான, மேற்பார்வை செய்யப்படாத மதிப்பீட்டுக்கு வருவதற்கும் வழி வகுத்தது. உருவெடுத்த இந்த இயக்கம் ஆசியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் உலக விவகாரங்களில் உரிய இடத்தைப் பெறுவதற்கு வழி கோலியது.
ஆசியாவில், பனிப் போரினால் தூண்டப்பட்ட கொள்கைத் திட்டத்துக்கு காஷ்மீர் ஓர் ஆரம்பகால உதாரணம். உடன்பாட்டுக்கும் தீர்வுக்கும் அது தடையாக இருந்து வருகிறது.
அடிப்படையான மனிதத் தேவை என்ற முறையில், காலனியாதிக்கக் கால தேக்க நிலையில் இருந்து இந்தியாவை மேலே கொண்டு வருவதற்கும், ஒரு நவீன இந்தியாவைக் கட்டி அமைப்பதற்கான ஒரு முன்நிபந்தனை என்ற வகையிலும் அமைதி என்பது நேருவுக்கு முதன்மையான குறிக்கோளாக இருந்தது.
அதற்கு நிகராக, ஆசியா, ஆப்பிரிக்காவின் சுதந்தரத்துக்கும், எல்லா விதமான காலனியாதிக்கத்தை அகற்றுவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பிரதானமாக, இந்தக் குறிக்கோள்களை அடையும் முயற்சியாகவே சர்வதேச விவகாரங்களில் அவர் செயலூக்கத்துடன் பங்கேற்றார்.
உள்நாட்டில், எல்லோருக்கும் வாக்குரிமை என்ற அடித்தளத்தின்மீது அமைந்த ஜனநாயக அமைப்புக்குள் சோஷலிசத்தைக் கட்டி அமைக்க வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு முன் உதாரணம் ஏதும் இல்லாத முயற்சியாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் அவர் அளித்த வழிகாட்டுதல் என்பது எந்த வகையான உலகத்தை அவர் காண விரும்பினாரோ அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து நேரடியாகத் தோன்றியதாகும். இதை அவர், திட்டமிட்ட பொருளாதாரத்துக்கு உந்துதல் அளித்தல் போன்ற முயற்சிகளில் உள்நாட்டு அரசாங்கத்திடம் இருந்தும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கு கம்யூனிஸ்ட் சீனாவுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுதல் போன்ற முயற்சிகளில் வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தும் போதிய ஆதரவு இருந்தும் இல்லாமலும் இருந்தபோதிலும் பின்பற்றினார்.
தேவைப்படும்போது தனியாக நடைபோடுவது என்பது அவரது அசையாத கொள்கைப் பிடிப்பு சார்ந்த விஷயமாகவும், அவரது செயல்பாட்டின் தனிப்பண்பாகவும் விளங்கியது.
நேரு: உள்ளும் புறமும்
நயன்தாரா சகல்
தமிழில்: ஜெயநடராஜன்
நூலைப் பெற: Dial for Books
***
அம்பேத்கர் : சாதி ஒழிப்புப் போராளி
இந்த நூலின் நோக்கம் அம்பேத்கரின் வாழ்க்கையை விரிவாக நினைவுகூர்வது அல்ல. தீண்டப்படாத மக்களின் விடுதலைக்கும் இந்தியாவின் சமூக, அரசியல் மாற்றத்துக்கும் அவரின் பங்களிப்புகள் குறித்து வெளிச்சம் பாய்ச்சுவதே இந்த நூலின் நோக்கம்.
அம்பேத்கர் எப்படிச் சாதிய அடக்குமுறையைப் பகுப்பாய்வு செய்தார்? அதிலிருந்து எப்படித் தன்னுடைய போராட்ட அணுகுமுறைகளை வகுத்துக்கொண்டார்? வெறுமனே அம்பேத்கரை மெச்சுவது என்னுடைய நோக்கமில்லை. அதற்கு மாறாக, அவர் எப்படிச் சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார் என்பதை அவரின் செயல் திட்டம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டு விளக்கவே விரும்புகிறேன்.
அவர் வாழ்க்கையே இப்படிப்பட்ட ஆய்வுக்கு உதவுகிறது. மூக் நாயக் முதல் இதழில் (ஜனவரி 31,1920) அம்பேத்கர், ‘தங்கள் மீதும், பிற ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வருங்கால முன்னேற்றம் குறித்தும், அவற்றுக்கு உகந்த செயல்திட்டங்கள் பற்றியும் கூர்மையாக விவாதிக்க ஒரு மன்றம் வேண்டும்’ என்று எழுதினார்.
அம்பேத்கரின் செயல்திட்டங்களின் பக்கம் பார்வையைத் திருப்புவதற்கு முன்பு, அம்பேத்கர் எப்படி அம்பேத்கர் ஆனார் எனப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இதை அறிய அவர் கால மகாராஷ்ட்ராவில், அவரின் குடும்ப, சமூகச் சூழலோடு அம்பேத்கரின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பேன். இதற்குப் பிறகு அம்பேத்கர் எப்படி ஆரம்பகாலம் தொட்டே சாதி அமைப்பு குறித்துச் சிந்தித்ததன் மூலம், அதை ஒழிக்கக் கனவு கண்டார் என ஆராய்வேன்.
ராஜதந்திரியும் செயல்திறமும் மிகுந்த அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளரான அம்பேத்கரை மறைத்துவிட்டார் என்பது துரதிர்ஷ்டவசமானது. அவரின் பல்வேறு படைப்புகள் அவர் ஒரு அசல் அறிவுஜீவி என்பதைப் புலப்படுத்துகிறது. ஆனால், மற்ற அறிஞர்களைப் போல் அல்லாமல் அம்பேத்கரின் வளர்ப்பு, சூழல் ஆகியவை அவரின் சமூகவியல் அறிவை ஒரு மாபெரும் பணிக்குப் பயன்படுத்தத் தூண்டியது. சாதி எப்படி நுண்மையாக இயங்குகிறது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து, அதன்மூலம், படித்தரநிலை அடிப்படையிலான சாதி எனும் சமூக அமைப்பை அழித்தொழிக்க முனைந்தார். இதனால் அவரை அசலான சமூக அறிவியலாளராக அங்கீகரிக்க முடியாமல் போய்விட்டது.
ஒரு முன்னோடியாக, அம்பேத்கர் ஓர் இலக்கில் இருந்து இன்னொரு இலக்கு நோக்கிக் கவனமாக நகர்ந்தார். முதலில் அவர் தீண்டப்படாத மக்களின் சீர்திருத்தத்துக்காக மனமார உழைத்தார். இதன்மூலம், இந்து சமூகத்துக்குள் (குறிப்பாகக் கல்வியின் மூலம்) அவர்களை மேம்படுத்த முனைந்தார்.
அதற்குப் பிறகு முப்பதுகளில் அரசியல் பக்கம் திரும்பினார். அவர் உருவாக்கிய கட்சிகள் சில நேரங்களில் தீண்டப்படாதவர்களின் இயக்கங்களாக, சில நேரங்களில் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேரும் புள்ளிகளாகத் திகழ்ந்தன. ஆனால், அவர் அரசியல் செயல்பாட்டை வெறுமனே கட்சி அரசியலோடு நிறுத்திக்கொள்ளவில்லை, அவர் அரசுகளோடு இணைந்து பணியாற்றினார். அவை ஆங்கிலேய அரசாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி அவற்றோடு இணைந்து பணியாற்றினார். அதன் மூலம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனுள்ளே இருந்து அழுத்தம் தந்தார்.
இந்த அணுகுமுறை அவரை இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் வழி வகுத்தது. அதன்மூலம், தீண்டப்படாத மக்களின் நலன்களுக்காக வாதாடவும், காந்தியின் சில கருத்துக்களைத் தள்ளி வைக்கவும் அவரால் முடிந்தது. ஆனால், அம்பேத்கருக்கு இந்த அரசியல் செயல்பாடு திருப்தி தரவில்லை. அது பயனற்றது என்ற முடிவுக்கு வந்தார்.
சீரான இடைவெளிகளில், இதைவிடப் புரட்சிகரமான செயல்திட்டத்தால் கவரப்பட்டார். அது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுவதில் வெளிப்பட்டது. இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கமாகச் சாதி அமைப்பு இருப்பதை அவரின் ஆய்வுகள் உணர்த்தின. ஆகவே, இந்து மதத்தை விட்டு வெளியேறும் கனவை அவர் இருபதுகளில் இருந்தே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் என்றாலும், அதை அவர் தன் வாழ்வின் கடைசி வருடத்தில்தான் செயல்படுத்தினார்.
ஆகவே, அம்பேத்கர் இருவேறு அணுகுமுறைகளுக்கு இடையே ஊசலாடினார். சில நேரம் இந்து சமூக அமைப்புக்குள்ளும் இந்தியாவுக்குள்ளும் தீண்டப்படாத மக்களின் நலன்களை வளர்த்தெடுப்பதற்கு முயன்றார். வேறு சமயங்களில், இந்து சமூகத்தை விட்டு விலகும் முயற்சிகளான தனித்தொகுதிகள், தனித் தலித் கட்சி, இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மதம் மாறுதல் ஆகிய செயல்திட்டங்களை முயன்று பார்த்தார். அவர் தீர்வுகளைத் தேடினார், செயல்திட்டங்களைச் சோதித்துப் பார்த்தார், இதன் மூலம், தலித்துகளை விடுதலை நோக்கிய கடினமான பாதையில் பயணம் புரிய வைத்தார்.
அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
தமிழில்: பூ.கொ. சரவணன்
நூலைப் பெற: Amazon | FlipKart
***