‘திடீர்னு பவர் பிளான்ட் உள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் கேக்கும். சில நேரம் சைரன் சத்தம் வரும். எங்க மக்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாது. கொழந்தைங்கள கட்டில் அடியில போய் படுத்துக்க சொல்லுவோம். என்ன பிரச்சன? சரி பண்ணிட்டாங்களா இல்லையானு எதையும் எங்களுக்கு சொல்ல மாட்டாங்க. தினம் தினம் எதோ ஒரு விபத்த, எதோ ஒரு அழிவ எதிர்பாத்து தான் வாழ்க்கையே வாழ்ந்துட்டு இருக்கோம்!’
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அருகிலிருக்கும் மீனவக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னது இது. விடுதலை பெற்று 75 ஆண்டுகாலம் ஆன ஒரு நாட்டில் வாழும் ஒரு கிராமத்தின் கதை இது. நாளை இருப்போமா, இருக்க மாட்டோமா என்ற கேள்வியோடு தினமும் உறங்கச் செல்கிறது ஒரு கிராமம். அந்தக் கிராமத்து மக்களிடம் நாட்டிற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது அரசு. இது தேவையற்ற பயம் இது கூறுவோருக்கு இன்னொரு கதை.
1984ஆம் ஆண்டு இதே போல் ஒரு தொழிற்சாலையின் அருகில் இருக்கும் ஒரு கிராமம். இதே போல் திடீரென ‘சைரன்’ ஒலி கேட்கிறது. அடிக்கடி அது போல் கேட்டு பழகியதால் அனைவரும் சட்டை செய்யாமல் அவரவர் வேலையைப் பார்க்கின்றனர். சில மணிநேரத்தில் காற்றில் பரவும் ஒரு தீவிர நெடி என்னவென்று தெரியாமல், அதை சுவாசித்து மயங்கி விழுகின்றனர்.
இதை பார்த்துக் கொண்டிருப்போருக்கு எப்படி தம்மை தற்காத்துக் கொள்ள என்று கூட தெரியவில்லை. காற்றில் பரவிய மெதில் ஐசோ சயனைட் என்னும் நச்சு வாயுவினால், அரசின் கணக்குப்படி 3787 பேர் மடிகின்றனர். உண்மையில் எத்தனைப் பேர் என்று எவருக்கும் தெரியாது. 1984இல் இந்தியாவையே உலுக்கிய போபால் நச்சு வாயு தாக்குதலில் நடந்தது இது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா என்றால் இல்லை.

சூழல் உரிமைகள்
சமீபத்தில் வடசென்னையில் மணலி, திருவொற்றியூர், எண்ணூர் போன்ற பகுதிகளுக்கு அருகிலிருக்கும் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேற்றப்படும் ஏதோ ஒரு வாயுக்கழிவின் அளவு அதிகமாகிறது. அது என்ன வாயு என்று அங்கிருப்போருக்குத் தெரியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
அணுமின் நிலையங்களும், தொழிற்சாலைகளும் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விகளுக்கெல்லாம் அடுத்துச் செல்லலாம். தான் வாழும் இடத்திற்கு அருகிலிருக்கும் சூழல் கேடுகளையும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பெரும் அடிப்படை உரிமைகூட இந்த ஜனநாயகக் குடியரசில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
வாழ்வதற்கான சுத்தமான மாசற்ற சூழல் என்பது உலகளவில் மனித உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதனை ‘சூழல் உரிமை’ என்கின்றனர். விபத்து நேர்வதற்கு வாய்ப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வே இன்னும் கொடுக்கப்படாத இந்தியாவில் மாசற்ற சூழலுக்கான உரிமைகளை யார்தான் உணரப்போகிறார்கள்? இது இந்தியாவில் இன்னும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒரு சட்ட உரிமையாக மட்டுமே உள்ளது. உண்மையில், இது மட்டும் சூழல் உரிமை அல்ல.
என் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள ஓர் இயற்கை வளத்தின்மீது அரசுக்கும் மேலாக எனக்கு உரிமை இருக்கிறது. ஒரு பழங்குடிக்கு அவர் வசிக்கும் வனத்தின் மீது உள்ள உரிமை, ஒரு மீனவருக்கு கடலின் மீது உள்ள உரிமை என ‘சூழல் உரிமையின்’ ஆழமும் அகலமும் மிகப் பெரியது. இதில் 10 சதவிகிதம் கூட இன்னும் இந்திய ஒன்றியத்தின் குடிமக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 2009இல் பழங்குடிகளுக்குச் சில உரிமைகளை வழங்கும் வண்ணம் வந்த வன உரிமைகள் சட்டத்தை, மறுதலிக்கும்படி 2019இல் வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் வந்துள்ளது. மீனவர்களின் கடற்கரையும் கடலும் ஏலம் விடப்படுகின்றன. மீனவர்கள் கடலில் இருந்து 10, 20, 50 கி.மீ. தூரங்களில் மறுகுடியமர்த்தப்படுகின்றனர். ஆக தங்களது சூழலின் மீது மக்களுக்கு எந்த உரிமைகளும் இங்கு இல்லை.
சூழல் அதிகாரங்கள்
உரிமைகள் மட்டும் போதுமா என்றால், நிச்சயம் போதாது. சூழல் உரிமையை நிலைநாட்ட ‘சூழல் அதிகாரம்’ தேவைப்படுகிறது. என் கிராமத்தின் அருகில் நாங்கள் வசிக்கும் சூழலை அழிக்கும் தொழிற்சாலைகளோ, வேறு எந்தத் திட்டமோ வருமாயின் அதனை மறுதலிக்கும் அதிகாரம் எங்களுக்கு இருக்கவேண்டும். ஒருவேளை வந்தபின் மாசு உண்டாகிறது என்றால் அதனைத் தடுத்தி நிறுத்த உள்ளூர் அரசியல் அமைப்புகளான கிராமசபை, வனசபைகளுக்கு அதிகாரம் இருக்கவேண்டும்.
இயற்கை வளங்களை அனுபவிக்கும் உரிமையை மொத்தமாகத் தன்னகத்தே வைத்துள்ள ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கம்தான் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கும். மக்களிடம் அதிகாரம் இருந்தால்தான் அவர்கள் உரிமைகள் காக்கப்படும். இது இங்கே இல்லை என்பதால்தான் இன்று உலகளாவிய ‘சூழல் நீதிப் போராட்டங்களில்’ இந்தியா முதலிடத்தில் உள்ளது (காண்க படம்).
இந்த ஆகஸ்ட் 15இல் இந்திய அரசு காலனியாதிக்கத்தில் இருந்து அரசியல் விடுதலை பெற்ற 75ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் விடுதலை பெற்றுவிட்டாலும், இந்த நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார விடுதலை என்பது உரிமைகளையும் அதிகாரங்களையும் மக்களின் கைகளில் கொடுக்கும்போதுதான் வரும். அப்போதுதான் இந்தியா முழுமையான ஜனநாயகக் குடியரசு ஆகும்.
ஆனால் அதற்கு தற்போதைய அரசுகள் பின்தொடரும் ‘நவ-தாராளவாத’ பொருளாதாரக் கொள்கைகள் அனுமதி அளிக்குமா என்பதுதான் கேள்வி. என்னைப் பொறுத்தவரை நிச்சயம் அளிக்காது. ஏனென்றால் ஜெர்மன் தத்துவவியலாளர் மார்ட்டின் ஹெய்டெக்கரின் கூற்றுப்படி ‘இயற்கையும் சூழலும் முதலாளித்துவத்திற்கு ஒரு பெரிய எரிவாயுக்கலன்.’
ஆகவே, இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள கூறுகளான சுதந்திரம் என்பதை அடையவே இங்குள்ள முதலாளித்துவ, நவ-தாராளவாதக் கொள்கைகளை எதிர்க்க வேண்டியுள்ளது. வேறு வழிய இல்லை. சூழல் நீதிகளும் அதிகாரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு முழுமையான மக்கள் அதிகாரம் மலரும் வரை, சூழல் போராட்டங்கள் இங்கு நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும். அதற்கு இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. பயணிப்போம்! போராடுவோம்! இன்குலாப் ஜிந்தாபாத்!
0
This is useful to all human beings, I we can take industrial company but our surroundings