Skip to content
Home » அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறிவியல் என்றால் என்ன

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.

அறிவியல் தேடலின்றி இன்றைய சுதந்தர தினம் நிறைவுபெறாது. இயற்கை அறிவியல், சமூக அறிவியல் சார்ந்த முக்கியமான தத்துவச் சிந்தனையாளரான சுந்தர் சருக்கை எழுதிய What is Science? நூலை சீனிவாச ராமாநுஜம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சீர்மை வெளியிட்டிருக்கும் தமிழ்ப் பதிப்புக்கு சுந்தர் சருக்கை அளித்திருக்கும் முன்னுரையைப் பொருத்தம் கருதி கிழக்கு டுடே இன்று வெளியிடுகிறது.

0

அறிவியல் என்றால் என்னவென்று பல தவறான புரிதல்கள் காணப்படுகின்றன. சமூகத்தில் அறிவியல் பெரும் செல்வாக்கு கொண்டிருக்கிறது, தாக்கம் செலுத்திவருகிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் கொண்டிருக்கும் செல்வாக்கை நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் — அதுவும், அதில் எல்லாமும் மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயப்பதாக இருப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வோம் என்றால், அறிவியலின் இயல்பை முன்பு எப்போதும்விட இப்போது புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.

பொதுவாக, அறிவியல் என்பது பிரத்யேகமான அறிவு முறைமையாகவும், நாம் வாசிக்கும் ஒரு ‘வகை’ துறையாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அறிவியல் இதைவிடக் கூடுதலான ஒன்றாகிறது. அறிவியல் தான் படைக்கும் தொழில்நுட்பங்கள் ஊடாக நம்முடைய அன்றாட வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்திவருகிறது. பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களில் மிக முக்கியப் பாடமாக இருக்கிறது. இப்படி, கற்றல் என்றால் என்ன என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

இயற்கை உலகின் ரகசியங்களைக் கண்டறியும் ஒன்றாக முந்தைய அறிவியல் இருந்தது என்றாலும், இன்று அறிவியலார்ந்த அறிவு என்பது மருந்து தயாரித்தல், வேதியியல் தொழிற்சாலைகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ராணுவத் தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்ததாக இருக்கிறது. முதலீட்டாளர்களும், பிரம்மாண்டமான ராணுவத் தளவாடங்களை வைத்திருக்கும் தேசங்களும் நிதி உதவி செய்யக்கூடிய விஷயங்கள் மட்டுமே அறிவியலில் புதிய ஆராய்ச்சிகளாகின்றன.

ஆனால், இப்படியான தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள்? நம் சமூகங்களுக்கும் கைப்பேசிகள் மிக அவசியம் என்று முடிவெடுத்தவர்கள் யார்? இப்படியான அறிவைப் படைப்பதில் வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் மட்டுமே முடிவெடுக்கிறார்களா அல்லது அறிவியலாளர்களும் பொறுப்பெற்க வேண்டியுள்ளதா?

தொழில்நுட்பங்களின் தாக்கத்தால், எப்படிப்பட்ட கணினிகளைக் காட்டிலும் மானுடர்களுக்கு மிக அவசியமான இயற்கை நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு, பருவநிலை நெருக்கடிகளைக் கண்டு, சூழலியல் பாதிப்புகளைக் கண்டு நாம் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும். கைப்பேசிகள் உட்பட, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை — அதாவது, அவர்களுடைய படிக்கும் எழுதும் ஆற்றலில், கணிதவியல், கலை போன்றவற்றைச் செய்யும் ஆற்றலில் என்று மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் கொள்ளும் சமூக உறவில் ஏற்படுத்தும் பாதிப்பையும் நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் நாம் உண்மையிலேயே கவலைப்பட்டாக வேண்டும்.

இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருப்பதையெல்லாம் மீறி, ஒருபக்கம் பெருமளவில் வறுமையில் வாடும் மக்கள் கூடிக்கொண்டே போகிறார்கள் என்றால், மறுபக்கம் உலகில் ஒருசில குடும்பங்கள் மட்டுமே பெருமளவிலான செல்வத்தைக் கொண்டிருப்பது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தப் பெரும் பணக்காரர்கள் தொழில்நுட்பம் வழியாகவும், ஆயிரக்கணக்கான அறிவியலாளர்களைப் பயன்படுத்திக்கொள்வதன் வழியாகவும் பெருமளவு செல்வம் குவிப்பதைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டியுள்ளது.

கோவிட் விளைவால் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த மக்கள் பட்ட பெரும் துயரங்களை முதலீடாக்கிப் பெரும் லாபம் பார்த்தார்கள். இறுதியாக, இன்று நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவான சக்திவாய்ந்த ஆயுதங்கள், உக்ரைனில் மானுடர்களையும் நகரங்களையும் முட்டாள்தனமாக அழித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு போர் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதையெல்லாம் பார்க்கும்போது, இப்படியான சமூகங்களை உருவாக்கியிருப்பதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அறிவியல் அதுவாகவே மானுட அக்கறைகளுக்கு முகம்கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது சாதாரண மக்களால் அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டுமா போன்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவியல் என்பது ஏதோ சில அறிவியலாளர்கள் தங்களுடைய பரிசோதனைக் கூடங்களில் அல்லது தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்து சில பிரச்சினைகளுக்கு விடைகாண முயலும் ஒன்றாக இல்லாததால் இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

அறிவியலாளர்களும் சமூகக் குமுகத்தின் பகுதியாக இருப்பவர்கள்தான். இப்படிப் பேரழிவை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களிலிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் அறிவியலாளர்கள் நிதி உதவி பெறுகிறார்கள். சொல்லப்போனால், அறிவியலாளர்கள் அவர்களுக்கென்று சொந்த சடங்குகளை, விதிகளை, அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தனித்த சாதிக் குழுமம் போலாகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கங்கள் பெருமளவு நிதிவுதவிகள் செய்கின்றன. ஆட்சியில் உள்ள அரசாங்கங்களோடு மிக நெருக்கமாக இருப்பதால், இவர்கள் எப்படியான ஆட்சியாக இருந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இவர்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சமூகநீதிக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நடப்பது இதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. சமூக நன்மைக்காக அறிவை உற்பத்தி செய்பவர்களாக மட்டுமே அறிவியலாளர்களைப் பார்க்காமல், தயக்கம் ஏதுமில்லாமல், பெரும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் குமுகமாக இவர்களை அடையாளம்காண வேண்டியுள்ளது. இந்தக் குமுகம் எதையெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் கேள்விகேட்காமல் நாம் பின்பற்ற வேண்டுமா?

‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுங்கள்’ என்ற கோஷம் ஜனநாயகத்தின் மையமாக இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேட்க விரும்பவில்லை என்றாலும் அவர்களிடம் உண்மையைப் பேச வேண்டும் என்றே இதற்கு அர்த்தமாகிறது. இன்று மிகப் பெரும் அதிகாரத்தை அறிவியல் அறிவு கொண்டிருக்கிறது. இந்த அறிவை அறிவியலாளர்கள் குமுகமே கொண்டிருக்கிறது. அந்த அறிவை அவர்களுக்குள்ளாக மட்டும் இருக்கும் விதமாக அதைக் கவனமாகப் பார்த்துக் காத்துவருகிறார்கள்.

இந்திய மக்களில் பெரும்பாலானோரை இந்த அறிவிலிருந்து விலக்கிவைக்கும் முறைமைகளை உருவாக்குகிறார்கள். குறிப்பாகச் சொல்வதென்றால், இவர்கள் பெண்கள் உட்பட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைத் திறம்பட ஒதுக்கிவைக்கிறார்கள். ஆக, அதிகாரத்திடம் உண்மையைப் பேச வேண்டியது முக்கியமாகிறது. அதாவது, உண்மை குறித்த கருத்துகள் எல்லாவற்றையும் அறிவியல் தமக்குள்ளாகக் கடத்திக்கொண்டுபோயிருக்கும் நிலையில், உண்மை குறித்து அறிவியலிடமே பேச வேண்டியுள்ளது.

இதைச் செய்வதற்கு நாம் அறிவியலை, அதன் நடைமுறைகளைத் தத்துவம், வரலாறு, சமூகவியல், பிற சமூக அறிவியல் துறைகளில் உள்ள அணுகுமுறைகளைக் கொண்டு ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. ஆனால், இன்று எவர் ஒருவர் அறிவியலை உண்மையாக ஆய்வுசெய்ய முயன்றாலும், இந்தியாவில் உள்ள இடது, வலது என்று இருபக்கத்திலும் உள்ள சித்தாந்தவாதிகளால் எதிர்க்கப்படுகிறார்.

நாம் அறிவியலை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்யவில்லை என்றால், மதத் தலைவர்கள் சொல்வது குறித்துக் கேள்விகள் கேட்பதை மிகவும் கடினமாக்கும் ஒரு மதமாக அறிவியலைச் சுருக்குகிறோம் என்றே அர்த்தமாகிறது. அறிவியலாளர்களும்கூட, குறைந்தபட்சம் இந்தியாவில் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது குறித்து எவரும் கேள்விகள் கேட்க முடியாத மதத் தலைவர்கள்போல்தான் நடந்துகொள்கிறார்கள். இனியும் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கை அறிவியல் தொடர முடியாது.

ஏனெனில், சிறிய குழுமம் கொண்டிருக்கும் அதிகாரத்துக்கு மொத்த சமூகமும் பெரும் விலையைப் பல வழிகளில் கொடுக்க வேண்டியுள்ளது. நாம் இன்னும் பொறுப்புள்ள, இன்னும் மனிதத்தன்மையிலான அறிவியலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகிறது. இது சாத்தியப்பட வேண்டுமானால், நாம் அறிவியலைத் திறந்த மனதோடு அணுக வேண்டியுள்ளது; அறிவியல் கோருவதை விமர்சனபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது; உண்மையைத் தேடும் அதன் லட்சியத்துக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அறிவியலையே அறிவியலார்ந்த மனப்பாங்கு கொண்டு நாம் விமர்சனபூர்வமாக ஆராய வேண்டியுள்ளது.

அறிவியலின், அதன் நடைமுறையின் சிக்கலான, செழிப்பான இயல்பைப் புரிந்துகொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தப் புத்தகம். அறிவியல் என்ன செய்கிறது, எப்படியான கருத்தாக்கங்களில் அது நிலைத்துநிற்கிறது, எப்படியான உறவை அது மானுடர்களோடு கொண்டிருக்கிறது போன்றவற்றை இந்தப் புத்தகம் விளக்க முயல்கிறது. பெரும்பாலும் அறிவியல் என்பது மிக எளிமையான ஏரணமாகச் (logic) சுருக்கப்படுகிறது.

சொல்லப்போனால், அறிவியலார்ந்த படைப்பாக்கம், கலைகளில் காணப்படும் படைப்பூக்கத்தோடு பல அம்சங்களைப் பகிர்ந்துகொள்கிறது. மிகக் கவனமாகச் சிந்திப்பதன் ஊடாகவே அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது என்றாலும்கூட, திடீரென ஆழந்த பார்வை ஒன்று கிடைப்பது, தவறுகள் செய்வதன் ஊடாகக் கிடைப்பது, ஏதோ ஒன்றைத் தவறாக அர்த்தப்படுத்துவதன் வழியாகக் கிடைப்பது போன்றவற்றின் ஊடாகவும் அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது.

அறிவியலின் பலம் அதன் கற்பனாசக்தியில் உள்ளது; இந்த உலகம் எப்படியாக இருக்கிறது, இந்த அண்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்பன குறித்தெல்லாம் எண்ணிலடங்கா கதையாடல்களை உற்பத்திசெய்ய முயல்வதில் அதன் பலம் உள்ளது. ஆனால், அறிவியலின் இந்தப் பலத்தை நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது — இதை அறிவியலாளர்கள் செய்தால் மட்டுமே போதாது; குடிநபர்களும் செய்தாக வேண்டும்.

அறிவியல் என்பது ஏதோ மேற்கத்தியச் சிந்தனையின் விளைவானது மட்டும் அல்ல என்றும் இந்தப் புத்தகம் முன்வைக்க முயல்கிறது. இப்படி முன்வைப்பதன் அடிப்படை நோக்கம், அறிவியலை ஜனநாயகப்படுத்துவதே — அதாவது, நம் பிள்ளைகள் அறிவியலை ஏதோ வேற்றுகிரகத்திலிருந்து வந்த ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும், அந்நியர்களால், வெள்ளையர்களால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும் இது அவசியமாகிறது.

நம் பிள்ளைகள் அறிவியலின் உரிமையாளர்களாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்; அவர்களுடைய சொந்த படைப்பூக்கத்தைக் கொண்டு புது வகை அறிவியல்களைப் படைக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால், சமூகத்தில் பாலினம், சாதி, வர்க்கம் போன்ற காரணங்களால் விலக்கிவைக்கப்பட்டிருக்கும் குழுமத்தைச் சேர்ந்த பிள்ளைகளை, அறிவியல் குழுமம் ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். அறிவியலை அறிவார்ந்த தளத்திலும் அதன் நடைமுறையிலும் ஜனநாயகப்படுத்தவே இந்தப் புத்தகம் முயல்கிறது.

இந்தப் புத்தகத்தை 2012–ல் நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) ஆங்கிலத்தில் வெளியிட்டது. ஆங்கிலப் புத்தகத்தைப் பல இந்திய மொழிகளில் கொண்டுவரும் திட்டமும் இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. ஆங்கிலப் பதிப்பு தமிழில் சற்றே விரிவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கருத்தாக்கங்கள்’ பகுதியைச் சொல்ல வேண்டும்.

என்னுடைய புத்தகங்களில் மிகவும் அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தகம், அதிலும் குறிப்பாகக் கல்விப்புலம் சாராத குமுகங்களால் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் இதுதான் என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சொல்லப்போனால், இந்தப் புத்தகம் எழுதியதன் நோக்கமும் இதுதான்.

இப்போது இந்தத் தமிழாக்கத்தின் வழியாகத் தமிழ் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் புலத்தில் இந்த விவாதங்களை, உரையாடல்களைக் கொண்டுவருவதற்கான அடுத்த அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் மேலான சமத்துவவாதச் சமூகத்தையும், பொதுத்தளத்தில் காணப்படும் அதன் துடிப்புமிக்க உரையாடல்களையும் கவனத்தில் கொண்டு சொல்வதென்றால், இதுபோன்ற புத்தகங்கள் பலவும் தமிழில் வருவது மிகமிக முக்கியமாகிறது.

ஆகவேதான், என்னுடைய நண்பர் ராமாநுஜம் இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரப்போவதாகச் சொன்னபோது நான் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். இதுபோன்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில், இந்தப் புத்தகம் பல்வேறு துறைகளிலிருந்து பலவிதமான கருத்துகளையும் கருத்தாக்கங்களையும் கையாள்கிறது.

மொழியாக்கம் என்பதும் ஒரு கலையே. அதுவும் இதுபோன்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பவர்கள் தனித்துவமிக்கக் கலைஞராகிறார்கள். ராமாநுஜம் போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர், இந்தத் தமிழ் வடிவத்தின் ஆசிரியராகவும் ஆகிறார். ஏனெனில், இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்யும்போது, இதில் உள்ள பல விஷயங்கள் குறித்து அவர் கொண்டிருக்கும் மிக ஆழ்ந்த புரிதலை மொழியாக்கத்துக்குள் கொண்டுவருகிறார்.

இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் குறித்து இவரோடு நான் பல உரையாடல்கள் நடத்தியிருக்கிறேன். அதனால், இந்தப் புத்தகத்தை எப்படியான அக்கறையோடு அவர் மொழியாக்கம் செய்திருப்பார் என்று என்னால் பார்க்க முடிகிறது. தமிழ் வாசகர்களோடு இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் குறித்து ஒரு உரையாடல் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ராமாநுஜத்துக்கு என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு விருப்பமும் உற்சாகமும் கொண்டிருந்த ‘சீர்மை’ பதிப்பகத்தைச் சேர்ந்த உவைஸ் அஹ்மதுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

0

அறிவியல் என்றால் என்ன? ஒரு தத்துவார்த்த வாசிப்பு
ஆசிரியர் : சுந்தர் சருக்கை / தமிழில் : சீனிவாச ராமாநுஜம்
பக்கங்கள் : 336 / விலை : ₹550 / சீர்மை
ஆன்லைனில் வாங்க

பகிர:
nv-author-image

கிழக்கு போஸ்ட்

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *