பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலைக் கேட்பதற்கு நாம் நிச்சயம் ஒதுக்கியே ஆகவேண்டும். வாய்மொழி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும் ஊர்வசி புட்டாலியாவின் The Other Side of Silence தமிழாக்கத்திலிருந்து சில பகுதிகள்.
0
மனிதகுல வரலாறு சந்தித்த மிகப் பெரிய அழிவுகளில் ஒன்று இந்தியப் பிரிவினை. இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் தங்கள் வீடுகளையும் நாடுகளையும் மாற்றிக்கொண்டதில்லை.
சில மாதகால இடைவெளியில், சுமார் ஒன்றேகால் கோடி பேர் வெட்டுண்ட இந்தியாவில் இருந்தும் புதிய சிறகுகளான கிழக்கு மற்றும் வடக்கு பாகிஸ்தானில் இருந்தும் குடிபெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலோர் சரித்திரப் புகழ் வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தின் எல்லைக் கோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. இஸ்லாமியர்கள் மேற்கு நோக்கியும் இந்துக்களும் சீக்கியர்களும் கிழக்கு நோக்கியும் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் இடப் பெயர்ச்சிக்குக் கொலை சில சமயம் காரணமாகவும், சில சமயம் விளைவாகவும் இருந்தது. மரணங்கள் கொலைகளால் மட்டும் நிகழவில்லை. பட்டினியாலும், பாழான உணவாலும், தொற்று நோய்களாலும் கூட நிகழ்ந்தன.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அப்போதைய பிரிட்டிஷ் அரசின் கணக்கில் இரண்டு லட்சமாகவும், பிந்தைய இந்தியப் புள்ளி விவரப்படி இருபது லட்சமாகவும் சொல்லப்பட்டது. இறந்தவர்கள் குறைந்தது பத்து லட்சம் பேராவது இருக்கலாம் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை.
இது போன்ற அவலமான சந்தர்ப்பங்களில் பெண்மைக்கு மாசு விளைவிக்கும் குற்றங்கள் நிகழ்வது தவறுவதில்லை. சுமார் 75,000 பெண்கள் மாற்று மதத்து ஆண்களால் (சொந்த மதத்தவர்களாலும்கூட) கடத்தப்பட்டனர், வன்புணர்ச்சிக்குப் பலியாக்கப்பட்டனர். இது தோராயமான கணக்கு மட்டுமே.. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் துண்டு துண்டாகச் சிதறின, வீடுகள் தரைமட்டமாயின, பயிர்கள் நாசமாயின, கிராமங்கள் உயிர்களே இல்லாமல் சூன்யமாயின.
புதிதாக அமைந்திருந்த இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்கள் இந்த நாசங்களைச் சரியான முறையில் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கவில்லை. இத்தனைக்கும் இப்படி ஏதேனும் நடக்கலாம் என்று முன்கூட்டியே பலர் எச்சரித்திருந்தனர். எச்சரிக்கைகளை மீறி இவை நடந்திருந்தன என்பது முக்கியமானது. அனைத்தையும் மீறி, இந்துக்கள், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் பூகோளக் கோடுகளைப் போட்டது. இதனால் மக்களுக்கு உண்டாகும் பாதுகாப்பின்மை உணர்வு, அவர்களைத் தன் இனம் அதிகமிருக்கும் இடத்துக்கு ஓட வைக்கும் என்பதை இரண்டு அரசுகளும் உணர்ந்திருக்கவில்லை. பஸ்களிலும், கார்களிலும், ரயிலிலும் வெளியேறியவர்கள் போக, நடந்தே இடம் பெயர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். இப்படி நடந்து போன மக்கள் கூட்டத்தினரின் நீளம் பல மைல்கள் இருந்தது. கஃபிலா என்று இந்த வரிசை அழைக்கப்பட்டது. பஞ்சாபின் மேற்குப் பகுதியிலிருந்து இந்தியா நோக்கி வந்த 4,00,000 மனிதர்கள் அடங்கிய ஒரு கூட்டம் குறிப்பிட்ட இடத்தைக் கடக்க எட்டு நாள்கள் ஆயினவாம்.
இவையெல்லாம் பிரிவினையின் பொதுவான அம்சங்கள். யாராலும் தெரிந்து கொள்ள முடியும் வகையில் இவையெல்லாம் சரித்திரப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், குறிப்பிட்டுக் காட்டும்படியான செய்திகளைக் கண்டறிவது கடினம். இந்திய, பாகிஸ்தானியக் குடும்பங்களுக்குள், அவர்களின் சிறிய வட்டத்தில் மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கதைகளாக அந்த விவரங்கள் இருக்கின்றன. அது போன்ற குடும்பங்களுக்கு மத்தியில் வளர்ந்தவள் நான். என் தலைமுறையைச் சேர்ந்த பல பஞ்சாபியர்களைப் போலவே பிரிவினைக் காலத்து அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். பிரிவினைக் காலத்துக் கதைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பொதுவான அம்சங்கள் சில உள்ளன. பயங்கரமும் கொடூரமும் நிறைந்த சம்பவங்களின் நினைவுகளுடன், சீக்கியர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்த கடந்த காலத்துக்குத் திரும்பப் போகும் கனவும் அந்தப் பொதுவான அம்சங்களில் உண்டு.
என் அம்மாவும் அப்பாவும் லாகூரைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் எல்லைக் கோட்டிலிருந்து இருபது மைல் தூரத்திலிருக்கும் லாகூர் மீது அங்கே வாழ்ந்த மக்கள் உணர்வுமயமான நேசம் வைத்திருந்தார்கள். ரொம்ப இளையவர்களாக இருந்த தன் தம்பி, தங்கைகளை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இரண்டு முறை லாகூருக்குச் செய்த அபாயகரமான பயணங்கள் குறித்து அம்மா சொல்வதுண்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு சப்தங்களுக்கு இடையில் லாகூரிலிருந்து வெளியேறியதை அப்பா சொல்வார். என் சகோதரர்களுடனும், சகோதரியுடனும் இந்தக் கதைகளை நான் கேட்டுக் கொண்டிருப்பேன், ஆனால் எதுவுமே மனதில் பதியாது. சகிப்புத்தன்மையும், மத உணர்வுகளற்ற பரந்த மனப்பான்மையும் மேலோங்கி இருந்த அமைதியான இந்தியாவின் நடுத்தர வர்க்கக் குடும்பம் எங்களுடையது. ஆகவே இந்தக் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடிதடி ஆகியவை வெறும் வார்த்தைகளாகத் தெரிந்தனவே ஒழிய உணர முடியவில்லை.
அக்டோபர் 1984 ல் அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்கள் இருவரால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் சீக்கியர்கள் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வன்மையாகத் தாக்கப்பட்டார்கள். பல வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள். டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவை கொடூரமான மரணங்கள். அவர்கள் இருந்த இடத்தில் கறுப்புத் திட்டுகளை மட்டுமே காண முடிந்தது. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் ராஜிவ் காந்தியின் அரசாங்கம் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முயன்றதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுமக்களில் பலர் குழுக்களாகச் சேர்ந்து நிவாரணம் தர முன்வந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் இடமும் பாதுகாப்பும் கொடுத்தார்கள். இது போலக் குழுக்களாகச் சேர்ந்து உதவி செய்ய முன்வந்த நூற்றுக்கணக்கானவர்களில் நானும் இருந்தேன்.
ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், போர்வையும் வழங்கிக் கொண்டும், இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டும், இழப்பீட்டுத் தொகை வழங்கிக் கொண்டும் இருந்தோம். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் பழைய நினைவுகளைக் கேட்டறியும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் மூத்தவர்கள், முதியவர்கள் பலர் 1947ல் அகதிகளாக டெல்லிக்கு வந்தவர்களாக இருந்தார்கள். இதே போன்ற வன்முறைக்கு ஏற்கெனவே தாங்கள் ஆளாகியிருப்பதை நினைவு கூர்வார்கள். ‘சொந்த நாட்டிலேயே எங்களுக்கு இப்படி ஒரு அவலம் நிகழும் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை’ என்றும், ‘மீண்டும் ஒரு பிரிவினை போல இது இருக்கிறது’ என்றும் சொல்வார்கள்.
நான் வசித்த பகுதியில் யமுனை ஆற்றின் அக்கரையில் சாதாரண அமைதியான பொதுஜனங்கள்கூட தங்கள் அண்டை அயலாரைத் துரத்தியடிப்பதிலும் கொலை செய்வதிலும் ஈடுபட்டார்கள். வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைத் தவிர அந்த வன்முறைக்கு வேறு தகுதியான காரணம் எதுவும் இல்லை. இந்தியப் பிரிவினையின் போது நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்கள் கற்பனை என்றோ கதை என்றோ நினைத்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரே நாட்டின், ஒரே ஊரின், ஒரே கிராமத்தின் மக்கள் மதம் என்கிற அரசியல் காரணமாக வேறுபட்டு நின்றார்கள். அந்த வேற்றுமையின் காரணமாக ஒருவரை மற்றவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தார்கள்.
பிரிட்டனின் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்காக இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றிய படம் ஒன்றின் தயாரிப்பில் உதவியாக இருந்தேன். அப்போது அந்தப் பயங்கர நிகழ்விலிருந்து தப்பியவர்கள் சொன்ன விஷயங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். நேரடி சாட்சியங்களிடம் இருந்து கேட்டறிந்தவர்கள் சொன்ன கதைகளையும் என் இளமைக் காலத்தில் கேட்டிருக்கிறேன். அவை என்னால் நம்ப முடியாத அளவு பயங்கரமானவை. கட்டாய மத மாற்றத்திலிருந்தோ, பாலியல் பலாத்காரத்தில் இருந்தோ தப்பிக்கக் கிணற்றுக்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட பெண்கள், இதே காரணங்களுக்காக, தங்கள் குழந்தைகளைத் தகப்பனாரே கொன்றது போன்றவை இதில் அடக்கம். ஆனால் இப்போதோ, டெல்லியில் துன்பத்தை அனுபவித்தவர்களும் அதை நேரில் பார்த்தவர்களும் தாங்களே சொன்னார்கள். அவர்களின் விரக்தியும், வெறுப்பும், மனக்கசப்பும் அவர்கள் சொல்வதன் உண்மையைப் பறைசாற்றின.
அவற்றைக் கேட்ட நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இவ்வளவு கொடூரங்கள் நானறிந்த யாருக்கும் நேர்ந்ததில்லை. ஒன்று புரிந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் துன்பங்கள் சரித்திரப் புத்தகத்தில் இடம் பெற்று விட்ட முடிந்த அத்தியாயங்கள் அல்ல. இரக்கமற்ற அரசியல் பூகோளப் பிரிவினை மக்களை இன்னும் பிரித்துக் கொண்டே இருக்கிறது. என் பெற்றோரும், தாத்தா பாட்டியும் லாகூரில் உடன் வசித்த இஸ்லாமிய நண்பர்கள் குறித்து அளவு கடந்த பிரியத்துடனும் பேசுவார்கள், ஓர் இஸ்லாமியப் பெண்ணை மணந்து கொண்ட அம்மாவின் சகோதரர் குறித்துக் காழ்ப்புணர்ச்சியுடனும் பேசுவார்கள். இந்த முரண்பாட்டுக்குக் காரணம் அரசியலும் பூகோளமும்! அரசாங்கம் போட்ட பூகோளக் கோடுகள் நிலத்தில் மட்டும் அல்ல நம் வாழ்க்கையிலும்தான் என்பது 1984ல்தான் எனக்குப் புரிந்தது. வெறும் சரித்திரமாக அவற்றை ஒதுக்கி வைத்து மறந்துவிட முடியாது. அந்தக் கொடூரங்களை யாருக்கோ எப்போதோ நிகழ்ந்ததாக அந்நியப்படுத்திக் கொள்ளவோ அல்லது அப்படிப் பாசாங்கு செய்யவோ என்னால் இயலவில்லை.
0
மௌனத்தின் அலறல்
ஊர்வசி புட்டாலியா / தமிழில்: கே.ஜி. ஜவர்லால்
நூலைப் பெற: Flipkart | Amazon

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.
பயங்கரமும் கொடூரமும் நிறைந்த சம்பவங்களின் நினைவுகளுடன், சீக்கியர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்த கடந்த காலத்துக்குத் திரும்பப் போகும் கனவும் அந்தப் பொதுவான அம்சங்களில் உண்டு.