Skip to content
Home » கத்தியின்றி ரத்தமின்றி…

கத்தியின்றி ரத்தமின்றி…

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு உறுப்பினர், மத்திய அரசின் பத்ம பூஷன் விருது உள்ளிட்ட பதவிகளும் விருதுகளும் இவரைத் தேடி வந்தன. வாழும் காலத்திலேயே பெரும் புகழையும், பட்டங்களையும், பதவிகளையும், பெற்ற ஒரு சில தமிழறிஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். தெய்வ பக்தியும், நாட்டுப் பற்றும், மொழி உணர்வும் ஒருங்கே அமைந்த கவிஞர் என்று இவரைச் சொல்லலாம்.

‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’
‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’
‘அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடைய வழியாகும்’
‘கத்தி இன்றி ரத்த மின்றி, யுத்தம் ஒன்று வருகுது’
‘சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்’

1888 அக்டோபர் 19ஆம் தேதி வெங்கட்ராம பிள்ளை, அம்மணி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை கோயமுத்தூரிலும், இண்டர் மீடியட்டைப் பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சியிலும் முடித்தார். சுதந்தரப் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது. ஆசிரியப் பணியில் இருந்து கொண்டே இராமலிங்கம் விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் பங்கேற்று அரசுக்கு எதிராகப் பேசவே பள்ளி நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியது.

திலகர் சகாப்தத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியக் கவிஞராக விளங்கினார் எனில் காந்தி சகாப்தத்தில் இராமலிங்கம் பிள்ளை காந்தியக் கவிஞராகத் திகழ்ந்தார். இருப்பினும் வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுடனான தொடர்பு காரணமாக இவரும் தொடக்கத்தில் தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் காலப் போக்கில் மகாத்மாவின் உறுதியான உள்ளமும், தெளிந்த சிந்தனையும், சாந்தி தவழும் முகமும் அவரைக் காந்தியடிகளின் பக்தராகவே மாற்றியது. இது குறித்து மூதறிஞர் ராஜாஜி கூறுகையில் ‘திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது. காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது’ என்று பாராட்டி உள்ளார்.

மகாகவி பாரதியாரின் மீது தீவிரப் பற்றும் பாசமும் கொண்டிருந்த இராமலிங்கம், அவரை எப்படியேனும் ஒரு முறையேனும் சந்தித்து பாடலைப் பாடிக் காட்ட வேண்டும் என்று விரும்பினார். மகாகவி கானாடுகாத்தானில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டுச் சென்றார்.

‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத்
தாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்
தம்முறவு தரித்திரத்தால் மாளவிட்டு
தனித்திருந்து உண்டுடுத்துத் தருக்கினோரும்’

என்று ராகத்துடன் தான் இயற்றிய பாடலைப் பாட மகாகவி கண்களை மூடிக் கொண்டு பாட்டையும், இசையையும் கேட்டு ரசித்தவாறே ‘பலே பாண்டியா! பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை!’ என்று இராமலிங்கத்தைக் கட்டித் தழுவி வாழ்த்தினார்.

1921 முதல் 1930 வரை காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் வட்டச் செயலாளராக பதவி வகித்தார். காங்கிரஸ் விடுத்த பல்வேறு சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கேற்று நாமக்கல், மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்ட போதுதான் பல்வேறு கவிதைகளையும், உரைநடைகளையும், நாவல்களையும் எழுதி முடித்தார். இவரது பாடல்கள் ‘பிரார்த்தனை’, ‘தேச பக்திப் பாடல்கள், ‘தமிழன் இதயம், ‘காந்தி அஞ்சலி’, ‘கவிதாஞ்சலி’, ‘சங்கொலி’, ‘மலர்ந்த பூக்கள்’ ஆகிய தலைப்புகளில் வெளியாயின.

1930இல் மகாத்மா தண்டியில் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி தொடங்கி வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக ஊர்வலம் நடைபெற்றது. பயணத்தில் பங்கேற்றவர்களுக்குக் களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், தேசபக்தர்கள் மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர். அப்போது திடீரென வித்யாசமான, நெஞ்சுரமும், வீரமும் தெறிக்கும் பாடலை நாமக்கல் இராமலிங்கம் ஓங்கி ஒலித்த குரலில் முழங்க மற்றவர்களும் உடன் பாடத் தொடங்கினார்கள்.

உப்பு சத்தியாகிரகத்திற்குத் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்த ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தனர். ‘நெருக்கடியான நேரத்தில் நம்மை உற்சாகப்படுத்த மகாகவி இல்லையே என்ற ஏக்கத்தைப் போக்கவும், அந்த வெற்றிடத்தை நிரப்பவும், இதோ நம்மிடையே ஒரு கவிஞர் தோன்றி உள்ளார். அவரை வாழ்த்தி, வரவேற்பது நமது கடமை’ என்று வாயாரப் புகழ்ந்தார். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதுபோல், மூதறிஞரால் வாழ்த்துப் பெற்ற நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை உள்ளம் பூரித்தார்.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தின் போது அவர் இயற்றிய ‘கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்று தொடங்கும் பாடலே அவரைப் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்று ‘தேசியக் கவிஞர்’ என்ற அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலைச் ‘சுதந்திரச் சங்கு’ ஆசிரியர் சா. கணேசன் லட்சக்கணக்கில் அச்சிட்டு தமிழமெங்கும் விநியோகிக்க, மகாகவியின் பாடல்களுடன், இவாது பாடலையும் மக்கள் பாடி மகிழ்ந்தனர்.

1937இல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. நாமக்கல் கவிஞர் போட்டியின்றிச் சேலம் மாவட்ட வாரியத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949இல் கோவை மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் காங்கிரஸ் மாநாட்டில் ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை உணர்ச்சி பொங்கச் சில பாடல்களைப் பாடத் தொண்டர்கள் ஆர்பரித்து மகிழ்ந்தனர். அப்போது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ‘பாரதியார் பாரதியார்தான்! கேட்கும் போதே உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் எத்தனை பாடல்களை இயற்றி உள்ளார் பாருங்கள்’ என்று சின்ன அண்ணாமலையைப் பார்த்துக் கேட்டார். அவரோ ‘நான் பாடியது பாரதியார் பாடல்கள் இல்லை. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இயற்றியவை’ என்று கூற ஓமந்தூரார் உள்பட அனைவரும் அதிசயித்துப் பாராட்டினர். 1949 ஆகஸ்ட் 15இல் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை நியமிக்கப்பட இந்நிகழ்வுமொரு காரணமாகும்.

1954இல் சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு உறுப்பினராக நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் அவரைப் பிரதமர் நேருவுக்கு அறிமுகப்படுத்துகையில் ‘இவர் மிகச் சிறந்த கவிஞர், அப்பழுக்கற்ற தேச பக்தர், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைவாசம் புகுந்தவர், கள்ளம் கபடமற்ற ஒழுக்க சீலர், புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாதவர், அனைவர்கும் அன்பானவர், “ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே” என்ற பாட்டு மூலம் தமிழகத்தையே சுழன்றாடச் செய்தவர்’ என்றார்.

‘தமிழ்’ என்ற சொல்லின் பிறப்பு பற்றிப் புதுமையான விளக்கம் தருகிறார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. ‘அமிழ்து’ ‘அமிழ்து’ என்ற சொல்லைத் தொடர்ந்து வேகமாக உச்சரித்து வந்தால் ‘தமிழ்’ ‘தமிழ்’ என்றே ஒலிக்கும். ஆகவே அமிழ்து’ என்ற சொல்லிலிருந்துதான் ‘தமிழ்’ என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்பது அவரது முடிவு. ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலின் மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் இதே கருத்தை உறுதிப்படுத்துகிறார்.

‘அவளும், அவனும்’, அன்பு செய்த அற்புதம்’, ‘காந்தி சரித்திர நொண்டிச் சிந்து’ உள்ளிட்ட குறுங்காப்பியங்களையும், உரைநடை நூல்களையும், நாவல்களையும், ‘என் கதை’ என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்றையும், ‘திருக்குறள் எளிய உரையையும்’ நாமக்கல் கவிஞர் எழுதி உள்ளார். அவரது புதினங்களுள் குறிப்பிடத்தக்கது ‘மலைக்கள்ளன்’. மக்கள் திலகமாகவும், பின்னாளில் தமிழக முதல்வராகவும் கோலோச்சிய எம்ஜிஆரின் வெற்றிப் படங்களுள் இது குறிப்பிடத்தக்கது

கவிதைத் தொகுப்பு 10, சிறு காப்பியங்கள் 5, புதினங்கள் 5, நாடகங்கள் 2, கட்டுரைத் தொகுப்புகள் 10, மொழிபெயர்ப்புகள் 4, இலக்கியத் திறனாய்வுகள் 7, சரிதைகள், சுயசரிதைகள் 3, விரிவுரை 1, இசை நூல்கள் 3 என நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கை 50 ஆகும்.

1956 – 1968 வரை தமிழக மேலவை உறுப்பினராக இருந்தார். 1971 மத்திய அரசு உயரிய ‘பத்ம பூஷண்’ விருது வழங்கிக் கௌரவித்தது. தமிழ்ப் பண்பாட்டின் காவலராகவும், மகாத்மாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியக் கவிஞராகவும், சிறைவாசம் புகுந்து விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த எழுத்தாளராகவும், 85 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 1972 ஆகஸ்ட் 24 அன்று மறைந்தார். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகக் கட்டடம் ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

0

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

1 thought on “கத்தியின்றி ரத்தமின்றி…”

  1. கவிஞரின் பாடல்களை என் பள்ளி நாட்களில் பேசி பாராட்டுகள் பெற்றுள்ளேன், கவிஞரைப் பற்றிய விவரங்களை அறிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. நல்ல கட்டுரை. நன்றி.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *