கிழக்கு பதிப்பகத்திலிருந்து மலர்ந்து வந்துள்ள புதிய இணைய இதழான ‘கிழக்கு டுடே’ மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இது எப்படிப்பட்ட இதழ்? இதில் யாரெல்லாம் எழுதுகிறார்கள்? என்னென்ன எழுதுகிறார்கள்? இது வார இதழா, தின இதழா? இதில் நாங்களும் எழுத இயலுமா? ஆம் எனில் எப்படி? வாசிப்பதற்குக் கட்டணம் ஏதேனும் செலுத்தவேண்டுமா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
புத்தகங்களுக்கான தளம்
செய்திகளை உடனுக்குடன் வழங்குவதற்கு நூற்றுக்கணக்கான தளங்கள் தமிழில் ஏற்கெனவே இருக்கின்றன. உங்கள் கவனத்தைக் கொக்கிப் போட்டு இழுக்கும் பரபரப்பு இதழ்களுக்கும் காணொளித் தளங்களுக்கும் பஞ்சம் ஏற்படப்போவதில்லை. பொழுதுபோக்குவதற்கு ஆயிரம் வழிகள் திறந்திருக்கின்றன.
கிழக்கு டுடே முதன்மையாக ஒரு புத்தகத் தளம். இதில் இடம்பெறும் தொடர் பகுதி இத்தளத்தின் தனித்துவமான அடையாளமாக இருக்கும். வாரம் ஓர் அத்தியாயம் என்னும் முறையில் பல நூல்களைச் சிறிது, சிறிதாக இந்த இதழின்மூலம் ஒருவர் வாசிக்க இயலும்.
வரலாறு, வாழ்க்கை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் என்று தொடங்கி பல துறைகள் சார்ந்த நூல்கள் இங்கே தொடராக வெளிவரவிருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் தொடங்கி பிரபல எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் வரை பலருடைய படைப்புகள் இங்கே வெளிவரவிருக்கின்றன. இவற்றை வாசிப்பதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியதில்லை.
இணையமும் அச்சும்
‘கிழக்கு டுடே’ என்பது கிழக்கிலிருந்து வெளிவரும் முதல் இதழ் அல்ல. முன்னதாக, ‘தமிழ்பேப்பர்’ எனும் இணைய இதழையும் ‘ஆழம்’ எனும் அச்சு இதழையும் வெளியிட்டு வந்தோம். தமிழ்பேப்பரில் வெளிவந்த பல கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றதோடு நீண்ட விவாதங்களையும் ஏற்படுத்தின. பல தொடர் பகுதிகள் பின்னர் தொகுக்கப்பட்டு, நூல்களாக வெளிவந்தன.
அச்சு இதழ் நடத்துவது எவ்வளவு சுவையானது என்பதையும் எவ்வளவு சவாலானது என்பதையும் ‘ஆழம்’ கற்றுக்கொடுத்தது. நிதானமான அரசியல் கட்டுரைகள், நீண்ட நேர்காணல்கள், மொழியாக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள் என்று பலவற்றை ஆழத்தில் முயன்று பார்க்கமுடிந்தது.
‘தமிழ்பேப்பர்’, ‘ஆழம்’ இரண்டும் இன்று இல்லை என்றாலும் இரண்டையும் நினைவுகூர்ந்து உரையாடும் நண்பர்களையும் வாசகர்களையும் இன்றும் அவ்வப்போது சந்திக்கிறோம்.
புத்தகம், இணையம், அச்சு இதழ் என்று மூன்று தளங்களிலும் இயங்கிய அனுபவங்களைத் தொகுத்துக்கொண்டு இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
புதிய தொடர்கள்
மூன்று புதிய தொடர்களோடு ‘கிழக்கு டுடே’ ஆரம்பமாகியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற விலங்கு வேட்டைகளைக் காட்சிப்படுத்தும் தொடரொன்றை SP. சொக்கலிங்கம் தொடங்கியிருக்கிறார். கென்னத் ஆண்டர்சன், ஜிம் கார்பெட் உள்ளிட்ட பலரின் குறிப்புகளிலிருந்து இந்தப் பகுதி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வாழ்வையும் பணிகளையும் எளிமையாக அறிமுகம் செய்யும் பகுதி, ‘தோழர்கள்.’ பல ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் கி. ரமேஷின் நேரடிப் படைப்பு இது. ரமேஷ் ஒரு தொழிற்சங்கத் தலைவர், இயக்கப் பணிகளில் விரிவாக ஈடுபட்டவர், பல தோழர்களோடு நெருங்கிப் பழகியவர்.
ஆண்டன் செகாவின் சிறுகதைகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வருகிறார் வானதி. மிகுந்த வேட்கையோடு மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். குறுகிய காலத்தில் பல இலக்கியப் படைப்புகளையும் அபுனைவு நூல்களையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
அடுத்தடுத்த தினங்களில் மேலும் சில புதிய தொடர்கள் வெளிவரவிருக்கின்றன. அறிவிப்புக்குக் காத்திருங்கள்.
இது வார இதழ் அல்ல. தினமும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வந்தே தீரவேண்டும் என்னும் நிபந்தனையையும் நாங்கள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் இப்போதே பெருகிவிட்ட ஆதரவுக்கரங்களையும் ஆர்வக்கரங்களையும் வைத்துப் பார்க்கும்போது தினம் ஒரு தொடரையேனும் இங்கே வெளியிடவேண்டியிருக்கலாம். பார்ப்போம்.
கட்டுரைகள்
தொடர்களோடு சேர்த்து அரசியல், சமூகம், பண்பாடு, அறிவியல், வரலாறு, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் சிறிய, பெரிய கட்டுரைகளும் அவ்வப்போது வெளிவரும். விவாதங்களும் மாற்றுக் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
புத்தகங்களை அறிமுகப்படுத்தும், புத்தகங்களை விவாதிக்கும் கட்டுரைகள் கணிசமாக வெளிவரவேண்டும் என்று விரும்புகிறோம். படைப்பாளர்களையும் பல்துறை ஆய்வாளர்களையும் அறிமுகப்படுத்தும் பகுதியாக இது மாறுமானால் பலரை வாசிப்பை நோக்கி நகர்த்திச் செல்லமுடியும்.
சத்யானந்தன் ஒரு சுருக்கமான நூல் அறிமுகத்தை வழங்கியிருக்கிறார். நிவேதிதா லூயிஸின் ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலிலிருந்து சில பகுதிகள் பொருத்தம் கருதி இடம்பெற்றிருக்கின்றன.
புனைவல்லாத எழுத்தே இந்தத் தளத்தின் மையமாக இருக்கும்.
நீங்களும் எழுதலாம்
கிழக்கு டுடேவில் எழுதவருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்டுரை தொடங்கி தொடர் வரை இங்கே இடம்பெறும் அனைத்துப் பகுதிகளிலும் நீங்கள் பங்களிப்பு செய்யலாம். நீங்கள் ஆர்வம் செலுத்தும் துறை என்ன, அந்தத் துறையின்கீழ் குறிப்பாக எந்தத் தலைப்பில் எழுத விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து, ஊக்குவித்து, அவர்களோடு இணைந்து பணியாற்றி நூல்களைக் கொண்டு வருவதை எங்கள் முதன்மையான பணியாகக் கருதுகிறோம்.
அடுத்தடுத்த தினங்களில் சில புதிய எழுத்தாளர்களை கிழக்கு டுடே அறிமுகம் செய்யவிருக்கிறது. அவர்களில் ஒருவராக நீங்களும் அமைய வாழ்த்துகள்.
மேலதிகத் தகவல்களுக்கு : kizhakku.today@gmail.com
கிழக்கு டுடே தளத்தின் வடிவமைப்பு தொடங்கி உள்ளடக்கம்வரை எதுவொன்றைக் குறித்தும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் எங்களோடு நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
இணைந்து வாசிப்போம். இணைந்து இயங்குவோம்.
– ஆசிரியர்
மகிழ்ச்சி.வாழ்த்துகள்.
Can I send a thodar.?
Please write to the editor at this address: kizhakku.today@gmail.com
நல்வாழ்த்துகள்.
ஒரே அமர்வில் இதழின் மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடித்தது எனக்கே வியப்பு. எல்லா கட்டுரைகளும் காத்திரமான உள்ளடக்கத்துடன், படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன. ‘ஆட்கொல்லி விலங்கு’ம் ‘தோழர்க’ளும் வாசிப்பில் இனி first choice ஆக இருக்குமென்று தோன்றுகிறது. இதழ் அறிமுகக்கட்டுரையின் தொனி நட்புணர்வோடு எந்த மிகையுமின்றி இருந்தது.
நம்பிக்கை தருகிற முதல் இதழ். வாழ்த்துகள். 🌷 👏👏👏🌷
அருமையான படைப்புகள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார்.
வெகு அருமை. ஒவ்வொரு தலைப்பும் மனதை கொள்ளை அடிக்கின்றது. கிழக்கு டுடே- விற்கு வாழ்த்துகள்.
மாலதி சந்திரசேகரன்
மிக்க மகிழ்ச்சி. கனமான விஷயங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
தங்களின் இந்தப் பணி மென்மேலும் செழிக்க, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்….
💯❤️💝🤍💥👌🏻💘💎🦋