தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது.
‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்:
கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’
இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது அகத்திணை. தனி மனித-சமூக உறவைப் பற்றிச் சொல்வது புறத்திணை. காதல் செய்திகள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு கூறப்படுகின்றன. ஐந்து நிலப்பகுதிகள் என்று வரையறை செய்திருந்தார்கள். அவை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்பன.
குறிஞ்சியில் (மலைப் பகுதி) தலைவனும் தலைவியும் ஒருவரை யொருவர் சந்தித்துப் புணர்ச்சிப் பழகுதலைக் கூறுவதாகும்.
திருமணத்துக்கு முன்பே உடலுறவு என்பது தமிழ் மரபாக இருந்திருக்கின்றது என்பதை இப்பொழுது இதைப் பற்றி விவாதிக்கின்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல். ஆனால் உடலுறவு கொள்கின்ற காதலர்கள் திருமணம் செய்துகொண்டாக வேண்டும். அப்படிச் சில சமயங்களில் நடைபெறவில்லை என்ற காரணத்தினால்தான், முதலில் திருமணம், பிறகு உடலுறவு என்ற சமூகச் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதையும் தொல்காப்பியம் கூறுகிறது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’
திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளுக்கிடையே நடைபெறும் ஊடல் (சிறு சிறு romantic பூசல்கள்) மருத நிலத்துப் (வளம் மிக்க வயல்கள்) பின்னணியில் சொல்லப்படுகின்றது. தலைவனுக்குச் சமூகப் பொறுப்புக்கள் உண்டு அல்லவா? அவன் போருக்காகவோ, தூதாகவோ, கல்வி கற்பதற்காகவோ தலைவியை விட்டுப் பிரிவதுண்டு. அவன் திரும்பி வரும் வரை பொறுமையைக் காத்திக்கொண்டிருப்பது முல்லை (காட்டுப் பகுதி).
நிலத்தின் ஒழுக்கம் தலைவன், திரைகடலோடி திரவியம் தேடச் செல்வது வழக்கம் என்பதால், நெய்தல் (கடற்பகுதி) பிரிவைக் கூறும். கொடுமையான நிலவகையான பாலையில் களவிலும், கற்பிலும் நிகழும் பிரிவு பேசப்படுகின்றது.
ஒவ்வொரு நிலத்திலுள்ள மக்கள் யாவர் என்பது பற்றியும் தொல்காப்பியம் சொல்கின்றது. குறிஞ்சியில் இருப்பவர்கள், குறவர்கள். மருதத்தில் இருப்பவர்கள், உழவர், பள்ளர், பறையர். முல்லையில், இடையர்கள், நெய்தலில் பரதவர். பாலை என்பது ஓர் இயல்பான நிலவரையிறை இல்லை. வளம் குன்றி எது வேண்டுமானாலும் பாலை ஆகக் கூடும். (நில உரிமையுடன் செங்கோலோச்சிய இவ்வினங்கள் பிந்திய காலங்களில் பிற்பட்ட வகுப்பினராகிவிட்டனர் என்பது வரலாற்றின் துயரம்).
ஆகவே, இலக்கியத்தில் தலைவனாகச் சித்திரிக்கப்படுகின்றவன், இந்த நான்கு இனத்தில் ஒருவனாக, நில உரிமைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.
நில உரிமை இல்லாத, பிறருக்குக் குற்றேவல்கள் செய்கின்ற அடிநிலை மக்களுக்குக் காதல் உண்ர்வே வராதா என்பது நியாயமான கேள்வி. மேலே கூறிய சூத்திரம் இவர்களுக்காகத்தான். ‘பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும், பிறர் ஏவிய தொழில் செய்தல் வல்லோரிடத்தும், தலைமக்களாக நாட்டிச் செய்யுள் செய்தல் நீக்கப்படாது’ என்று இதற்குப் பொருள் கூறும் நச்சினார்க்கினியர், மேலும் சொல்கிறார். ‘நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளைப் பெருந்திணைகளுள்’ என்று.
இலக்கியத்தில் அடிநிலை மக்களும் தலைவர்களாக வரலாம். ஆனால், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை போன்ற ஐந்து வகை நிலங்களோடு வைத்து எண்ணப்படாமல், புறத்தே நிற்கும் ஒழுக்கமாக மட்டும் கூறப்படும் கைக்கிளை, பெருந்திணை என்ற திணை கோட்பாட்டில் மட்டுந்தான் இவர்கள் தலைவர்களாகக் கருதப்பட முடியும் என்கிறார் நச்சினார்க்கினியர்.
கைக்கிளை என்றால் ஒருதலைக் காமம். பெருந்திணை என்றால் பொருந்தாக் காமம். அதாவது, காம வக்கிரங்கள். நில உரிமை இல்லை என்ற காரணத்தினால், நிலத்தோடு வைத்துப் பேசப்படுகின்ற புணர்ச்சி, ஊடல், இருத்தல், பிரிதல் போன்ற ஒழுக்கப் பாகுபாடு குற்றேவல் செய்யும் மக்களுக்குப் பொருந்திவராது என்பது
பொருள். அதாவது ‘சங்க காலம்’ பொற்காலம் என்பதை மறு பரிசீலனைச் செய்ய வேண்டுமென்ற அர்த்தம்.
சங்கப் பாடல்களில், குறிப்பாகக் ‘கலித்தொகை’யில், அடிநிலை மக்களைத் தலைவர்களாக நாட்டிப் பாடல்கள் வருகின்றன. இப்பாடல்கள் பிற்காலத்தில்தான், இயல், திணை பாகுபாட்டில் தொகுக்கப்பெற்றன. சங்க இலக்கியங்களை மனத்தில் கொண்டுதான், தொல்காப்பியர் இலக்கணம் வகுத்திருக்கிறார். தொல்காப்பியம், பெரும்பான்மையான சங்கப்பாடல்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமேதுமில்லை. அதனால்தான், உரையாசிரியர்கள், தொல்காப்பியச் சூத்திரங்களுக்குச் சான்றுகளாகப் பெரும்பாலும் சங்கச் செய்யுட்களை எடுத்துக் காட்டியுள்ளனர்.
தொல்காப்பியம் சங்க நூல்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொது சகாப்தம் ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
அடிநிலை மக்களைத் தலைவர்களாக வைத்துப் பாடிய சங்கப் புலவர்கள் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றுக்குத்தான் இவர்கள் உரியவர்கள் என்று மனத்தில் கருதிப் பாடியிருப்பார்களா, அல்லது தொல்காப்பியர் காலத்திலும், உரையாசிரியர்கள் காலத்திலும் ஏற்பட்டுவிட்ட சமூக மாற்றங்களுக்கேற்ப, இப்பாடல்களுக்குத் திணை வகுக்கப்பட்டனவா என்பது சுவாரஸ்யமான கேள்வி.
சங்க இலக்கியங்களைக் காட்டிலும், தொல்காப்பய உரையாசிரியர் உரைகளில், வேத மரபுத் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. ‘வேதநூலுட் கூறிய இலக்கணத்தாலே’ என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய சூத்திரங்கள் சிலவற்றுக்கு உரை காண்கின்றார்.
அடிநிலைமக்களைத் தலைவர்களாகக் கொண்ட’ கலித்தொகை’ப் பாடல்களைப் படிக்கும்போது, அவை இக்காலத்திய எதிர்ப்புணர்வைக் காட்டும் ‘கலக’ப் பாடல்களாகத் தெரிகின்றனவேயன்றி, நச்சினார்க்கினியர் கூறுய்கிறபடி, பெருந்திணைக்குச் சான்றாக அமைந்த பாடல்களாகத் தெரியவில்லை.
நச்சினார்க்கினியர் இதற்கு மருதக் கலி, குறிஞ்சிக் கலி, முல்லைக் கலி ஆகியவற்றினின்றும் சான்றுகள் காட்டியுள்ளார். மருதக் கலி செய்யுள், ஒரு கூனியும், ஒரு குறளனும் (குள்ளன்) காதல் செய்வதைக் குறித்து வருவதாகும். ஒத்த குலனும், ஒத்த குணநலன்களும் (‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’- தொல்காப்பியம். ‘பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுவ’ – நச்சினார்க்கினியர் உரை) சேர்ந்தமைந்த தலவனும் தலைவியும்தாம் காதல் செய்வதற்குரியர் என்ற மரபைக் கேள்விக்குரியதாக்குகின்றது.
இப்பாட்டு. இச்சூத்திரங்கள் எல்லாம் தொலாப்பியத்தில் புகுந்துவிட்ட இடைச்செருகல்கள் என்று தங்களுக்குச் சௌகர்யானமவற்றை ஏற்று மற்றவற்றை மறுக்கும் ‘தமிழ் அறிஞர்கள்’ கருத்தும் பரவலாக இருக்கிறது.
ஒரு காவியத் தலைவன் காதலியை நோக்கிக் கூறுவது போல், குறளன் கூனியைப் பார்த்துப் பேசுவதினின்றும் தொடங்குகிறது இந்த mock-heroic கவிதை.
‘என் நோற்றான் கொல்லோ?-
நீரும் நிழலும் போல் நுடங்கிய மென் மென்சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை!..’
‘நான் உன்னுடன் சில வார்த்தைகள் பேசுவதற்கு நீ என்ன தவம் செய்திருக்க வேண்டும்! நதிக் கரையில் நிற்கும் எதோ ஒன்றின் நிழல், நதியில், நீரலைகளின் அசைவினாலே சலனமுற்று நுடங்கி நுடங்கி செல்வது போல், நடையிட்டுச் செல்லும் அழகிய பெண்ணே!’ என்கிறான் குறளன்.
கூனி, காவியத் தலைவிகள் போல், நாணிக் கண் புதைக்கவில்லை. அவள் பதில் கூறுகின்றாள்.
‘அன்னையோ! காண்தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
வேண்டுவன் என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?’
‘அம்மாவோ! இவன் பேசுவதைப் பார்! ஒரு கெட்ட நாழிகையயில், ஓர் ஆண் பறவைக்குப் பெண்பறவை ஈன்ற குஞ்சுவைப் போலிருக்கும் இவன் என்னைப் போகாமல் தடுத்துப் பேசுவதைப் பார்! குறளனாய் இருக்கும் உனக்கு என்னைத் தீண்டத் தகுதி உண்டோ?’ என்கிறாள் கூனி.
குறளன் கூறுகிறான்: ‘கலப்பையில் தைக்கும் வாள் போல ஓரிடம் கூனாக மேலெழுந்து, ஓரிடம் முன்னே வளைந்து நிற்கும் அழகாலே எனக்குக் காம நோயை நீ தந்துவிட்டாய், பெண்ணே! நீ அருளினால் என் உயிர் இருக்கும்.’
‘சூதாடும் பலகையை எடுத்து நிறுத்தினாற் போன்ற தோற்றத்தையுடைய குறளனே! பெண்களைக் கூடும் முறையைக் கல்லாதவனே! உச்சிப் பொழுதில் வந்து என் கைகளைப் பற்றி அழைக்கிறாயே! வேறு பெண்டிர் உனக்கு உளரோ?’ என்கிறாள் கூனி.
‘நல்லாளே! கொக்கைப் போன்று மடுப்பை உடைய அழகிய பெண்ணே! என்னைப் பார்த்தா பெண்களைக் கூடும் முறையைக் கல்லாதவன் என்று கூறினாய்? உன்னை எப்படி அணைப்பது சொல். முன்புறமாக அணைத்தால், உன் கூன் என்னை அழுத்தும்.முதுகுப் புறம் அணைத்தால் அக்கூன் என்னைக் கூசச் செய்யும். ஆகவே உன்னைக் கூடுதலும் அணைத்தலும் செய்யேன்! வேண்டுமானால், பக்கவாட்டத்தில் உன்னை அணைக்கின்றேன், அருகில் வா,’ என்றான் குறளன்.
இவ்வாறு தொடர்கின்றது அவர்களுக்கிடையே நிகழும் உரையாடல். இகழ்வதுபோல் தொடங்கி, விருப்பத்தில் முடிகின்றது. நகைச்சுவை போல் தோன்றினாலும், இவ்வுரையாடலின் அடிப்படை நிலையில் நிழலிடும் அவலச்சுவை புலப்படாமல் போகாது. சாமுவெல் பெக்கெட்டின் நாடகங்களில் (comi-tragedies) வரும் கதாபாத்திரங்கள் போல், இருவரும் தங்கள் தங்கள் நிலையினின்றும் மீட்சியைக் காணமுடியாமல், நகைச்சுவையினால் அதை மூடி மறைக்கின்றனர்.
கூனி கூறுகின்றாள்: ‘ஊருகின்ற ஆமையை எடுத்து நேரே நிறுத்தினாற் போல், நெடிய தோற்றத்தோடு, தோல் இரண்டையும் விலாவுக்குள்ளே வீசி, நான் வராதே என்றாலும் என்னை நோக்கி காமனார் வரும் நடையைப் பார்’.
அவள் அவ்வறு சொன்னவுடனே, அவன் ‘நான்தான் காமன்’ என்று சொல்லி நடந்து காட்டுகிறான்.’இவன் நடையைப் பார்’ என்று சொல்லி அவள் அகமகிழ்கிறாள்.
இருவரும் இனி ஒருவரையொருவர் இகழ்வதில்லை என்று கூறி, அடுத்த கட்டமாக, அவர்கள் புணர்வதற்கான இடம் குறித்துப் பேசுகின்றனர்.
கூனி சொல்கிறாள்: ‘நாம் பணி செய்கிற இவ்வீட்டில் கூடல் இயலாது. பேயும் பேயும் கூடுகின்றன என்று மற்றவர்கள் நம்மை எள்ளி நகையாடுவர். பக்கத்துச் சோலைக்குள் புகுவோம். ஓலை நறுக்கினை எழுதிச் சுருளிட்டு அரக்கு இலச்சினை இட்டாற் போல, வாய் முயக்கம் பெற்று நிறையும்படி இறுகப் புல்லுவோம்.’
நிலவுரிமை பெற்ற தலைவனும் தலைவியும் கூடுவது களவொழுக்கத்தின் பாற்பட்ட romantic புணர்ச்சி. ஆனால், அடிநிலைமக்கள் பயிலும் களவு, பொருந்தாக் காமம் என்று வரையறுக்கப்பட்டுள்ள ‘பெருந்திணை’ என்கிறார் நச்சினார்க்கினியர்.
பாடலைப் படிக்கும்போது, ‘பெருந்திணை’யை மனத்தில் கொண்டுதான் இது எழுதப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி நம் மனத்தில் எழமால் இருக்காது.
குறிஞ்சி கலிப் பாட்டு ஒன்றில், தலைவன் தலைவியிடம் கூறுகின்றான்:
‘போற்றாய் களைநின் முதுக் குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயினல்லது நீர்கினிதென்று
உண்பவோ நீருண்பவர்.’
‘உன் இளைமைக்குப் பொருந்தாத முதுமைக்கான அறிவைக் கைவிடு. நீரை உண்பவர்கள் தங்களுக்கு தாகமாயிருப்பதினால் உண்பார்களேயன்றி, அது நீருக்கு இனிமையாய் இருக்குமென்றா உண்பார்கள்’ என்று தலைவன் சொல்லி, அவனை மறுக்கும் ஒரு பெண்ணை தன்னுடன் கூடுவதற்கு வற்புறுத்துகிறான்.
அடியோர் தலைவராக வந்த கைக்கிளைப் (ஒருதலைக் காமம்) பாட்டு என்கிறார் நச்சினார்க்கினியர். காரணம் தெரியுமா? அவர் கூறுகிறார்: ‘தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின்’, இப்பாட்டுடைத் தலைவன் அடிநிலை மக்களுள் ஒருவனாக இருக்கவேண்டுமென்பது அவர் முடிவு!.
சங்க காலப் புலவர்களுக்கிருந்த நகைச் சுவைஉணர்வு இலக்கண ஆசிரியர்களுக்கும், அவற்றுக்கு உரை கண்ட உரையாசிரியர்களுக்கும் இல்லை என்பதுதான் வருந்ததக்கச் செய்தி.
0