சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி வருகிறது. அதனால்தான், நாட்டிய சாஸ்திரத்தின் ஆசிரியராகிய பரதர் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர் என்கிறோம். அவர் காஞ்சியைச் சேர்ந்தவர் என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. சமஸ்கிருதம் வடவர் மொழி என்று கூறுவதே தவறு.
சமஸ்கிருதத் தத்துவ, கலை நுணுக்க நூல்கள் தென்னக அறிஞர்களால் எழுதப்பட்டன. பதினெட்டுப மஹா புராணங்களில் பெரும்பாலானவை தென்னகத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேன்டுமென்று டாக்டர் ஜிம்மர் கருதுகிறார்.
இந்தியக் கலைகள் பெரும்பான்மையானவற்றின் தாயகம் தென்னகந்தான். இவற்றில் பல சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. பரதர் காணும் ‘ரஸ’த்துக்கும் தொல்காப்பியர் குறிப்பிடும் ‘சுவை’க்கும் பல ஒற்றுமைக் கூறுகள் தெரிகின்றன.
0
‘ரஸம்’ என்றால் என்ன? ‘ரஸம்’ என்பதின் வேர்ச்சொல் ‘ரஸ்’, அதாவது ‘சுவைப்பது’. சுவைத்து அநுபவிப்பதே ‘ரஸ’மாகும். ‘மனத்துக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி அநுபவம்’ என்கிறார் பரத முனி.
இந்த ‘ரஸாநுபவம்’ என்பது, ‘நினைவாற்றல்’ ‘ அநுமானம்’ போன்ற உணர்வுகளினின்றும் வேறுபட்டது. ‘ நினைவாற்றல்’ ‘அநுமானம்’ ஆகியவற்றிற்கு, தர்க்க ரிதீயான மூளையின் செயலூக்கம் தேவை. ஆனால் ‘ரஸாநுபவம்’ இதயத்தோடு தொடர்பு கொண்ட வெளிப்பாடு.
ஆகவே, ஒரு நாடகத்தைப் பார்க்கின்றவர்களுடைய மனத்தில், அழகுணர்வைத் தூண்டுவதைத் தவிர, வேறு எந்தவிதமான பலனையும் எதிர்நோக்காத மன எழுச்சியே ‘ரஸம்’ என்பது நாட்டிய சாஸ்திரத்தின் முடிவு.
அக்காலத்தில், மக்களுக்கு ஏற்கெனவே நன்றாக அறிமுகமாயிருந்த மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசக் கதைகள்தாம் நாடகங்களாக நடிக்கப்பட்டன. முன்பே தீர்மானமான கதைகளில், அவை எப்படி நடித்துக் காட்டப்படுகின்றன, அதனால், மனத்தில் ஏற்படுகின்ற சலனங்கள் ஆகியவை மட்டுமே பார்வையாளர்களின் அக்கறையாக இருக்குமே தவிர, கதையின் கதைப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பலன், அவர்கள் மனத்தில் இருந்திருக்கவியலாது.
ஆகவே, நாடக அழகியியலின் அடிநாதம், நாடகம் தோற்றுவிக்கும் ‘ரஸ உணர்வு’ என்று அறியலாம்.‘ரஸம்’ என்பது தமிழில் ‘ சுவை’ எனப்படும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, மனித உணர்வுகளில் ஆதாரமானவை எட்டு. அவற்றில் ஏதேனுமொன்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு சமயத்தில் ஒரு ரஸாநுபவ உணர்வு தோன்றமுடியும் இந்த ஆதார உணர்வுகளுக்கு ‘ஸ்தாயிபாவங்கள்’ என்று பெயர்.
தமிழில் ‘சுவை’ எட்டு என்று கூறுகின்றது தொல்காப்பியம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் ‘சுவை’ ஒன்பது என்கிறார். தொல்காப்பியத்துக்கு உரைகண்ட பேராசிரியரும் ‘உருத்திர’த்தை ஒரு சுவையாகக் கொண்டு சுவை ஒன்பது என்று குறிப்பிடுகின்றார். சமஸ்கிருதத்தில், கவிதை ‘ரஸ’மாக ‘சாந்தம்’ சொல்லப்பட்டு, ஆக ஒன்பது ‘ரஸங்கள்’ என்று அறியப்படும் நாட்டிய சாஸ்திரத்தில், தமிழில் அறியப்படும் ‘ நடுவுநிலை’ அல்லது சமஸ்கிருத காவிய ரஸமாகச் சொல்லப்படும் ‘ சாந்தம்’ அல்லது,’சமநிலை’ குறிப்பிடப்படவில்லை.
உனர்வுகளைக் கடந்த ஒரு நிலையை நாடகத்தில் நடித்துக் காட்ட இயலாது என்ற காரணமாக இருந்திருக்கலாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், ‘சாந்தம்’ கவிதைக்குரிய ஒரு சுவையாகக் கூறப்பட்டிருக்க வேண்டுமென்பது சில அறிஞர் கருத்து.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் ‘நடுவுநிலைமை’யைப் பற்றிக் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. அது நாடகநிலையுள் வேண்டப்படும் என்கிறார். அதாவது, ‘நெஞ்சார்ந்த நெறியினும் செத்தினும் போழினும் ‘நெஞ்சோர்ந்து ஓடா நிலைமை’ என்பது விளக்கம். அதாவது, கதாபாத்திரத்தின் செறிந்த உணர்ச்சி நிலையில் தன்னை இழந்துவிடாமல், கதா பாத்திரத்தைப் புறத்தே நின்று உணர்த்தும் வகையில், ஒரு நடிகன்/நடிகை மேற்கொள்கின்ற நடுவுநிலை உணர்வு என்று கூறவியலும். இந்த உணர்வு நாடகத்துக்கு உரியதென்று பேராசிரியர் கூறுவதினால், சமஸ்கிருதத்தில் கூறப்படும் ‘சாந்த’ உணர்வுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இதற்கும், பிரெக்கட் (ஜெர்மானிய நாடக ஆசிரியர்/இயக்குனர்) கூறும் ‘அந்நியமாதல்’ (‘alienation’) என்பதற்கும் ஒற்றுமை உள்ளது. நாடகத்தில், ‘சாந்த’ ரஸம் நடித்துக்காட்ட இயலாது என்பதால்தான், இந்த ரஸம் , நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.
‘விபாவம்’, ‘அநுபாவம்’, ‘வியாபிசாரி பாவம்’ ஆகிய மூன்றும் இணையும்போது,’ரஸம்’ தோன்றும் என்கிறார் பரதமுனி. ‘விபாவம்’ என்றால் என்ன? ஓர் இளைஞன் மனத்தில் காதல் உணர்வு தோன்ற வேண்டுமென்றால் ஓர் அழகிய இளம்பெண் தேவை; அநுசரணையாக, ரம்மியமான சூழ்நிலை வேண்டும். இதற்கு நாடகத்தில் ‘விபாவம்’ என்று பெயர். விபாவம் இருவகைப்படும்.'(1)ஆலம்பன விபாவம்’, (2) உத்திபன விபாவம். ‘ஆலம்பன’ விபாவம் கதா பாத்திரங்களைக் குறிக்கும். ‘உத்திப்பன’ விபாவம், சூழ்நிலையைக் குறிக்கும் ( வனம், தென்றல், உரையாடல் முதலியன)
‘அநுபாவம்’ என்றால் என்ன? ஒரு கதா பாத்திரத்தின் உள்ளுணர்வுகளைத் தெரிவுக்கும் அங்க அசைவுகள்.’அழகிய பக்க வாட்ட பார்வை’, ‘புன்னகை’, ‘இனிய சொற்கள், ‘நாணமுற்று நிற்றல்’ போன்றவை ஒருத்தி ஒருவன் மீது கொள்ளும் காதலைத் தெரிவிக்கும். இதுதான் ‘அநுபாவம்’. தொல்காப்பியத்தில் இவை, அகத்திணையில், ‘களவொழுக்கத்தில்’ கூறப்படுகின்றன.
‘வியாபிசாரி பாவம்’ என்றால் என்ன? வியாபிசாரி பாவங்கள், ஸ்தாயிபாவங்களினின்றும் வேறுபட்டன. ஸ்தாயிபாவங்கள், ஒவ்வொருவரிடத்தும் ஆதாரமாக, அதே சமயத்தில் உள்ளடங்கியிருக்கும் உணர்வுகள். இவை புலப்படவேண்டுமென்றால் ஏதேனும் ஒன்று நிகழவேண்டும்
ஆனால், வியாபிசாரி பாவங்கள் ,கடலலைகள் போல் தோன்றித் தோன்றி மறைவனவாகும். வெவ்வேறு திசைகளில் தொடர்ந்து அவை சஞ்சரிப்பதின்மூலம், தோன்ற இருக்கிற ரஸத்தை அவை அறிவிக்கின்றன என்று நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது.
வியாபிசாரி பாவங்களுக்கும், ஸ்தாயிபாவங்களுக்குமிடையே உள்ள தொடர்பு அரசனுக்கும் அவன் பரிவாரங்களுக்குமிடையே உள்ள தொடர்பு என்கிறார் பரத முனி.
‘ நவரத்தின கற்கள் அணி செய்யும் ஒரு பொன்மாலையில் அக்கற்கள் தாமே பிரகாசிக்க வல்லன. அவற்றின் ஒளி பொன் சரட்டின் மீது விழும்போது, அப்பொன் மாலை, ஏற்கெனவே தனக்கிருக்கும் ஒளியுடன் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கும். ஸ்தாயிபாவங்கள் என்ற பொன்சரட்டின்மீது, மேலும் ஒளி விழச் செய்கின்ற நவரத்தின கற்கள் போன்றவைதாம், வியாபிசார பாவங்கள்’ என்கிறார் அபிநவகுப்தா.
வியாபிசார பாவங்கள் முப்பத்திமூன்று என்கிறது, நாட்டிய சாஸ்திரம். தொல்காப்பியத்தில் கூறப்படுகின்ற 32 மெய்ப்பாடுகளுக்கும் இவற்றிற்குமிடையே ஒற்றுமைகள் தெரிந்தாலும், தொல்காப்பியம், இம்மன உணர்வுகள், புறத்தில் தம்மை எவ்வாறு அறிவித்துக் கொள்கின்றன என்று கூறுவதில்தான் அதிக அக்கறை காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
‘அநுபாவம்’, தீர்மானத்துடன் வெளிப்படுத்தப்படும் உணர்வு. இது சாத்வீக பாவத்தினின்றும் வேறுபட்டது. பிற்காலத்தில், இரண்டும் ஒன்றுதானென்று கூறப்பட்டாலும், அது தவறு என்று தோன்றுகிறது. சாத்விக பாவம், தன்னிச்சையாகத் தோன்றும் உணர்வு. அதாவது, ‘involuntary reflexes’. நாடகத்துக்கு இதுவும் தேவை.
நாட்டியசாஸ்திரத்தில், விபாவம், அநுபாவம், வியாபிசாரி பாவம் ஆகிய மூன்றும் இணையும்போதுதான், ரஸம் தோன்றும் என்பது போல், தமிழ் மரபில், சுவைப்பொருள், சுவைப்போன்/ள், குறிப்பு, விறல் (சத்துவம்) ஆகிய நான்கும் கூடினால்தான், சுவை தோன்றும் என்கிறார், தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர்.
காதல் நாடகத்தில், தலைவன், சுவைப்பொருளாகவும், சுவைப்போனுமாக இருக்கிறான். தலைவி, சுவைப்பொருளாகவும், சுவைப்போளுமாக இருக்கிறாள். இது நாட்டிய சாஸ்திரத்தின்படி, விபாவம். ‘குறிப்பு’ என்பது, காதல் தோன்றும் உள்ளத்து நிகழ்வு. இது அநுபாவம். ‘விறல்’ (சத்துவம்) என்பது சரீரத்தின் புறக்குறிப்பின் மூலம் காதல் உணர்வைப் புலப்படுத்துதல். இதை வியாபிசாரி பாவம் என்றும் கூறலாம்.
தொல்காப்பியர், பரதமுனி ஆகிய இருவருடைய கருத்தின்படி, ஆதாரச்சுவைகள் (அச்சம், வியப்பு, இழிவு, காமம், அவலம், நகை) அல்லது, ஸ்தாயிபாவங்கள்( ரதி, ஹாஸம், சோகம், க்ரோதம், உத்ஸாகம், பயம், ஜுகுப்ஸம், விஸ்மயம்) ஆகியவைதாம் மற்றைய பாவங்கள் தொடர்பினால் சுவை/ ரஸம் தோன்றுவதற்குக் காரணமாகின்றன.
இந்திய ரஸ்/சுவை மரபின்படி எந்த நாடகமும் அவலச் சுவையுடன் முடியக்கூடாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரங்கத்தில் நாட்டிய சாஸ்திரத்தின்படி செத்த உடலைக் காட்ட இயலாது. அதனால்தான், பவபூதியின் உத்தர ராம சரிதத்தைத் தவிர,வேறு அவலசுவையுடன் முடியும் நாடகங்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப் படவில்லை.
தமிழிலும் அவலச் சுவையுடன் முடிந்திருக்க வேண்டிய சிலப்பதிகாரமும் (இது நாடகமாக எழுதப்பட்டிருக்க வேண்டியதுதான் என்பது என் கருத்து) இறுதியில், வஞ்சிக் காண்டத்துடன் எல்லாம் சுபமாக முடிகிறது. அவலச்சுவை முடிவு இலக்கியங்கள் இந்திய-பார்ஸிய-முகலாய உறவுக்குப் பின் உருவானவை. உதாரணம் லைலா-மஜ்னு, சலீம்-அனார்கலி கதைகள்.
தமிழில் நாடகம் காட்சிப் படிவங்களாகத்தான் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றனவே தவிர, அக்காலக் கட்டங்களில் இலக்கியத் தகுதியைப் பெறவில்லை. நாடகக்காரர்களுக்கு சமூக அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பது ‘நாட்டிய சாஸ்திரம்’ பற்றி வழங்கிவரும் ஒரு கதையே சான்று. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதரும் அவருடைய நூறு பிள்ளைகளும் தேவ உலகில்தான் இருந்தார்களாம்.
ஒரு சமயம் பரதருடைய பிள்ளைகள், தேவர்களையும் முனிவர்களையும் கிண்டல் செய்து ஒரு நாடகம் எழுதிப் போட்டார்களாம். கோபம் கொண்ட முனிவர்கள், பரதரையும் அவர் பிள்ளைகளையும் பூவுலகில் பிறக்கும்படிச் சபித்துவிட்டார்களாம்.
‘நீங்கள் பிராமணக் குலத்தில் பிறந்தாலும், நடிகர்கள் என்ற வகையில், இந்த பிராமண குலம், கீழ்ச்சாதிக்கு சமானமாகதான் இருக்கும்’ என்பது சாபம். பரதர் தென்னாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்தக் கதை உருவாகியிருக்கலாம். இதுதான் அக்காலத்தில் கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை.
அதனால்தான் ‘நாடகமாக’ எழுதப்பட்டிருக்க வேண்டிய சிலப்பதிகாரத்தைக் காவியமாக இளங்கோவடிகள் எழுதினார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
0
நல்ல பல தரவுத்தளங்கள் அடங்கிய கட்டுரை.. மிக்க மகிழ்ச்சி ங்க ஐயா