Skip to content
Home » இஸ்ரேல் #1 – தோற்றம்

இஸ்ரேல் #1 – தோற்றம்

விடுதலைப் பிரகடனம்

14 மே மாதம் 1948.

ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும் தருணம். ஆனால், அந்தக் கூட்டம் நடைபெற்ற நாளில் அந்தக் கட்டடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது!

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கழித்துதான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. எனினும் அந்தக் கட்டடத்திலும் சரி, அந்த நகரத்திலும் சரி, போர் முடியவில்லை. அங்கொரு தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்தது. அந்தத் தீர்மானம் அந்தப் பிரதேசத்தின் வரலாற்றை நிரந்தரமாக மாற்றும் என அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. ஏனெனில் கூட்டத்தில் பங்கேற்றவர்களே தங்களின் வாழ்நாளில் இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் என்றும் அதுவே நிலைக்கும் என்றும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம், அந்தக் கூட்டம் புதிய தேசமொன்றை நிறுவக் கூட்டப்பட்டிருந்தது.

ஒரு புதிய எழுச்சி… புதிய விடியல்… ஆனால், நகைமுரண் என்னவெனில் அந்தப் புதிய தேசம் இருண்ட கட்டடத்தில் பிறந்தது!

“இஸ்ரேல்.”

இதுவே அந்தப் புதிய தேசத்தின் பெயர்! இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின்மீது பரிவு கொண்ட உலகம் அந்தப் புதிய தேசத்தின் தோற்றத்தை எதிர்க்கவில்லை. அந்த தேசம் அமையவிருந்த பிரதேசத்தில் பெரும்பான்மை இருந்தவர்கள் அராபியர்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கவும் சம்மதத்தைப் பெறவும் எந்தவொரு நாடும் ஆர்வம் காட்டவில்லை. பிரச்னை அங்குதான் துவங்கியது.

தங்கள் மூதாதையர்களின் நிலமான மேற்கு ஆசியாவின் வளைகுடாப் பகுதியில் புதிய தேசம் அமையவிருந்தது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால், அராபியர்களின் அதிருப்தியையும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. வளைகுடா பகுதி ஆபிரஹாமிய மதங்கள் எனப்படும் கிறிஸ்துவம், யூதம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதத்தவருக்குமே பொதுவானதொரு நிலப்பகுதி. மூவருமே புனிதமாகக் கருதும் ஜெருசலேம் அமைந்த பகுதி.

இஸ்லாமியர்களுக்கு அவர்களின் இறைத்தூதர் சொர்க்கத்துக்கு புறப்பட்டுச் சென்ற இடம் என்பதால் ஜெருசலேம் புனிதமானது.

யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இடம் என்பதால் புனிதமானது.

யூதர்களுக்கென்று தனித் தேசமொன்றை அங்கு நிர்மாணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சிந்திக்கப்பட்டு வந்திருந்தது. ஒவ்வொரு முறையும் அந்தக் கோரிக்கை எழும்போது அந்தப் பகுதியில் கலவரங்களும் பொது அமைதிக் குலைவும் நிகழும். அந்தப் பகுதி கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இடம் பெற்றிருந்தது. அதோடு பன்னாட்டு ஆட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஜெருசலேமும் முக்கியமான இடமாக திகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த நகரம் மும்மதங்களுக்கும் புனித இடம் என்பதால் அந்த நகரை யார் ஆள்வது என்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பல போர்க்களங்கள், அரசுகள் என மாறி மாறி அந்தப் பிரதேசம் மோதல் நிறைந்த வரலாற்றோடு பின்னிப்பிணைந்திருந்தது. துருக்கிய ஆட்டோமான் பேரரசு இருந்த வரையில் ஜெருசலேம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. முதலாம் உலகப்போரின் இறுதியில் புதிய துருக்கி குடியரசு நிறுவப்பட்டதும் அந்த நகரின் ஆதிக்க உரிமை குறித்து மீண்டும் மோதல்கள் நிகழ்ந்தன.

இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படுகொலையால் அனுதாபம் பெற்ற யூதர்கள் தங்களின் தனித்தேசக் கோரிக்கையை வலியுறுத்தி வல்லரசு நாடுகளின் ஒப்புதலையும் பெற்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை அராபியர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் யூதர்களின் மூதாதையர் வாழ்ந்த நிலத்திலேயே புதிய தேசம் அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்தனர்.

இப்போது பிரச்னை தீவிரமடைந்தது. மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் (முன்னர் லீக் ஆஃப் நேஷன்ஸ்) சபையின் தீர்மானத்தின் மூலம் புதிய “இஸ்ரேல்” எனும் தேசத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஒட்டியே அந்தக் கட்டடத்தில் அன்று மாலை, அந்தக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நாவின் தீர்மானம் பிரிட்டிஷ் அரசின் ஆட்சியை நீக்கி பாலஸ்தீனப் பிரதேசத்தில் இரு தனி தேசங்களை உருவாக்கியது. அதாவது அராபியர்களுக்கு பாலஸ்தீனம்; யூதர்களுக்கு இஸ்ரேல்; ஜெருசலேம் நகரம் சிறப்புப் பன்னாட்டு ஆட்சியின் கீழ் என்று பரிந்துரைத்திருந்தது.

ஐ.நா தீர்மானம் 181(II) என்ற இத்தீர்மானத்தை ஒட்டியே தங்களின் தாய்நாட்டை நிறுவிக்கொள்ள அந்தக் கூட்டம் நடைபெற்றது. ‘வேர்ல்ட் சியோனிஸ்ட் காங்கிரஸ்’ எனும் அமைப்பினால் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு கூட்டம் துவங்குவதாக இரகசியமாக செய்தி பரிமாறப்பட்டு அழைப்பாளர்கள் வந்திருந்தனர். பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து பலரால் வர இயலவில்லை. இக்கூட்டம் டெல் அவிவ் நகரில் இருந்த அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இப்போது அந்தக் கட்டடம் விடுதலைக் கூடக் கட்டடம் என்று அழைக்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு டேவிட் பென்-குரியன் தன்னிடமிருந்த மரத்திலான சுத்தியலால் மேசையைத் தட்டி, கூட்டம் துவங்குவதை அறிவித்தார். அதன் பின்னர் ஹடிக்வா எனும் பாடலை அங்கு கூடியிருந்த சுமார் 250 பேர் இணைந்துப் பாடினர். இப்பாடல் பிற்காலத்தில் இஸ்ரேலின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. இப்பாடலில் 2000 வருட விருப்பமான, இறையாண்மை மிகுந்த தனி நாடு ஒன்றை தங்களின் மூதாதையர்களின் நிலத்தில் ஏற்படுத்துவது இடம் பெற்றுள்ளது. கூட்ட மேடையின் பின்புறத்தில் தியோடார் ஹெர்சல் எனும் சியோனிசச் சிந்தனையாளரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேடையின் இருபுறமும் இஸ்ரேலின் தேசியக் கொடியாக இன்று விளங்கும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட வெளிர் நீலநிறக் கொடிகள் தொங்க விடப்பட்டிருந்தன.

0

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னால் தியோடார் ஹெர்சலை ( மே 2, 1860 – ஜூலை 3, 1904) அறிமுகப்படுத்திக்கொள்வோம். ஹெர்சல் நவீன இஸ்ரேலின் தோற்றத்துக்கு மூலக்காரணமானவர். இஸ்ரேலின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். ஹெர்சல் சியோனியத்தைத் தோற்றுவித்தவரும்கூட. அதனால்தான் விடுதலைப் பிரகடனக் கூட்டத்தில் அவரது புகைப்படம் நடுவில் பிரதானமாக வைக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டில் பெஸ்ட் எனும் இடத்தில் ஹெர்சல் பிறந்தார். பின்னர் வியென்னாவுக்குப் புலம் பெயர்ந்த அவர், அங்கு சட்டம் படித்தார். ஆனாலும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு எழுத்தாளரானார். நாடகங்களையும் சிறுகதைகளையும் படைத்தார். அவர் 1891 முதல் 1895 ஆம் ஆண்டு வரை வியென்னாவின் நாளேடான நியூயே ஃப்ரீ பிரெஸ்ஸேவில் பாரிஸ் செய்தியாளராகப் பணி புரிந்தார். அந்தக் காலக்கட்டத்தில் பிரஞ்சு நாட்டில் காணப்பட்ட செமிடிச எதிர்ப்புக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர் யூதர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் துவங்கினார்.

இதன் விளைவாக யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்தார். தனது படைப்பான டெர் ஜுடேன்ஸ்டாட்டில் தனிதேசக் கோரிக்கையை முன் வைத்தார். அவரது காலத்தில் பிரஞ்சு ராணுவத்தில் யூத அதிகாரியான டிரேஃபுஸ் என்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் யூதர்களின் நிலைகுறித்து அவர் சிந்திக்கத் துவங்கினார். அவ்வழக்கின் விசாரணையை அவர் ஊன்றிக் கவனித்ததன் விளைவாகவே இம்முடிவுக்கு வந்தார். பின்னர் அவருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் மத்தியில் ஆதரவும் மேலை நாடுகளில் வாழ்ந்த செல்வந்த யூதர்களின் மத்தியில் ஆதரவின்மையையும் அவருக்கு கிடைத்தது.

1897-ல் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பேஸல் நகரில் முதல் சியோனிச மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டில் உலக சியோனிச நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் யூத தேசிய இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு தனி யூத தேசத்தை ஏற்படுத்தும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்குப் பரிகாரமாகத் தனி யூத தேசம் ஒன்று மட்டுமே தீர்வு என அந்த இயக்கம் நினைத்தது. பிற தீர்வுகள் எதையும் இயக்கத்தினர் ஏற்கவில்லை. சுய-நிர்ணய உரிமை மீட்பே உரிய இழப்பீடு என்று வாதிட்டனர். வியென்னாவில் 1904-ல் ஹெர்சல் மறைந்தார். அவரது பூதவுடலின் எச்சங்கள் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெருசலேம் நகரின் ஹெர்சல் மலைப்பகுதியில் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டது.

0

மீண்டும் வேர்ல்ட் சியோனிஸ்ட் காங்கிரஸுக்குத் திரும்புவோம். நீண்ட காலமாகத் தங்களை அழுத்தி வைத்திருந்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேறி, தங்களது இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் உத்வேகம் அந்தத் துல்லிய ஏற்பாடுகளில் வெளிப்பட்டன. இக்கூட்டத்துக்கு ஒரு நாள் முன்பு, 12 மே 1948-ல் விடுதலைப் பிரகடனத்தைத் தீர்மானிக்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் யூத தேசிய நிதி கட்டடத்தில் நடந்தது. இக்கூட்டத்தை மக்கள் நிர்வாகம் எனும் பொருளில் அழைக்கப்பட்ட மின்ஹலெட் ஹாம் நடத்தியது. சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல விஷயங்கள் அலசப்பட்டன. தனி தேசத்தின் எல்லைகள், மொழி, மதம் மற்றும் பெயர் உட்படப் பலவற்றை விவாதித்தனர். “இஸ்ரேல்” எனும் பெயரை டேவிட் பென்-குரியனே தேர்வு செய்தார்.

தீர்மானத்தை டேவிட் பென் குரியனே வாசிக்கவும் செய்தார். அதற்கு முன்னர் கூட்டத்தினரிடையே அவர், “ தனி தேசத்தினை நிறுவும் தீர்மானத்தின் பிரதியை இப்போது வாசிக்கிறேன். இத்தீர்மானம் தேசிய நிர்வாகச் சபையால் முதலில் வாசிக்கப்பட்டு ஏற்கப்பட்டது” என்றார். பின்னர் 16 நிமிடங்கள் தீர்மானத்தை வாசித்த அவர் இறுதியில் ‘இஸ்ரேலை நிறுவும் இத்தீர்மானத்தின் பிரதியை அங்கீகரிக்க அனைவரும் எழுந்து நிற்கவும்’ என்றார். அங்கிருந்த யூத குருமாரான பிஷ்மான் என்பவரை விசேஷ வாழ்த்துரையான ஷீஹேசெயானுவைப் பாடும்படிக் கேட்டுக்கொண்டார்.

இப்பாடல் சிறப்பு நிகழ்வுகளில் பாடப்படும் பொதுவான யூதப் பாடல். இதனை சுமார் 1,500 ஆண்டுகளாக யூதர்கள் பாடி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சுவையான விஷயம் என்னவென்றால் பென்-குரியன் மின்ஹெலெட் ஹாம் கூட்டத்தில் ஐ.நாவின் தீர்மானத்தின் மீதோ பாஸ்ஃபோர் பிரகடனத்தின் மீதோ ஆதரவைக் கோரவில்லை. மாறாக அமெரிக்காவின் தேர்வுகளான போர் நிறுத்தம் அல்லது தனி தேசம் என்பனவற்றின் மீதே வாக்கெடுப்பை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பத்துப் பேரில் அறுவர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானத்தின் நகலில் முதன் முதலாக டேவிட் பென்-குரியனே கையொப்பம் இட்டார். பின்னர் தேசிய நிர்வாகச் சபையின் 37 உறுப்பினர்களும் கையொப்பம் இட்டனர். ஆயினும் இக்கூட்டத்தில் ஜெருசலேமில் முற்றுகையில் சிக்கியிருந்த 11 உறுப்பினர்களும், அமெரிக்காவில் வசித்த ஒருவரும் கையொப்பம் இட வாய்ப்பில்லாமல் போனது. மீதமிருந்த 25 உறுப்பினர்களும் கையொப்பம் இட்டனர். அந்த 25 உறுப்பினர்களில் இரண்டு பெண்மணிகளும் அடங்குவர். பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக இருந்த கோல்டா மேயரும் யூதத் தன்னார்வ செயற்பாட்டாளரான ராச்சல் கோஹன் – காகனுமே அந்த இருவர்.

கையொப்பம் இட்டவர்களில் டேவிட் பென் -குரியன் மற்றும் விடுதலைப் பிரகடனத்துக்குப் பிறகு உடனடியாக அதிபராகப் பதவியேற்ற வைஸ்மான் ஆகியோர் உட்பட பலர் பிற்காலத்தில் உயர் பதவிகளை அலங்கரித்தனர். இஸ்ரேலின் விடுதலைப் பெருநாளாக மே 14 ஆம் தேதியே அனுசரிக்கப்படுகிறது.

தீர்மானத்தின் அவசரமும் அவசியமும்

யூதர்களுக்குத் தனி தேசமொன்றை நிறுவும் சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு அளவில் விவாதிக்கப்பட்டு வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சியோனிஸ்ட் இயக்கங்கள் இக்கோரிக்கையைத் தீவிரமாக முன் வைக்கத் துவங்கிவிட்டன. இச்சூழலில் 1917-ல் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர், பிரிட்டிஷ் யூதச் சமூகத் தலைவரான வால்ட்டர் ராத்ஸ்சைல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பிரிட்டிஷ் அரசியாரின் அரசு யூத மக்களுக்கு பாலஸ்தீனியப் பகுதியில் தாய்நாடு ஒன்றை அமைக்கும் கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அத்தகைய ஏற்பாடு அங்கு வசிக்கும் யூதர் அல்லாத மக்களின் மத, குடிமை உரிமைகளைப் பாதுகாக்கும்; உலகம் முழுதும் வாழும் யூத மக்களின் உரிமைகளுக்கும், அரசியல் தகுதிகளுக்கும் எவ்விதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது; அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். இது பால்ஃபோர் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் பிரிட்டிஷ் அரசு சியோனிசக் கருத்தியலான தனி தேச நிர்மாணத்தை ஆதரித்தது. இதை அராபியர்கள் துளியும் ஏற்கவில்லை. ஏனெனில் முதல் உலகப் போர் முடிவடையும் தறுவாயில் தனி தேசமொன்றை யூதர்களுக்கு உருவாக்குவது தங்களின் எதிர்கால நலன்களுக்கு உகந்தது அல்ல என்றே அவர்கள் கருதினர். மேலும் துருக்கிய ஆட்டோமான் பேரரசிலிருந்து விரைவில் விடுதலை பெறவுள்ள அராபிய பகுதிகளில் இறையாண்மை கொண்ட நாடுகளை ஏற்படுத்தும் திட்டங்களும் நிலுவையில் இருந்தன. ஆனால், சவூதி அரேபியா மட்டுமே தெளிவானதொரு எல்லைகளுடன் ஒரு தனிநாடாக உருவாகும் வாய்ப்புடன் இருந்தது.

முதலாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு ஏற்பாட்டின்படி புதிய நாடுகளான ஜோர்டன், சிரியா, ஈராக் மற்றும் லெபனான் ஆகியன உருவாக்கப்பட்டன. அதிலும் கூட மொழி, இன அடிப்படையில் பல சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அராபியர்கள் தங்களின் புதிய கறுப்புத் தங்கத்தை எவ்வாறு அரசியல் லாபங்களுக்கும், தங்களின் அரசாட்சி அல்லது தொடர் ஆதிக்கத்துக்கும் பயன்படுத்துவது என்பதை அதிகம் சிந்தித்திராத காலமாகவும் இருந்தது. தங்களின் உரிமையை மேலை/ஐரோப்பியர் கூட்டணி புறம் தள்ளுவதாகவே அவர்கள் நினைத்தனர். அதனால் அந்தப் பகுதியில் பல காலமாக போர்களும் கலவரங்களும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தன.

தனி யூத தேசம் ஏற்பட வழிவகுத்த ஐ.நா தீர்மானம் நிறைவேறிய காலத்தில் பாலஸ்தீனத்தில் சுமார் 5,00,0 00 யூதர்கள் மட்டுமே வசித்து வந்தனர். அவர்களில் கணிசமானோர் ஜெருசலேம் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்து வந்தனர். அந்தப் பகுதிகளில்தான் அதிகம் கலவரங்கள் நிகழ்ந்தன. எதை விட்டுக்கொடுத்தாலும் ஜெருசலேத்தை யூதர்களுக்கு விட்டுக்கொடுப்பதைக் கௌரவப் பிரச்னையாக இன்றுவரை அராபியர்கள் கருதுகின்றனர். எனவே ஜெருசலேத்தைத் தனி நிர்வாகப் பகுதியாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆட்டோமான் பேரரசிடமிருந்து பாலஸ்தீனப் பகுதிகளைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் அரசு அந்தப் பிரதேசத்தில் இரு தேசங்களை அமைக்க முடிவு செய்தது. அதனை பீல் கமிஷன் எனும் ஆணையத்தின் அறிக்கை மூலம் நிறைவேற்ற முனைந்தது. ஆயினும் 1936-39 வரை ஏற்பட்ட அராபியர்களின் கடும் எதிர்ப்பாலும் கலவரங்களாலும் கைவிட வேண்டியிருந்தது.

இப்படியான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. யூதப் படுகொலைகளின் காரணமாக உலக அனுதாபம் இஸ்ரேலின் தோற்றத்துக்குச் சாதகமாக அமைந்தது. என்றாலும் பிரிட்டிஷ் அரசு இப்பிரச்னையைத் தானே தீர்மானிக்காமல் ஐ.நாவிடம் சாமர்த்தியமாக நகர்த்தியது. ஐ.நாவும் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று தனி தேசத்தை நிர்மாணிப்பதை ஏற்றுக்கொண்டது. 1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் ஐ.நாவின் தீர்மானம் நிறைவேறியது.

அதன்படி பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தால் இரு தனி தேசங்களையும், சிறப்பு நிர்வாகப் பகுதியாக ஜெருசலேத்தையும் அமைத்துக்கொள்ளலாம். பிரிட்டிஷ் படைகள் அந்தப் பகுதியிலிருந்து அக்டோபர் 1, 1948 -கு முன்னராக வெளியேறவும் ஐ.நா தீர்மானம் காலக்கெடு விதித்தது. அராபிய நாடுகள் இரு தேச உருவாக்கத்தை ஏற்காமல் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இச்சூழலில்தான் யூத அமைப்பு ரகசியமாக, அவசரமாகக் கூடித் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ரகசியக் கூட்டமாக நடத்துவதற்கு அராபியர் தாக்குதல் நடத்தலாம் எனும் அச்சம் ஒரு காரணம். பிரிட்டிஷ் அரசும் கூட இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றுவதை தடுத்துவிடலாம் என்பது இரண்டாவது காரணம். ஏனெனில் ஐ.நா சபையின் தீர்மானத்தின்படி எப்படியேனும் யூத நாடு ஒன்றை உருவாக்க வல்லரசு நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தச் சூழலில் அவசரப்பட்டு யூத அரசியல் அமைப்புகள் தாங்களே சூழலைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று அது நினைக்கலாம். தவிரவும், அராபியர்களையும் மொத்தமாக விரோதித்துக்கொள்ள விரும்பாமலும் இருக்கலாம்.

யூதப் படுகொலைகள் நடந்த காலத்தில் அராபியர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஹிட்லரையும், ஜெர்மனியையும் ஆதரித்தே வந்தனர். பல அராபிய நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வல்லரசுகள் தங்களின் தன்னலத்தை ஒட்டிப் பல புதிய அராபிய நாடுகளை உருவாக்கியது எரிச்சலையே கொடுத்தது. மேலும் எண்ணெய் வளத்தின் மூலம் அதிகப் பலன்களை அடையவிடாமல் செய்து வருவதும் மற்றொரு அரசியல் – பொருளாதாரக் காரணமாக இருந்தது.

இச்சூழலில் யூதப் படுகொலையைக் காரணம் காட்டி தாங்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் நிலப்பகுதியை சியோனிசக் கருத்தியலுக்கு தாரை வார்ப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றே அவர்கள் கருதினர். தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அராபிய அமைப்பையும் உருவாக்கினர். யூதப் படுகொலைகளை நிகழ்த்தியது கிறிஸ்தவர்கள் என்பதால் தங்களது நிலப்பகுதியில்அதே கிறிஸ்தவ நாடுகள், யூத தேசம் அமைப்பது பொருத்தமற்றது என்பதும் அவர்களது வாதம். அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடு ஒன்றிலோ, (ரஷ்யா, போலந்து, ஹங்கேரி மற்றும் யூகோஸ்லோவியா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில்) அமைப்பதே முறையானது என்றே வாதிட்டனர்.

ஆனால், யூதர்கள் ஜெருசலேம் நிலப்பகுதியில் தங்களுக்கும் பாரம்பரிய உரிமை இருப்பதால் அங்குதான் தனி தேசம் அமையவேண்டும் என்று வாதிட்டனர். மேலும் பாலஸ்தீனம் தனிநாடாகும் வாய்ப்புள்ளதாலும், ஜெருசலேம் சிறப்பு நிர்வாகப் பகுதியாக மாற்றப்படுவதாலும் அராபியர்களின் வாதங்களை சர்வதேச சமூகமும் ஏற்கவில்லை. இது தொடர்பான தீர்மானத்தில் 30 ற்கும் மேற்பட்ட நாடுகள் ஐ.நா தீர்மானத்தை ஆதரித்தே வாக்களித்தனர்.

தனி தேசமும் அங்கீகாரமும்

இஸ்ரேலை முதன் முதலாக அங்கீகரித்த நாடு எது தெரியுமா… அதிர்ச்சியடைய வேண்டாம். அது சோவியத் ஒன்றியமே. தங்களது நாட்டிலிருந்த சுமார் 2 லட்சம் யூதர்கள் புதிய தேசமான இஸ்ரேலுக்குக் குடிபெயரும் வாய்ப்பிருந்த்து; தனது கிழக்கு ஐரோப்பிய சகாக்களின் தேசங்களில் வாழ்ந்த யூதர்களும் புதிய தேசத்துக்குக் குடிபெயரும் வாய்ப்பிருந்தது. இதனால், சோவியத் ஒன்றியம் அச்செயலைச் செய்திருக்கலாம். மேலும், பிற வல்லரசு நாடுகளின் செல்வாக்கைக் குறைக்கும் விதமாகவும் தங்களது குடிமக்களை அனுப்பியிருக்கலாம். ஒருவிதத்தில் அது சரிதான்; ஏனெனில் இன்றுவரை யூத அரசியலில் சியோனிஸ்டுகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் முழுமையாக நீடித்திருக்காமல் இருப்பதற்கு மதச்சார்ப்பற்ற அல்லது யூத மத அடிப்படைவாதத்தில் ஊறாத மக்கள் தொகை மிக முக்கியக் காரணமாகும்.

அதேசமயம் பாலஸ்தீனத்திலும், உலகம் முழுதும் வாழ்ந்து வந்த அனைத்து யூத மக்களும் சியோனிஸ்ட்கள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் சியோனிசக் கோட்பாட்டை உருவாக்கிய ஹெர்சலுக்கு பணக்கார யூதர்களிடம் அதிக செல்வாக்கு கிடைக்கவில்லை. ஆனால், சியோனிஸ்ட்களின் கை யூதப் படுகொலைகளால்தான் ஓங்கியது என்பதை மறுக்க இயலாது. அதேபோல் இஸ்ரேலுக்கான உலக நாடுகளின் ஆதரவை சியோனிஸ்ட்களுக்கான அங்கீகாரமாகவோ ஆதரவாகவோ கருதவும் இயலாது.

புதிய தேசத்துக்கான அங்கீகாரம் உடனடியாக 15 மே 1948 ஆம் ஆண்டு அன்றே அமெரிக்காவினால் நடைமுறை ரீதியில் வழங்கப்பட்டது. மே 17 ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வழங்கியது. இதைத் தொடர்ந்து ஈரான் (ஐநாவில் தனி தேச தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது), குவாதமாலா, ஐஸ்லாந்து, நிகாரகுவா, ரோமேனியா மற்றும் உருகுவே ஆகியவை அங்கீகரித்தன. சோவியத் ஒன்றியத்தின் முகாமில் இருந்த போலந்து, யூகோஸ்லோவியா மற்றும் செக்கஸ்லோவேக்கியா ஆகியனவும் அங்கீகாரம் வழங்கின. மேலும், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் அங்கீகாரம் வழங்கின.

இஸ்ரேலில் முதல் தேர்தல் நடைபெற்றவுடன் அமெரிக்கா தனது அதிகாரபூர்வ அங்கீகாரத்தை வழங்கியது. ஐ.நாவின் பொதுச் சபையின் தீர்மானம் 273 (III) இன் மூலம் இஸ்ரேல் ஐ.நாவின் உறுப்பு நாடாக 11 மே 1949 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டது. செப், 1950-ல் நம் தேசம், இஸ்ரேலை அங்கீகரித்தது.

(தொடரும்)

 

குறிப்புதவிப் பட்டியல்:
A Brief History of Israel by Bernard Reich – Info Base Publication, 2008.
https://en.wikipedia.org/wiki/Israeli_Declaration_of_Independence
https://mfa.gov.il/Jubilee-years/Pages/1947-UN-General-Assembly-Resolution-181-The-international-community-says-Yes-to-the-establishment-of-the-State-of-Israel.aspx
https://israeled.org/resources/documents/israel-declaration-independence/

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *