முதல் இருபதாம் நூற்றாண்டு வரை இஸ்ரேல் எனும் பெயர்கொண்ட நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. யூதர்களின் வரலாறும் ஆபிரஹாம் காலத்திலிருந்து துவங்குவதாக யூத பைபிள் (ஆதியாகமம் எனப்படும் ‘தி புக் ஆஃப் ஜெனிசஸ்) கூறுகிறது. கி.மு 20 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆபிரஹாம் இஸ்ரேலியர்களின் மூதாதையர்கள் நிலமான கனான் நிலப்பரப்புக்குள் குடியேறியதாக பைபிள் கூறுகிறது.
அவர் இன்றைய பாக்தாதுக்கு 200 மைல்கள் தொலைவிலிருந்ததால் அல்-மொகய்யார் எனும் இடத்திலிருந்து கடவுளின் அழைப்பை ஏற்று புலம் பெயர்ந்ததாகவும் ஆதியாகமம் கூறுகிறது. அந்நிலப்பரப்பு ஏறக்குறைய இன்றைய இஸ்ரேலுடன் மேற்குக் கரைப்பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக இருந்ததாகவும் பைபிளின் குறிப்புகள் உணர்த்துகின்றன.
அந்நிலப்பரப்புக்கு மேற்கே மத்தியத் தரைக்கடலும், கிழக்கில் அராபியப் பாலைவனங்களும், தெற்கே எகிப்தும், வடக்கே மெசபடோமியாவும் (இன்றைய ஈராக்கும்) எல்லைகளாக இருந்துள்ளன. அவ்வாறு புலம் பெயர்ந்த மக்களில் பல்வேறு மொழி பேசும் இனக்குழுக்கள்/பழங்குடியினர் இருந்தனர். அதில் யூத மொழியான ஹீப்ரூவைப் பேசுவோரும் இருந்தனர். ஆபிரஹாம் இவ்வாறு புலம் பெயர்ந்த குழுக்களில் ஒன்றின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆபிரஹாம் அரை-நாடோடியாக இருந்தவர்; அவரிடம் விவசாயத்துக்கு உதவும் விலங்குகளான மாடு, ஆடு, செம்மறியாடு போன்றவை ஏராளமாக இருந்தன; எனவே அவர் அக்குழுக்களில் செல்வந்தராக காணப்பட்டவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஹீப்ரூக்களில் ஓரிறை நம்பிக்கையைக் கொண்டவர்களில் முதலாமவர் என்றும் ஆபிரஹாம் கூறப்படுகிறார். ஆபிரஹமாமும் அவரது மகன் யிட்ஷாக் கும் (ஐசாக்கும்) பேரன் ஜேக்கபும் (யாக்கோபூம்) ஹிப்ரானின் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்மூவருமே இஸ்ரேலியர்களின் ஆண் மரபுவழி சமூகத்தைக் கட்டமைத்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
முதலில் கானன் நிலப்பரப்பு என்ற அறியப்பட்ட பிரதேசமே பின்னர் இஸ்ரேல் என்று பெயரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் எனும் பெயர் ஜேக்கப்பின் மற்றொரு பெயராகும். அவரது 12 மகன்களே பின்னர் பல்வேறு இனக்குழுக்களாக ஆகி, இஸ்ரேலிய சமூகத்தைக் கட்டமைத்தாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் எனும் தேசத்தின் உருவாக்கம்
கி.மு, 1300 ஆம் ஆண்டுகளில் எகிப்து நாட்டிலிருந்து மோசஸ், தனது கூட்டத்தாருடன் புதிய நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்தபின்னரே நிகழ்ந்ததாகவும் கருதப்படுகிறது.
எகிப்திலிருந்து வெளியேறி சினாய் பகுதியில் 40 ஆண்டுகள் கழித்த பின்னர் தங்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட இஸ்ரேல் எனும் நிலப்பரப்புக்குத் தன் மக்களை மோசஸ் அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கடவுளால் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பைபிள் வரலாற்றைச் சுட்டிக்காட்டியே இஸ்ரேலிய மக்கள் தாங்கள் இன்றைய இஸ்ரேலிய நிலப்பரப்பில் 3,300 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கோருகின்றனர்.
மோசஸ் இறப்பதற்கு முன்னர் ஜோஷூவாவைத் தனது தலைமைப்பதவிக்கான வாரிசாக அறிவிக்கிறார். பல்வேறு மாற்றங்களுடன் 12 பழங்குடி சமூகங்களால் இஸ்ரேல் எனும் தேசத்தின் நிர்மாணமும் நிகழ்கிறது. அதன் பிறகு கி.மு 1000 முதல் கி.மு 587 வரையிலான காலகட்டம் மன்னர்களின் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அதிகம் அறியப்பட்டப் பெயர் அரசர் டேவிட். இவர் பிலிஸ்தீனியர்களின் படைத்தலைவனான கோலியாத்தை வென்று தனது அரசை நிலைநிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரே ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக ஆக்கியதாகவும் கூறப்படுகிறது. அவரது மகன் சாலமன் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் முதலாவது கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கி.மு 587-ல் பாபிலோனியாவின் நெபுசாட்நேசாரின் இராணுவத்தால் ஜெருசலேம் நகரம் கைப்பற்றப்பட்டு, கோயில் அழிக்கப்பட்டதாகவும் அவ்வாண்டு முதல் நவீன இஸ்ரேல் நிறுவப்படும் வரையில் இஸ்ரேல் எனும் நிலப்பரப்பு அயலாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாகவும் சுட்டப்படுகிறது. பாபிலோனியர்கள் முதல் பாரசீகர், கிரேக்கர், ரோமானியர், பைசாண்டைன் பேரரசுகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ சிலுவைப்போர்ப்படையினர், துருக்கி ஆட்டோமான் பேரரசு மற்றும் கடைசியாக பிரிட்டிஷ் பேரரசு என நெடு நீண்ட காலம் இஸ்ரேலிய நிலப்பகுதி பிறரது ஆதிக்கத்தின் கீழ் ஆளப்பட்டதாகச் சுட்டிக்காட்டும் இஸ்ரேலியர்கள் தங்களுக்கான நிலப்பகுதி தங்களிடம் திரும்ப வந்துள்ளது என்றே நம்புகின்றனர்.
இந்த வலுவான நம்பிக்கையே இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றால் மிகையில்லை.
இஸ்ரேலியரின் மன்னராட்சிக்காலம் (கி.மு 1020-930)
முதல் அரசரான சவுல் தனக்கு பின்னர் வந்த தாவீதின் அரசாட்சிக் காலத்தையும் தனித்தனியே வாழ்ந்து வந்த பழங்குடியின சமூகத்தையும் இணைக்கும் பணியினைச் செய்து வந்தார். தாவீது பிலிஸ்தீனியர்களின் போர்ப்படைத் தலைவரான கோலியாத்தை வென்று தனது அரசினை நிறுவினார். பின்னர் தனது அரசை அனைத்து திசைகளிலும் விரிவுபடுத்தினார். முதலில் மேய்ச்சல்க்காரராக இருந்த தாவூது அரசராக உயர்ந்தார். போர் வீரராக உருவெடுத்து பிணக்கில் இருந்த அனைத்து பழங்குடியினரையும் இணைத்தார்.
மத்திய கிழக்கில் ஒரு வலிமையான அரசை தாவீது நிறுவியதாக பைபிள் குறிப்பிடுகிறது. அவரது அரசு ஜோர்டான் நதியின் மேற்கிலும், ஜெருசலேமைக் கைப்பற்றியதால் அதன் வழியே வடக்கு-தெற்கு நிலப்பிரதேசத்தை இணைத்தார். அவரது அரசுக்கான அங்கீகாரம் எகிப்திலிருந்து யூப்ரடீஸ் நதியின் கரைவரையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. வலுவான நிர்வாக அமைப்பையும் அவர் உருவாக்கினார் என்றும், மத்திய தரைக்கடல் கடந்து பொருளாதார உறவுகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
தாவீது, கடவுளால் மோசஸ்சுக்கு வழங்கப்பட்ட ‘ஆர்க் ஆஃப் தி கோவனண்ட்’டை (உடன்படிக்கைப் பேழை) ஜெருசலேமுக்குக் கொண்டு வந்ததாகவும் பைபிள் கூறுகிறது. இதன் மூலம் தனது அரசை ஒன்றுபடுத்தி ஒருங்கிணைந்த இஸ்ரேலையும் உருவாக்கினார், தாவூது. இதன் மூலம் ஜெருசலேம் அரசியல், ஆன்மிக அதிகார மையமாக உருவெடுத்தது என்றும், யூதக் கோயிலின் பூசாரிகள் யூத மதத்தின் மையமாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் மாறினர்.
தாவீதுக்குப் பிறகு அவரது மகன் சாலமன் (கி.மு. 965-930) தனது அரசை வலுவாக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அண்டை நாடுகளுடன் உடன்படிக்கைகளையும், ராஜதந்திர ரீதியிலான திருமணங்களும் கூட நிகழ்ந்தன. இப்படியான நடவடிக்கைகளால் இஸ்ரேல் அன்றைய பிற வலிமையான அரசுகளுக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற அரசாட்சியாக விளங்கியது. சாலமன் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை முன்னெடுத்தார். அயல் நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தினார். அதன் மூலம் தனிமங்களைப் பண்டங்களாக்கி வர்த்தகம் செய்யப்பட்டது. தாமிரம், உலோகம் போன்றவை வார்ப்படம் செய்யப்பட்டன. பொருளாதார ரீதியிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கோட்டைகள் அமைத்து பாதுகாத்தார். புதிய இடங்களையும், கோட்டைகளையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய இடங்களில் மகுடம் சூடுவது போன்று விளங்கியவை அரண்மனையும், ஜெருசலேமின் கோயிலும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முடியாட்சியில் பிளவு
தாவீதின் மகனான ஷோலோமானின் கடைசிக் காலத்தில் பூசல்கள் தோன்றின. அவர் மறைந்த பிறகு வடக்கில் இருந்த மக்கள் அவரது மகனான ரேஹோபோமை மன்னராக ஏற்கவில்லை. வடபுறப் பகுதி இஸ்ரேல் எனும் பெயருடன் இருந்தது. தென்புறப்பகுதி ஜூடா எனும் பெயருடன் இருந்தது. யூத பைபிளின் கூற்றுப்படி வரிகளும், இலவச உழைப்பும் (அரசுக்காக/நாட்டுக்காகச் செய்ய வேண்டியது) காரணமாக இருந்தனவாம். ஆயினும் இரு தனித்தனி நாடுகளும் முறையே 200 மற்றும் 400 ஆண்டு காலங்கள் நிலைத்து நின்றதாகவும் கூறப்படுகின்றது.
இஸ்ரேல் பகுதியில் 10 பழங்குடியினர் வாழ்ந்தனர். அதன் தலைநகரம் சமாரியா. இதனை 19 அரசர்கள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. தென் பகுதி ஜூடாவில் தாவீதின் வாரிசுகள் 400 ஆண்டுகாலம் ஆண்டனர். வட பகுதி, இஸ்ரேல், தென்பகுதியை விட வளமானதாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. வட பகுதியில் அதிக மக்கள் தொகையும், வளமான நிலங்களும், வர்த்தகப்பாதைகளும் இருந்ததால் அதிக வளர்ச்சியைக் கொண்டிருந்தது எனப்படுகிறது.
முதலில் இஸ்ரேலும், பின்னர் ஜூடாவும் அசீரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் ஆதிக்கத்தினுள் சென்றன. இஸ்ரேலியர்கள் அகதிகளாக மாறி அப்பிரதேசத்தை விட்டு வெளியேறினர். யூத எனப் பொருள்படும் ஜூ எனும் ஆங்கிலச் சொல் ‘யேஹூடி’ எனும் ஹீப்ரூ மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ‘யேஹூடி என்றால் ஜூடாவின் மனிதன் என்பதாகும். கி.மு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அசீரியன் ஆதிக்கம் மறைந்தது. இதைத் தொடர்ந்து பாபிலோனியாவின் நெபூசாட்ரேசர் ஜெருசலேத்தை முற்றுகையிட்டு, அரசரைக் கைது செய்தார். ஜூடா முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. யூதக் கோவில் அழிக்கப்பட்டது என்றும் கி.மு 586 ஆம் ஆண்டு முதல் அப்பிரதேசத்தை விட்டு யூதர்கள் வெளியேறினர் என்றும் கூறப்படுகிறது. அப்போது முதல் யூதர்கள் தங்களது மூதாதையர்களின் நிலத்தில் வாழ்வது 1948 வரை நிரந்தரமாகச் சாத்தியப்படவில்லை.
பாபிலோனிய வெற்றியினால் கோயில் இடிக்கப்பட்டதானது முதல் யூத பொது அரசை நீக்கியதோடு யூத வெளிநாடு வாழ் மக்களையும் உருவாக்கியது. அவ்வாறு வெளிநாடுகளில் வாழும் யூதர்கள் மத்தியில் வேறு சில சிந்தனைகள் உருவாயின. முதன்முதலாக யூத வாழ்க்கைமுறையும், சிந்தனையும் முக்கியமானதாக எண்ணப்பட்டது. யூத அடையாளம் எனும் ஒத்துழைப்பும், ஜெருசலேமைக் குறித்த எண்ணங்களும் யூதச் சிந்தனைகளின் மையமாகவும் ஆகின.
பாரசீக மற்றும் ஹெலினிஸ்ட் காலங்கள் (கி.மு. 538-142)
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீக அரசர் சைருஸ் பாபிலோனியர்களைத் தோற்கடித்து யூதர்களை மறுபடியும் அவர்களது நிலத்தினுள் வாழ அனுமதித்தார். மறுபடியும் கோயிலைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார். ஆனால் சிலர் மட்டுமே திரும்பினார்; பெரும்பாலோர் வெளிநாடுகளிலேயே தங்கினர். கி.மு. 538-ல் சுமார் 50,000 பேர் இஸ்ரேல் திரும்பினர். கோயில் 520 -515 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அதன் பிறகு ஒரு நூற்றாண்டு கழித்து மற்றொரு கூட்டம் வந்தது. பாரசீகர் காலத்திலும், பின்னர் ஏற்பட்ட ஹெலினிஸ்ட் ஆட்சியிலும் யூதர்கள் சுயாட்சி பெற்றிருந்தனர் எனக்கூறப்படுகிறது.
மீண்டும் கோயிலைக் கட்டியதோடு, ஜெருசலேமைச் சுற்றி பாதுகாப்புச் சுவரும் கட்டப்பட்டது. அவர்களது உயர்ச் சபைகளான நாடாளுமன்றம் போன்றதொரு அவையும், குருமார்களின் ஆன்மிக சபையும் தோற்றுவிக்கப்பட்டன. இதுவும் கூட நிலைக்கவில்லை. அலெக்சாண்டர் படையெடுப்பினால் பாரசீக அரசு வீழ்த்தப்பட்டது. ஜூடாவும் கூடவே வீழ்த்தப்பட்டது. அலெக்சாண்டரின் மறைவுக்குப் பிறகு அவரது தளபதிகளால் பாரசீகப் பேரரசு துண்டாடப்பட்டது. முதலாம் டாலமியின் வசம் சென்ற ஜூடா பின்னர் அவரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற செலுசிட்ஸ் அண்டியோசிட்ஸ் யூத மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கினார். ஹெலினிஸ்ட் ஆட்சியில் கோயிலும் இடிக்கப்பட்டது; யூத மதம் தடைச் செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கிரேக்கப் பண்பாடு புகுத்தப்பட்டது. இதற்கு எதிராக கி.மு 166-ல் கிளர்ச்சி வெடித்தது.
முதலில் மட்டாதியாஸ்சும் பின்னர் அவரது மகன் மகாபி என்று அறியப்படும் ஜூடாவும் செலிசிட்களைத் தொடர்ச்சியான போர்களில் வென்று, கோயிலை மீண்டும் புனிதப்படுத்தி, வழிபாட்டு சுதந்திரத்தையும் மீட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வுகளை வெளிச்சத்தின் விருந்து எனும் பொருள்படும் ஹனுக்கா அனுசரிக்கப்படுகிறது.
(தொடரும்)
குறிப்புதவிப் பட்டியல்:
A Brief History of Israel by Bernard Reich – Info Base Publication, 2008.
www.jewishvirtuallibrary.org/history-and-overivew-of-the-western-wall
www.smithsonianmag.com/history/what-is-beneath-the-temple-mount-920764/
www.britannica.com/video/213453/Top-questions-answers-Abraham
www.science.co.il/israel-history/
www.livescience.com/55774-ancient-israel.html
www.smithsonianmag.com/history/what-is-beneath-the-temple-mount-920764/