ஹாஸ்மோனியன் ஆட்சி (கி.மு 143 – 63 வரை)
ஹாஸ்மோனியன் வெற்றிகளால் செலுசிட் யூதர்களுக்கான சுயாட்சியை மீண்டும் வழங்கினார். செலுசிட் அரசு கி.மு. 129-ல் வீழ்ந்த உடன் முழு விடுதலையை யூதர்கள் அடைந்தனர். ஜூடாவுக்குப் பிறகு அவரது சகோதரர் சைமன் ஆட்சிக்கு வந்தார். இஸ்ரேலிய நிலப்பரப்பு மீண்டும் ஷாலோமன் காலத்தில் எப்படி இருந்ததோ அவ்வாறான விரிவினை அடைந்தது. ஹாஸ்மோனியன் ஆட்சிக்காலம் 80 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டத்தில் யூத ஆட்சியில் யூத அரசியல் ஒன்றிணைப்பு ஏற்பட்டது. யூத வாழ்க்கை முறையும் வளர்ச்சியடைந்தது.
ரோமானியர்களின் ஆட்சிக்காலம் (கி.மு. 63 – 313 வரை)
ரோமானியர்கள் தங்களது பேரரசை விரிவாக்கிக் கொள்கையில் அவர்களது கவனம் ஜூடாவின் மீதும் விழுந்தது. போம்ப்பீயிலிருந்த படை அணி ஜெருசலேத்தை முற்றுகையிட்டது. ரோமானியர்கள் செலுசிட்ஸ்சை மாற்றம் செய்த போது ஹோஸ்மானிய அரசரான இரண்டாம் ஹிர்காமுஸ் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைப் பெற்றார். அது கூட டமாஸ்கஸ் ஆளுநரின் பார்வைக்குட்பட்டு கொடுக்கப்பட்டது. புதிய அரசை யூதர்கள் ஏற்கவில்லை. இதனால் அடிக்கடி கிளர்ச்சிகள் வெடித்தன. மட்டாதியாஸ்சால் கி.மு 40-ல் செய்யப்பட்ட முயற்சி சிறிது காலமே நீடித்தது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு மட்டாதியாஸ் தோற்கடிக்கப்பட்டு, இறந்த பிறகு ரோமானியர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் ஹோஸ்மோனியன் அரசைக் கொண்டு வந்தனர். யூதர்களின் பகுதி ரோம அரசின் நுழைவாயிலாக ஆகிப்போனது. அதன் பிறகு யூதராக மதம் மாறிய செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஹிரோட் மன்னராக நியமிக்கப்பட்டார். ஹிரோட் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க முடியாது. ஆனால் உள்நாட்டு அரசியலில் அவர் அதிகார மிக்கவராக இருந்தார். தனது பிரதேசத்தை ஆள்வதில் வரையறையற்ற தன்னாட்சி மிக்கவராக இருந்தார். அவர் கிரேக்க-ரோமானிய பண்பாட்டில் ஆர்வம் மிகுந்தராக இருந்தார். பிரம்மாண்ட கட்டடங்களை கட்டுவித்தார். சிசேரியா, செபாஸ்டே நகரங்களைக் கட்டுவித்தார். ஹிரோடியம் கோட்டையையும் கட்டினார். மசாடாவையும் கட்டியதோடு, யூதக் கோயிலையும் மீண்டும் கட்டினார்.
கி.மு. 6-ல் ஹிரோட் மறைந்த பிறகு படிப்படியாக அவரது வாரிசுகளின் அதிகாரம் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் அடிக்கடி நிகழ்ந்த கிளர்ச்சிகளே. பின்னர் கி.மு 6-ல் ஜுடா நேரடியாக ரோமானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ரோமானியர் ஆட்சி யூதர்களுக்கு மத ரீதியான தன்னாட்சியை வழங்கினர். அத்துடன் சட்டமியற்றும் மற்றும் நீதிவழங்கும் அதிகாரங்களையும் வழங்கினர். ரோமானியர்கள் சான்ஹெட்ரின் எனும் அமைப்பின் கீழ் இந்தத் தன்னாட்சியை வழங்கினர்.
ரோமானியர்களின் இந்தத் தாராளமான அதிகார வழங்கலை பல ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ரோமானிய ஆட்சியை பொறுக்க இயலாத யூதர்கள் சிலர் ரோம மன்னர் நீரோவின் இறுதிக்காலத்தில், கி.மு. 66-ல் கிளர்ச்சி செய்தனர். இவர்களை ஸெலெட்ஸ் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலகட்டத்தில் ஏசுநாதர் கிறிஸ்துவத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது. பின்னர் நிகழ்ந்த முதலாம் ரோமானியப் போரில் ஜெருசலேம் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. டிடுஸ் எனும் போர்ப்படைத் தளபதி கோயிலையும் அழித்தார்.
இப்போரின் இறுதியில் மஸாடாவிலும், பிற இடங்களிலும் ஏராளமான யூதர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு கி.பி 132-ல் உயிர்ப்பிக்கப்பட்ட மூன்றாண்டுகளுக்கு மட்டுமே நீடித்த யூத இறையாண்மையின் கடைசி ஆட்சி அழிக்கப்பட்டதோடு, ஜெருசலேம் முற்றிலுமாக தனது அடையாளத்தை இழந்தது. அதன் பெயர் ஏலியா காபிடோலினா என மாற்றப்பட்டது; ஜூடாவும் சிரியா பாலஸ்தினா எனவும் மாற்றப்பட்டது. கோயிலும் தரைமட்டமாக்கப்பட்டது. சிறிய எண்ணிக்கையிலான யூத மக்களே வறுமையுடன் போராடி வாழ்ந்தனர். அவர்கள் சாஃபேத் மற்றும் கலிலியில் வாழ்ந்தனர்.
பைசாண்டைன் ஆட்சி (கி.பி 313-636)
கி.பி. நான்காம் நூற்றாண்டின் போது பேரரசர் கான்ஸ்டாண்டைன் கிறிஸ்துவராக மதம் மாறியதால் (கி.பி.313)அப்பகுதியில் கிறிஸ்துவம் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பாரசீகர்கள் அப்பகுதியைக் கைப்பற்றினர். யூதர்கள் அவர்களுக்கு உதவினர். யூதர்களைப் பொறுத்தவரை பாரசீக வருகை இறைத்தூதுவரின் வருகையைப் போன்றது. யூதர்களின் உதவிக்கு நன்றி தெரிவிப்பது போல ஜெருசலேமின் நிர்வாகம் அவர்கள் வசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த ஏற்பாடு மூன்றாண்டுகள் மட்டுமே நீடித்தது. பைசாண்டைன் இராணுவம் மீண்டும் கி.பி. 629-ல் ஜெருசலேத்தைக் கைப்பற்றி யூதர்களை வெளியேற்றியது. அராபியர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 638-ல் இஸ்லாமிய அராபியர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றினர். அவர்களது ஆட்சி நான்கு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. காலிஃபாக்களின் கீழ் அந்த ஆட்சி நடைபெற்றது. முதலில் டமாஸ்கஸ்சிலிருந்தும், பின்னர் பாக்தாத்திலிருந்தும் அதன் பின்னர் எகிப்திலிருந்தும் ஆட்சிப் புரிந்தனர், காலிஃபாக்கள்.
உமர் எனும் காலிஃப்பா ஜெருசலேத்தை மெக்கா, மெதினா ஆகியவற்றிற்கு அடுத்தப்படியான மூன்றாவது புனிதத்தலமாக உருவாக்கினார். பின்னர் கி.பி. 691-ல் பாறைக்கோயில் (டோம் ஆஃப் ராக்) ஷாலோமான் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. இவ்விடத்திலிருந்துதான் இறைத்தூதர் நபிகள் வானுலகை அடைந்தார் என்று நம்பப்பட்டதால் பாறைக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அதன் அருகிலேயே அல்-அக்ஸா மசூதியும் கட்டப்பட்டது. அராபியர்களின் ஆட்சியின் துவக்கத்தில் யூதர்களுக்கு வசிப்பிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி இஸ்லாமியர்-அல்லாத மக்களை “பாதுகாக்கும்” வழிமுறையைப் பின்பற்றிக் கொடுக்கப்பட்டது. அம்மக்கள், யூதர்கள் உட்பட வரிகளைக் கொடுக்க வேண்டியிருந்தது.
பின்னர் கி.பி 717-ல் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் இஸ்லாமியர் அல்லாத மக்களின் மத வாழ்க்கையை பாதித்தது. மேலும் விவசாயத்தின் மீதான வரிகள் (நிலவரி உட்பட) நிலைமையை மோசமடையச் செய்து யூதர்கள் அப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையை உருவாக்கியது. இஸ்லாமியர் அல்லாத பலர் இஸ்லாத்தை அப்பிரதேசத்தில் தழுவினர். அப்பாசிட் ஆட்சியாளர்களும், அவர்களுக்குப் பின் வந்த ஃபாவிட்ஸ்களும் ஒடுக்குமுறைப் போக்கை கைவிடவில்லை. எனவே அங்கு தொடர்ந்து மோதல்கள் இருந்து வந்தன.
கி.பி 1071-ல் செல்ஜூக் துருக்கியர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றினர். மீண்டும் ஃப்டாமிட்டுகள் அந்நகரைக் கைப்பற்றினாலும் சிலுவைப் போர்ப்படையினரிடம் அதனை கி.பி. 1098-ல் இழந்தனர்.
சிலுவைப் போர்ப்படையினர் ஆட்சி (கி.பி 1099-1291)
கி.பி. 1099 ஜூலையில் முதல் சிலுவைப்போர்ப்படையினர் ஜெருசலேத்தைக் கைப்பற்றி லத்தீன் ஜெருசலேம் அரசினை கி.பி. 1100-ல் நிறுவினர். கிறிஸ்தவர் அல்லாத மக்கள் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். தங்களது கோவில்களுக்குள் அடைந்துக் கொண்ட யூதர்கள் எரிக்கப்பட்டனர் அல்லது அடிமையாக விற்கப்பட்டனர். அடுத்த சில ஆண்டுகளில் சிலுவைப் போர்ப்படையினர் தங்களது ஆதிக்கத்தை அப்பிரதேசத்தின் பிற இடங்களுக்கும் விரிவுப்படுத்தினர். அப்பாஸிட் அரசரான சலாதீன் கி.பி. 1187-ல் நிகழ்ந்த ஹிட்டின் போரில் சிலுவைப் படையினரைத் தோற்கடித்தார். அப்போது மீண்டும் யூதர்களுக்கு ஜெருசலேமில் குடியேற அனுமதி உட்பட சில சலுகைகள் கிடைத்தன.
கி.பி. 1193-ல் சலாடினின் மரணத்துக்குப் பிறகு சிலுவைப்போர்ப்படையினர் ஜெருசலேத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர். கி.பி. 1291-ல் ஏக்கர் போரில் சிலுவைப் போர்ப்படையினர் மாம்லுக் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். இந்த இறுதியான தோல்வி எகிப்திலும், சிரியாவிலும் வலுவான அரசினைக் கொண்டிருந்த துருக்கி நாட்டின் இராணுவ வர்க்கமான மாம்லுக்குகளால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆட்சி அப்பிரதேசத்தில் சிலுவைப் போர்ப்படையினரின் அதிகாரத்தை முற்றிலும் நீக்கியது.
மாம்லுக் ஆட்சி (கி.பி. 1291 – 1516)
சிரியாவின் டமாஸ்கஸிலிருந்து ஆட்சி செய்த மாம்லுக்குகளால் யூத மக்களுக்கு நன்மை ஏதுமில்லை. நகரப் பகுதிகள் கைவிடப்பட்டிருந்தன. மிகச் சிறிய அளவிலான யூத மக்கள் தொகையினர் வறுமையில் தவித்தனர். ஜெருசலேமின் பெரும்பகுதி வசிப்பிடமாகவே இருக்கவில்லை; இடிபாடுகளுடைய பிரதேசமாகவே விளங்கியது. பின்னர் கி.பி 1516-ல் துருக்கியின் ஆட்டோமான் பேரரசு அரசர் முதலாம் செலீமின் கீழ் பெரும்பாலான பகுதிகளை வென்றது. அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு ஆட்டோமான் பேரரசினை யாரும் அசைக்க இயலவில்லை. மேலும் இப்பகுதியில் பேரமைதி நிலைக்கொண்டிருந்தது. உலகின் எந்தவொரு அரசியல் நிகழ்வும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆட்டோமான் பேரரசு ஆட்சி (கி.பி 1517-1917)
ஆட்டோமான் ஆட்சியின் துவக்கத்தில் சுமார் 2000 யூதக் குடும்பத்தினர் அப்பிரதேசத்தில் வாழ்ந்தனர். பெரும்பாலோர் ஜெருசலேத்தில் வாழ்ந்தனர். அதுதவிர நெபுலஸ், ஹெப்ரான், காஸா, சாஃப்த் மற்றும் கலிலியின் சில கிராமங்களில் வாழ்ந்தனர். அச்சமூகத்தில் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்த யூதர்களுடன் வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்து புலம் பெயர்ந்த யூதர்களும் கலந்திருந்தனர். சுலைமான் தி மக்னிஃபீசெண்ட் எனும் புகழ்ப் பெயர்க் கொண்ட சுலைமான் இறக்கும் வரையில் (கி.பி.1566) வரையில் படிப்படியாக யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. புலம் பெயர்ந்து வந்த யூதர்களில் சிலர் மட்டுமே ஜெருசலேத்துக்கு வந்தனர். பெரும்பாலோர் சாஃபெட் பகுதிக்குச் சென்றனர்.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சுமார் 10,000 யூதர்கள் அங்கு வசித்தனர். பெரும்பாலோர் அங்கு செல்வதற்கு முக்கியக் காரணம் அங்கு கைத்தறி நெசவு மையம் ஏற்பட்டிருந்தது. அங்கு அறிவுசார் சமுதாயத்தினர் இருந்தனர். இன்று இஸ்ரேல் அறிவுசார் சமுதாயமாக மட்டுமல்லாது இராணுவ சமுதாயமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியினரின் ஆட்சியின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு அப்பகுதி கடும் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டது.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டின்போது வெளியிடங்களில் வசித்த நிலவுடமையாளர்களால் அப்பகுதி வறுமையில் வாடிய குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. வரியளவு கடுமையாக இருந்தது. வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால் பாலை நிலங்கள் தோன்றின. ஐரோப்பாவில் நெப்போலியன் போனபர்ட்டினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் மத்தியக் கிழக்கும் பாதிப்படைந்தது. அங்கு மேற்கத்திய ஆட்சியின் செல்வாக்கு உருவாகத் துவங்கியது. ஐரோப்பியர் தங்களது மிஷனரி செயல்பாடுகளால் பிரபலமடைந்தனர். அதே சமயம் யூதர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. ஆயினும், அப்பகுதி ஆட்டோமான் அரசின் கவனிப்பின்மையால் பின் தங்கியப் பிரதேசமாகவே இருந்தது. இஸ்லாமியர் பெரும்பான்மையினராக இருந்தனர். நகரப் பகுதிகளில் கிறிஸ்துவ, இஸ்லாமிய அராபிய வணிகர்கள் பெரும்பாலும் செல்வாக்குடன் இருந்தனர்.
யூதர்களில் பாரம்பரிய பழமைவாத யூதர்களும், புலம் பெயர்ந்தோரும் கலந்திருந்தனர்.
0
மஸாடாவின் தற்கொலைப்படை ரோமானியர்கள் கி.பி. 73-ல் மஸாடாவின் மீது முற்றுகையிட்டு ஏழு மாதங்கள் காத்திருந்தனர். இறுதியில் கோட்டையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு கிடைத்தது வெறும் பிணங்களே. ஆம். அங்கிருந்த யூதர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். உலகின் முதல் பேரளவுத் தற்கொலைப்படையாக இன்றும் ‘ஸெலெட்’களே குறிப்பிடப்படுகின்றனர். ஏனெனில் தோற்கடிப்பட்டு அடிமையாக்கப்படவோ கொல்லப்படவோ கூடும் என்பதால் இவ்வாறு தன் மரணத்தைத் தழுவினர். இன்று இஸ்ரேலிய இராணுவத்தினர் தங்களது உறுதிமொழியில் “மஸாடா மீண்டும் வீழக்கூடாது” என்று கூறுவர்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் யூத ஆய்வாளரான யிகேல் யாடினின் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டவை கி.பி. 37-100 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியரான ஃப்ளாவியுஸ் ஜோசஃபுஸ்சின் எழுத்துகளின் ஆவணங்களை உள்ளடக்கியிருந்தது. இதில் மாஸாடா குறித்து பல தகவல்கள் கிடைத்தன. ஜெருசலேம் கோயில் இருமுறைக் கட்டப்பட்டு போரினால் சிதைக்கப்பட்ட யூதக் கோயிலின் சுற்றுச்சுவர்களை இன்றும் இஸ்ரேலியர்கள் புனிதச் சுவர் என்று போற்றி வணங்குகின்றனர். அச்சுவர்களை ஓலமிடும் சுவர்கள் (வெய்லிங் வால்ஸ்) என்றே பெரும்பாலோர் அழைக்கின்றனர். ஆனால் இஸ்ரேலியர் இவ்வாறு அழைப்பதை அவதூறு என்றழைக்கின்றனர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மிக முக்கியமாக உள்ளடங்கியிருக்கும் அம்சம் இக்கோயில்தான். யூதர்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரதானமான புனிதத் தலம் பாறைக்கோயில் தற்போதிருக்கும் பகுதிதான் என்றாலும் சுவர்கள் இரண்டாவது புனிதத்தலமானது. கோயில் ரோமானியர்களால் இடிக்கப்பட்டது. பின்னர் உம்மாயாத் காலிஃபாக்களால் பாறைக்கோயில் (மசூதி) கட்டப்பட்டது. சுற்றுச்சுவர்கள் துருக்கிய அரசர் சுலைமானின் கட்டளையால் புனிதமடைந்தன என்கின்றனர். முதலில் கோயில்தான் புனிதத்தலம். இப்போது சுற்றுச்சுவரும் புனிதமாகிவிட்டது. கோயிலை இடித்த ரோமானியர்கள் சுற்றுச்சுவரை இடிக்காதுவிட்டனர். அதுவே இப்போது இரண்டாவது புனிதத்தலமாகி விட்டது.
இன்றைய ஜெருசலேம் பிரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சுவர்களும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு யூதர்களின் புனிதக்கோயில் இருந்ததையும் இஸ்லாமியர்கள் மறுக்கின்றனர். சமீபத்தில் பாறைக்கோயிலின் கீழ் புதிய தொழுகை அறைக் கட்டப்பட்டது. அப்போது வெளியே கொண்டுச் செல்லப்பட்ட இடிக்கப்பட்டப் பொருட்களை ஆராய்ந்த மாணவர் ஸ்விவைக்கும் அவரின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆசிரியர் பார்க்கேவும் அங்கு வரலாறு முழுவதும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பினை பெற்றதாகக் கூறினர். மேலும் அதில் ரோமானியர்களுக்கு எதிரான கலகத்தினைச் சுட்டும் விதமான வெண்கல நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. அத்துடன் கருநிற களிமண் கட்டி ஒன்றில் முதல் கோயிலின் நிர்வாகியின் பெயரினைச் சுட்டும் யாஹூ இம்மர் எனும் முத்திரை ஆதி யூத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இம்முத்திரையின் உரிமையாளர் நிர்வாகியின் தம்பியாக இருக்கலாம் என்கிறார் பார்கே. இரண்டாவது கோயில் ஹிராட்டினால் கட்டப்பட்டப்போது தரையில் பொருத்தப்பட்ட பல கோணங்களில் செய்யப்பட்டக் கற்களை எடுத்துக்காட்டுகிறார் பார்கே. இதன் மூலம் கோயில் இருந்தது உண்மை என்று வாதிடுகின்றனர் யூதர்கள். யூதர்கள் இங்குதான் ஆபிரஹாம் தன் மகன் ஐசாக்கை பலியிட்டதாகவும், இஸ்லாமியர் இங்கிருந்துதான் நபிகள் வானுலகு சென்றார் என்றும் வாதிடுவதால் இச்சிக்கல் தீராத ஒன்றாகவே தெரிகிறது.
(தொடரும்)