தங்களது நிலத்தை அடைந்துவிட்ட யூதர்களுக்கு அதை எப்படி நிலைநிறுத்துவது எனும் கவலை ஆட்கொண்டது. துவக்கத்திலிருந்தே யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்றை பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் ஏற்படுத்துவதை அராபியர்கள் எதிர்த்தே வந்தனர். ஆட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவாகிய அனைத்து அராபிய நாடுகளும் யூத எதிர்ப்பில் தீவிரம் காட்டின. தங்களது பூர்விக உரிமை என அப்பிரதேசத்தை உரிமை கொண்டாடின.
பாலஸ்தீனத்துக்கு என்று தனி வரலாறு ஏதுமில்லை. இஸ்ரேல் எப்படித் தொடர்ச்சியாகப் பிறரது கட்டுப்பாட்டில் இருந்ததோ அதேபோல பாலஸ்தீனமும் இருந்தது. யூதர்களைப் பொறுத்தவரை தங்களது அடையாளத்துக்காக உலகம் பூராவும் பரவி பல நாடுகளின் நட்பையும், அன்பையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் அராபியர்கள் அவ்வாறு ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. அராபிய நிலப்பகுதிகள் பெரும்பாலும் பாலைவனங்களே. எரிபொருள் எண்ணெய் அப்பிரதேசத்தில் கிடைத்திருக்காவிட்டால் இன்றைக்கு அராபிய நாடுகள் பல வைத்திருக்கும் செல்வ வளம் ஒருபோதும் கிடைத்திருக்காது. ஆனால் அதற்கும் யூதர்களுக்குத் தனி நாடு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
மாறாக பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு நாடுகள் முன்னெடுத்த முயற்சிகளால்தான் பல அராபிய நாடுகள் உருவாயின. அதே போலத்தான் யூத நாடு ஒன்றை உருவாக்க யோசனைகளை பரிசீலித்தனர். வல்லரசுகளைப் பொறுத்தவரை தங்களுடைய இருப்பு சோவியத் யூனியன் எனும் எதிர்ச் சக்தியை எதிர்த்து மத்திய கிழக்கு ஆசியாவில் நிலைபெற ஏதுவான அராபிய அரசுகள் இருக்க வேண்டும். அப்படித்தான் இஸ்ரேலும் இருக்கும் என்று சிந்தித்தே இஸ்ரேலை உருவாக்க முனைந்தனர்.
இரண்டாம் உலகப் போரில் நாஜிப்படைகளின் வெற்றியால் இஸ்லாமிய நாடுகள் பல ஜெர்மனியையும் ஹிட்லரையும் மறைமுகமாக ஆதரிக்கத் துவங்கினர். இதன் விளைவாக நேச நாடுகள் எரிச்சலடைந்தன. ஹிட்லரைப் பொறுத்தவரை இக்கூட்டணி தற்காலிகமானது. அராபியர் அல்லாத இஸ்லாமியர்களையும் இக்கூட்டணிக்குள் கொண்டு வர நினைத்தார் ஹிட்லர். இப்பின்னணியில்தான் நேச நாடுகள் யூதர்களின் கோரிக்கையை ஏற்க முடிவு செய்தனர்.
இந்நிகழ்வுகள் இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த 1940-43 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. அராபிய மற்றும் அராபியர் அல்லாத இஸ்லாமிய நாடுகள் தங்களது காலனிய எஜமானர்களான பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகளின் பிடியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று எண்ணினர். ஆனாலும் நவீனத் தொழில்நுட்பங்கள், இராணுவத் தளவாடங்கள் இவற்றை மேற்கு நாடுகளில் இருந்தே வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே அவர்களால் முழுமையாக உறவினை முறித்துக் கொள்ள இயலவில்லை. மேலும் புதிய எண்ணெய் வளத்தை விற்பதற்கான சந்தை மேலை நாடுகளிடமே இருந்ததும் வலுவான காரணமாக அமைந்தது.
ஜெர்மனியோ வல்லரசு நாடுகளைத் தோற்கடிக்க எத்தகைய கூட்டணிக்கும் ஆயத்தம் என்ற அடிப்படையிலேயே இஸ்லாமிய நாடுகளுடன் இரகசிய உறவை ஏற்படுத்திக்கொண்டது. சில நாடுகளில் நாஜிப்படைகளுக்கு உதவுவதற்கு ‘இராணுவச் சேவைக்கு’ ஆள் திரட்டுதலும் நடந்தன என்கின்றனர் வரலாற்று வல்லுநர்கள். அத்துடன் ஜெருசலேத்தின் தலைமை மத குரு (முஃப்தி) அமின் அல்-ஹூசைனி ஹிட்லரையும் சந்தித்தார். இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக நாஜிப்படைகள் தாங்கள் கைப்பற்றும் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர்களைக் கொல்லக்கூடாது எனும் ஆணை போர்ப்படையினருக்கு இடப்பட்டிருந்தது. பல நேரங்களில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் அடையாளம் தெரியாமல் போகவே எல்லோரையுமே கொன்றனர். ஏனெனில் ‘சுன்னத்’ (ஆணுறுப்பின் முன் தோல் நீக்கம்) இரு சமூகங்களுமே செய்து கொள்வதால் அடையாளம் காண்பதில் நாஜிப்படையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர்.
இப்பின்னணியில்தான் ஸியோனிஸ்ட்களின் தீவிரமான பிரசாரம் வலுவடைந்தது. வல்லரசு நாடுகளைப் பொறுத்தவரை தங்கள் ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் நிரந்தரமாக நிலைநிறுத்திக்கொள்ள ஒரு நாடு தேவை என்ற வகையில் இஸ்ரேலை உருவாக்கத் தீர்மானித்தனர். காலகட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் 1936-39 அராபிய எழுச்சியின் பின்னால் நாஜி ஆதரவு இருந்ததை வல்லரசுகள், குறிப்பாக நேச நாடுகள், கண்டுணர்ந்தன. இதே காலகட்டத்தில்தான் பால்ஃபோர் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதுவே புதிய யூத நாடு உருவாக அடித்தளமாக அமைந்தது.
புதிய இஸ்ரேல் தேசம் உருவான சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட பிறகு ஐ.நாவின் தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பாலஸ்தீனம் முழுதும் கலவரங்கள் நிகழ்ந்தன. இஸ்ரேலின் படைகள் (தனியார் ராணுவமான ஹகன்னா) அராபியர்களை இஸ்ரேலிலிருந்து வெளியேற்றக் கடுமையாகப் போரிட்டன. இஸ்ரேல் பகுதிக்குள் வசித்து வந்த அராபியர்கள் அங்கிருந்து வெளியேறி மேற்குக் கரை (ஜோர்டன் பகுதி) மற்றும் காசா (எகிப்து பகுதி) கோலன் குன்றுகள் (சிரியா) பகுதிகளுக்குள் புலம் பெயர்ந்தனர். பலர் பல்வேறு அண்டை நாடுகளுக்குச் அகதிகளாகச் சென்றனர். ஜோர்டனுக்குள் தஞ்சம் புகுந்தவர்களே அதிகம்.
இப்படி அராபியர்கள் சிதறிப்போக சிறிது சிறிதாக யூதர்கள் அப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இதனால் மேலும் மோதல் அதிகரித்தது. சுதந்திர பாலஸ்தீனம் எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. துவக்கத்திலிருந்தே பாலஸ்தீனம், தனி நாடு எனும் சிந்தனையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இஸ்ரேலை நிச்சயம் உருவாக்கிவிடுவார்கள் எனும் சூழல் வந்த பிறகும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தனரே தவிர தங்களுக்கென்று தனி நாட்டைக் கோரவில்லை. ஐ.நா தீர்மானமோ இரண்டு நாடுகளை உருவாக்கவே திட்டமிட்டது.
இஸ்ரேலுடன் போரிட்டு அராபியர்கள் தங்கள் பிரதேசங்களை இழந்தனர். மீதமிருந்த மேற்குக் கரையும், காசாவும் இரண்டு வேறுபட்ட இடங்களில் உள்ளன. இரண்டுக்கும் நடுவில் இஸ்ரேல் உள்ளது. இரண்டையும் கண்காணிக்கவும் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இஸ்ரேலுக்கு சாதகமாகவே இவ்விரண்டு பகுதிகளும் இருந்தன.
ஐ.நா அவை புதிய நாடுகளின் உருவாக்கத்தை அறிவித்த பின்னர் அராபியர்கள்- யூதர்கள் இடையே மோதல் தீவிரமடைந்தது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் போருக்கு வந்தன. இந்த முதல் விடுதலைப் போர் எதிர்பாராத விதமாக இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைந்தது. அராபியர்கள் வசமிருந்த பல பகுதிகள் இஸ்ரேல் வசம் வந்தன. இஸ்ரேலின் முறைப்படுத்தப்பட்ட ராணுவத்தை அராபியர்களின் ராணுவத்தாலும் முறைப்படுத்தப்படாதப் படைகளாலும் எதிர்கொள்ள இயலவில்லை. இஸ்ரேல் தரப்பில் 4,000 வீரர்கள் பலியாயினர். மேலும் 2,000 யூத குடிமக்கள் உயிரிழந்தனர். ஐ.நா சபை இஸ்ரேலுக்கு அளித்த பகுதிகளைவிட அதிகமான நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
முதன் முறையாக காசாவும் (எகிப்து), மேற்குக் கரையும் (ஜோர்டன்) தங்களது இப்போதைய பெயரைப் பெற்றன. பாலஸ்தீனர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் இஸ்ரேல் வசம் சென்றதால் அந்நாட்டுக்கான நிலப்பரப்பு சுருங்கியது. கோலன் ஹைட்ஸ், சினாய் மற்றும் காசா, மேற்குக் கரை ஆகியன மட்டும் இப்போது பாலஸ்தீனர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இதில் காசாவும், மேற்குக் கரையும், கோலன் குன்றுகளும் கூட இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. போரில் தோற்ற அராபியர்கள் கொரில்லா முறைப் போரை உருவாக்கியதன் விளைவாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு உருவாகியது.
போரினால் பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் காசாவுக்கும், மேற்குக் கரைக்கும், அருகில் இருந்த அராபிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தனர். சுமார் 2,00,000 பேர் முதல் 7,00,000 பேர் வரையில் இவ்வாறு இடம் பெயர்ந்தனர். அதற்கு முன்னர் 1914-ல் பாலஸ்தீனப் பகுதியில் 6,00,000 அராபிய மக்கள் வசித்ததாகவும் இதில் சுமார் 1,60,000 பேர் இஸ்ரேலிலேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு அகதிகளுக்கான அடிப்படைத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன.
தேசத்தின் நிர்வாக அமைப்பு உருவாக்கம்
போர் நடைபெற்ற நேரத்தில் இஸ்ரேல் தனது அரசமைப்பு குறித்து சிந்திக்கத் துவங்கியது. சமூக, பொருளியல், அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளின் தேவையை உணர்ந்து புதிய அமைப்புக்களை உருவாக்கத் துவங்கினர். விடுதலைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தபடி இஸ்ரேலிய அமைப்புகள் நிஜத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. புதிதாகப் புலம் பெயர்ந்த யூதர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்தும் சிந்திக்கத் துவங்கினர். எத்தகைய புதிய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவது? எம்மாதிரியான அரசியல் முறைமையை உருவாக்குவது போன்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன.
விடுதலைப் பிரகடனத்தின்போது இணைந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசு, புதிய தேசத்தின் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஐ.நாவின் பிரிவினைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உடனேயே இடைக்கால நிர்வாக அமைப்பு செயல்படத் துவங்கிவிட்டது. யிஷூவ் எனும் (யிஷூவ் எரெட்ஸ் இஸ்ரேல்- இஸ்ரேல் நிலப்பகுதி) உயர்மட்ட யூத அமைப்பின் கீழ் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்தது அந்த அமைப்பு. பிரிட்டிஷ் ஆணையின்படி உருவான பகுதிகளில் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி வந்தது. பின்னர் 1948, மார்ச் மாதத்தில் தேசிய மன்றம் மற்றும் யூத முகமை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கொண்ட அரசு மன்றம் மக்களுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது. மே மாதம் 14 ஆம் நாள் இம்மன்றம் பிரிட்டிஷ் ஆணையின்படி நடைமுறையில் இருந்த புலம் பெயர்வோர் மற்றும் நில விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது.
முதல் அரசும் முதல் தேர்தலும்
முதல் விடுதலைப் போர் நிகழ்ந்த உடன் தங்களது நாட்டை விரைந்து நிலைநிறுத்தும் வேலையை இஸ்ரேலியத் தலைவர்கள் மேற்கொள்ளத் துவங்கினர். இடைக்கால அரசு மூன்று கூறுகளை உள்ளடக்கியிருந்தது. ஒன்று, முப்பத்தி மூன்று உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய மன்றம், இரண்டு தேசிய மன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட 13 காபினெட் அமைச்சர்கள், மூன்று தேசிய மன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஒருவர் என மூன்று கூறுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் புலம் பெயர்ந்த யூதர்கள் பேரளவில் இஸ்ரேலை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். எனவே, நிர்வாகம் மிகுந்த சிக்கல் மிகுந்ததாக இருந்தது.
முதல் விடுதலைப் போர் நிர்வாகப் பணிகளை பாதித்தது. அத்துடன் தங்கள் அரசை நிலைநிறுத்தத் தேவையான செயல்பாடுகளை முன்னெடுக்கவும் இடைக்கால அரசு தீவிரமாக முனைந்தது. இடைக்கால அரசின் பிரதமராக டேவிட் பென் – குரியன் தேர்வு செய்யப்பட்டார். அதிபராக வைஸ்மான் தேர்வு செய்யப்பட்டார். சியாம் வைஸ்மான்1874 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார். அவரது குடும்பம் தீவிரமான ஸியோனிஸ்ட் குடும்பம். ஜெர்மனியில் டாக்டர் ஆஃப் சயின்ஸை முடித்த அவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலையில் பயோகெமிஸ்டரி துறையில் ஆசிரியராக இணைந்தார். அட்மிராலிட்டி லேபரட்டரீஸ்சின் இயக்குநராக 1919-ல் இருந்தபோது துப்பாக்கி குண்டு தயாரிக்கப் பயன்படும் ‘கன் பவுடர்’ இன் முக்கிய உள்ளீடான அசிடோனை உருவாக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார்.
ஆங்கில ஸ்யோனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான அவர் பால்ஃபோர் பிரகடனத்தின் பின்னணியில் முக்கியப் பங்காற்றினார். உலக ஸ்யோனிச இயக்கத்தின் தலைவராக அவர் 1920 முதல் 1946 வரை (1931-35 நீங்கலாக) பதவி வகித்தார். 1947 -ல் ஐ.நா அவையில் யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்றை நிறுவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். பின்னர் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனையும் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவையும் கோரினார். 1949-ல் இஸ்ரேலிய நாடாளுமன்றம் அவரை அதிபராகத் தேர்வு செய்தது. மீண்டும் 1951-ல் அதிபரான அவர் ஓராண்டு கடந்த நிலையில் காலமானார்.
(தொடரும்)