இஸ்ரேலுக்கான பெயர் காரணம் பல்வேறு மத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆதி யூதரான ஜேக்கப் தனது இருப்பிடமான கானான் பிரதேசத்துக்குத் திரும்பவந்தபோது வழியில் ஒரு ”தேவதை” அவருடன் மல்யுத்தம் செய்தது; அந்த மற்போர் விடியும் வரை நடந்தது; அதில் ஜேக்கப் வென்றார்; அதனால் அவருக்கு இஸ்ரேல் எனும் பெயர் (கடவுளுடன் போராடியவர்) வந்தது. அதுவே இப்போது நாட்டின் பெயராக வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் எனும் சொல்லுக்கு, புனித நிலம் என்றும் ஒரு அர்த்தம் சொல்லப்படுகிறது. அதாவது கடவுளால் ஆபிரஹாமுக்கு வழங்கப்பட்ட புனித நிலம். அதனால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
யூத மத நூல்களில் மட்டுமின்றி கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
யூதர்களுக்குத் தனித் தேசம் வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியபோது உடனடியாகக் கிடைத்த பெயர் ‘இஸ்ரேல்’. பிற்காலத்தில் இஸ்லாம் தோன்றியபோது அதில் யூத மதத்தின் தத்துவம், நெறிகள் மற்றும் மதிப்பீடுகளும் இடம் பெற்றன. ஆனாலும் யூதர்களுக்கும் நபிகளுக்கும் இடையே மோதல் இருந்தன; அராபிய யூதர்களை இஸ்லாமியர்கள் கொன்றனர் என்றெல்லாம் கூடக் கூறப்படுகிறது. இஸ்லாமியரின் புனித ஆவணமான மெதினாவின் அரசமைப்பு (இதை மெதினாவுக்கு வந்த பிறகு நபிகள் ஏற்படுத்தியதாக இஸ்லாமிய மத அறிஞர்கள் கூறுகின்றனர்) என்பதை அராபியாவின் யூதப் பழங்குடியினர் சிதைத்துவிட்டதாகவும், இதனால் 700 யூதர்களை அவர்கள் கொன்றதாகவும் இஸ்லாமிய நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அப்படியொரு ஆவணம் இருந்ததைச் சந்தேகிக்கின்றனர். அதற்கான சான்று ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே காரணமாகச் சுட்டப்படுகிறது. இதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு யூதப் படுகொலைகள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட செய்தி உண்மையென்றால் நபிகள் காலத்திலேயே யூத-அராபிய அல்லது இஸ்லாமிய மோதல்கள் துவங்கிவிட்டன. இருப்பினும் இஸ்லாத்தில் இஸ்ரேலியாட் எனும் யூத மதத்தின் கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதை இன்றுவரை யாரும் மறுக்கவில்லை. அப்படியிருக்க துவக்க காலத்திலேயே மோதல்கள் இருந்ததாகக் கூறப்படுவது முரண்பாடாகவே உள்ளது. அது மட்டுமின்றி அந்நிலப்பிரதேசம் (கானான் என்ற பெயரிடப்பட்டது) கடவுளால் ஆபிரஹாமுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது என்பதைத் திருக்குரானும் கூறியுள்ளது. ஆகையால் மத மோதல் என்பதைக் காட்டிலும் உயர்வுத் – தாழ்வு அல்லது ஆண்டான் – அடிமை மனோபாவத்தினால்தான் யூதர்களுக்குத் தனித்தேசம் அமைவதை அராபியர்களால் ஏற்க இயலவில்லை என்று கருத வேண்டியுள்ளது. ஏனெனில் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை தாங்கள் ஆப்ரஹாமின் மூத்த மகனான இஷ்மெய்ல் என்பவரது வழித்தோன்றல்கள் என்றும், இளையமகனான ஜேக்கப்புக்கு (இஸ்ரேல் எனும் பெயரைப் பெற்றவருக்கு) அந்நிலத்தில் உரிமையில்லை என்றும் வாதிடுகின்றனர். இவையும் திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளன.
ஆட்டோமான் பேரரசு இருந்தவரையில் யூதர்களுக்கு அவர்களது ஆட்சிப்பிரதேசத்திலும், பாலஸ்தீனப் பிரதேசத்திலும் வரையறுக்கப்பட்ட உரிமை இருந்தது. அதற்கு முன்னர் இரண்டாம் வழிபாட்டு மையமும் இடிக்கப்பட்டு அப்பிரதேசத்தை விட்டு விரட்டப்பட்ட நிலையில் ஆட்டோமான் ஆட்சி நல்லாட்சியாகவே இருந்திருக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் யூத வெறுப்பு பரவலாக நடைமுறையில் இருந்தபோது தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் யூதர்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லை. இக்கோரிக்கைக்கு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருந்த தத்தமது வாழும் நாடுகளில் நல்ல செல்வாக்குடனும், செல்வ வளத்துடனும் இருந்த யூதர்கள் ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் அன்றாடம் வெறுப்புணர்ச்சியை உணர்ந்து வந்த யூதர்களே தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவளித்தனர்.
தனி நாடு பெற்ற பிறகு இஸ்ரேலில் ஒவ்வொரு வயது வந்த தனி நபரும் குறைந்த பட்ச இராணுவப் பயிற்சியுடன் இருப்பதோடு, கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனும் நிபந்தனையுடனே வாழ்கின்றனர். ஏற்கனவே தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தடுக்கவும், தனி நாட்டைக் காப்பாற்றவும் இந்த இராணுவப் பயிற்சியை ஏற்படுத்தியுள்ளனர். மாறாக அராபிய இஸ்லாமியர்களோ தங்களது அரச வம்சத்தின் அல்லது இராணுவ ஆட்சியாளர்களுக்கு இணக்கமான செயல்பாடுகளை வைத்துள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் சவூதி அரேபியாவுக்கும், இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் இறையியல் அரசாக விளங்குவதற்கு வஹாபிசம் பின்னணியில் இருந்தது. ஷரியா சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.
அது மட்டுமின்றி ஐரோப்பிய ஆதிக்கத்தின் மீதான வெறுப்பும் காரணமாகியது. அதற்கு முன்னர் ஆட்டோமான் பேரரசின் கீழ் இருந்தனர். ஐரோப்பியர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தே முதலாம் உலகப் போரில் அவர்களுடன் இணைந்துப் போரிட்டனர். போர் முடிந்தவுடன் ஆங்கில-பிரெஞ்சு வல்லரசு நாடுகள் அராபிய பிரதேசத்தைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ், கொண்டு வந்தனர். சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைத் தடுக்கும் பொருட்டு இதைச் செய்தனர். ஆனால் இஸ்ரேலின் தோற்றத்தின் பின்னணியில் மதம் அதிகம் பங்காற்றவில்லை. மாறாக யூத இனத்தின் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டே தனி நாடு கேட்டனர். அதுவும் கூட நாஜிகளின் யூத வெறுப்பு சுமார் 50,00,000 யூதர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்ததால், இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்று முக்கிய யூதப்பிரமுகர்கள் முயற்சி செய்து தனி நாட்டைத் தோற்றுவித்தனர். பன்னாட்டு சமுதாயமும் அதில் இருந்த நியாயத்தை ஆதரித்தனர்.
ஐ.நா. இரண்டு நாடுகளை உருவாக்கத் தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே அனைத்து அரபு நாடுகளும் அதை எதிர்த்தன. அந்நிலம் இஸ்லாமியர்களுக்கே உரிமையானது என்று வாதிட்டன. மேலும் யூதர்களின் முறைப்படுத்தப்படாத படைகள் பாலஸ்தீனியர்களின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தின. இந்த மோதலில் முதலில் கலந்து கொள்ளாத ஜோர்டான் பின்னர் அரைகுறை மனதுடன் கலந்து கொண்டது. ஆயினும் இப்போரில் இஸ்ரேல் வென்று ஐ.நா. தீர்மானம் வழங்கிய பகுதிகளைவிட அதிக நிலப்பரப்பைத் தன்வசமாக்கியது.
முதல் போர் (1948-1949)
முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பகுதிகளாக மாறிய இன்றைய இஸ்ரேல், காசா, ஜோர்டான் மற்றும் மேற்குக் கரை ஆகியவை பால்ஃபோர் பிரகடனத்தின்படி பிரிட்டிஷ் ஆணைக்குட்பட்ட பகுதிகளாயின. இதையொட்டி ஜோர்டான் நாடு தனியாக உருவாக்கப்பட்டது. அதனால் யூதத் தனி நாடு உருவாகவில்லை. இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் பகுதிக்குள் ஏராளமான அயல்நாட்டு யூதர்கள் குடியேற ஆரம்பித்தனர். உக்ரைனில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து அவர்கள் அங்கு குடியேறத் ஆரம்பித்தனர். சுமார் 90,000 யூதர்கள் 1919-26-க்குள் குடியேறியதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் ஜெர்மனியில் நாஜி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் அங்கிருந்து வெளியேறிய யூதர்கள் பிரிட்டிஷ் ஆணைக்குட்பட்ட பகுதிகளுக்கே வந்தனர். இதனால் யூத மக்கள் தொகை இரட்டிப்பாகியது. அராபிய-பாலஸ்தீன மக்கள் இத்திடீர் மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். புதிதாக குடியேறிய மக்கள் அராபியர்களுக்குத் தங்களது நிலத்தை விற்கவோ குத்தகைக்கு தரவோ மறுத்ததோடு, அவர்களைக் கூலி வேலைகளுக்கும் கூட அழைக்க மறுத்தனர்.
இப்போக்குகளைத் தொடர்ந்து 1920-களில் ஜெருசலேத்தின் மதகுருவான அல்-ஹூசைனி பாலஸ்தீனிய அராபிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரின் பெரும் பங்களிப்புடன் நேரடியாக மதக் கலவரங்கள் நிகழ்ந்தன. இஸ்லாமியரின் வசமிருந்த ஜெருசலேத்தின் அல்-அக்சா மசூதியையும் புனித பாறைத் தலத்தையும் (டோம் ஆஃப் ராக்கையும்) யூதர்கள் கைப்பற்றிக்கொண்டு அதிகளவில் குடிபுகுந்து வருகின்றனர் என்று கூறி அராபியர்களை கலவரத்துக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் 1921-ல் நடந்த ஜாஃப்பா கலவரத்தின் காரணமாக யூத முறைசாரா இராணுவமான ஹகன்னா உருவாக்கப்பட்டது. கலவரங்களும் கலகங்களும் அராபியர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. ஹூசைனி 1929-லும், பின்னர் 1936-39-களில் நேரடியாகவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அராபியர்களைத் திரட்டிப் போரிட்டார். இதில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர். எனினும் 1937-லேயே அமின் அல்-ஹூசைனி பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி லெபனான், ஈராக், இத்தாலி வழியே நாஜி ஜெர்மனியை அடைந்தார். அங்கு அரசியல் அடைக்கலம் கோரி வசித்து வந்தார். பிரிட்டிஷ் அரசு இந்தக் கலவரங்கள், கலகங்களை விசாரணை செய்ய பல்வேறு ஆணையங்களை நியமித்தது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பீல் குழுவே இரட்டை நாடுகள் எனும் தீர்வை முன்வைத்தது. அதன் பின்னர் 1939-ல் ஒரு நாடு எனும் தீர்வை முன்வைத்த புதிய கொள்கையைக் கொண்டு வந்தது. இதன்படி பிரிட்டிஷ் மற்றும் அரபுத் தலைவர்கள் யூதர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முறை ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் ஐரோப்பாவில் நிகழ்ந்த யூதப் படுகொலைகளால் யூத அமைப்பினர் (யிஷூ) ஏராளமான யூதர்களை பாலஸ்தீனப்பகுதிக்குள் கடத்தினர். இதனால் மேலும் கொந்தளிப்பான சூழல் உருவாகியது.
இதன் காரணமாக இரு நாடுகள் தீர்வு, ஒரு நாடு தீர்வாக இஸ்ரேலை நிறுவுவது தொடர்பான நடவடிக்கைகளை பிரிட்டனும் அமெரிக்காவும் எடுத்தன. பிரிட்டனின் அகதிகள் தடுப்பு நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த யூதத் தலைமை தங்களது முறைசாரா இராணுவத்தினரைக் கொண்ட யுனைடெட் ரெசிஸ்டெண்ட் மூவ்மெண்ட் எனும் படையணியை ஏற்படுத்தினர். இவர்கள் ஜெருசலேமில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தினரின் தலைமையகம் அமைந்த கிங் டேவிட் ஹோட்டலின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இது போல சிறையுடைப்பு, போக்குவரத்து மீதான தாக்குதல் எனப் பலவற்றை மேற்கொண்டனர். டேவிட் ஹோட்டல் தாக்குதலில் 91பேர் மரணமடைந்தனர். இதனால் வைஸ்மான் போராட்டத்தை நிறுத்தும்படி யூத முகமையைக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் ஒரு சில குழுக்கள் தொடர்ந்து தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து 1947 மே 15 ஆம் நாள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஐ.நா அவையின் பொதுச் சபை ஒரு குழுவை அமைத்தது. இதில் ஆஸ்திரேலியா, கனடா, செக்கஸ்லோவேகியா, குவட்டிமாலா, இந்தியா, ஈரான், ஹாலந்து, பெரு, ஸ்வீடன், உருகுவே மற்றும் யூகோஸ்லோவியா ஆகியன இடம் பெற்றிருந்தன.
இவர்கள் இஸ்ரேல், பாலஸ்தீனம் என இருநாடுகள் மற்றும் ஜெருசலேம் பன்னாட்டு நிர்வாகத்தின் கீழ் இருப்பது என்று முடிவெடுத்தனர். இதையடுத்தே இஸ்ரேலை உருவாக்கும் முயற்சியில் யூதத் தலைவர்கள் ஈடுபட்டு சுதந்திரப் பிரகடனத்தையும் வெளியிட்டனர். ஐ.நாவின் முடிவையே ஏற்காத அராபியர்கள், சுதந்திரத் தீர்மானத்தை எதிர்க்கும் விதமாக போரினைத் தொடுத்தனர். எகிப்து, சிரியா, ஈராக் மற்றும் ஜோர்டான் நாடுகள் போரில் ஈடுபட்டன. அராபியப் படைகளின் தவறான அணுகுமுறையால் கிராமங்களில் வசித்த அராபியர்கள் போரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இடம் பெயர்ந்தனர். மற்றொருபுறம் யூத முறைசாரா இராணுவமும் பாலஸ்தீன குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இவற்றின் காரணமாக ஏராளமான பாலஸ்தீனர்கள் அண்டை நாடுகளுக்கும், காசா, மேற்குக் கரை மற்றும் கோலன் குன்றுகள் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தனர்.
இப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததால் இஸ்ரேலுக்குப் புதிய பகுதிகள் கிடைத்தன. மேலும் யூத மக்களைக் குடியேற்ற இதுவே வாய்ப்பாக அமைந்தது. ஒருமுறை இழந்த இப்பகுதிகள் இஸ்ரேலின் அங்கமாகிவிட்டன. அராபியர்கள் ஏறக்குறைய இஸ்ரேலை அங்கீகரிக்கும் விதமாக பல அமைதி உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். எவரும் இப்பகுதியை மீட்கக் கோரவில்லை.
சூயஸ் கால்வாய் பிரச்னை (1956)
சூயஸ் கால்வாய் ஐரோப்பாவையும், ஆசியாவையும் கடல் மார்க்கமாக இணைக்கும் வழி. இக்கால்வாய் எகிப்து நாட்டின் வசமுள்ளது. நிலப்பரப்பின்படி அது எகிப்திய பிரதேசம். பெரும்பாலான கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் ஆசியாவுக்குள் நுழைய வேண்டும். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கப்பல்கள் இதன் வழியே பயணம் செய்யும். இல்லையென்றால் கப்பல்கள் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் ஆசியாவுக்குள் நுழைய முடியும். இம்முக்கியத்துவம் வாய்ந்தக் கால்வாயை பன்னாட்டு அரசியல் லாபங்களுக்காக அதிபர் நாசர் முன் அறிவிப்பு ஏதுமின்றி ”தேசியமயமாக்கி” மூடினார். அதிபர் நாசர் எகிப்திய அரசரை இராணுவப் புரட்சி செய்து பதவி நீக்கியதில் முக்கிய பங்காற்றியவர். இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரபு நாடுகளின் ஒருமித்த ஆதரவையும் பெற்றவர். எகிப்தில் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்ததற்காக நினைவுகூரப்படுபவர். இதற்கு இராணுவ-குடிமைப்பணி என இரண்டையும் இணைத்து சர்வாதிகாரியாக அவர் விளங்கியதும் ஒரு காரணம். இன்றுவரை எகிப்து ஆட்சிமுறை அவர் பாணியில்தான் நடக்கிறது.
நாசரின் நடவடிக்கையால் பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகள் கடும் கோபமடைந்தன. இக்கால்வாயை இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களே நிர்வகித்து வந்தன. அவை தங்களது படைகளை அப்பிரதேசத்துக்கு அனுப்ப ஆரம்பித்தன. இஸ்ரேலும் இதனால் பாதிக்கப்பட்டது. எனவே 1956 அக்டோபரில் இஸ்ரேலியப் படைகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் புகுந்து அதைக் கைப்பற்றின. பன்னாட்டு அழுத்தத்தால் சூயஸ் கால்வாயை அதிபர் நாசர் திறந்தார். இஸ்ரேலியப் படைகள் காசா, ராஃபா மற்றும் அல்-அரிஷ் பகுதிகளைக் கைப்பற்றின. ஏராளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்ரேலின் இலாட் துறைமுகத்தை எகிப்து விடுவித்தது.
பின்னர் 1957-ல் ஐ.நாவின் நெருக்கடிகாலப் படைகள் அங்கு கண்காணிப்பை மேற்கொள்ளச் சென்றன. இஸ்ரேல் தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. இப்போரில் வென்றது எகிப்துதான் என்பது பலரின் வாதம். ஆனால் சினாய் பகுதியையும் தனது அரசியல் துருப்புச் சீட்டு ஒன்றையும் நாசர் இழந்தார். அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுப் பதவியில் நீடித்தார். இப்போரில் இஸ்ரேல் படைகளின் வலிமை முதல் முறையாக உணரப்பட்டது. சினாய் மற்றும் அதன் அருகமைப் பகுதிகளை ஐந்து நாட்களில் கைப்பற்றியதுதான் காரணம்.
(தொடரும்)