Skip to content
Home » இஸ்ரேல் #6 – ஆறு நாள் போர்

இஸ்ரேல் #6 – ஆறு நாள் போர்

ஆறு நாள் போர்

இரண்டாம் போர் (ஆறு நாள் போர்) 1967

இரண்டாவது போரான ஆறு நாட்கள் போர் இன்றைய முழு இஸ்ரேலைத் தோற்றுவித்தது என்றால் மிகையில்லை. அராபிய அரசுகளின் நீண்ட நாள் எரிச்சலாக இஸ்ரேல் இருந்தது. உலகம் முழுதும் பரவியிருந்த பனிப்போரில் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் நின்று (முழுமையாக இல்லாவிட்டாலும் கூட) அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் வல்லாதிக்க நடவடிக்கைகளை எதிர்த்து வந்த அராபிய நாடுகள், குறிப்பாக நாசர் தலைமையிலான எகிப்து, சிரியா, ஈராக் ஆகியனவும், இப்படியும் அப்படியும் ஊசலாடிய ஜோர்டானும் இஸ்ரேலை நிரந்தரமாக நீக்க நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இஸ்ரேல் தனது பொருளாதார, அரசியல் நிலைத்தன்மையை சுமார் 19 ஆண்டுகளில் பெற்றிருந்தது. மீண்டும் இஸ்ரேலுடன் மோதுவதற்கு தோதாக அராபிய நாடுகளும் தங்களது இராணுவ வலிமையை பெருக்கிக்கொண்டன.

இந்நிலையில் இஸ்ரேல் தனது இராணுவத்தைப் போருக்குத் தயாராக்கி வருகிறது என்று சோவியத் தரப்பிலிருந்து ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை எந்த அரபு நாடுகளும் சரிபார்க்கவில்லை. ஆனாலும் இஸ்ரேல் மீது போர்த் தொடுக்க அவை முயற்சிகளை மேற்கொண்டன. முதலில் போரை ஆரம்பிக்க அவை தயக்கம் காட்டின. இந்நிலையில் இஸ்ரேலிடம் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. பெருகியுள்ள அரபு நாடுகளின் இராணுவ வலிமையைக் கருத்தில் கொண்டு நீண்ட கால போர் செய்யத் தயாராவது; அல்லது தானே போரினைத் துவங்குவது. அரபு நாடுகள் தங்கள் படைகளைத் திரட்டத் துவங்கின. எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் எனும் சூழல்.

இந்நிலையில் அராபியத் தீவிரவாதப் படையினர் சிரியாவிலிருந்து அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். அப்படியொரு சம்பவத்தின் பின் இஸ்ரேலியப் படையினர் ஜோர்டானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். சிரியாவிலிருந்து நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு ஜோர்டானைத் தாக்குவது சரியல்ல என்பதால் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்கள் விழுந்தன. ஜோர்டான் அரசர் ஹூசைன் தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்பதைக் கருத்தில் கொண்டு எகிப்து அதிபர் நாசருடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் ஜோர்டானில் நாசருக்கு அவ்வளவு செல்வாக்கு இருந்தது. பாலஸ்தீன அகதிகளில் பெரும்பாலோர் ஜோர்டானில்தான் தஞ்சம் புகுந்தனர். இவர்களாலும் தன் பதவிக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார் மன்னர் ஹூசைன். எனவே தனது இராணுவத்தை எகிப்து, சிரியா படைகளுடன் இணைத்துப் போரிட அனுமதித்தார். இஸ்ரேலுடன் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்த மன்னர் இப்போது தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி இஸ்ரேல் தனது பகுதிக்குள் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்தார்.

ஒருபுறம் சோவியத் ஒன்றியத்தின் செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு மீண்டும் சூயஸ் கால்வாய் பகுதியில் காவல் பணி புரிந்து வந்த ஐ.நா சபை, அமைதிப்படைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. எகிப்து இராணுவம் அங்கெல்லாம் நிறுத்தப்பட்டது. மேலும் இஸ்ரேல் கப்பல்களால் சூயஸ் கால்வாயை அணுக முடியவில்லை. முன்னர் 1956 ஆம் ஆண்டு நிலைமையில் இஸ்ரேல் இருந்தது. இத்துடன் நாசர் “இஸ்ரேல் போர் செய்ய விரும்பினால் வரலாம்; நாம் அதை வரவேற்கிறோம்” என்றும் பேசினார். நாசரிடம் இருந்த வல்மையான ஓர் ஆயுதம் வானொலி. அரபு நாடுகள் முழுதும் அவரது பேச்சுக்கள் ஒலிபரப்பாகி வந்தன. இதனால்தான் அவர் நாடுகள் கடந்து புகழ் பெற முடிந்தது.

இஸ்ரேல், அமெரிக்காவின் அனுமதியைக் கோரியது. ஏனெனில் இப்போது மீண்டும் சூயஸ் கால்வாயைத் திறப்பது பெரிய போருக்குப் பிறகுதான் நிகழும் என்பது புரிந்திருந்தது. இரண்டாவது 1956-ல் இஸ்ரேல் கைப்பற்றிய பகுதிகளை அமெரிக்கா திரும்ப அளிக்கக் கோரியது. மீண்டும் அது போல நடக்கக்கூடாது என்பதுதான் இஸ்ரேலின் நிலைப்பாடு. நீண்டகாலப் போர் என்றால் சோவியத் ஒன்றியமும் ஆர்வம் காட்டும். எனவே அது விரும்பத்தக்கதல்ல. இஸ்ரேல் அனுமதி கேட்டபோது அமெரிக்கா அனுமதித்தது. இஸ்ரேல் முதலில் போரைத் துவங்கக்கூடாது என்று பொதுவெளியில் எச்சரித்த அதிபர் ஜான்சன் வேறு வழியின்றி இஸ்ரேல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போர் செய்யட்டும் என்று விட்டுவிட்டார். இஸ்ரேலில் போர் முன் தயாரிப்புகளால் இதரப் பொருளாதார நடவடிக்கைகள் தேங்கிப்போவதோடு, நீண்ட நாட்கள் தள்ளிப்போனால் எதிரிகளும் பலம் பெறலாம். எனவே போரை உடனே நடத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் தெரிவித்தனர். அனுமதியும் கிடைத்தது.

இஸ்ரேல் விமானப்படை வீரர்கள் நல்ல பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு எதிரி நாடுகளின் விமான நிலையங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டிருந்தன. போதாக்குறைக்கு எதிரி நாட்டின் செய்திப் பரிமாற்றங்களை இடையிட்டுக் கேட்கும் வசதியும் இருந்தது.

இஸ்ரேலின் விமானங்கள் எகிப்து இராணுவ விமானங்கள் மீது அதிரடியாகத் தாக்கின. இத்தாக்குதல் காலை நேரத்தில் எகிப்தில் முதலில் துவங்கின. பிற்பகலில் சிரியா, ஜோர்டானின் விமானப்படைகள் மீதும் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் நாசர் பெரிதும் நம்பியிருந்த விமானப்படையின் 95% விமானங்கள் அழிந்தன. இது போல சிரியாவிலும் ஜோர்டானிலும் நடந்தன. ஏறக்குறைய போர் முடிந்துவிட்டது. எளிதாக இஸ்ரேலிய தரைப்படைகள் எதிரிகளிடமிருந்த பாலஸ்தீனப் பகுதிகளை வென்றன. குறிப்பாக தங்களது மூதாதையர்களின் கோயில் இருந்த நிலப்பகுதியான கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றினர். அப்பகுதி ஜோர்டானிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இன்றுவரை ஜோர்டனிடம் அப்பகுதி திரும்பிச் செல்லவில்லை. ஜோர்டன் 1994-ல் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இப்போரில் குறிப்பிட வேண்டிய செய்தி ஒன்றும் உண்டு. அது, பாகிஸ்தானும் போரில் கலந்து கொண்டது!

எப்படியா? பாகிஸ்தான் விமானப்படையின் அதிகாரியான சாய்ஃபுல் ஆசாம் மூன்று இஸ்ரேலிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தி ஜோர்டான், ஈராக் நாட்டு விமானங்களைச் சிறிதளவேனும் காப்பாற்றினர். முதல் நாள் போரிலேயே பெரும்பாலான விமானங்களை எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகியவை இழந்து விட்டன. பின்னர் ஜூன் 5-7 தேதிவரை பாகிஸ்தானின் ஆசாம் இரண்டு நாட்டு விமானப்படைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆசாமின் உண்மையானப் பணி ஜோர்டன் விமான ஓட்டிகளுக்குப் பயிற்சி அளிப்பதே. ஆனால் பாகிஸ்தான் அரசு போர் மூண்டதாலும், முதல் நாளிலேயே அரபு நாடுகள் பலத்த அடி வாங்கியதாலும், ஆசாமை போரில் கலந்து கொள்ள அனுமதித்தது. இதே போல 1973 யோம் கிப்பூர் போரிலும் அப்துல் சத்தார் ஆல்வி எனும் விமானப்படை அதிகாரி ஒரு விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்.

இதன் பின்னர் ஐ.நா சபை தீர்மானம் 242-ஐ நிறைவேற்றியது. இதன்படி தத்தமது நில எல்லைகளை அந்தந்த நாடுகள் மறுபடியும் அடைய வேண்டும். இதன்படி இஸ்ரேல் தான் கைப்பற்றிய பகுதிகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றது. ஆனால் அவ்வாறு கொடுக்கவில்லை. ஆயினும் தீர்மானத்தை ஆதரித்தது. ”ஏனெனில் பாதுகாப்புடன் அமைதியாக வாழவும், அங்கீகரிக்கப்பட்ட நில எல்லைகளுடனும் வாழவும், அச்சமின்றி அல்லது தாக்கப்படும் வாய்ப்புகள் இன்றி இருக்கவும்” இத்தீர்மானம் உறுதியளித்தது. தாங்கள் இழந்த பகுதிகள் மீண்டும் கிடைக்கும் என்பதால் எகிப்தும், ஜோர்டனும் ஆதரித்தன. பாலஸ்தீன விடுதலை இயக்கம், தன் மக்களின் நிலை பற்றி ஏதும் குறிப்பிடாததால் இத்தீர்மானத்தை ஏற்கவில்லை. இருப்பினும் இதன் அடிப்படையில் அமைதி ஏற்பட வாய்ப்பிருந்தது.

இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அதன் நீண்டகாலத் தலைவர், இந்தியாவின் நண்பர் என்று அழைக்கப்பட்ட யாசர் அராஃபத்தும் தொடர்பானவை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் 28 மே 1964 போரின் மூலம் சுதந்திரப் பாலஸ்தீனத்தை அடையும் நோக்கோடு செயல்பட்ட பல விடுதலை இயக்கங்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைவராக 1969-ல் யாசர் அராஃபத் பொறுப்பேற்றார். பின்னர் 1974-ல் ஐ.நா அவை அந்த இயக்கத்தை பாலஸ்தீன மக்களின் குரலை எதிரொலிக்கும் அதிகாரபூர்வ அமைப்பாக அங்கீகரித்தது. இஸ்ரேலும் 1993-ல் இந்த இயக்கத்தை பாலஸ்தீனர்களின் பிரதிநிதியாக அங்கீகரித்தது. அராஃபத் 2004-ல் மறைந்த பிறகு மஹ்மூத் அப்பாஸ் அதன் தலைவரானார். யாசர் அராஃபத் இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி ஒரு நாட்டின் அதிபர் போல் நடத்தப்பட்டார். அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடம் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தாலும் 1992 வரையில் தூதரக உறவில் இல்லை. முதல் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 1948-1950 வரையில் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் இருந்ததற்கு அரபு நாடுகளின் நட்பே காரணம் என்றார்.

நரசிம்ம ராவ் பிரதமர் ஆனபிறகே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நெருக்கம் அதிகரித்தது. இன்றையப் பிரதமர் நரேந்திர மோதியே இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர்.

உரசல் போர்கள் (1967-1970)

போரில் தோல்வியடைந்தாலும் அரபு நாடுகள் குறிப்பாக எகிப்து தனது சோவியத் ஒன்றியத்தின் தொடர்புகளைப் பயன்படுத்தி நீண்ட காலத் தொடர் போர்முறை ஒன்றை வகுத்தது. இதன்படி சோவியத் ஒன்றியத்தின் விமானங்களையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் பயன்படுத்தி இஸ்ரேலிடம் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்தது. போரில் நேரடியாக சோவியத் ஒன்றியம் பங்கேற்று சிறு நாடான இஸ்ரேலை வாட்டி வதைக்கும்படி நடந்துகொண்டதும், இஸ்ரேலும் சலிக்காமல் பதிலடி கொடுத்ததும் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிட்டுக் கூறப்படுகிறது. வழக்கம் போல சிரியா, ஈராக், ஜோர்டன் ஆகியவற்றுடன் சோவியத் ஒன்றியத்தின் நம்பகமான தோழனான கியூபாவும் உரசல் போர்களில் கலந்து கொண்டது. இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உரசல் போர்களுடன் ஒரு வழியாக 1967 போர் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. இருதரப்பினரும் தங்களது பழைய எல்லைகளிலேயே அடங்கியிருக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் உதவின.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *