Skip to content
Home » இஸ்ரேல் #8 – பன்னாட்டு உறவுகள்

இஸ்ரேல் #8 – பன்னாட்டு உறவுகள்

பன்னாட்டு உறவுகள்

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை அதன் பன்னாட்டு உறவுகள் உயர்வு, தாழ்வுகளைச் சந்தித்தே வந்திருக்கிறது. துவக்கம் முதலே இஸ்ரேலின் மீதான பார்வை அது பிறரது நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டது என்பதாகவே இருந்தது. இது ஓரளவு உண்மைதான். ஏனெனில் இஸ்ரேலை உருவாக்கியது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளே. அண்டைய அராபிய நாடுகளையும் இதே வல்லரசுகள்தான் வளர்த்தன என்றாலும் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது போலவும், அவர்களின் ஒரு பகுதியான பாலஸ்தீனர்களுக்கு வஞ்சனை செய்வது போலவும் இஸ்ரேலையும் உருவாக்கினர் என்றே அரபு நாடுகள் கருதின. ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் சுமார் 198 நாடுகளில் 168 நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன.

நெடுங்காலமாக இஸ்ரேலை ஒதுக்கிய அராப் லீக் எனும் முக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பின் நான்கு நாடுகள் (பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், சூடான் மற்றும் மொராக்கோ ) 2021-ல் இஸ்ரேலுடன் முழு அளவிலான தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானங்கள் செல்ல வேண்டுமென்றால் சவூதி அரேபியா வழியேதான் செல்ல வேண்டும். இதற்கு சவூதி ஒப்புக்கொண்டது ஒரு திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னரே சொன்னது போல சவூதி பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் விட்டுக்கொடுத்தால் அதனுடன் முழு அளவிலான தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் தயக்கமில்லை என்றே தனது நிலைப்பாட்டை வைத்துள்ளது. இப்போது வளைகுடா பகுதியில் ஈரான் தனது செல்வாக்கை நிலைநாட்டத் துவங்கியுள்ள நிலையில் சவூதி உட்படப் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவும், தூதரக உறவுகளை ஏற்படுத்தவும் முனைந்துள்ளன. சுமார் 28 நாடுகள் இஸ்ரேலினுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துள்ளன. அப்படித் துண்டித்த நாடுகளில் மொராக்கோ தனது தூதரக உறவை மீண்டும் புனரமைத்துள்ளது.

ஐ.நாவின் உறுப்பினராக இணைந்த காலத்திலிருந்தே இஸ்ரேல் பல்வேறு அமைப்புகளில் முனைப்பாகப் பங்கேற்று வருகிறது. கடவுள் துகள் கண்டறிந்த சி.இ.ஆர்.என் எனும் பிரமாண்டத் திட்டத்தில் இஸ்ரேலும் பங்கெடுத்துள்ளது. இஸ்ரேலிடம் அணு உற்பத்தி ஆற்றல் உள்ளது. அராபிய நாடுகளுக்கு இதைக் கண்டும் எரிச்சல். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை வல்லரசு நாடுகள் தடுக்கின்றன.

அமெரிக்கா உட்பட சில நாடுகள் ஈரானிடம் நிபந்தனைகளை விதித்து, உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டுள்ளன. இதன்படி ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது. ஆனால் இதே இஸ்ரேலிடம் இருக்கக்கூடிய அணு ஆயுதங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் தெரிந்தே இஸ்ரேலுக்கு அணு ஆயுதங்களுக்குத் தேவையான கன நீரை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு நடுவே ஈராக் உருவாக்கி வந்த அணு மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அழித்தது.

ஈரானின் அணு மின் நிலையங்களையும் தாக்குதல் நடத்தி அழிக்க இஸ்ரேல் விரும்பியது. ஆனால் அமெரிக்கா உட்பட எந்தவொரு இஸ்ரேலியச் சார்பு நாடுகளும் இதை ஏற்கவில்லை. அவர்கள் ஈரானுடன் பேசி அணு மின் நிலையங்களை மின் உற்பத்திக்கு மட்டும் பயன்படுத்த ஒப்பந்தம் செய்தனர். இந்த ஒப்பந்தமும் இப்போது அந்தரத்தில் தொங்குகிறது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான அணுசக்தி உற்பத்தி உறவு அணுகுண்டு தயாரிப்பதில் குவிந்திருப்பதை அமெரிக்கப் பத்திரிகையாளர் சைமன் ஹெர்ஷ் வெளிப்படுத்தியிருக்கிறார். வளைகுடா பகுதியில் அணு ஆயுதங்கள் இல்லை; அல்லது பயன்படுத்தப்பட மாட்டாது எனச் சொல்வதற்கில்லை எனும் நிலையே இப்போதுள்ளது.

பன்னாட்டு உறவுகள்

உலக நாடுகளில் இஸ்ரேல்

இஸ்ரேலை 168 நாடுகள் அங்கீகரித்துள்ளதால் அதன் உலகாளவிய வீச்சு இஸ்ரேலின் சொந்த இருப்பைத் தக்க வைக்க உதவுகிறது. இஸ்ரேல் தனது உலகளாவிய செல்வாக்கைப் பெருக்க 1958-ல் மஷாவ் (ஹூப்ரு சுருக்கம்) எனும் அமைப்பைத் தோற்றுவித்தது. பல வளரும் நாடுகளுக்கு இதன் மூலம் பொருளாதாரம், சமூகம் எனப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறது. இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவிகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. குறிப்பாக, அதன் சொட்டு நீர்ப்பாசனம் இன்று உலகம் தழுவிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

வறட்சி ஆதிக்கம் செலுத்தும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சொட்டு நீர்ப்பாசனம் பெரும் பலனைத் தருகிறது. இந்தியாவில் 1990 களில் சொட்டு நீர்ப்பாசனம் ஒரு வரப்பிரசாதமாகக் காணப்பட்டது நினைவிருக்கலாம். மஷாவ் சுமார் 140 நாடுகளுக்கு “பாலைவனத்தைப் பசுமை பூமியாக்கும்” திட்டத்தில் உதவி வருகிறது. அகதிகள் மேலாண்மை, நிலநடுக்கம் போன்ற பேரழிவு காலங்களில் மீட்பு நடவடிக்கை, மருத்துவ உதவி எனப் பல உதவிகளை இஸ்ரேல் அரசும், தனியார் அமைப்புகள் சிலவும் செய்கின்றன.

தீவிரவாதம் உலகளாவிய பிரச்னையானதும் இஸ்ரேலுக்குப் பெரும் நல்வாய்ப்பாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பிய இஸ்லாமியத் தீவிரவாதம் ரஷ்யாவின் நட்பை இஸ்ரேலுக்குப் பெற்றுத்தந்தது. ரஷ்யா செசன்யாவில் போர் செய்ய இஸ்ரேலின் தொழில்நுட்பம் பயன்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதி பஷ்தூன் அல்லாதாரின் நலன்களைக் காப்பாற்ற ரஷ்யா உதவி செய்து வந்தது.

பனிப்போர் காலங்களில் சோவியத் ஒன்றியத்துடன் இணக்கமான உறவின்றி இருந்த இஸ்ரேல் 1990-களுக்குப் பிறகு பழைய சோவியத் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக மாறியது. இருப்பினும் சோவியத் ஒன்றியத்தின் பழைய சகாக்களான கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இப்போது கொண்டிருக்கவில்லை. வேடிக்கை என்னவெனில் இந்தியாவுக்கு முன்னமே சீனா இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவின் நெருங்கிய நண்பனான வட கொரியா இஸ்ரேலை நட்பு நாடாக வைக்கவில்லை! அதே போல ரஷ்யாவுடன் இன்றும் நல்லுறவு கொண்டு வரும் கியூபா இஸ்ரேலுடன் தூதரக உறவு கொள்ளவில்லை.

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதி நாடு. வளைகுடா நாடுகள் அதிகம் அங்கம் வகிக்கும் ஓக்கின் (கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்) உறுப்பினர். அமெரிக்க எதிர்ப்புடன் இருக்கும் வெனிசுலா இஸ்ரேலை தள்ளி வைத்துள்ளது. கியூபா மற்றும் வெனிசுலா இஸ்ரேலை உருவாக்கும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவை. இந்தியா எதிர்த்து வாக்களித்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆனாலும் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகியன இப்போது இஸ்ரேலுடன் உறவுகளை மேம்படுத்தியுள்ளன.

அரபு லீக் எனும் அரபு இஸ்லாமிய நாடுகளில் 15 நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவு வைக்கவில்லை. அவை: அல்ஜீரியா, கொமோரோஸ், டுபௌட்டி, ஈராக், குவைத், லெபனான், சிரியா, மௌரிடானியா, ஓமான், கத்தார், சவூதி அரேபியா, லிபியா, சோமாலியா, டுனீஷியா மற்றும் ஏமன். இது தவிர இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு எனும் ஆர்கனைஷேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷனின் 10 அரேபிய நாடுகள் அல்லாத உறுப்பினர்களும் இஸ்ரேலுடன் தூதரக உறவில் இல்லை. அவை: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், ப்ரூனி, இந்தோனேஷியா, ஈரான், மலேஷியா, மாலத்தீவுகள், மலி மற்றும் நஜர்.

ஆகப் பாலஸ்தீன மக்களுக்குத் தனி நாடு ஒன்றை ஏற்படுத்தாமல் இந்த நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *