ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல அமெரிக்காவுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் இணை பிரியாத அல்லது பிரிய முடியாத பந்தம் துவக்கம் முதலே இருந்து வந்தது. விடுதலைப் பிரகடனம் வெளியிட்டதும் நடந்த போரிலேயே புதிய தேசம் முனைப்புடன் போராடி தனது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டது அமெரிக்காவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். அரேபிய-இஸ்லாம் நாடுகள் தங்களது காலனியாதிக்க எதிர்ப்பு உந்துதலால் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் மெள்ள நகரத் துவங்கின. குறிப்பாக, எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் ஆகியவை இஸ்ரேலை அங்கீகரிக்காமல் அதன் இருப்பைக் கேள்வி கேட்டு வந்தன.
சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது நிலத்தை, அதன் மீதான தேசத்தை அங்கீகரிக்காமல் அதனை அழிக்க துடிப்பதாலும், அதற்குச் சோவியத் ஒன்றியம் ஒத்துழைப்பதும் இஸ்ரேலை அமெரிக்காவின் பக்கம் சாய்த்தது. இத்தனைக்கும் அமெரிக்கா இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரிப்பதை விரும்பவில்லை என்பதோடு தனது வெளியுறவுக் கொள்கைக்கு, குறிப்பாக மத்திய கிழக்கில் தனது இராணுவ, வர்த்தக நலன்களுக்கு துணையாக இருக்கும் என்றே இஸ்ரேலைக் கருதி வந்தது. ஆனால் இஸ்ரேல் தனது சொந்தப்பாதையை நிர்ணயித்துக் கொள்வதில் குறியாக இருந்தது.
அமெரிக்காவுக்கு மத்தியக் கிழக்கில் நம்பகமான பங்காளியாக இருப்பதில் இஸ்ரேலுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், தன்னை அங்கீகரிக்காத அரேபிய நாடுகளுடனும் அமெரிக்கா நட்புறவு பாராட்டுவதைத் தடுக்க இயலவில்லை. பனிப்போர் காலத்தில் மத்தியக்கிழக்கில் நிகழ்ந்த சில மாற்றங்களால் காலப்போக்கில் அமெரிக்கா இஸ்ரேலைத் தாங்கி நிற்பதும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்காவில் அந்நாட்டு வாழ் யூதச் சமூகமும் முக்கியக் காரணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் இது குறித்து விவாதித்துள்ளதும் அதற்குப் பின்னால் அமெரிக்க வாழ் யூதச் சமூகத்தின் “செல்வாக்கு” இருப்பதும் சமீப காலங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆறு நாட்கள் போரில் வென்று தன்னை அசைக்க முடியாது என்பதை இஸ்ரேல் உணர்த்திய பிறகு அன்றைய அதிபர் லிண்டன் ஜான்சன் வெளிப்படையாகவே இஸ்ரேலுடனான உறவை வளர்த்தார். அதேபோல யோம் தோப்பூர் போரின் முதல் கட்டத்தில் இஸ்ரேல் திணறியபோது அதிபர் நிக்சனும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் இஸ்ரேலுக்கு ஏராளமான ஆயுதங்களை அனுப்பி வைத்தனர். இதற்குப் பின்னால் அமெரிக்க வாழ் யூதர்கள் மட்டுமின்றி, இஸ்ரேலின் வீழ்ச்சி அப்பிரதேசத்தில் அமெரிக்காவின் வீழ்ச்சியையும் குறிக்கும் என்றே ஒப்புக்கொள்ளப்பட்டது. இதை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க அரசு ஏறக்குறைய ஒப்புக்கொண்டது. அது தவிர, உலகம் முழுவதுமான யூதர்களுக்கு இஸ்ரேல் ஒரு முக்கிய நிகழ்வு. அதை அவர்கள் கைவிட இயலாது. எனவே முடிந்தளவு அவரவர் வாழ்ந்த நாடுகளில் தங்களது பன்னாட்டு அமைப்புகள் மூலம் இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்தியே வந்தனர்.
அமெரிக்க, இஸ்ரேல் உறவு மிகவும் தீவிரம் அடையத் துவங்கியது ஆறு நாள் போருக்குப் பிறகுதான். தன்னை ஓர் உள்ளூர் சக்தியாக நிலைநாட்டிக் கொண்ட இஸ்ரேலை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கத் தொடங்கியது. பின்னர் நிகழ்ந்த யோம் தோப்பூர் போருக்குப் பிறகு அரேபிய எண்ணெய் வள நாடுகள் தங்களுக்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேசச் சந்தையில் தங்களது எண்ணெய்யை விற்கத் துவங்கினர். இதனால் உலகப் பொருளாதாரத்தில் கடும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரையில் அரபு நாடுகளைத் தங்களது பொம்மைகளாக நினைத்து வந்த அமெரிக்கா இப்போது விழித்து எழுந்து தனது உத்திகளை மாற்ற நினைத்தது.
உடனடியாக இஸ்ரேலுக்கான தார்மிக ஆதரவு எனும் நிலை மாறி அமெரிக்க நலன்களை மத்திய கிழக்கில் எதிரொலிக்கும் ஒரு குரலாகவே இஸ்ரேல் மாறியது. இதன் பரிணாமத்தை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துள்ள நிதி மற்றும் ராணுவ உதவிகள் சுமார் 150பில்லியின் + என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். பொதுவாக அமெரிக்கா பிற நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகளைவிட இஸ்ரேலுக்கு அதிகமாக அளிக்கிறது என்பதை இஸ்ரேலிய ஆய்வாளர்களே தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி இஸ்ரேலுக்கு உள்ளேயே சமீபத்திய வெற்றிகளை வைத்து தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டதோடு அல்லாமல் இனி வருங்காலங்களில் எப்படித் தங்களது வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பது என்றும், அரேபிய நாடுகளை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பது குறித்தும் சிந்திக்கத் துவங்கினர்.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கிடையாது. எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் ஆகியவை எண்ணெய் வள நாடுகள் கிடையாது. எனவே தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருளாதார வலுவும் கிடையாது. யோம் தோப்பூர் போரைப் பெரு முயற்சி எடுத்த அதே அன்வர் சதாத் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டார். முதலில் சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவுடன் இருந்த சிரியா பின்னர் ரஷ்யாவின் நட்புடன் இன்றுவரை இருப்பதோடு இஸ்ரேலுடன் மோதி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஈரான்.
துவக்கத்தில் ஈரான் மன்னர் ரேஸா ஷாவின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுடன் நட்புறவில் இருந்தது. பின்னர் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்து ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறிய பிறகு ஈரானின் முக்கியக் கொள்கையே இஸ்ரேலை அழிப்பதாகவே இருந்து வருகிறது. ஈரான் – சிரியா நட்புறவு இஸ்ரேலுடன் மோதுவது மட்டுமின்றி பிற அரபு நாடுகளுடனும் மோதலை நீடிக்கும் போக்குடையது. வளைகுடாப் பிரதேசத்தில் ஈரான் முக்கிய சக்தியாக மாறுவதை சவூதி அரேபியா உட்படப் பல அரேபிய நாடுகள் விரும்பவில்லை. ஆனாலும், லெபனான், சிரியா மற்றும் கத்தார் ஆகியவை ஈரானின் நெருங்கிய சகாக்கள்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உட்படச் சில நாடுகள் ஈரானின் மேலாதிக்கத்தை எதிர்க்கின்றனர். இதற்குப் பின்னால் இஸ்லாத்தின் இரு முக்கியப் பிரிவுகளான ஷியா, சன்னி மோதலும் இருக்கிறது. அதுவும் கடந்து அமெரிக்க – இஸ்ரேல் எதிர்ப்பு என்பதில் ஈரான் நிலையாக இருக்கிறது. இது பனிப்போரின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்களின் தொடர்ச்சி. ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் குவைத் மீது படை எடுத்ததோடு இஸ்ரேலின் மீது ஸ்கட் ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டார். இப்படை எடுப்பு அமெரிக்காவுக்குப் பெரும் படிப்பினையாக முடிந்தது. சமாதை வீழ்த்தி விட்டாலும் அப்பிரதேசத்தில் ஐ.எஸ்.ஸின் எழுச்சியும் இப்போது அங்கு நிலவும் நிச்சயமற்ற சூழலும் இன்னும் நீண்ட காலத்துக்கு சவூதி போன்ற நாடுகள் இஸ்ரேலிடம் தானாகவே நட்புறவு கொள்ள தாமதிக்காது என்பதையே சுட்டுகிறது.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் தனது கட்டுரை ஒன்றில் இஸ்ரேல் ஒரு பேரரசாக உருவாக வேண்டும் என்ற ஒரு கருத்தினை எழுதியிருந்தார். இக்கருத்துக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கடந்த இருபதாண்டுகளில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் இதை ஏறக்குறைய உண்மையாக்கிவிடும் போல இருப்பது எதேச்சையானதாகத் தெரியவில்லை. அரேபிய நாடுகளுடன் திட்டமிட்டு உறவுகளை ஏற்படுத்தி வருவதாக இஸ்ரேல் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இதை இஸ்ரேலும் மறுக்கவில்லை. முதலில் தங்களது இருப்பை மறுத்து வந்த எகிப்து, பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஜோர்டான், ஏறக்குறைய லெபனான் என ஒவ்வொரு நாடாக/பிரதேசமாக தங்களிடம் நட்புக்கொள்ளவைத்த இஸ்ரேல் இப்போது சமாதான ஆசைகாட்டி சில அரேபிய நாடுகளை (சவூதி அரேபியா உட்பட) இழுத்து வருகிறது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இரு முக்கிய சன்னி பிரிவு வளைகுடா நாடுகள். அமெரிக்காவுடன் நிலையற்ற உறவினைத் தற்போது கொண்டிருந்தாலும் எந்நேரத்திலும் அதில் மாற்றம் வரலாம். இதுவரையில் அமெரிக்கச் சார்பாகவும், ரஷ்ய அல்லது அதற்கு முன்னர் சோவியத் ஒன்றிய எதிர்ப்பிலும் உறுதியாக நின்ற பல வளைகுடா நாடுகள் பெரும்பாலும் அமெரிக்கப் போர்த் தளவாடங்களையே வாங்கி வந்தன. இப்போதும் அந்நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இஸ்ரேல் எதிர்ப்பு என்பது பழைய விஷயம். அதையே இப்போதும் பேசிக்கொண்டிருக்க முடியாது.
இச்சூழ்நிலையைக் குலைக்கும் செயல்களை ரஷ்யச் சார்பு வளைகுடா நாடுகளே தூண்டலாம். உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யா வளைகுடா பிரதேசத்தில் ஒரு போரினைத் தூண்டவும் வாய்ப்புள்ளது. எதிர்பாராதவிதமாக உக்ரைன் போர் நீடித்துக் கொண்டே போவது ரஷ்யாவுக்கு எரிச்சலைத் தந்தாலும், எப்படியாவது அமெரிக்க எதிர்ப்பு அரசியலை வளைகுடாவுக்குள் திணித்து விட வேண்டும் என்று எண்ணுகிறது. அது நிறைவேறத் தடையாக இருப்பது இஸ்ரேல்தான். தற்போது இஸ்ரேலிடம் சுமார் 200 அணு ஆயுதங்கள் கைவசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இஸ்ரேலிடம் மோதுவதற்குப் பல நாடுகள் தயக்கம் காட்டுவது இயல்பானதே.
இரண்டாவதாக வளைகுடா+ வடக்கு ஆப்பிரிக்கா (மேனா ரீஜன் என அழைக்கப்படும் பிரதேசம்) நாடுகள் பலவற்றுக்கு இஸ்ரேலுடன் நேரடியாக எவ்விதப் பிரச்னையும் இல்லை. பாலஸ்தீனர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனும் ஒற்றைக் குறிக்கோள் மட்டுமே போருக்குப் போதுமானதல்ல.
மூன்றாவதாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குத் தன்னாட்சியை வழங்கத் தயார் என்றே கூறி வருகிறது. அதற்கு நிபந்தனையாக ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்கள் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். இந்த இயக்கங்களை எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூடும், ஈரானுமே இயக்கி வருகின்றன. மேலும் சில இயக்கங்கள் அதிகச் செல்வாக்கு இல்லையென்றாலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது துரோகம் எனும் நிலைப்பாட்டில் மக்களைக் கவர்ந்து அரசியல்/ஆயுதப் போராட்டத்தை நடத்துகின்றன.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பது அவரவர் கையில் இருப்பதால் போரின் மூலம் சிக்கலைத் தீர்ப்பது என்பது பேரழிவைத் தரும். எனவே போரினை யாரும் விரும்பவில்லை. அத்தோடு ஈரானின் உள்நாட்டில் இஸ்லாமிய அரசின் மீது பெருகி வரும் அதிருப்தி, லெபனானில் கிறிஸ்தவர்கள் – பாலஸ்தீனியர்கள் மத்தியில் சமரசம் ஏற்படுவது ஆகியன போரினைத் தடுக்கும் போக்குகள். இதையொட்டியே இஸ்ரேலும் காய் நகர்த்துகிறது.
அமெரிக்காவுக்கு இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்கு வேறொரு இடமும் இருந்தது. வளைகுடாப் பிரதேசம் மட்டுமல்ல; இங்கேயும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புகள் அதிகம். அந்த இடம். ஐக்கிய நாடுகள் சபை. இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவித்த அதே ஐ.நாவின் பொதுச் சபையும், பாதுகாப்புச் சபையும் சுமார் 40-கும் மேற்பட்ட சமயங்களில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளன. அமெரிக்காவும் ஏறக்குறைய அதே எண்ணிக்கை அளவுக்குத் தனது தடுப்பதிகாரத்தைப் (வீடோ பவார்) பயன்படுத்தி இஸ்ரேலைக் காத்துள்ளது. இதில் முரண்பாடு என்னவென்றால் இஸ்ரேல் போல ஐ.சபையினால் ஓரங்கட்டப்பட்ட நாடு உலகிலேயே இல்லை எனலாம்.
பல்லாண்டுகள் வரையில் ஐ.நாவின் துணை அமைப்புகளான ஐ.நா அகதிகள் அமைப்பு, ஐ.நா சிறார் நிதி, பன்னாட்டு நீதி மன்றம் உட்படப் பலவற்றில் இஸ்ரேலுக்கு இடமில்லை. இன்னும் சொல்லப்போனால் உலகளவிலான உள்நாட்டுப் போர்களுக்காக ஐ.நா அமைப்பு உடனடியாக நெருக்கடிக் காலக் கூட்டங்களை நடத்தியதை விட இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்களின் சமயத்தில் நெருக்கடிக் காலக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் அமெரிக்கா இஸ்ரேலுக்காகத் தலையிட வேண்டியிருந்தது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பகுதிகளில் நடத்தும் இராணுவ சோதனைகள், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்கு (இவை பல நேரங்களில் பொது மக்கள் மீதும் நடக்கும்) பதில் தாக்குதல் நடத்தும் போதும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கும். இஸ்ரேல் நிலைமையைப் பொறுமையுடன் கையாள வேண்டும் என்று அறிவுரை கூறும். இதே அறிவுரையை சீனா, சவூதி அரேபியா, சிரியா ஏன் ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் மீது கூடச் செலுத்தாது.
இந்தியாவின் காஷ்மீர் விஷயத்தில் தலையிட விரும்பும் ஐ.நா சபை பாகிஸ்தானின் உள்நாட்டு வெடிகுண்டு சம்பவங்களைக் குறித்துப் பேசாது. பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளைக் குறித்து நெருக்கடி காலக் கூட்டங்களை நடத்தாது.
இந்நிலையிலும் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலால் மாற்றம் ஏற்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஊக்குவித்து சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானிஸ்தான் படை எடுப்பை தகர்த்த அமெரிக்கா தானே அதே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டபோது உலகம் தழுவிய பரப்புரையால் ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது. பின்னர் சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக் மீது படை எடுத்தது. இரண்டிலும் படு தோல்வி.
இப்போது ராஜதந்திரத்தைக் கையாண்டு சூழ்நிலையைத் தனக்குச் சாதமாக்கிக்கொள்ள அமெரிக்கா விரும்பினாலும் அரேபிய நாடுகள் உட்படப் பல உலக நாடுகள் அமெரிக்க அரசை நம்பவில்லை. எனவே இஸ்ரேல், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை முன்னிறுத்தி ஐ.நா பாதுகாப்புச் சபையை விரிவாக்க முயற்சிக்கிறது. அப்படி நடந்தால் மத்தியக்கிழக்குப் பகுதியில் நிலையான ஜனநாயக நாடாக இருக்கும் இஸ்ரேலுக்கும் நல்வாய்ப்பு கிடைக்கும். அதை அரேபிய நாடுகள் தடுக்கவும் இயலாது. ஏனெனில் அவற்றில் ஜனநாயக அமைப்பு, அரசமைப்பு, தேர்தல் இதெல்லாம் அதிகம் அறியப்படாதது. ஒன்று மன்னர் ஆட்சி; இல்லையேல் ராணுவ ஆட்சி.
இப்படியொரு நிலையில் இஸ்ரேல் தனது நிலையைப் பன்னாட்டு அளவில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டியிலும் ஈரான், துருக்கி போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிராக நிற்கின்றன. ஏரியல் ஷரோன் எழுதியது ஏறக்குறைய நிறைவேறும் சூழல். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஜனநாயக ஆதரவு புரட்சி இன்னும் உயிர்ப்போடுதான் உள்ளது. நடுவில் ஐ.எஸ்ஸின் அடாவடியால் திசை திரும்பிவிட்டது. அப்படியொரு புரட்சி அமைதியான முறையில் மக்களால் நிகழ்த்தப்பட்டால் இஸ்ரேலுக்குச் சாதகமாகும்.
இந்நாடுகளில் அரசியல் குழப்பம் இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு வலு சேர்க்கும். ஜனநாயக அமைப்பில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதைத் தேர்தல்தான் முடிவு செய்யும். அரேபிய நாடுகளில் சிலவற்றில் மட்டும் உள்ளாட்சி மன்றங்கள் போன்ற அமைப்புகளுக்குத் தேர்தல் உண்டு. அதையே மக்களாட்சி அமைப்புகளுக்கும் நீடிக்கச் செய்து நாடாளுமன்றத்துடன் கூடிய மன்னராட்சி போன்ற புதிய பரிசோதனைகள் நடந்தால் இந்நாடுகளும் ஐ.நா சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் தங்களது பங்கினைக் கோரலாம்.
வளைகுடாப் பிரதேசத்தில் அமெரிக்க ஆதரவு, ரஷ்ய ஆதரவு எனும் இரு பிரிவுகளில் எந்தெந்த நாடுகள் இஸ்ரேலுடன் இணைந்து அப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தினைப் பங்கிட்டுக் கொள்ளும் என்பதை இப்போது வரையறுப்பது கடினம். ஆயினும், எகிப்து, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இஸ்ரேலுடன் இணைந்து செயலாற்றலாம். சவூதி அரேபியா, லெபனான் மற்றும் மொராக்கோ ஆகியவையும் எதிர்காலத்தில் இணையலாம்.
ஆசிய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று நிலவும் கொதிப்பான அரசியல் நிலை மேலும் போர்களுக்கு வித்திட்டால் அதனால் எத்தகைய புதிய சூழ்நிலைகள் உருவாகும் என்று கூற இயலாது. அச்சூழ்நிலையில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் எழும் என்பது மட்டும் உறுதி.
(தொடரும்)