Skip to content
Home » இஸ்ரேல் #10 – அமைதியற்ற வாழ்வு!

இஸ்ரேல் #10 – அமைதியற்ற வாழ்வு!

இஸ்ரேல்

யூதர்களைப் பொறுத்தவரை தங்களின் இருப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலையே சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர். அவர்களின் பண்பாடு, மதம் சார்ந்த அணுகுமுறைகளால் பிற மக்களிடம் அந்நியப்பட்டு நிற்பதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. இது ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கப்படுகிறது.

வரலாற்று காலத்துக்கு முந்தைய நாட்களிலேயே பாலஸ்தீன-யூத மோதல்கள் நிகழ்ந்து அதில் டேவிட் வென்று இஸ்ரேலை நிலைநிறுத்தியதாக யூத பைபிள் கூறுகிறது. எனவே யூதர்கள்/இஸ்ரேல் எனும் கருத்துருவமே அடிப்படையில் கேள்விக்கு உட்படுவது துவக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. குழந்தை பிறந்ததிலிருந்தே போராட்டம் என்பது போல வாழ்க்கை முழுதும் அலைக்கழிப்பினைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம்.

‘ஆன்டிசெமிடிசம்’ எனும் பொதுவான சொல் மூலம் யூதர்களுக்கு எதிரான மனநிலையை விவரிக்கின்றனர். இது 19 ஆம் நூற்றாண்டில் பிரபலமடைந்த சொல் எனக் கருதப்படுகிறது. ஜெர்மன் படைப்பாளியான வில்ஹெம் மாரால் இந்தச் சொல் பிரபலமாக்கப்பட்டது. கி.பி 140 ஆம் ஆண்டு வாக்கில் ரோம் நகரில் ஜஸ்டின் மார்ஷியர் என்பவர் கிறிஸ்துவை யூதர்களே கொன்றனர் எனும் பரவலான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அட்வெர்சுஸ் ஜூடேயூஸ் எனும் நூலை எழுதினார். இதில் யூதர்களையும், கிறிஸ்துவர்களையும் இனம் காணுவதில் இருந்த கடினங்களைப் பட்டியலிட்டதோடு யூதர்களுக்குக் கடவுளால் அருளப்பட்டவை தற்போது கிறிஸ்துவர்களின் கைகளுக்குள் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

யூதர்களுக்கு எதிரான மனநிலையை கிறிஸ்துவர்களே துவக்கத்தில் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. ஒன்று யூதனாக இரு; இல்லையேல் கிறிஸ்துவனாக மாறு என்பதே நிலைப்பாடு. மேலும் கிறிஸ்துவக் குழந்தைகளை யூதர்கள் கொல்லுவதாகவும் பரவலாக கருதப்பட்டது. இன்னும் பல தத்துவ/மத அறிஞர்கள் யூதர்களைத் தவறானவர்களாகச் சித்திரிக்கும் “ஆய்வு” நூல்களை எழுதினர். பின்னாளில் 12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் யூத எதிர்ப்புக் கொள்கையான ஆன்டிசெமிடிசம் பரவி பல நாடுகளில் இருந்து யூதர்கள் விரட்டப்பட்டதற்கு கிறிஸ்துவர்களின் பிரசாரம் முக்கிய காரணமாக விளங்கியது.

மேலும் கி.பி 135 ஆம் ஆண்டில் சைமன் பார் கோச்பா எனும் யூதர் ரோமானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சியை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராபி அகிபா என்பவரால் “இறைத்தூதர்” என அறிவிக்கப்பட்டதால் எழுந்தது. இதை ஏசுவை இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட யூதர்கள் ஆதரிக்கவில்லை. ரோமானிய நாட்டுக்கு எதிரான புரட்சியை ஏற்கவில்லை. இதனால் ஏராளமான உயிர்பலிகள் நிகழ்ந்தன. இச்சந்தர்ப்பத்திலிருந்து யூதமும் கிறிஸ்துவமும் இரண்டு வேறு வேறு பிரிவுகளாக மாறின என்று கூறப்படுகிறது.

யூதர்கள் அனைவரும் சந்தேகத்துக்குரியவர்கள் எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதைவிட கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் ஒரு பைபிள் கதைப்படி அரசியால் யூதர்கள் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அரசி ஒரு யூதராக இருந்ததால் தனது மக்களை மன்னித்து விடும்படி அவர் கேட்டுக்கொண்டார். மொடேகாய் எனும் யூதர் மன்னர் ஹமானின் மூத்த உதவியாளருக்குத் தலைகுனிந்து வணக்கம் தெரிவிக்க மறுத்ததால் வந்த வினையிது. யூதர்கள் கடவுளைத் தவிர பிறர் எவர் முன்பும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் என்பதை யூதர் அல்லாதார் அறிவதில்லை.

யூதர்களின் பல்வேறு பழக்கவழக்கங்களால் பிறரிடமிருந்து தனித்துக் காட்டியது. சில காரணங்களால் உணவை அவர்கள் பிறருடன் பகிர்ந்து உண்பதில்லை. பெரும்பாலான சமூகங்களில் இது யூதர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களும், சமூகத்தின் பண்பாட்டு எதிர்பார்ப்புகளும் இணைந்து போகவில்லை. யூதர்கள் பிறச் சமூகத்தினரின் கடவுளர்களை வணங்குவதில்லை. அதேபோல யூதர்கள் பிற சமூகத்தில் மணம் புரிவதையும் அனுமதிப்பதில்லை.

நாகரிகக் காலங்கள் வளர்ந்த பின்னரும் நீண்ட அங்கிகளையும், காதில் வளையம் அணிவதையும் யூதர்கள் நிறுத்தவில்லை. சிறுபான்மை யூத சமூகம் தன்னைத் தனித்துக்காட்டிக்கொள்வது எளிதாகப் பாரபட்சத்துக்கு உள்ளாக்குப்படுவதற்குக் காரணமாகிறது.

பதிநான்காம் நூற்றாண்டில் பரவிய பிளேக் நோய் யூதர்களால் கிணற்றில் கலக்கப்பட்ட நஞ்சினால் ஏற்பட்டது என ஐரோப்பா முழுதும் கருதப்பட்டது. இந்நோயினால் இந்தியாவிலிருந்து ஐஸ்லாந்து வரையில் மூன்றில் ஒருவர் பலியாயினர். பதிநான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 2.5 மில்லியன் யூதர்கள் வசித்தனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தெற்கு பிரான்ஸிலும், ஸ்பெயினிலும் வாழ்ந்தனர். இந்த நஞ்சு வதந்தியால் யூதர்கள் கொடுமைக்கு ஆளாயினர். சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இப்போக்கைத் தடுப்பதற்காக யூதர்கள் சிலர் அரகான் அரசர் பீட்டரைக் கொன்றனர். இதன் காரணமாக ஐரோப்பா முழுதும் யூதர்களுக்கு எதிரான கலவரம் பரவியது. பல அரசர்கள் யூதர்களின் பழிவாங்கலுக்கு அஞ்சிக் கைது நடவடிக்கையில் இறங்கினர். ஜெனீவாவில் பிளேக் நோய் பரவும் முன்பே யூதர்களிடம் கடன் வாங்கிய பலர் தங்கள் கடனைத் திருப்பித்தராமல் இருக்க யூதர்களைக் கொல்ல ஆட்களைத் திரட்டினர். சில இடங்களில் யூதர்கள் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டனர். பலர் கூட்டமாக நிர்வாணப்படுத்தப்பட்டு ஒரு வீட்டினுள் அடைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். தங்களது கடனைத் தீர்க்க கிறிஸ்துவர்கள் பலரால் யூதர்கள் ஐரோப்பா முழுதும் தாக்கப்பட்டனர். இப்படித்தான் ஆன்டி செமிடிசம் பரவியது.

இது போதாது என்று ப்ரொடெட்ஸ்டெண்ட் கிறிஸ்துவத்தின் நாயகரான மார்ட்டின் லூதர் கிங் தனது எழுத்துகளால் யூதர்களைத் தனது பிரிவின்பால் மதம் மாற வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் போலந்திலும், உக்ரைனிலும் 3.5 மில்லியன் யூதர்கள் வாழ்ந்தனர். இது உலக யூத மக்களில் சரிபாதி என்று கூறப்படுகிறது. போலந்தின் அரசர் யூதர்களைத் தனது நாட்டில் அடைக்கலம் புகும்படிக் கூறியதால் இவ்வளவு மக்கள் தொகை அங்கு குவிந்தது. இந்நிலையில்தான் லூதர் கிங்கின் யூத வெறுப்பு எழுத்துகள் கடுமையாகப் பரவின. பின்னாளில் ஹிட்லர் உட்பட நாஜி தலைவர்கள் யூத வெறுப்பை லூதர் கிங் எழுத்துகளிலிருந்தே எடுத்தாண்டனர். பின்னாளில் போலந்தில் மட்டும் 33 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே யூதர்கள் மந்திர – தந்திர ஆட்கள் என்றே கருதப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் குடிசை/சேரிப் பகுதிகளிலேயே வாழ்ந்தனர். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. அரசர்களின், சமூகத்தின் ஆதரவு இன்றி இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பல நாடுகளில் யூதர்கள் பல்வேறு பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டனர். இயல்பாகவே உள்ளூர் மக்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பு ஏற்பட இது போன்ற காரணங்கள் இருந்தன. எப்போதுமே யூதர்கள் சந்தேகத்துக்குரியவர்கள் எனும் எண்ணம் பரப்பப்பட்டு வந்தது.

முதன் முதலில் யூதர்கள் மதத்தின் பேரால் வேற்றுமைக்கு உள்ளாயினர். பிற்காலங்களில் இனம் என்ற வகையில் வெறுப்பரசியலுக்கு உள்ளாயினர். இதை இரண்டுவிதமான காலகட்டங்களில் காணலாம்.

வரலாற்று காலகட்டங்களில் மதம், தொழிற்புரட்சிக்குப் பின்னர் இனம் என்ற வகைகளில் ஒதுக்கப்பட்டனர். சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் மீதான ஐயம் முற்றிலும் நீங்கிவிட்டதாக ஐரோப்பியர் நினைக்கவில்லை. குறிப்பாக ஜெர்மனியில்தான் வெறுப்பு அதிகமாக இருந்தது. ஐரோப்பா முழுவதுமே கலை, அறிவியல், தத்துவம் போன்ற துறைகள் வளர்ந்திருந்தாலும் அதன் கூடவே யூத வெறுப்பும் வளர்ந்து வந்திருந்தது. அது ஜெர்மனியில் அரசியல் அவதாரம் எடுத்து யூதப்படுகொலைகளுக்குக் காரணமானது.

பிரான்ஸில் தோன்றிய ஸியோனிசம் எனும் கோட்பாடு ஐரோப்பாவில் பரவியதோடு இன்று இஸ்ரேலில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட தாக்கமாக புதிய நாஜிகள் உட்பட பல அரசியல் இயக்கங்கள் இணைய வழியை ஆக்கிரமித்து ஆன்டி செமிடிக் உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். யூதர்கள் தங்களுக்கு எதிரான வலுவான போர்முனை ஒன்றை இணைய உலகிலேயே காண முடியும். இந்த இணைய உலகப் பிரசாரம் வலிமை மிக்கது. பன்னாட்டு அளவில் எளிதில் சென்று சேரக் கூடியது. யூதர்களுக்கு எதிரான மன நிலை இன்று அரசியல் என்ற அளவில் சுருங்கிவிட்டது என்றே நினைத்தாலும் இதர அம்சங்களை உலகம் மறக்கவில்லை என்பதைப் பல சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இன்றும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்த நினைக்கவில்லை. அதில் மத வேற்றுமையும் கலந்துள்ளது. இஸ்லாமியத் தூய்மைவாதம் பிற மதங்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டும்போது யூதமும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே அரசியல் காரணங்களினால் இஸ்ரேல் மீதான வெறுப்பு நிலைப்படுத்தப்பட்டிருக்கும் போது மதமும் இணைந்து கொண்டால் கொழுந்து விட்டெரியும் வெறுப்பு எனும் நெருப்பு எளிதில் அணைக்க இயலாததாகிவிடும். அதனால்தான் யூதர்கள் அமைதிப்பாதையில் பயணிக்கத் தயாராகவேண்டும் என்று உலக சமூகம் கேட்டுக்கொள்கிறது.

தற்கால யூத எதிர்ப்புச் செயல்பாடுகளாகக் கருதப்படுபவைப் பலவாறாக இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியே காண வேண்டும். தற்போது நடைபெற்று வரும் ரஷ்யாவின் உக்ரைன் படை எடுப்பு கூட ரஷ்யவாழ் யூதர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி ஏராளமானவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்துள்ளது. போர் துவங்கியதிலிருந்து இதுநாள் வரையில் சுமார் 20,000 பேர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. (கவனிக்க இது சென்ற ஆண்டு ஆகஸ்ட் வரையில்).

ரஷ்யாவில் சுமார் இரண்டு லட்சம் யூதர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலோர் போரின் முடிவில் தங்கள் மீதான வெறுப்பு எளிதில் பற்ற வைக்கப்படும் என்றே கருதுகின்றனர். கடந்த காலங்களில் ரஷ்யாவில் இது போன்று நிகழ்ந்திருப்பதால் அவ்வாறு கூறுகின்றனர். ரஷ்யப் புரட்சி, பொருளாதார நெருக்கடிகள், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் போது யூதர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். ஆனால் பல ரஷ்ய வரலாற்று அறிஞர்கள் இப்போது அது போல நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் அதிபர் புடின் உக்ரைன் ஆளும் வர்க்கத்தினரை நாஜிகள் என்று விளித்தே போர் செய்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ரஷ்யாவில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகே யூத சமூகத்தின் மீட்சி நடந்துள்ளது. தமக்கான வழிபாடு மையங்கள் முதல் விடுதிகள் வரையில் ஒவ்வொன்றையும் யூதர்கள் உருவாக்கியுள்ளனர்.

போரினை எதிர்த்தே யூதர்கள் அங்கிருந்து வெளியேறுவதாகவும், ரஷ்யாவில் போருக்கு எதிராகப் பேசுவது ஆபத்தானது என்றும் புலம் பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தேசத்தில் பலவற்றைக் கட்டுமானம் செய்த பிறகு அதை விட்டுவிட்டு நீங்குவது என்பது வேதனையானது. யூதர்கள் இப்போது ரஷ்யாவில் அதைச் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகப் பலர் நினைப்பதால்தான் வெளியேறுகின்றனர்.

ரஷ்யாவில் அதிகார வர்க்கம் எப்போது மாறும் எனக் கூற முடியாது. அவ்வாறு வெளியேறும் ஒருவர் தங்கள் மூதாதையர்கள் பட்ட துன்பத்தை எடுத்துக்காட்டுகின்றனர். நாங்கள் எளிதில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளும் தன்மை படைத்தவர்கள் என சுய நையாண்டி செய்துக் கொள்கின்றனர். சமூகத்தின் வெறுப்புப் பிரசாரத்தின் பிரதான அம்சமாக மாறிவிடுவோம் என்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக திடீரென்று ரஷ்ய ஏஜென்சியின் யூதக் கிளையை மூடியதையே சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்யா மட்டுமல்ல; பல ஐரோப்பிய நாடுகளில் கூட போர் அச்சம் ஏற்பட்டால் இஸ்ரேலில் சட்ட விரோதக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, ரஷ்யாவின் போர் மேலும் பல சிக்கல்களுக்கு ஒரு துவக்கம் என்றே கருதுகின்றனர்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *