Skip to content
Home » இஸ்ரேல் #13 – பொருளாதார வளர்ச்சி – ஐரோப்பியாவில் கிடைத்த செழுமை

இஸ்ரேல் #13 – பொருளாதார வளர்ச்சி – ஐரோப்பியாவில் கிடைத்த செழுமை

பொருளாதார வளர்ச்சி

இஸ்ரேல் விடுதலை பெற்றபோது அது எவ்வாறான பொருளாதாரத்தை வைத்திருக்கப்போகிறது எனும் கேள்வி எழுந்தது. ஏனெனில் அதுவரையில் யூதர்களுக்கு மத்தியிலான பொருளாதார உறவுகள் வேறுபட்டவை. அவர்கள் தனியொரு தேசத்தில் வாழவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றிலேயே அதிகம் வாழ்ந்து வந்தனர். தங்களது ஆதிப்பிரதேசமான மத்தியக் கிழக்கில் கூட சொற்ப எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வந்தனர். அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் வாய்ப்பு மிகச் சில யூதர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெரும்பாலும் வணிகர்களாகவும், நிதி மூலதனம் அளிக்கும் வட்டிக்கடைக்காரர்களாகவே யூதர்கள் அறியப்பட்டிருந்தனர்.

பல்வேறு தேசங்களுக்கு பயணித்தும் வணிகம் செய்து வந்தனர். பெரும்பாலான யூதர்கள் நகர்ப்புறங்களிலேயே வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பாலோர் கைவினைஞர்கள், கலைஞர்கள், முகவர்களாக தொழில் செய்து வந்தனர். யூதர்கள் ராணுவத்தில் சேர்வதும் குறைவாகவே இருந்துள்ளது. அந்தந்த நாடுகளின் அரசுகள் யூதர்களை நிர்வாகத்திலும் பங்களிக்கச் செய்தனர். அந்த வகையில் அரசியல் செல்வாக்கையும் பெற்றிருந்தனர்.

மத்திய காலத்தில் பல்வேறு இஸ்லாமிய அரசுகளின் கீழ் மத்தியக் கிழக்கில் வாழ்ந்த யூதர்கள் விவசாயத்தைக் கைவிட்டு நகரங்களில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் பரவிய கல்வியறிவு எனும் செயற்பாடு யூதர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆவணங்கள், சட்டங்கள் மற்றும் விதிகளை உருவாக்கி எழுதி வைக்கும் பொறுப்பான பதவியோ முழு நேரத் தொழில் ஒன்றை செய்யும் பெருவாய்ப்போ ஏற்பட்டது. இது யூதர்களின் சமூக மதிப்பை அதிகரித்தது.

யூதர்களின் நிதி மூலதனம் ஐரோப்பாவின் வணிகர்கள் உலகம் முழுதும் வர்த்தகம் செய்யவும், பங்குச் சந்தைகளின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. இப்போக்கினை 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் காணலாம். யூதர்களின் நிதி மூலதனம் வளர்ச்சி பெறுவதற்கு அவர்களின் வலைப்பின்னல் ஒரு காரணம். இதன் பின்னணியில் கிழக்கு ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் யூதர்களுக்கு விவசாய செய்ய நிலம் வாங்கத் தடை இருந்ததே முக்கியக் காரணம். 20 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே விவசாய நிலம் வைத்திருக்க அனுமதி கிடைத்தது. ஆயினும், பல்வேறு விதமான அரசியல் மாற்றங்களாலும், இரண்டு உலகப் போர்களாலும் யூதர்களின் விவசாய முயற்சி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

நகர்ப்புறத்து வணிகத்திலும் யூதர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் இடையில் மோதல்கள் இருந்தன. யூதர்களுக்கான அரசு அங்கீகாரமும் தெளிவற்றதாகவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறான தன்மைகளுடனும் காணப்பட்டது. சந்தை பற்றிய புரிதலும், நிதித் தொடர்பான வலைப்பின்னலும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாதவை என்று யூதர்கள் அறிந்திருந்தனர். நகர்ப்புறங்களில் வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்றும் நம்பினர். இதுவே பெருமளவில் கிராமப்புறங்களில் யூதர்கள் வாழாததற்கு காரணமாகியது.

யூதக் குடும்பங்களில் ஆண்கள் வணிகம் காரணமாக வெளியிடங்களுக்குச் செல்லும் போது பெண்களே வீட்டையும், உள்ளூர் வணிகத்தையும் கவனித்துக் கொண்டனர். உலகில் முதல் பெண் தொழில் முனைவோரை உருவாக்கிய இனம் யூதர்களே என்றால் பொருத்தம்தான். யூத மதத்தின் ஆச்சாரமான மத குருமார்கள் பெண்களை இப்படி முன்னிலைப்படுத்துவதை விரும்பவில்லை என்றாலும் இதற்கு மாற்று இல்லை என்பதால் ஏற்றனர். பின்னர் ஸியோனிஸ்டுகள் விவசாயம் உட்பட கைவினைகள் வரை அனைத்துத் தொழில்களிலும் “உற்பத்திச் சார்ந்த” வாழ்வியலை ஊக்கப்படுத்தினர். இதன் மூலம் வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் போக்கு குறையும் என்று ஸியோனிஸ்டுகள் கருதினர்.

முதல் உலகப்போர் நேரத்தில் யூதர்கள் விவசாயம் செய்வதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். சோவியத் ஒன்றியத்தில் யூதர்கள் விவசாயிகளாக வாழ்வது ஊக்கப்படுத்தப்பட்டது. சுமார் 2,00,000 யூதர்கள் அரசுப் பண்ணைகளில் விவசாயிகளாகப் பணியாற்றினர். பின்னர் யூதப் படுகொலைகளாலும், ஸ்டாலினின் பண்ணைக் கொள்கைகள் தோல்வியடைந்ததாலும் யூதர்கள் பண்ணைகளிலிருந்து வெளியேறினர். முரண்பாடாக ஸியோனிஸ்டுகள் யூதர்கள் பண்ணைகளில் விவசாயம் செய்வதை ஆதரித்தது. இளைஞர்களை நிலத்தில் வேலை செய்ய பயிற்றுவிப்பது இஸ்ரேலின் தோற்றத்தில் உதவும் என்பது அவர்களது கருத்து. ஆனால் போதுமான ஆதரவு இன்றி இத்திட்டம் தோல்வியுற்றது. விவசாயத்துக்குப் பதிலாக கைவினைத்தொழிலை யூதர்கள் ஏற்று அதில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் இயந்திரமயமாக்கலும், தொழில்மயமாக்கலும் வேகமான அறிவியல் முன்னேற்றத்தால் சாத்தியப்பட்டன. கைவினைத் தொழிலை நம்பியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளுக்கு வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகியது. உலகம் முழுதும் நிலவிய காலனியாதிக்க அரசுகள் இப்போக்கினைத் தங்களின் சுரண்டலுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். கைவினைஞர்களாக வாழ்ந்து வந்த யூதர்களும் வேறு வழியின்றி தங்களைத் தொழிற்சாலைத் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டனர்.

இப்படியாக மத்திய தர வர்க்க யூதக் குடும்பங்கள் உருவாகின. தொழில் வளர்ச்சியை ஒட்டி கணக்காயர், மதிப்பீட்டாளர், வங்கி ஊழியம் போன்றவற்றிலும் தங்களது கல்விப் பின்னணியால் யூதர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்தன. ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான மனப்போக்கு நிலவியதற்கு யூதர்களின் மத்திய தர வர்க்க உருவாக்கமும் ஒரு முக்கியக் காரணம். அத்துடன் அவர்கள் வணிகம் போன்ற தொழில்களிலும் மேலும் அதிகப் போட்டிகள் இன்றி செயல்படும் சூழல் உருவாகியது அவர்களை பொருளாதாரத்தில் உயர்த்தச் செய்தது.

யூதர்களில் பெரும் முதலீட்டாளர்களும் இருந்தனர். அவர்கள் வங்கித் தொழிலில் (வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற) ஈடுபடுவது மட்டுமின்றி பெருந்தொழில்களிலும் முதலீடு செய்தனர். ரஷ்யாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இஸ்ரேல் பிராட்ஸ்கி மற்றும் எவ்செல் ஜிண்ட்ஸ்பெர்க் ஆகியோர் சர்க்கரை, ஆல்கஹால் போன்ற தொழில்களில் முதலீடு செய்தனர். ரயில்வே மேம்பாட்டுக்கு நிதி முதலீட்டினை போலந்து, ரஷ்ய முதலீட்டாளர்கள் செய்தனர். கிழக்கு ஐரோப்பாவுக்கு ரயில்வே வலைப்பின்னலை உருவாக்கியதில் அவர்கள் முக்கியப் பங்காற்றினர்.

யூதர்களின் கல்வி குறிப்பாக ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் மருத்துவக் கல்வியில் யூதர்கள் அதிகம் பேர் சேர்ந்தனர். யூதப் படுகொலைகளுக்குப் பின்னர் வாழ்ந்த மக்கள் தொகையில் சுமார் 20,000 பேர் மருத்துவம் கற்றவர்களாக இருந்தனர். அதே போல 25,000 பேர் பொறியியல் கல்வியைக் கற்றுள்ளதாகத் தெரிகிறது. புதிய தேசமான இஸ்ரேலுக்குள் ஏராளமான உயர்கல்வி கற்றவர்கள் வந்து சேர்ந்தது அந்நாட்டை பெரிய அளவில் நிலைநிறுத்த உதவியது. குறிப்பாக, மருத்துவம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் பங்களிப்பு பிற யூதர்களின் பங்களிப்பை விட அதிகம்.

இன்றுவரை இஸ்ரேல் தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்த நாடுகளைப் போல் விளங்குவதற்கு அன்று அகதிகளாக புலம் பெயர்ந்த கிழக்கு ஐரோப்பிய, ரஷ்ய யூதர்களே காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

யூதர்கள் எப்போதெல்லாம் பொருளாதாரத்தில் உயர்கிறார்களோ அப்போதெல்லாம் ஏதேனும் சட்டங்கள் இயற்றி அவர்களது பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது வழக்கமானதாக இருந்துள்ளது. இது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்ந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டுப் போர்கள் அவர்களை வரவேற்கச் செய்தது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டுப் போர்கள் அவர்களைப் பின்னடையச் செய்தது.

யூதர்கள் வீழ்ந்த போதெல்லாம் எந்தவொரு ஐரோப்பிய அரசும் அவர்கள் மீதான கட்டுப்பாடுகளைக் குறைக்கவில்லை. பெரும் பொருளாதாரத் தேக்கம் நிகழ்ந்த 1929-31 ஆம் ஆண்டுகளில் யூதர்களின் பங்களிப்பு பல்வேறு ஐரோப்பிய நாடுகளைப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள வழி செய்தது. இருப்பினும் கூட, சிக்கல் தீர்ந்த பிறகு யூதர்களுக்கு எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் யூதர்கள் இரண்டு பக்கமும் அடிவாங்கினர். பொருளாதாரத் தேக்கத்தின் பாதிப்புகள் ஒருபுறம், அரசுகளுக்கு உதவுவதால் ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றொருபுறம் என இருதரப்பிலும் பிரச்னைகளைச் சந்தித்தனர். அதனால் பின்னர் ஏற்பட்ட நாஜிக்களின் படுகொலைகளின் போது ஓரளவுக்கேனும் இரக்கத்துக்கு ஆளாயினர்.

யூதர்களைப் பல சிக்கலான காலங்களில் காப்பாற்றியது அவர்களது சமூக வலைப்பின்னல். பொருளாதாரத் தேக்கத்தின் போது பல யூதர்கள் தங்களது சமூக நிதி அமைப்பிலிருந்து பெற்ற நிதியுதவியில்தான் வாழ நேர்ந்தது. நாஜிக்களின் ஒடுக்குமுறையிலிருந்து கூட பொருளாதார ரீதியில் யூதர்களால் ஜெர்மனி உட்பட பல நாஜி ஆதிக்கத்திலிருந்த நாடுகளில் கூட தப்பிக்க முடிந்தது. கெட்டோ எனப்படும் சேரி அல்லது குடிசைப்பகுதிகளில் வாழ்வதே யூதர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

நாஜிக்கள் தெளிவாக பொருளாதார ரீதியில் யூதர்களின் உழைப்பைச் சுரண்டவும் பின்னர் அவர்களை ஒட்டுமொத்தமாக வதை முகாம்களுக்கு கொண்டு சென்று கொல்வதற்கும் ஏதுவாக கெட்டோக்களில் யூதர்களை அடைத்தனர். அங்கும் கூட ஆசாரிகள், தனிப்பட்ட ஜெர்மானியர்களுக்கு வேலை செய்யும் யூதர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் தாக்குப் பிடித்து நிற்க முடிந்தது. யூதர்களின் படுகொலைக்குப் பொருளாதாரப் பின்னணியைக் காரணம் காட்டிய நாஜிக்கள் அதே காரணத்துக்காகக் கொல்ல முடியாமல் பிற காரணங்களைக் கொண்டே வதை முகாம்களில் அடைத்துக் கொன்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் இருந்தப் பகுதிகளில் யூதர்கள் தங்களுக்குள் கூட்டுறவு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டனர். பல தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் இக்கூட்டுறவு அமைப்புகளில் இணைந்தனர். தையல், காலணி செய்வோர் எனப் பல கைவினைத் தொழில்களில் ஈடுபடுவோர் உட்பட இவற்றில் இணைந்தனர். விவசாயம் செய்யவும் கூட ஒரு சில கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும், சோவியத் ஒன்றியத்தில் தொடர்ந்து யூதர்கள் வாழ்வதை பொதுவுடமை அரசு விரும்பவில்லை.

பல பொதுவுடமைத் தலைவர்கள் யூதர்களாக இருந்தும் ஸியோனிஸ்டுகள் சோவியத் ரஷ்யா உட்பட அதன் உறுப்பு நாடுகளிலிருந்து புதிய யூத தேசத்துக்கு அழைத்துச் செல்ல முனைந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறிய யூதர்கள் அனைவரும் இஸ்ரேல் செல்லவில்லை; அவர்களில் பலர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் முதலில் கடினப்பாடுகளை உணர்ந்தாலும் அவர்களின் அடிப்படைக் கல்வி வாழ்வாதாரத்தை உயர்த்த உதவியது.

இரண்டாம் முறையாக சோவியத் அமைப்பு வீழ்ந்த பிறகு வெளியேறிய யூதர்கள் இஸ்ரேலுக்கு போனதால் இரு தரப்பிலும் பலன் அடைந்தனர். ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற யூதர்கள் கல்வி, சுகாதாரம் என அனைத்து வகைகளிலும் பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டனர். இஸ்ரேலிலுள்ள யூதர்களுக்கு இஸ்ரேலியர் எனும் தனி நாட்டு அடையாளம் உண்டு. ஆனால் பிற நாடுகளில் வாழும் யூதர்களுக்கு அந்தந்த நாட்டுக் குடிமக்கள் எனும் அடையாளம் கிடைத்துவிடுவதால் யூதர் எனும் தனி அடையாளம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது.

யூதர்களின் வளர்ச்சி என்பது 15 – 20 ஆம் நூற்றாண்டு வரையில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாகவே இருந்துள்ளது. பொருளாதார ரீதியிலான ஒடுக்குமுறைகள் மட்டுமின்றி, சமூக ரீதியிலும் பல கட்டுப்பாடுகளைச் சந்தித்ததால்தான் ஸ்யோனிஸ்டுகளின் கோரிக்கையான தனித் தேசம் எனும் கருத்து பேரளவில் செல்வாக்குப் பெற்றது. யூதர்களைப் பாதகமாக நினைத்த ஐரோப்பியச் சமூகங்கள் அவர்களுக்கு தனிநாடு கொடுத்து ஒதுக்கிவிடவே எண்ணினர். அதனால்தான் யூத தேசம் பிறந்த போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது.; யூதப் படுகொலைகளால் மட்டுமல்ல. இன்றைக்கு நிலைமை வேறு.

யூதர்களால் இயலாத அறிவியல் மாற்றம் ஏதுமில்லை. தகவல் தொழில் நுட்பம் உலகை ஆட்டிப்படைத்தல், அத்துறையில் சமூக ஊடகங்கள் உட்பட முன்னணி தகவல் தொழில்நுட்பச் சந்தையின் முதல்வர்களாக யூத நிறுவனங்களே கோலோச்சுகின்றன. கூகுளின் ஒரு நிறுவனர் யூதர். ஃபேஸ்புக் நிறுவனர் ஸூகர்பெர்க் ஒரு யூதர். கடந்த நூற்றாண்டுகளில் கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டீன் எனப் பல மேதைகள் யூதர்கள். உலகம் ஒருபுறம் அவர்களை ஒதுக்கினாலும் தொடர்ந்து இடைவிடாத மானுடப் பங்களிப்பை யூதர்கள் செய்வதால்தான் நிலைத்து நிற்கின்றனர்.

இப்போக்கும், அதன் பின்னாலுள்ள சிந்தனைகள், உணர்வுகளும் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் எனும் தனித்துவம் கொண்ட தேசத்தைப் பொருளாதாரத் தளத்தில் முன்னிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி முன்னாள் காலனியாதிக்க நாடுகளின் வளர்ச்சிப் போக்கிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை. ஆனாலும், இன்று தனது வளர்ச்சியால் உலகளவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதை வரும் அத்தியாயங்களில் காண்போம்.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *