இஸ்ரேலின் தோற்றத்தின்போது அந்நாட்டின் பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும்? எந்தக் கொள்கையினைப் பின்பற்றும்? சமத்துவம், முதலாளித்துவம் அல்லது சமூக ஜனநாயகவாதம் என்ற வரிசையில் எதனையொட்டி அதன் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொள்வார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்படி எந்தவொரு குறிப்பிட்ட கொள்கைக்குள்ளும் அடங்காமல் இந்தியாவில் எப்படி கலப்புப் பொருளாதாரம் எனும் புதிய வடிவம் ஒன்றை ஏற்படுத்தினார்களோ அதேபோல இஸ்ரேல் அரசும் வகுத்துக்கொண்டது.
தனித் தேசக் கோரிக்கை ஏற்பட்டு பிரிட்டிஷ், பிரெஞ்சுப் பகுதிகளை நிர்வாகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட யூத நிர்வாகப் பிரிவுகள் புதிய அரசின் துறைகளாக மாற்றப்பட்டன. புதிய தேசத்தின் பொதுமக்கள் பெரும்பான்மையானோர் அகதிகளாக இருந்ததால் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. வருடக்கணக்கில் சுமார் 3.2 மில்லியன் (32 லட்சம்) பேர் அகதிகளாகப் புகலிடம் பெற்றுள்ளனர்.
இஸ்ரேல் அமைக்கப்பட்டவுடன் அரசானது மத்திய வங்கி, வணிக வங்கிகள், இஸ்ரேல் பங்குச்சந்தை ஆணையம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தியது. பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் கையிருப்பில் இருந்த உணவு தானியங்கள் உட்பட பல அத்தியாவசியத் தேவைகள் குடிமைப் பொருள் வழங்கல் பாணியில் பகிர்மானம் செய்யப்பட்டன. உலகளவில் இப்படி பொதுப் பகிர்மான திட்டம் ஒன்றை இஸ்ரேலே முன்னணியில் நின்று நடைமுறைப்படுத்திய நாடாக விளங்கியது.
பிரிட்டிஷ் அரசானது தனது ஆணைக்குட்பட்ட பகுதிகளில் 1939-ல் பொதுப் பகிர்மான முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. உலகப் போர் நேரத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டமானது இஸ்ரேலில் 1959 வரை நடைமுறையில் இருந்துள்ளது. விடுதலை அடைந்து ஏறக்குறைய ஓராண்டு கழித்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் (க்நெஸட்) அரசு பொதுப் பகிர்மானத்தை அறிவித்ததோடு கருப்புச் சந்தையில் விற்பனை செய்வோர்க்கு கடும் தண்டனைகளையும் இணைத்தே அறிவித்தது.
ஏறக்குறைய 50 நாடுகளில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் புகலிடம் தேடி வந்த 2,10,000 யூதர்களையும் உள்ளடக்கிய (ஏற்கனவே 6.5 லட்சம் யூதர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர்) பொதுமக்களை வறுமை, வேலையின்மை, அமைதியின்மை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க அரசும். பிரதமர் டேவிட் பென் – குரியனும் உறுதி பூண்டிருந்தனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பது போன்ற கொள்கைகளை முன் வைக்காமல் கடும் சிக்கனம், பொதுப் பகிர்மானம் போன்ற கொள்கைகளை முன்வைத்துச் செயல்பட்டது இஸ்ரேலிய சமத்துவக் கொள்கை அரசு.
அக்கொள்கைகளில் முதன்மையாக, தனி நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2700-800 கலோரிகள் அடங்கிய சத்துணவை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த கலோரி அளவானது அன்றைய இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட அதிகம். ஏனெனில் அரபு நாடுகளுடனான தொடர்ச்சியான மோதல்களால் மக்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால்தான் ராணுவத்தின் அழைப்பை ஏற்று போர் செய்யப் போக முடியும். மேலும், வழக்கம் போல பகிர்மானத்தில் மக்களுக்கு ‘திருப்தி’ இருந்தாலும், மருத்துவர்களிடம் ‘நோயாளி’ என மருத்துவச் சான்றிதழ் வாங்குவோரும் இருந்தனர். இதனால் அதிக உணவுப் பொருட்களைப் பெற முடியும் அல்லவா?
பகிர்மானத் திட்டப்படி ஒவ்வொரு மாதமும் உணவுச் சீட்டுகளும், பகிர்மான அட்டையும் வழங்கப்பட்டு அதன்படி, நான்கு கிலோ உருளைக்கிழங்கு, 50 கிராம் பீட்ரூட், சிறுவர்களுக்கு 5 முட்டைகளும் பெரியவர்களுக்கு 2 முட்டைகளும், 100 கிராம் காஃபிக் கொட்டைகளும், 50 கிராம் தேநீர்த்தூளும் 250 கிராம் கோழி இறைச்சியும் இன்னும் பிற உணவுவகைகளும் வழங்கப்பட்டன. இவை போதாது என்றால் மக்கள் வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
கடும் நடவடிக்கைகள் இருந்தாலும் கறுப்புச் சந்தை பெருத்தே காணப்பட்டது. இதைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெறும் 70 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 5000 வழக்குகள் பதிவாகின. விவசாயத் துறை அமைச்சர் பின்னர் வெளி நாடுகளிலிருந்து கடத்துவது, வெளிநாடுகளிலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டு வருவது, பகிர்மானத் திட்டத்தின் குறைபாடுகள் இவற்றால் கள்ளச் சந்தை பெருகியது என்று கூறினார். இவற்றை அடுத்து 1952 ஆம் ஆண்டு முதல் பகிர்மானக் கொள்கை படிப்படியாகத் தளர்த்தப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் உணவு உற்பத்தி அதிகரித்து விலை குறைந்த அல்லது நன்கொடைகளாக உணவு உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் இஸ்ரேலுக்குக் கிடைத்ததே.
அன்றைய இஸ்ரேலிய அரசின் கொள்கை முரண்பாடான வகையில் சமத்துவக் கொள்கை அரசியலின் பிரதிபலிப்பாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவு, புதிய காலனிய அரசுகளின் முன் இருந்த பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றால் அக்காலகட்டத்தில் இந்தியா உட்பட பல நாடுகள் சமத்துவக் கொள்கைகளையே முன் வைத்தன.
ஐரோப்பிய நாடுகளில் ஸ்வீடன், நார்வே போன்ற குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் சமூக ஜனநாயகக் கட்சிகளால் ஆளப்பட்டிருந்தன. அப்படியான அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட பொது அமைப்புகளில் கல்வி, மருத்துவம் போன்றவற்றையும், உள்கட்டுமானங்களையும் வளர்த்தன.
இன்று அந்நாடுகளில் காணப்படும் வளர்ச்சிக் குறியீடுகளை இதர முன்னேறிய நாடுகளால் கூட எட்டிப்பிடிக்க இயலவில்லை. மக்கள் தொகை குறைவு அல்ல காரணம்; எவ்விதமானக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம் என்பதே முக்கியம். மேற்சொன்ன ’ஸ்காண்டிநேவியன்’ (வட துருவத்துக்கு அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகள்) நாடுகள் சமூக ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றி இன்று பல மாற்றங்களை ஏற்படுத்தும் முன்மாதிரி நாடுகளாகியுள்ளன.
புவி வெப்பமயமாதலை எதிர்த்துப்போராட பல மாற்று எரிசக்தி வளங்களில் தொழில்நுட்பப் புரட்சியை இந்நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதே பாணியில் இஸ்ரேலும் செயல்பட்டது.
ஏறக்குறைய இருபதாண்டு காலத்துக்கு சமத்துவக் கொள்கைகளைப் பின்பற்றியது இஸ்ரேல். தனியார் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டாலும் கூட அவை தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட தொழில்களை உள்ளடக்கியிருந்தன. அவை ஹிஸ்டாதுருட் என அழைக்கப்பட்டன. இந்த அமைப்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு. துவங்கப்பட்ட சிறிது காலத்திலேயே இஸ்ரேலின் செல்வாக்கு மிகுந்த அமைப்புக்கள் ஆகின. இந்த அமைப்புகள் இஸ்ரேலின் போக்குவரத்திலும், விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலிலும் ஏகபோகத்தைக் கொண்டிருந்தன.
பொதுத்துறை அமைப்புகளை உள்ளூர் அதிகாரிகளும், யூத முகமை (ஜூவிஷ் ஏஜென்சி) போன்ற அரசு சார் அமைப்புகளும் நிர்வகித்தன. யூத முகமை இரு பெரும் வங்கிகளை நடத்தியது. ஹிஸ்டாதுருட் இரு பெரும் காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகித்தது. ஹிஸ்டாதுருட் தொழிற்சாலைகளை நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்களிப்பைச் செய்தது.
இவற்றின் வளர்ச்சிக்குப் பின்னணியில் ராணுவமயமாக்கல் இருந்தது. ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வது இவற்றின் முக்கியச் செயல்பாடாக இருந்தது. இது 1967 ஆம் ஆண்டுப் போருக்குப் பிறகு நிகழ்ந்தது. அச்சமயத்தில் பிரெஞ்சு அரசு ராணுவத் தளவாட ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே தனது ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய இஸ்ரேல் முனைந்தது. எனினும் அமெரிக்க ராணுவ உதவி தொடர்ந்து கிடைத்து வந்தது. இவை தவிர, உரங்கள், ரசாயனங்கள், எண்ணெய் சுத்திரிப்பு போன்ற தொழில்களில் அரசு நிறுவனங்களே முதன்மையாக ஈடுபட்டன.
இஸ்ரேலின் வளர்ச்சியானது சீராக ஆண்டுக்கு 10% வரையில் உயர்ந்து காணப்பட்டது. இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் இரண்டு போர்களைத் தவிர உள்நாட்டில் பேரளவில் அமைதி நிலவியதே. அது மட்டுமின்றி 1948-ல் தோன்றிய புதிய தேசமானது ஏறக்குறைய வெறுங்கையில் முழம் போடுவது போன்று தனது சிக்கன மற்றும் பகிர்மானக் கொள்கைகள், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, நிலையான அரசுக் கொள்கைகள் போன்றவற்றால் சிறிது சிறிதாக முன்னேறி வந்தது.
பின்னர் 1973 -ல் யோம் கிப்பூர் போரினால் சற்று பொருளியல் வீழ்ச்சி ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வும் சிறிய தேசமான இஸ்ரேலை கடுமையாகப் பாதித்தது. சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு (1973-1982) எண்ணெய்த் தேவைக்காக ஏறக்குறைய அமெரிக்க டாலர் 12 பில்லியன்களை இஸ்ரேல் செலவிட நேர்ந்ததாகக் கணிக்கப்பட்டது. இது இஸ்ரேலின் ஓராண்டு நிகர தேச உற்பத்திக்கு இணையானது.
எண்ணெய் விலை உயர்வின் தாக்கமாக சமூக நலத் திட்டங்களும் பின்தங்கின. அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. பெரும் முதலீடுகளை சமூக உள்கட்டமைப்புத் திட்டங்களில் செய்ய நேர்ந்தது. தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டுகளில் நிதி, வங்கிச் சேவைகளில் கடும் சிக்கல்கள் எழுந்தன. இதனால் பொருளாதாரத்தைச் சீர்திருத்த வேண்டிய தேவை எழுந்தது. முதன் முறையாக தாராளமயமாக்கல் கொள்கைகள் பன்னாட்டு செலாவணி நிதியம், அமெரிக்க அரசு ஆகியவற்றின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு வளர்ச்சி அதிகரித்தது.
இஸ்ரேலின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் 1985ஆம் ஆண்டு சீர்திருத்தங்களும், பின்னர் 1992-ல் உலகமயமாக்கல் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கலுமே இன்று இஸ்ரேல் உலக வரைபடத்தில் வளர்ந்த தேசத்தின் அம்சங்களைக் கொண்டிருக்கக் காரணமாகின. அது நாள் வரையில் அரசின் கைகளில் பாதுகாப்பாக இருந்த நலத் திட்டங்கள் நீர்த்துப்போய் மிக அவசியமான மக்கள் தொகையினருக்கே கிடைக்கும்படிச் செய்யப்பட்டது.
அரசு செலவினங்கள் குறைந்ததால் மக்கள் நலத் திட்டங்களைவிட கல்வி, மருத்துவம், அறிவியல் வளர்ச்சி, ஆய்வு & மேம்பாட்டுத் திட்டங்கள் என எதிர்காலத்துக்குப் பயனளிக்கும் அம்சங்களில் இஸ்ரேல் அரசு கவனம் செலுத்தியது. இன்று இஸ்ரேலில் பல நாடுகள் முதலீடு செய்வது மட்டுமின்றி பல உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றினை வாங்கவும், இணைந்து செயல்படவும் முன் வருகின்றன.
இன்றும் இஸ்ரேலின் முக்கியச் செலவினமாக ராணுவம்தான் இருக்கிறது. ஆனால் அதே ராணுவத் தொழில்நுட்பங்கள், தளவாடங்கள் இஸ்ரேலுக்கு அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தருகின்றன. இந்தியா போலவே தனது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தனது நாணயத்தை மதிப்புக் குறைப்பு செய்தது. ஒரு இஸ்ரேலிய என் ஐ எஸ் (நியூ இஸ்ரேல் ஷெகல்) 1.5 என்றால் அதற்கு இணையாக ஒரு அமெரிக்க டாலர் எனப் பரிமாற்ற மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு கொண்ட நாணயமாக இஸ்ரேலிய ஷெகல் கருதப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்.
இதே காலகட்டத்தில் இந்திய அமெரிக்க நாணய பரிமாற்ற மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய நாணயம் ரூ 12.37 ஆக இருந்தது. இந்த நாணய மதிப்புக் குறைப்பை அடுத்து எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் காரணமாக விலைவாசி உயர்வும் பணவீக்கமும் கட்டுப்பட்டு 20% என்றளவில் குறைந்தன. இதனால் அரசுக்கு மேற்கொண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்க வழியேற்பட்டது. மேலும் அந்நியச் செலாவணியும் கட்டுக்குள் வந்ததால் அயல் நாட்டு வர்த்தகம், முதலீடுகளில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது.
(தொடரும்)